Monday, May 14, 2018

இடமாற்றம்

நாளைய (15 மே 2018) நற்செய்தி (யோவா 17:1-11)

இடமாற்றம்

தன் தந்தையிடம் தன் சீடர்களுக்காக இறைவேண்டல் செய்யும் இயேசு, 'இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்' என்கிறார்.

மேலும், நாளைய முதல் வாசகத்தில் (திப 20:17-27) எபேசு நகரின் மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்ற பவுல், 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை' என்று சொல்லி விடைபெறுகின்றார்.

ஒருவர் இருக்க - மற்றவர் பிரியும் அனுபவம் விடுதியில் அல்லது குருமடத்தில் அல்லது துறவற பயிற்சி நிலையத்தில் படித்தவர்களுக்கு கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் நாள். காலையிலேயே அம்மா வந்துவிடுவார். நாம் ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் உள்ள அனைத்தையும் கொண்டுவந்திருப்பார். புதிய சோப்பு, புதிய சோப்பு டப்பா, புதிய டூத் பேஸ்ட், பிரஸ், டவல், போர்வை, என நாம் எழுதியதையும், நாம் எழுதாத பூந்தி, முறுக்கு போன்றவற்றையும் வாங்கி வந்திருப்பார். கடந்து போன மாதங்களுக்கான பாக்கி ஃபீஸ், எப்போதாவது அடுத்த மாதத்துக்கும் சேர்த்து ஃபீஸ் - அடுத்த மாதத்துக்கும் சேர்த்து ஃபீஸ் கட்டும்போது ஏதோ உலகத்தில் நாமதான் பெரிய பணக்காரர் போன்ற உணர்வு வந்து போகும்! - இப்படி எல்லாம் முடிந்து மாலை நேரம் வர வர துக்கம் தொண்டையைப் பிடிக்கும். இதிலும் அடுத்த நாள் கணிதவியல் அல்லது இயற்பியில் தேர்வு என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படியே அம்மாவோடு ஓடிப்போய்விடலாமோ என்று தோன்றும். 5 மணி ஆகிவிடும். அம்மா புறப்பட்டுவிடுவார். கேட் வரை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடப்பார். அவர் சென்ற சில நிமிடங்களில் கொண்டு வந்த பொருள்களை பாக்ஸில் வைத்துவிட்டு, முகம் கழுவி, ஸ்டடி ஹாலில் அமர்ந்து கணிதம் அல்லது இயற்பியல் புத்தகத்தைத் திறந்தால் எல்லாம் புதிதாக இருக்கும். கண்களில் வடியும் கண்ணீர்த் துளிகளுக்கு இடையே பித்தாகரஸ் தியரமும், நியுட்டனின் விதிகளும் வெறும் புள்ளிகளாகத் தெரியும்.

'நீ இங்க இரு - நான் போகிறேன்' என்று சொல்வதுபோல அம்மா விடுதியிலிருந்து விடைபெறுவார்.
'நீ இங்க இரு - நான் போகிறேன்' என சீடர்களிடமிருந்து இயேசு விடைபெறுகிறார்.
'நீ இங்க இரு - நான் போகிறேன்' என மூப்பர்களிடமிருந்து பவுல் விடைபெறுகிறார்.

இருக்கும் இடம் கஷ்டமாக இருந்தால் இருப்பு வருத்தம் தரும். போகும் இடம் மகிழ்ச்சியாக இருந்தால் செல்லுதல் மகிழ்ச்சி தரும்.

பவுல் போகும் இடம் மகிழ்ச்சியான இடம் அல்ல. ஆனால் இயேசு போகும் இடம் மகிழ்ச்சியான இடம்.

சில நேரங்களில், நம் மனநிலைதான் இடத்தையும்தாண்டி மகிழ்ச்சியை தந்துவிடுகிறது.

அம்மா சென்ற அந்த மாலை அடுத்த நாள் மறந்துவிடுகிறது. வகுப்பறை, பள்ளி, டெஸ்ட் என மனது மற்றவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறது.

இடமாற்றம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், இடங்கள் சங்கமிப்பது இறைவனில் என்று நினைப்பவர்களுக்கு அது அப்படித் தெரிவதில்லை. ஆகையால்தான், இயேசுவும் பவுலும் எளிதே இடம் மாறுகின்றனர்.


1 comment:

  1. தன்னுடைய இளமைகால விடுதி வாழ்க்கையின் மலரும் நினைவுகளைக் மகிழ்ச்சியும்,சோகமும் கலந்து தருகிறார் தந்தை.' நீ இங்க இரு- நான் போகிறேன்' என்று சொல்வது போல் அம்மா விடுதியிலிருந்து விடை பெறுவார்." நீ இங்க இரு- நான் போகிறேன்' என்று இயேசு சீடர்களிடமிருந்து விடை பெறுகிறார்.' நீ இங்க இரு- நான் போகிறேன்' என்று பவுல் மூப்பர்களிடமிருந்து விடை பெறுகிறார்.'கஷ்டமும்,மகிழ்ச்சியும் இருக்கும் இடத்தைப்பொறுத்தது.சில நேரங்களில் நம் மனநிலை இடத்தையும் தாண்டி மகிழ்ச்சியைத்தருகிறது.இடமாற்றம் கஷ்டமாக இருப்பினும் இடங்கள் சங்கமிப்பது இறைவனில் என்று நினைப்பவர்களுக்கு அது அப்படித்தெரிவதில்லை.ஆகையால் தான் இயேசுவும் பவுலும் இனிதே இடம் மாறுகின்றனர்'. கண்டிப்பாக நம் அனைவரின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட பிரிவுகள் நிகழ்ந்திருக்கும். தந்தையின் நினைவுகளோடு, காணாமல் போன நம் நினைவுகளையும் தூண்டி விட்டது மட்டுமின்றி, நம் நினைவுகள் இறைவனில் சங்கமிக்கும் போது மட்டுமே நமக்கு மகிழ்ச்சி சாத்தியம் என்று கூறும் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete