Tuesday, May 29, 2018

இயலுமா?

நாளைய (30 மே 2018) நற்செய்தி (மாற் 10:32-45)

அவர் அவர்களிடம்: 'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'

அவர்கள் அவரிடம்: 'இயலும்'

அவர் அவர்களிடம்:  '... ஆனால் என் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல...'

நிற்க.

நோஸ் கட், மூக்குடைப்பு, ஊக்கு வாங்குதல், பல்பு வாங்குதல் - இந்தச் சொல்லாடல்களை நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா?

நாம் எதிர்பாராத பதிலை அல்லது செயலை நமக்கே மற்றவர் திருப்பிவிடுவதே நோஸ்கட் என வரையறுத்துக்கொள்வோம்.

'உங்க அரியணையில வலப்புறம் ஒருவர், இடப்புறம் ஒருவர் அமர முடியுமா?' என்று செபதேயுவின் மக்கள் கேட்ட போது, இயேசு, 'முடியும்' அல்லது 'முடியாது' அல்லது 'என் தந்தைக்குத்தான் தெரியும்' என்று சொல்லியிருக்கலாம். அதைவிட்டு, 'இது உங்களுக்கு இயலுமா? அது உங்களுக்கு இயலுமா?' எனக் கேட்கிறார்.

அவர்கள் 'இயலாது' என்று சொல்வார்கள் என இயேசு நினைக்க, அவர்கள் 'இயலும்' எனச் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் டுவிஸ்ட். இயேசுவுக்கு என்ன பதில் என்று சொல்லத் தெரியாமல் எதை எதையோ சொல்லி சமாளிப்பது போல எழுதுகிறார் நற்செய்தியாளர்.

'தலைவராக இருக்க வேண்டியவர் தொண்டராக இருக்கட்டும்' என்கிறார் இயேசு.

ஆனால், தலைவர் தலைவராகவே இருக்கட்டுமே. அதில் என்ன தவறு?

தொண்டராக இருப்பது சில நேரங்களில் மாயையைத்தான் உருவாக்குகிறது. நம்ம பிரதமர் மோடி தலப்பா கட்டிகிட்டு ரோடு கூட்டுறாருன்னு வச்சிக்குவோம். அவர் தன்னையே தொண்டராக மாற்றுகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் அப்படியேவா இருந்துடப்போறாரு? மீண்டும் 10 லட்சம் ரூபாய் சட்டையை அணிந்துகொண்டு நகர்வலம் வரத்தான் போகிறார்?

தலைவராக இருக்கவும், தொண்டராக இருக்கவும் நம்மால் இயலும்.

இடம்தான் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது.

2 comments:

  1. "தலைவராக இருக்கவும்,தொண்டராக இருக்கவும் நம்மால் முடியும்; இடம் தான் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது." சரியாகத்தான் சொல்கிறார் தந்தை.பல சமயங்களில் நாம் இருப்பதை விட்டுப்பறப்பதற்கு ஆசைப்படுவதன் விளைவு தான் இந்த " மூக்குடைப்பு", " பல்பு வாங்குதல்" போன,ற செயல்களுக்கு வழிவகுக்கிறது நம் செபதேயு சகோதர்ருக்கு நடந்தது போல.இதைத்தான் கவிஞர் கண்ணதாசனும் தனக்கே உரித்தான வித்த்தில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே" என்று குறிப்பிடுகிறார. ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் எழுதப்பட்டுள்ளதாம்.அதை விடுத்து அடுத்த ஒன்றுக்கு ஆசைப்படும் போது 'வீண் பிரச்சனையே' என்பதை அழகாக எடுத்துரைக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete