இன்றைய (20 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 19:45-48)
என்ன செய்வதென்று தெரியவில்லை
தன் எதிரிகளின் பலத்தை இயேசு வித்தியாசமாக வெல்வதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம்.
நம்மை வெறுப்பவர்கள் அல்லது நம்மை எதிர்ப்பவர்கள் முன் நாம் நல்லவர்களாக அல்லது நல்ல நிலையில் வாழ்வதே அவர்களுக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறு என்பது மூத்தோர் வாக்கு.
இன்னொரு பக்கம், நம்மைத் துரத்துபவர்கள் நம்மைத் தொட்டுவிடாத அளவிற்கு உயர்ந்து நிற்பதும் நாம் அவர்களுக்குச் செய்யும் பதிலிறுப்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அதையே செய்கின்றார். எருசலேம் கோவிலுக்குள் நுழைகின்ற இயேசு, 'என் இல்லம் இறைவேண்டலின் வீடு. நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்' என்று அங்கிருந்த குருக்களையும் சமயத் தலைவர்களையும் சாடுகின்றார். அவர்கள் அவரை ஒழித்துவிட வழி தேடுகிறார்கள். ஆனால், என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலைக்கு அவர்களை இயேசு எப்படி இட்டுச் சென்றார்?
ஒன்று, தன் பாதுகாப்பு வளையமாகக் கடவுளைக் கொண்டார்.
இயேசு தன் வாழ்க்கையில் கடவுளைத் தவிர வேறு யாரையும் சார்ந்திருக்கவில்லை. தன் சீடர்கள் தனக்கு அருகில் இருந்தாலும் அவர்கள் தன்னைவிட்டுச் சென்றுவிடுவர் என்பது அவருக்குத் தெரியும். தன் இருத்தல் மற்றும் இயக்கத்தின் ஆதாரமாக அவர் தன் தந்தையாகிய கடவுளைக் கொண்டிருந்தார்.
இரண்டு, நன்மையே செய்தார், நன்மையே சொன்னார்.
'சிறிய காரியத்தில் கூட உனக்கு நீயே பொய் சொல்லிவிடாதே' என்பார் டால்ஸ்டாய். பொய்மை நன்மைக்கு எதிரானது. கோவிலில் இயேசு சொன்ன வார்த்தைகள் நன்மைக்கான வார்த்தைகளே தவிர தீமைக்கான அல்லது பொய்மையின் வார்த்தைகள் அல்ல. ஆக, நன்மையை எதிர்த்து நிற்க தீயவர்களான அவர்களால் இயலவில்லை.
மூன்று, மக்களை வெற்றிகொண்டார்.
'ஒருவரின் உதடுகளைப் பற்றிக்கொண்டு தொங்குவது' என்று ஆங்கிலத்தில் சொலவடை ஒன்று உண்டு. அதாவது, ஒருவரின் வார்த்தைகளால் அதிகம் கவரப்படுவது என்பது இதன் பொருள். இந்த வார்த்தையைத்தான் லூக்கா இன்றைய நற்செய்தி வாசகத்தில் பயன்படுத்துகின்றார். மக்கள் அனைவரும் இயேசுவின் உதடுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, அவர் சொல்வதை விரும்பிக் கேட்கின்றனர். கேட்பதோடு அல்லாமல் இன்னும் வேண்டும் என்பது போல அவரை இறுகப் பற்றிக்கொள்கின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 10:8-11), வானதூதரின் கையிலிருந்த சிற்றேட்டை யோவான் தின்கின்றார். அது வாயில் தேனைப் போல இனித்து வயிற்றில் கசக்கிறது. அதாவது, அச்சுருளேடு தரும் கடமை பெரியது.
இயேசுவின் வார்த்தைகள் தேனைப் போல இனித்ததால் மக்கள் கூட்டம் அவரைப் பற்றிக்கொண்டது.
அவ்வார்த்தைகள் பொறுப்புணர்வைத் தூண்டியதால் அவருடைய எதிரிகளின் வயிற்றில் அவை கசந்தன.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?
நாம் ஒவ்வொருவருமே யாரோ ஒருவருடைய கதையில் வரும் எதிரிகள்.
ஆனால், அந்த எதிரிகள் நம்மை என்ன செய்வது என்று தெரியாமல் போகும் அளவுக்கும் நலமுடன் வாழ்தல் சிறப்பு. கடவுளைப் பாதுகாப்பு வளையமாகக் கொண்டு, எந்நேரமும் நன்மையே செய்து. நாம் காணும் அனைவரையும் வெற்றிகொண்டால் எதிரிகளையும் குழப்பி விடலாம்.
“நாம் ஒவ்வொருவருமே யாரோ ஒருவருடைய கதையில் வரும் எதிரிகள்.ஆனால் அந்த எதிரிகள் நம்மை என்ன செய்வது என்று தெரியாமல் போகும் அளவுக்கு நலமுடன் வாழ்தல் சிறப்பு. கடவுளைப்பாதுகாப்பு வளையமாகக் கொண்டு,எந்நேரமும் நன்மையே செய்து,நாம் காணும் அனைவரையும் வெற்றிகொண்டால் எதிரிகளையும் குழப்பி விடலாம்”...அருமை!
ReplyDeleteஒரு பக்கம் கடவுளை நம் பாதுகாப்பு வளையமாக க் கொள்வதும்,இன்னொரு பக்கம் நம்மைத்துரத்துபவர்கள் நம்மைத் தொட்டுவிடாத அளவிற்கு உயர்ந்து நிற்பதும் நம் எதிரிகளுக்கு நாம் காட்டும் மரியாதை.
இதற்குப் பெயர்தான் நரித்தனமோ? என்னவாயிருந்தால் என்ன..அடுத்தவருக்கு நன்மை செய்யாவிடினும் கூடப்பரவாயில்லை...தீமை செய்யாதிருப்பதே சிறப்பு எனச் சொல்லும் பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!