Thursday, May 3, 2018

சுமக்க முடியாத சுமை

நாளைய (4 மே 2018) முதல் வாசகம் (திப 15:22-31)

சுமக்க முடியாத சுமை

இன்று மாலை திருச்சி பேராலயத்தில் நடந்த குருத்துவ அருள்பொழிவு விழாவுக்குச் சென்றிருந்தேன். தனது மறையுரையில் திருச்சி ஆயர் அருள்பணியாளர் திருப்பலி மற்றும் திருநிகழ்வுகளின்போது அணியும் மேலாடை அல்லது திருவுடை மற்றும் ஸ்டோலா குறித்து விளக்கம் தந்தார். குருக்களின் அருள்பொழிவின் அடையாளம்தான் இந்த மேலாடை எனவும், இந்த மேலாடை இல்லாமல் அருள்பொழிவு பெற்றவர் திருநிகழ்வில் பங்கேற்கக் கூடாது என்றும் சொன்னார்.

நிற்க.

திருப்பலிக்கு முன்னதாக சில அருள்பணியாளர்கள் தாங்கள் அணிய வேண்டிய மேலாடை அல்லது திருவுடை கனமாக இருப்பதாக முணுமுணுத்தார்கள்.

நிற்க.

நாளைய முதல் வாசகத்தில் எருசலேமின் சங்கத்தின் முடிவை புறவினத்து மக்களுக்கு அறிவிக்க பவுல் மற்றும் பர்னபாவோடு எருசலேமின் திருத்தூதர்கள் யூதா மற்றும் சீலாவை அனுப்புகின்றனர். சீலா என்பது பெண்ணின் பெயர் என நினைத்திருந்தேன். ஆனால் இது ஆணின் பெயரே.

'இன்றியமையாததைத் தவிர அதிகமான வேறு எந்த சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்' என திருத்தூதர்கள் தூது அனுப்புகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள்:

அ. தாங்கள் செய்யும் எந்த முடிவையும் தூய ஆவியானவரின் துணையோடே செய்கின்றனர் திருத்தூதர்கள்.
ஆ. சுமைகளைச் சுமத்தாமல் இருக்க வேண்டும் என மிகவும் அக்கறைப்படுகின்றனர் திருத்தூதர்கள்.

நாளைய நற்செய்தியிலும் இயேசு தனது சீடத்துவத்தின் சுமையை அன்பு என்ற ஒற்றைச்சொல்லாகச் சுருக்கி சுமையை எளிதாக்கிவிடுகின்றார்.

மேற்காணும் இரண்டு விடயங்களும் நம் வாழ்வில் இருக்க நாம் முயற்சி செய்யலாமே! செய்கின்ற அனைத்திலும் தூய ஆவியானவரின் துணையை நாடுவோம். எந்தவிதத்திலும் யாருக்கும் எதிலும் சுமையாக இருக்காமல் முயற்சி செய்வோம்.


3 comments:

  1. சொல்லவேண்டிய விஷயத்தை சுருக்கமாக ஆனால் மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு பதிவு.இன்றைய வாசகங்களின் பின்னனியில் செய்கின்ற அனைத்திலும் தூய ஆவியானவரின் துணையை நாடவும், எந்த விஷயத்திலும் யாருக்கும் சுமையாக இராமல் முயற்சி செய்யவும் தந்தை நமக்கு அழைப்பு விடுக்கிறார்." அன்பு" என்ற மூன்றெழுத்தை முழுமையாக உணர்ந்தவர்கள் யாருக்கும் சுமையாக இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து.
    மற்றபடி அருட்பணியாளர்களின் மேலாடை அணிவதற்கு கனமானதா இல்லை எளிதானதா? பதில் எனக்குத்தெரியவில்லை.ஒன்றுமட்டும் சொல்ல முடியும்.....அருட்பணியாளர்கள் அணியும் எந்த உடையுமே அதன் புனிதத்தின் பின்புலத்தில் அவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்...அது சுமக்க எளிதாக இருக்கிறதா இல்லயா என்ற கேள்வியைத்தள்ளி வைத்துப்பார்த்தால்! எந்த ஒரு விஷயமானாலும் அதில் கற்றுத்தரவும்,கற்றுக்கொள்ளவும் விஷயமிருக்கிறது என்பதை உணர்த்தும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete