இன்றைய (27 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:29,33)
என் வார்த்தைகள்
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது:
ஒன்று, காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத ஒன்றை அறிந்து கொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார். காணக்கூடிய அத்திமரத்தின் தளிரிலிருந்து காண இயலாத கோடைக்காலத்தை ஒருவர் அறிந்துகொள்ள முடிகிறது. அது போல, காணக்கூடிய அறிகுறிகளைக் கொண்டு காண இயலாத இறையாட்சியை அறிந்துகொள்ள முடியும்.
இரண்டு, அனைத்தும் நிகழும் வரை தலைமுறை ஒழியாது. விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் ஆண்டவரின் வார்த்தைகள் ஒழிய மாட்டா. ஆண்டவரின் வார்த்தை நிறைவேறும் என நாம் நேர்முகமாக எடுத்துக்கொள்ளலாம். எசாயா இறைவாக்கு நூலில் தனது வார்த்தை என்றென்றும் நிலைத்து நிற்பதாக ஆண்டவராகிய கடவுள் முன்மொழிகின்றார்.
கடந்த இரண்டு மூன்று நாள்களாக நிவர் புயல் பற்றிய பேச்சாக எங்கும் இருந்தது. புயலைவிட புயலைப் பற்றிய விமர்சனங்கள் அச்சம் தருவதாக இருந்தன. மக்களை அச்சத்தில் வைத்திருப்பதை அரசும் ஊடகங்களும் உறுதிசெய்துகொண்டன. பண்பலையில் கூட, 'தொட்டியில் தண்ணீர் நிரப்பியாச்சா? டார்ச் லைட் எடுத்து வச்சாச்சா? கயிறு எடுத்து வச்சாச்சா? மெழுகுதிரி எடுத்து வச்சாச்சா? ஃபோன் சார்ஜ்ல போட்டாச்சா?' என ஏகப்பட்ட அக்கறைகள்.
ஏன் இந்தப் பரபரப்பு?
மேற்காணும் பரபரப்பினால் ஒரு பக்கம் நிறைய மக்கள் காப்பாற்றப்பட்டு விட்டார்கள் என்றாலும், இன்னொரு பக்கம் கடந்த வாரத்தில் வீசிய அரசியல் புயலையும், ஒரு வருடமாக வீசிக்கொண்டிருக்கிற கொரோனா புயலையும் மக்கள் மறந்துவிட்டனர்.
ஊடகத்தின் வார்த்தைகள் பெரும்பாலும் பரபரப்பைத் தருகின்றன. கொஞ்சம் நேரம் கழித்து அவ்வார்த்தைகள் போலி வார்த்தைகளாக அல்லது பொய்த்துப்போன வார்த்தைகளாக அல்லது நீர்த்துப் போன வார்த்தைகளாகத் தெரிகின்றன. மனித வார்த்தைகளின் நிலை அதுதான். மனித வார்த்தை செயலாக மாறாவிடில் அது வெறும் வார்த்தையே.
எபிரேயத்தில், 'தவார்' என்னும் வார்த்தை ஒரே நேரத்தில் 'சொல்லையும்' 'செயலையும்' குறிக்கக் கூடியது. ஆக, கடவுள், 'ஒளி உண்டாகுக!' என்று சொல்கிறார் எனில், அந்தச் சொல்லோடு இணைந்து ஒளியும் உண்டாகும். அதாவது, செயலும் நடந்துவிடும். சொல்வது அனைத்தும் செயலாகிவிடும். ஆக, கடவுளின் வார்த்தை ஒருபோதும் பொய்க்காது.
இன்றைய நாளில் நாம் எப்படி வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் எனச் சிந்திப்போம்.
கொஞ்சம் அமர்ந்து யோசித்தால் நாம் தேவையற்ற வார்த்தைகளையே நிறைய பேசுகிறோம். பல நேரங்களில் நாம் நம் மௌனத்திற்காக அல்ல, நம் பேச்சுக்காகவே வருத்தப்பட்டுள்ளோம்.
நாம் பேசும் பல வார்த்தைகள் வெறும் ஒலிகளாக நின்றுவிடுகின்றன.
'நான் வருகிறேன்' என்று சொல்லும் வார்த்தை, 'நான் வருவதில்தான்' நிறைவு பெறுகிறது. அப்படி இல்லை என்றால், அது வெறும் ஒலிக்கோவைதான்.
இன்று என் வார்த்தைகள்மேல் என் கவனம் இருக்கட்டும்.
என் வார்த்தை இறைவனின் வார்த்தை போல உறுதியானதாகவும், நிறைவேறுவதாகவும் இருந்தால் எத்துணை நலம்!
கொஞ்சம் அமர்ந்து யோசித்தால் நாம் தேவையற்ற வார்த்தைகளையே நிறைய பேசுகிறோம். பல நேரங்களில் நாம் நம் மௌனத்திற்காக அல்ல, நம் பேச்சுக்காகவே வருத்தப்பட்டுள்ளோம்.
ReplyDeleteExactly.
“Known to unknown“..... B.T வகுப்புகளில் அதிகம் கேட்ட வார்த்தை. தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றுக்கு! இந்த நிலையில் கற்றலும்,கற்பித்தலும் இருந்தால் இரண்டும் சுகமே!” நிவார் புயல்” தந்த பரபரப்பு, கடந்த நாட்களின் அரசியல் புயலையும்,கொரோனா புயலையும் மிஞ்சி விட்டது என்கிறார் தந்தை.கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவை அனைத்துமே நீர்க்குமிழிக்கொப்பான பரபரப்பும்,அந்நேரம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளும்.பொய்க்காத கடவுளின் வார்த்தைகள் அனைத்துமே செயலோடு இணைந்தது என்கிறார் தந்தை.மனித வார்த்தை செயலாக மாறாவிடில் அது வெறும் காலி டப்பாவில் அடைக்கப்பட்ட கூழாங்கற்கள் எழுப்பும் ஒலியே என்பதை நினைவில் கொண்டால் நாம் பேசும் வார்த்தைகளுக்காக ஒருநாளும் வருத்தப்பட வேண்டியதில்லை.
ReplyDelete“ என் வார்த்தை இறைவனின் வார்த்தை போல உறுதியானதாகவும், நிறைவேறுவதாகவும் இருந்தால் எத்துணை நலம்!”
அர்த்தமுள்ள வார்த்தைகளுக்காகத் தந்தைக்குப் பாராட்டும்! நன்றியும்!!!