நாளைய (28 மே 2018) நற்செய்தி (மாற் 10:17-27)
ஒன்று குறைவுபடுகிறது
அவர்: 'உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும் ... பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.'
அவர் சொன்னதைக் கேட்டு இவர் முகவாட்டத்தோடு சென்றார்.
நிற்க.
மாற்கு நற்செய்தியில் வரும் இந்த இளவல் என்னில் ஒருசேர வியப்பு, பொறாமை, ஏக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்.
இன்றைய இளவல்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கின்றன. நல்ல ஃபோன், பைக், கார், வீடு, சம்பளம், ஃப்ரன்ஸ் இருக்கணும் என்று ஆசைகள் இருக்க, நாம் காணும் இந்த இளவலுக்கு விநோதமான ஆசை இருக்கிறது: 'நிலைவாழ்வு பெற வேண்டும்.' இதில் இவர்மேல் வியப்பு.
இரண்டாவதாக, 'போதகரே, நான் சிறுவயதுமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்துவந்துள்ளேன்.' - இது என்னில் பொறாமை உணர்வைத் தூண்டுகிறது. அதாவது, இந்த இளவல் தன்னை அறிந்தவராக இருக்கிறது. தன்னறிவு என்பது பெரிய கொடை. சிறுவயதிலேயே இவருக்கு இது வந்துவிட்டது என்பது எனக்கு பொறாமையாக இருக்கிறது.
மூன்றாவதாக, பாதிவழி வந்தவர் மீதி வழி வர முடியவில்லை. 'என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டவர், 'இதைச் செய்' என்று சொன்னவுடன் முகவாட்டத்தோடு செல்கின்றார். 'அவருக்கு நிறைய சொத்து இருந்தது' என மாற்கு இடைச்செருகல் செய்கின்றார்.
'ஒன்று குறைவுபடுகிறது' என்ற சொன்ன இயேசு இரண்டு குறைகளைச் சொல்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது: 'அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடு,' 'என்னைப் பின்தொடர்.'
ஒருவேளை அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம் அந்த இடத்தில் கடவுள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவார். அவரைப் பின்தொடர நாம் தொடங்கிவிடுவோம். ஆகையால்தான் பற்றுக்களை இழக்கச் சொல்கின்றார் இயேசு.
மேலும், 'கடவுளின் துணையில் தான் இந்தச் செயல் சாத்தியமாகும்' என்கிறார்.
இன்று நிலைவாழ்வு பெற என்னில் குறைவுபடுவது என்ன?
இந்த இளவல் போல நான் இயேசுவிடம் இக்குறை பற்றி பேசுகின்றேனா? அல்லது என்னிலே நிறைவு கண்டு அமைதி கொள்கிறேனா?
அடிக்கடி கேட்ட விஷயம் தான்; ஆனால் தந்தை இந்தப்பதிவைத்தரும் கோணம் தான் நம்மையும் ஒரு வித்தியாசமான பார்வைக்கு வழிவகுக்கிறது.இந்தப் பதிவில் வரும் இளைவலின் மீது தந்தைக்கு வியப்பு,பொறாமை,ஏக்கம் எல்லாம் ஒருசேர வருகிறது என்கிறார் தந்தை.தன்னிடம் இல்லாத ஏதோ விஷயம் அடுத்தவரிடம் இருக்கிறது என்று கண்டு கொள்வதே ஒரு" தன்னறிவு" என்று தந்தை ஆறுதல் கொள்ளலாம். " ஒருவேளை அனைத்தையும் நாம் இழந்துவிட்ட பிறகு கடவுள் கண்ணுக்குத்தெரிவார்;நாமும் அவரைப்பின் தொடரத் தொடங்கி விடுவோம்"... சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்.என்னிடம் உள்ள குறை,நிறை என்ன என்ற " தன்னறிவு" எனக்கிருந்தால் எத்துணை நலம்! தான் சிந்திப்பதாலேயே அடுத்தவரையும் சிந்திக்க அழைக்கும் தந்தைக்கு இறைவன் அனைத்து நலமும் தர வேண்டுகிறேன்,!!!
ReplyDeleteYesu good evening.take care.
ReplyDelete