Tuesday, May 15, 2018

எபேசு உரை

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் உரைகளில் பவுலின் எபேசு உரை (காண். திப 20:17-38) மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருஅவையின் கட்டமைப்பு, மூப்பர்களின் பணி, இறைவார்த்தைப்பணியின் முக்கியத்துவம் என நிறைய கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்தாலும், மூன்று விடயங்களை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

1. 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை'

எபேசின் மூப்பர்களோடு பழகி, உறவாடி, ஊக்குவித்த பவுல் அவர்களைவிட்டு இப்படிச் சொல்லித்தான் பிரிகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் அவரின் மனப்பக்குவத்தை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றன: ஒன்று, அவர் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு வழிநடத்தப்பட்டார். அந்த வழிநடத்துதலை அவர் தன் தன்னலத்திற்காக ஒருபோதும் உடைக்க விரும்பவில்லை. இரண்டு, பவுல் வாழ்வின் எதார்த்தம் அறிந்தவராக இருந்தார். நம் வாழ்வில் நாம் நம் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் பவுலைப் போல சொல்லியிருக்க மாட்டோம். ஆனால், நம் வாழ்வில் பார்த்த, பழகிய பல நபர்களை நாம் அதற்குப் பின் பார்க்கவே இல்லை. நாம் இனி பார்க்க மாட்டோம் என்று பழகினால் ஒருவேளை நம்மால் முழுமையாக ஒருவரை அன்பு செய்ய முடியுமோ எனத் தோன்றுகிறது.

2. 'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை'

அதாவது, என்னுடைய ஆடம்பர தேவைக்கும் நான் ஆசைப்படவில்லை. என் அத்தியாவசியத் தேவைக்கும் ஆசைப்படவில்லை. என்னே ஒரு உன்னதமான பக்குவம்! எல்லாம் இழக்கும் ஒருவருக்கு எல்லாவற்றையும் விட ஆசை இருக்கும் என்கிறது ஜென் மரபு. ஆனால், பவுல் அதையும் வென்றெடுக்கிறார். மேலும், தன் தேவைக்கு தானே, தனது கைகளே உழைத்ததாக பெருமிதம் கொள்கின்றார். நத்திங் ஒர்த் எவர் கம்ஸ்...
என்பார்கள். ஆக, என் கைகள், என் ஆற்றல், என் முயற்சி என வரும் ஒன்றில் நம் மனம் மகிழ்ச்சி கொள்ளல் வேண்டும்.

3. 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை!'

'நான் யார் பொருளுக்கும் ஆசைப்படவில்லை' என்று சொல்லி சில நேரங்களில் நாம் ஒதுங்கிக்கொள்வதுண்டு. பவுல் இன்னும் ஒருபடி மேலே போய், 'நான் ஆசைப்படாவிட்டாலும், அடுத்தவர்களுக்குக் கொடுக்கிறேன்' என்கிறார். 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை' என்று இயேசுவே சொன்னதாக பவுல் குறிப்பிடுகிறார். இயேசுவின் இந்த வார்த்தைகள் நற்செய்தி நூல்களில் இல்லை. ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் இருக்கலாம். கொடுக்கும்போது நாம் நிறைய அடைகிறோம் என்பதைக் குறிக்கவே அதை பேறுடைமை என்கிறார் பவுல்.

3 comments:

  1. "தன்னைத்தேர்ந்தெடுத்தவர்களை விடத் தான் தேர்ந்தெடுத்தவர்களே பேறுபெற்றவர்கள்" என்பதற்கு புனித பவுலின் வாழ்க்கை சிறந்த உதாரணம். 'அவரையும்',அவருக்கு நெருக்கமானவர்களையும் எதிரிகளாக நினைத்த ஒருவர் இன்று திருஅவையின் தூண்களில் ஒருவராக இருக்கிறார இவருடைய கோட்பாடுகள் சிலவற்றை நாம் வாழ்வாக்க அழைக்கிறார் தந்தை.தன்னலத்திற்காக இராமல் நம் வாழ்வில் நம் நண்பர்களையும்,அறிமுகமானவர்களையும் உளமாற நேசிப்பதும்,மற்றவரின் பொருளுக்கு ஆசைப்படாமல் என்கைகள்,என் ஆற்றல்,என் முயற்சியில் வரும் ஒன்றில் நான் மகிழவேண்டுமெனவும்,கொடுத்தலின் இன்பம் பெறுவதில் இல்லை என்பதை உணர்ந்து கொடுத்தலில் மகிழ்ச்சி பெறவும் அழைக்கப்படுகிறோம்.எபேசு நகர மக்களுக்கு நாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லையென நம்மில் நல்ல சிந்தனைகளைத் தூண்டிவிடும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete