Monday, November 2, 2020

இறையாட்சி விருந்து

இன்றைய (3 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 14:15-24)

இறையாட்சி விருந்து

திருமண விருந்து எடுத்துக்காட்டை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் வௌ;வேறு முறைகளில் பதிவு செய்கின்றனர். திருமண விருந்து என்றால் என்ன என்பதையும், அதில் பங்கேற்பதன் அவசியத்தையும், இயேசுவே, 'இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்' என்ற ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிடுகின்றார். 

விருந்து நேரம் வரவே அழைப்பு பெற்றவர்கள் விருந்துக்கு வர மறுக்கிறார்கள்.

மூன்று சாக்குப் போக்குகள் சொல்லப்படுகின்றன:

முதல் நபர், 'நான் வயல் வாங்கியுள்ளேன். அதைப் போய்ப் பார்க்க வேண்டும்' என்கிறார்.

இரண்டாம் நபர், 'நான் ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன். அவற்றை ஓட்டிப் பார்க்க வேண்டும்' என்கிறார்.

மூன்றாம் நபர், 'எனக்குத் திருமணம் ஆயிற்று. ஆகையால் என்னால் வர இயலாது' என்கிறார்.

திருமண விருந்து எடுத்துக்காட்டின் தொடர்ச்சியாக வரும் பகுதியில், இயேசு சீடத்துவம் பற்றிப் பேசுகின்றார். ஆக, இயேசுவின் சீடர் இறையாட்சியின் திருவிருந்தில் பங்குகொள்ளத் தடையாக இருப்பது மேற்காணும் மூன்று தடைகள்தாம்.

(அ) நிலம் (வயல்)

(ஆ) உடைமை (ஏர் மாடுகள்)

(இ) உறவு (திருமணம்)

முதல் ஏற்பாட்டில், மேற்காணும் மூன்றுமே கடவுளால் ஆபிரகாமுக்கு வழங்கப்பட்டு ஆசிகள். ஹாரான் நாட்டிலிருந்து ஆபிரகாமைக் கானான் நோக்கி அனுப்பும் கடவுள், 'நிலம், சொத்து, குழந்தைப்பேறு' என்னும் மூன்று வாக்குறுதிகளைத் தருகின்றார். ஆனால், இயேசுவைப் பின்பற்றும் சீடருக்கும் இவை மூன்றும் தடைகளாக இருப்பதாக லூக்கா பதிவு செய்கிறார். 

திருமண விருந்து எடுத்துக்காட்டின் இரண்டாவது பகுதியில், நகரில் உள்ள அனைவருக்கும் கதவுகள் திறந்துவிடப்படுகின்றன. ஆனால், தலைவர் மிகவும் சோகமாகத் தன் பணியாளர்களிடம் சொல்கின்றார்: '(வற்புறுத்தி) அழைக்கப்பெற்றவர்கள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை.'

இவையும் சீடத்துவத்தை மையப்படுத்திய வார்த்தைகள்தாம். அதாவது, வற்புறுத்தலின்பேரில் சீடர்களாக மாறுபவர்கள் தங்கள் சீடத்துவ வாழ்க்கையின் விருந்தைச் சுவைக்க மாட்டார்கள். தங்கள் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவுபட்டதாக எண்ணிக் கொண்டு, தங்கள் வயலையும், ஏர் மாடுகளையும், உறவுநிலைகளையும் தேடிப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அருள்பணி மற்றும் துறவற நிலையில் இருப்பவர்கள் மட்டும் சீடர்கள் அல்லர்.

திருமுழுக்கு பெற்ற அனைவருமே சீடர்கள்தாம்.

இயேசு, மேற்காணும் எடுத்துக்காட்டுகள் வழியாக நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றார்:

(அ) விருந்துக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு, பின் பேச்சு மாறுதல் தவறு. ஆக, நாம் பேசும் வார்த்தைகளைக் குறைவாகப் பேச வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் செயல்வடிவம் பெற வேண்டும். வாக்குறுதிகள் புனிதமானவை. திருமண மற்றும் அருள்பணி வாழ்வில் வழங்கப்படும் வாக்குறுதிகள் இன்னும் அதிகம் புனிதமானவை.

(ஆ) நிலம், உடைமை, மற்றும் உறவுகள் அவசியம்தான். ஆனால், இவற்றால் நாளின் இறுதியில் சோர்வும் விரக்தியும் மிஞ்சினால் என்ன பயன்? நிலத்தைப் பார்க்கச் சென்றவருக்கு, 'இன்னும் நிலம் வாங்க வேண்டும்' என்ற பேராசை வந்திருக்கும். ஏர் மாடுகளை ஓட்டச் சென்றவருக்கு, 'மாடுகள் திருப்தியாக இல்லையே!' என்ற கவலை வந்திருக்கும். தன் புதுமனைவியோடு இருந்தவருக்கு, 'சந்தேகம், பொறாமை, பயம், கோபம், சண்டை சச்சரவுகள் வந்துவிட்டதே!' என்ற வருத்தம் வந்திருக்கும். ஆக, நாளின் இறுதியில் நம் உள்ளம் விருந்தில் மகிழ்வது போல மகிழ்ந்தால் எத்துணை நலம். ஆனால், பல நேரங்களில் நம் செல்ஃபோன்கள் போல நாமும் நம் பேட்டரி ஆற்றலை இழந்து அப்படியே சாய்கிறோம். அன்றாடம் இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

(இ) நான் எதையும் வற்புறுத்தலின் அடிப்படையில் செய்யக்கூடாது. எனக்கு நானே கடினமாகவும் இருக்கக் கூடாது. வற்புறுத்துதலின் பேரில் நாம் செய்யும் செயல்களை நாம் அரைமனதாகச் செய்கின்றோம். நம் வேலைகள் யாருக்கும் நிறைவு தருவதில்லை. அவற்றின் பயன்கள் நீடிப்பதில்லை.

1 comment:

  1. முதல் ஏற்பாட்டில் ஆசீர்வாதங்களாகக் குறிப்பிடப்படும் நிலம்,உடைமை ,உறவு எனும் மூன்றும் புதிய ஏற்பாட்டில் எப்படித்தடைகளாக மாற முடியும் என்பது யாருக்குமே சிறிது குழப்பம் தரும் விஷயமே! தானாக உவந்து எடுக்கும் முடிவு...வற்புறுத்தலின் மேல் எடுக்கும் முடிவு....நம் வாழ்க்கையிலேயே இவை இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணரமுடியும்.திருமுழுக்கு பெற்ற அனைவருமே சீடர்கள் தாம் என்பதும்,அப்படிப்பட்ட சீடர்களின் வார்த்தைகள் செயல்வடிவம் பெற வேண்டுமென்பதும், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை வாழ்வில் கனைபிடிக்க வேண்டுமென்பதும்,செய்யும் எச்செயலையும் முழுமனத்துடன் செய்ய வேண்டுமென்பதும் என் போன்ற ஒரு சீடனிடமிருந்து இறைவனின் எதிர்பார்ப்பு. இத்தனைக்கும் மனமுவந்து “ ஆம்!” சொன்னால் மட்டுமே “ சீடன்” எனும் தகுதியை நான் அடைய முடியுமென ஆணித்தரமாகச் சொல்கிறார் தந்தை. என்னில் உள்ள குறைகளை நீக்கி,நிறைகளைப் பெருக்க வழி சொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete