Friday, May 18, 2018

இவருக்கு என்ன ஆகும்?

தன் உயிர்ப்புக்குப் பின் இயேசு பேதுருவையும் (21:15-19), யோவானையும் (21:20-25) சந்திக்கும் நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்கின்றார். 'என் ஆடுகளைப் பேணிவளர்' என்று தன் திருஅவையை பேதுருவிடம் ஒப்புவித்த இயேசு இறுதியில் அவரிடம், 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.

பேதுரு இயேசுவைப் பின்தொடர ஆரம்பிக்கின்றார்.

சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்த அவர் இயேசுவின் அன்புச் சீடரும் (யோவான்) பின்தொடர்கிறார் என்று கண்டு, 'ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?' என்று என்று கேட்கின்றார்.

'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்ந்து வா!' என்கிறார் இயேசு.

கடந்த வாரத்தில் நிகழ்வு ஒன்றை வாசித்தேன்.

நெடுஞ்சாலையில் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் தனக்கு முன்னால் செல்லும் காரை முந்துகிறார். முந்தி கொஞ்ச தூரம் சென்று கண்ணாடியில் தனக்குப் பின் வரும் காரைப் பார்த்துப் பெருமிதம் கொள்கின்றார். தான் முந்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் அவர் முந்திய கார் இவரை முந்திவிடுகிறது. மறுபடியும் தன் காரின் வேகத்தைக் கூட்டி அவரை முந்துகின்றார். பின் மற்றவர் முந்துகின்றார். இப்படியாக முன்னால் பார்க்க, பின்னால் பார்க்க என்று முந்திக்கொண்டிருந்த அவர் திடீரென்று உணர்கின்றார் தான் கடக்க வேண்டிய சேவை சாலையை தாண்டிவிட்டோம் என்று. முன்னோக்கிச் செல்பவரை முந்த நினைப்பதும், பின்பக்க கண்ணாடியை பார்த்துக்கொண்டே யார் நம்மை முந்துகிறார் என்று பார்த்துக்கொண்டே இருப்பதும் நம் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதோடு, நம் பயணத்தின் இலக்கை அடைவதற்கும் இடராக அது மாறுவிடுகின்றது.

பேதுருவின் பிரச்சினை அதுதான்.

தன் பின் நடந்து வரும் யோவானை கண்ணாடியில் பார்த்து, 'இவர் என்னைவிட பெரியதாக எதுவும் பெற்றுக்கொள்வாரோ?' என எண்ணிவிடுகிறார். இவரின் வேகம் குறைகிறது. இயேசு உடனே எச்சரிக்கின்றார்.

திருஅவையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட பேதுரு தன் கண்களை தனக்கு முன் செல்லும் இயேசுவின்மேல் மட்டுமே பதிக்க வேண்டும் என்றும், தனக்குப் பின், தனக்கு அருகில் வருபவர் மற்றும் வருபவை பற்றி அவர் கவலைப்படத்தேவையில்லை எனவும் அறிவுறுத்துகின்றார் இயேசு.

தன் பாட்டி வீட்டிற்குச் செல்லும் ஆலிஸ் வழியில் உள்ள பூந்தோட்டங்களை இரசித்துக்கொண்டே வீட்டிற்கான வழியைத் தவறவிட்டதை நாம் 'ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்' நாவலில் வாசிக்கின்றோம்.

பூந்தோட்டங்களும், பூக்களும் அழகுதாம். ஆனால், நம் இலக்கு அதைவிட அழகு.

'இவருக்கு என்ன ஆகும்?' என்று கேட்காமல் அவரைப் பின்தொடர்தல் நலம்.

1 comment:

  1. அழகானதொரு பதிவு!பல நேரங்களில் நம் பிரச்சனையும் பேதுருவின் பிரச்சனையை ஒட்டியிருப்பதை அனுபவித்திருப்போம்..நம் கைகளில் உள்ள மகிழ்ச்சியைக் கொண்டாடாமல் எதிராளிக்குத் என்ன நேருகிறது என்பதில் சிந்தனையைக் சிதறவிட்டு நம் மகிழ்ச்சியைத் தொலைத்திருப்போம்..திரு அவையின் தலைவருக்கே இயேசு அறிவுறுத்த வேண்டியிருந்ததெனில் நாம் எம்மாத்திரம்?
    சாலையோரங்களில் நடந்தேறும் சிறிய விஷயங்களைக்கூட உன்னிப்பாகக் கவனித்து அவற்றைத்தன் எழுத்தாற்றலால் சரித்திரமாக்கும் விஷயத்தில் தந்தைக்கு நிகர் அவரே தான்.நம் கண்களை நமக்கு முன்வரும் இயேசுவின் மீது மட்டுமே பதித்தால் போதும் என்பதை நிருபிக்க நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் அந்த மனிதனையும்,,ஆலிஸையும் தந்தை துணைக்கழைத்திருப்பது தந்தை தான் கண்பதிக்கும் எதையுமே இலேசாக எடுத்துக்கொள்வதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு." பூந்தோட்டங்களும் பூக்களும் அழகுதாம்; ஆனால் நம் இலக்கு அதைவிட அழகு." பாராட்ட வார்த்தை இல்லை." இவருக்கு என்ன ஆகும்?" என்று கேட்காமல் அவரை மட்டுமே பின் தொடர்தல் நமக்கு நலம். அழகான ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete