Friday, November 20, 2020

காணிக்கை அன்னை

இன்றைய (21 நவம்பர் 2020) திருநாள்

காணிக்கை அன்னை

இன்று அன்னை கன்னி மரியாள் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடுகிறோம். நற்செய்தி நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்பு இல்லை என்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள் அல்லது திருமுறை அட்டவணைக்குள் வராத நூல்கள் என்றழைக்கப்படுகின்ற யாக்கோபின் முதன்மை நற்செய்தி, புனைபெயர் மத்தேயு நற்செய்தி, மற்றும் மரியாளின் பிறப்பு நற்செய்தி என்னும் நூல்களில் இந்நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுவக்கீம் மற்றும் அன்னா தம்பதியினர் தங்களுடைய அன்புக் குழந்தை மிரியமுக்கு ('மரியா') மூன்று வயது நிறைவுற்றபோது, அவரை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று கடவுளுக்கென்று அர்ப்பணம் செய்தனர். தன் 12வது வயது வரை (அதாவது, பதின்மப் பருவம் நிறைவுபெறும் வரை) மரியாள் ஆலயத்தில் இருந்தார். 12வது வயதில் யோசேப்பு அவருடைய பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். 

மேற்காணும் வார்த்தைகளால் இந்நிகழ்வை அந்நற்செய்தி நூல்கள் வர்ணனை செய்கின்றன. 

சுவக்கீம் மற்றும் அன்னாவின் இச்செயல், முதல் ஏற்பாட்டு அன்னாவை நமக்கு நினைவூட்டுகின்றது. கடவுளிடமிருந்து தான் வேண்டிப் பெற்ற சாமுவேல் என்னும் தன் குழந்தையை சிலோவிலிருந்த கடவுளின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று கடவுளுக்கே அர்ப்பணம் செய்கின்றார் அன்னா. தங்களுடைய வயது முதிர்ந்த நிலையில் தாங்கள் கடவுளிடம் வேண்டிப் பெற்றுக்கொண்ட மிரியமை ('மரியா') அவ்வாறே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர் அவருடைய பெற்றோர். ஆக, இன்றைய நாளில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் மரியாளின் பெற்றோர்களும்தான். அவர்களின் துணிச்சல் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. அவர்களின் அர்ப்பணம் நம்மைத் தூண்டியெழுப்புகிறது. அவர்களின் நம்பிக்கை நம் நம்பிக்கையின் அடிநாதமாய் இருக்கிறது.

முதல் ஏற்பாட்டு அன்னாவும் இரண்டாம் ஏற்பாட்டு அன்னாவும், தாங்கள் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றுக்கொண்ட தம் பிள்ளைகளைக் கடவுளுக்கே கொடுத்து, கடவுளை நிரந்தரக் கடனாளியாக்குகின்றனர்.

ஒன்றை நாம் காணிக்கையாக்கும்போது அல்லது அர்ப்பணம் செய்யும்போது என்ன நிகழ்கிறது?

(அ) அர்ப்பணிக்கப்படும் ஒன்றை நாம் திரும்பப் பெற இயலாது. என்னை நான் முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, 'இல்லை! இப்போது வேண்டாம்! நாளை பார்த்துக்கொள்ளலாம்!' என்று சொல்ல முடியாது.

(ஆ) அர்ப்பணிக்கப்படும் அனைத்தும் முழுமையாக அர்ப்பணிக்கப்படுகிறது. என் உடல் மட்டும்தான், உள்ளம் அல்ல என்றெல்லாம் அங்கே பிரிக்க முடியாது.

(இ) அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று அர்ப்பணிக்கப்படுபவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.

மரியாள் காணிக்கையாக்கப்பட்ட அந்த நிமிடமே, கடவுளுக்கு உரியவர் ஆகிவிடுகின்றார். 'தோத்துஸ் துவுஸ்' ('முழுவதும் உமக்கே') என்பது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் இலக்கு வாக்கியம். அன்னை கன்னி மரியாளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்த திருத்தந்தை அவர். அன்னை கன்னி மரியாள் தன்னையே கடவுளுக்கு, 'முழுவதும் உமக்கே' என்று அர்ப்பணித்தவர்.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:

(அ) நம் கட்டின்மை அல்லது சுதந்திரம்

கடவுளின் திருவுளத்திற்குப் பணியவும் பணியாமல் இருக்கவும் நமக்குச் சுதந்திரம் உண்டு. அன்னை கன்னி மரியாளின் அர்ப்பணம் அவருடைய பெற்றோரும், பின்னர் அவரும் கொண்டிருந்த சுதந்திரத்தைக் காட்டுகிறது. இன்று நான் என் கட்டின்மையை அல்லது விருப்புரிமையை உணர்ந்து செயல்படுகின்றேனா?

(ஆ) கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகளுக்கு நாம் தரும் பதிலிறுப்பே அர்ப்பணம்

அவர் கொடுத்ததை அவருக்கே கொடுப்பது அர்ப்பணம். ஏனெனில், நம்மிடம் இருக்கும் எதுவும் நமதன்று. நமக்குக் கொடுத்த அவரிடமே நாம் அனைத்தையும் கொடுத்துவிட்டால் இருப்பது எல்லாம் நமதே. 

(இ) நம் சரணாகதி

'எனது, என்னுடைய, எனக்கு' என்பது அனைத்தும், அர்ப்பணத்தில், 'உனது, உன்னுடைய, உனக்கு' என்று ஆகிவிடுகிறது. அந்தச் சரணாகதியில்தான் நாம் நிரந்தரத்திற்குள் நுழைகின்றோம். ஏனெனில், நாம் நேரத்திற்குள் இருப்பவர்கள். அவர் நிரந்தரமானவர். நேரம் நிரந்தரத்தோடு கைகோர்ப்பதே அர்ப்பணம்.

நிற்க.

காணிக்கை அன்னையைத் தங்களின் பாதுகாவலியாகக் கொண்டிருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், மற்றும் துறவற சபைகளுக்கு நம் வாழ்த்துகளும் செபங்களும்.

மூன்று வயதில் எருசலேமின் ஆலயப் படிக்கட்டுகளில் முன்னேறிச் சென்ற அந்தக் குட்டி மிரியமின் குட்டிப் பாதங்கள் வழி நம் பாதங்கள் சென்றால் எத்துணை நலம்!

2 comments:

  1. சாமுவேலைக் குழந்தைப்பருவத்திலேயே அர்ப்பணித்த அன்னா போன்று, மரியாளையும் அன்னம்மா- சுவக்கின் குட்டிப்பருவத்திலேயே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்பது, இறைவன் தனக்கு நெருக்கமானவர்களை காலதாமதமின்றி தன் கைகளுக்குள் வளைத்துப்போடுகிறார் என்பதைக் காட்டுகிறது.”கடவுள் கொடுத்த கொடைகளுக்கு நாம் தரும் பதிலிறுப்பே அர்ப்பணம்”.... தந்தைஅழகாகப் பதிவு செய்கிறார்.’ ‘எனது,என்னுடைய,எனக்கு’ என்பதனைத்தும் அர்ப்பணத்தில் ‘உனது,உன்னுடைய,உனக்கு’ என்றாகிவிடுகிறது. நேரம் காலத்திற்குட்பட்டவர்கள் “ “நிரந்தரத்தோடு” இணைவதே “ அர்ப்பணம்” எனில் எதற்காக நாம் தயக்கம் காட்ட வேண்டும்? தன்னையே “முழுவதும் உமக்கே” என்று அர்ப்பணித்த மரியாள் வழியில்.....தன்னையே “ முழுவதும் உமக்கு” என்று மரியாளுக்கு அர்ப்பணித்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் வழியில் இன்று நாம் அனைவருமே “அர்ப்பணத்தின்” புனிதம் காப்போம்.அந்தக் குட்டி மிரியமின் குட்டிப்பாதங்கள் தந்த வழித்தடங்கள் நாம் தடம் புரளாமல் இருக்க உதவட்டும்.அழகானொரு பதிவைத்தந்த தந்தைக்கும்....அனைவருக்கும் “ அர்ப்பணத் திருநாள்” வாழ்த்துக்கள்.அன்னை மரியாள் தன் பாதுகாப்புப் போர்வைக்குள் நம் அனைவரையும் வைத்துக் காப்பாளாக! அன்புடன்......

    ReplyDelete
  2. மூன்று வயதில் எருசலேமின் ஆலயப் படிக்கட்டுகளில் முன்னேறிச் சென்ற அந்தக் குட்டி மிரியமின் குட்டிப் பாதங்கள் வழி நம் பாதங்களும் தொடர முயற்சிப்போம்.

    ReplyDelete