Tuesday, May 1, 2018

கலந்து பேசி


வீடுகளில் முக்கியமான பிரச்சினைகள் பற்றிப் பேசும்போதும், திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைத் திட்டமிடும்போதும், 'வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்' அல்லது 'கலந்துகிட்டு சொல்றேன்' என்று சொல்வது இயல்பு.

தொடக்கத் திருச்சபையில் புதிதாக திருமுழுக்கு பெற்ற புறவினத்தார் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான முடிவை பவுலும் பர்னபாவும் தாங்களே எடுக்காமல், எருசலேமில் உள்ள திருச்சபையார், திருத்தூதர்கள், மற்றும் மூப்பர்களோடு கலந்து பேசிவிட்டுச் சொல்வதாக வாக்குறுதி கொடுக்கின்றார்.

இது பவுல் மற்றும் பர்னபா திருத்தூதர்களோடு கொண்டிருந்த நல்லிணக்கத்தையே குறிக்கின்றது. பல நேரங்களில் நாம் எதிர்மறை கருத்துக்களும், பிரிவினை எண்ணங்களும் குழும வாழ்வில் வரக்கூடாது என நினைக்கிறோம். ஆனால், குழும வாழ்வில் இவை வந்தே தீரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதைக் கலந்து பேசி சரிசெய்வதுதான். ஏனெனில் இரண்டு மனங்கள்-மூளை இணைந்து செயல்படும்போது அதன் வெளிப்பாடு மூன்றைவிட பெரிதாகவே இருக்கும். மேலும், பவுல் மற்றும் பர்னபாவின் கலந்து பேசுதல் அவர்களின் பணிவாழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தளமாகவும் இருக்கிறது.

நாளைய நற்செய்தியில் இணைந்திருத்தல் மற்றும் கனிதருதல் பற்றி பேசுகின்றார் இயேசு. கலந்து பேசி பிரச்சினைக்கு விடை காணுதலும் ஒருவகை இணைந்திருத்தல் மற்றும் கனிதருதலே.


1 comment:

  1. இரண்டு மனங்கள்- மூளை இணைந்து செயல்படும்போது அதன் வெளிப்பாடு மூன்றை விடப் பெரிதாக இருக்கும் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் எதார்த்தம்; தவிர்க்க முடியாததும் கூட.அந்நேரத்தில் நம் ஈகோ போன்ற உணர்வுகளை உள்ளே நுழையவிடாமல் மற்றவரிடம் கலந்து பேசி முடிவெடுத்தலே சாலச்சிறந்தது என்கிறார் தந்தை.இதற்கு நல்ல உதாரணமாகத்திழ்கிறார்கள் பவுலும்,பர்னபாவும்.ஏனெனில் ' கலந்து பேசுதல்' பெற்றெடுப்பது " இணைந்திருத்தல்" மட்டுமல்ல..." கனிதருதலும்" கூடத்தான்.கூட்டு வாழ்க்கைக்குத் தேவையானதொரு குணாதிசயத்தின் மகிமையை வெளிக்கொணரும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete