இன்றைய (19 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 19:41-44)
கடவுளை அறியாத கோவில்
எருசலேம் நகரை நெருங்கி வரும் இயேசு அங்கே அமைந்திருந்த எழில்மிகு கோவிலைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றார். கிபி 66 முதல் 73 வரை யூதர்களுக்கும் உரோமையர்களுக்கும் இடையே நடந்த போரில் எருசலேம் ஆலயம் அழிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த நேரத்தில் அல்லது நடந்த சில ஆண்டுகளுக்குப் பின் லூக்கா தன் நற்செய்தியை எழுதுகின்றார். தன் கண்முன்னே நடந்த நிகழ்வை அல்லது, தான் கேள்வியுற்ற நிகழ்வை, தன் காலத்தில் நடந்த நிகழ்வை, இயேசுவே முன்குறித்ததாக எழுதுகின்றார்.
எருசலேம் நகரினரின் கடின உள்ளத்தை நினைத்து இயேசு கண்டிப்பாக மனம் வருந்தவே செய்திருப்பார்.
ஒருவேளை எருசலேம் நகரத்தினர் இயேசுவை மெசியா என ஏற்றுக்கொண்டிருந்தால் கோவிலின் அழிவு தடுக்கப்பட்டிருக்குமா? அதற்கான வாய்ப்பும் இல்லை.
இந்த நிகழ்வை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
ஒன்று, காலத்தின் அறிகுறிகளை அறிந்து செயல்படுதல் வேண்டும்.
இயேசு சொல்லும் முதல் பாடம் இதுதான். காலத்தின் அறிகுறிகளைக் கற்கும் ஒருவரே காலத்தை எதிர்கொள்ள முடியும். காலத்தின் அறிகுறிகளைக் கண்டுகொள்ளாதவர்கள் அழிந்துவிடுவர்.
இரண்டு, அடுக்கடுக்கி வைக்கப்படும் அனைத்தும் ஒரு நாள் சரிந்து போகும்.
இயேசுவின் சமகாலத்தில் எருசலேம் ஆலயம் மிகவும் முதன்மையான சமய அடையாளமாகக் கருதப்பட்டது. அதன் எழில் எங்கும் பாராட்டப்பட்டது. ஆனால், தொடங்கும் அனைத்தும் முடியும் என்பது வாழ்வியல் எதார்த்தம். அண்ணாந்து பார்த்து மக்கள் வியந்த கோவில் கல்லின் மேல் கல் இராதபடி தரைமட்டம் ஆக்கப்படுகிறது. அழிவை நாம் விரும்புவதில்லை. ஆனால், அழிவு என்பது நாம் விடைபெற முடியாத வாழ்வியல் எதார்த்தம்.
மூன்று, கடவுள் தேடி வந்த காலத்தை அறிதல்.
அண்மையில் ஓர் ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது: 'ஆபத்து விலகியதும் ஆண்டவன் மறக்கப்படுகிறான்.' நாம் நமது கலக்கம் மற்றும் ஆபத்து நேரங்களில் கடவுளைத் தேடுகிறோம். இன்னொரு பக்கம், கடவுள் நம்மைத் தேடிக்கொண்டே இருக்கின்றார். அந்தத் தேடலை மிகச் சிலரே கண்டுகொள்கின்றனர். புனித அகுஸ்தினார் கடவுள் தன்னைத் தேடிய காலத்தை அறிந்துகொள்கிறார். புனித அன்னை தெரசா அதை அறிந்து தன் வாழ்வின் இலக்கை மாற்றுகிறார். 'ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்' (காண். எசா 55:6) என்கிறது விவிலியம்.
நிற்க.
நாம் அனைவரும் இறைவனின் ஆலயங்கள் என்கிறார் பவுல் (காண். 1 கொரி 3:16). நம்மைப் பார்த்து இன்று இயேசு அழுகிறார் எனில்,
நாம் அமைதிக்கான வழியை அறியவில்லையா?
நாம் கடவுள் தேடி வந்த காலத்தை அறியவில்லையா?
நாம் காலத்தின் அறிகுறிகளைக் கண்டுகொள்ளவில்லையா?
'அழாதே! யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்றுவிட்டார்' (காண். திவெ 5:1-10) என நமக்கு ஆறுதல் தருகிறது இன்றைய முதல் வாசகம்.
அவர் நமக்காக அழுதுவிட்டதால், நாம் இனி அழத் தேவையில்லை.
அவரின் அழுகையின் பொருள் அறிந்தவர்களுக்கு என்றும் அழுகை இல்லை.
அடிக்கடுக்கி வைக்கப்படும் அனைத்தும் ஒரு நாள் சரிந்து போகுமெனில் நாம் ஓடி ஓடிப் பொருட்களை சேர்ப்பதன் பலன் என்ன?தொடங்கும் அனைத்தும் முடியுமென்பதும், அழிவு என்பது நாம் விடைபெற முடியாத வாழ்வியல் எதார்த்தம் என்பதும் உண்மையெனில்,அந்த முடிவுக்காகவும் நம் தயாரிப்பு அவசியமில்லையா? நம்மைத் தேடும் கடவுளை நாமும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்....புனித அகுஸ்தினார்போல...அன்னை தெரசா போல என்கிறார் தந்தை. ‘ அழுகை’ என்பதன் தேவை உணர்ந்தவர்களுக்காக ஒரு வார்த்தை...” நமக்காக வெற்றி கண்ட ஒருவர் ஏற்கனவே அழுது விட்டதால் அழுகை என்பது இனித்தேவையில்லை “ என்று.
ReplyDeleteஎருசலேம் ஆலயத்தின் அழிவோடு தந்தை தொடங்கிய பதிவு மனத்தைக் கனமாக்கியது எனினும் “ அவரின் அழுகையின் பொருள் அறிந்தவர்களுக்கு என்றும் அழுகை இல்லை” எனும் வரி மனத்தில் அமைதியைக் கொணர்ந்தது உண்மை. பதிவு முழுவதும் நாம் நாடித் தேட வேண்டிய வாழ்வியல் எதார்த்தங்கள். வாழ்வாக்குவோமா? உணர்ச்சிப் பிழம்பான ஒரு பதிவிற்காகத் தந்தைக்குக் கோடி நன்றிகள்!!!
"கடவுளை அறியாத கோயில்"
ReplyDeleteஅற்புதமான,ஆழமான பொருத்தம்...
தலைப்பும்,தொடரும் பதிவும்...
கடவுளை சரியாக அறியாது பயணித்துக்கொண்டிருக்கும் கோயில்களாகிய நாம்,
கடவுள், குடிகொள்ளும், ஆலயமாக மாறிட
அழைப்பு விடுக்கும் ...அன்பான பதிவு.
நன்றி🙏