Monday, May 21, 2018

யார் பெரியவர்?

நாளைய (22 மே 2018) நற்செய்தி (மாற்கு 9:30-37)

யார் பெரியவர்?

சின்னக் குழந்தைகள் ரொம்ப வித்தியாசமானவர்கள். அவர்களை இந்த உலகத்தின் கவலைகள் தீண்டுவதில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளி ஒன்றில் தன் பிள்ளைகளைச் சேர்க்க என் நண்பர் ஒருவர் சென்றிருந்தார். காலையில் நுழைவுத்தேர்வு வைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளும் எழுதினார்கள். தேர்வு எழுதி முதல்வர் அறைக்கு வெளியே பெற்றோரும் பிள்ளைகளும் காத்திருந்தனர். பிள்ளைகளின் சேர்க்கை, பள்ளிக்கட்டணம், புதிய யூனிஃபார்ம், அவர்களின் ஆட்டோ செலவு என எல்லாவற்றையும் கணக்குப்போட்டுக்கொண்டிருந்த நண்பர் ரொம்ப ஸீரியஸாக உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் வந்த அவரது மகள், 'அப்பா, சாயங்காலம் நாம டிரெய்ன்ல போவோமா?' என்று கேட்டது. அவர் கவலை மறந்து சிரித்துவிட்டார். பெரியவர்களின் கவலைகள் சிறியவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களது உலகம் தனி உலகம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களிடம் தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி பேசுகின்றார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத, அதைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் தங்களுக்கென்ற உள்ள ஓர் உலகத்தில் இருக்கின்றனர். வழியில் விவாதம் வேறு. வழியில் இவர்கள் விவாதித்தது என்னவென்றால், 'யார் பெரியவர்?' என்ற கேள்வி.

'உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது' என்று சொல்கின்ற இயேசு குழந்தையை உருவகமாக வைக்கின்றார்.

சீடர்கள் செய்த இந்த செயலே அவர்களின் குழந்தைத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. அப்படியிருக்க ஏன் குழந்தையை எடுத்துக்காட்டாக வைக்க வேண்டும்?

அவர்கள் விவாதித்த பொருள் தவறு.

குழந்தைகள் ஒருபோதும் தங்களுக்குள் பெரியவர், சிறியவர் பாகுபாடு பார்ப்பதில்லை.

'யார் பெரியவர்?' என்ற கேள்வி அன்றாடம் நாம் நம்மை அறியாமல் கேட்கும் கேள்விதான்.

நம்மைக் கடக்கும் நபர் நமக்கு வணக்கம் சொல்லாத போது,

நம் குழந்தைகள் நம் பேச்சைக் கேட்காதபோது,

சாலையில் நம் வாகனத்தை இன்னொரு வாகனம் முந்திக்கொண்டு செல்லும்போது,

வகுப்பில் நம் பாடத்தை நம் மாணவர்கள் கவனிக்காதபோது,

இப்படி பல நேரங்களில், 'யார் பெரியவர்?' 'நான் பெரியவர் இல்லையா?' என்ற கேள்விகள் மூளையின் ஏதோ ஒரு மூளையில் மின்னி மறைகின்றன. ஆனால், உண்மையில் பெரியவர்-சிறியவர் என்பதெல்லாம் நம் மனதின் எண்ணம்தான் தவிர வெளியில் ஒன்றுமில்லை.

வெளியில் ஒன்றுமில்லை. எல்லாம் மனதில்தான். இதுதான் குழந்தையுள்ளம்.

2 comments:

  1. "தேவை நமக்குக் குழந்தை உள்ளம்".. இதை உணரவைக்கத்தந்தை தன் நண்பனின் வாழ்க்கை அனுபவத்தை நம்மிடையே பகிர்கிறார்.இந்தக் குழந்தைகள் மட்டும் இல்லாதுபோனால் பல குடும்பங்களில் மகிழ்ச்சி என்பது வறண்ட பாலை நிலமாகிவிடும்.நாம் சோர்ந்து போன நேரங்களில் நமக்கு சொர்க்கத்தைக்காட்டுபவர்கள் அவர்கள் தான்.இதற்குக் காரணம்்அவர்கள் தங்களை யாரோடும் ஒப்புமை செய்து பார்ப்பதில்லை. அவர்களது உலகத்தில் அவர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதுதான்.ஆனால் பல அனுபவங்களைப்பெற்ற பெரியவர்களாகிய நாம் செய்வதெல்லாம்?! ஒப்புமை.... யாருக்கு நான் பெரியவன்? யாரைவிட நான் சிறியவன்? சில தினங்களுக்கு முன் தந்தை தன் பதிவில் தந்த " அவனுக்கு என்ன ஆகும்?" என் ஞாபகந்த்திற்கு வருகிறது. உண்மையைப்பிட்டு வைத்தால் "நம் மனம் தான் அனைத்துக்குழப்பங்களுக்கும் காரணம்; வெளியேயிருந்து வருவது ஒன்றுமில்லை" என்கிறார் தந்தை.ஆம்....குழந்தைகளாக மாறுவோம்; குழந்தையுள்ளம் பெறும் வரம் கேட்போம்.அன்றாடம் நம்மைக்குழப்பும் ஒரு விஷயத்திலிருந்து வெளிவர வழி சொன்ன தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete
  2. hi Yesu how are you. Hope you are doing well. I felt talking to you as i was reading. TC

    ReplyDelete