Thursday, May 31, 2018

அத்திப் பழக்காலம் அல்ல

நாளைய (1 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 11:11-26)

அத்திப் பழக்காலம் அல்ல

பெத்தானியாவிலிருந்து திரும்பும் இயேசுவுக்கு வழியில் பசிக்கிறது. பசி ஒரு கொடுமையான உணர்வு. இந்தப் பசியின் போதுதான் நம் இயலாமையின் உச்சகட்டத்தை நாம் உணர்கிறோம். இந்தப் பசி நேரத்தில் உணவு மட்டுமே நம் எண்ணத்தில் இருக்கும். எதைக் கண்டாலும் சாப்பிடவேண்டும் போல இருக்கும். இயேசுவுக்கும் அப்படித்தான் இருக்கிறது. இலைகள் அடர்ந்து ஓர் அத்திமரத்தைக் கண்டு அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் செல்கின்றார். இலைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஏமாற்றம் கோபமாக மாற, இயேசு அந்த அத்திமரத்தைச் சபித்துவிடுகின்றார்.

'ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல' - என ஒரு இடைக்குறிப்பை எழுதுகின்றார் மாற்கு.

அத்திப் பழக்காலம் அல்ல என்பது இயேசுவுக்குத் தெரியாதா? தச்சனுக்கு விவசாயம் தெரிய வாய்ப்பில்லைதானே!

அத்திப் பழக்காலம் அல்ல என்று தெரிந்தும் ஏன் இயேசு அதன் அருகில் செல்ல வேண்டும்? கனிவதற்கான காலம் அல்ல என்று தெரிந்தும் ஏன் சபிக்க வேண்டும்?

இது எப்படி இருக்கிறது என்றால், 'குழந்தைப் பேறு அடைய முடியாத ஓர் ஆணைப் பார்த்து, 'நீ ஏன் குழந்தை பெற்றெடுக்கவில்லை?' என்று கேட்பது போல.'

கடவுள் தான் நினைப்பதைச் செய்கிறார் என்பது இங்கே சரியாகத்தான் இருக்கிறது.

படைப்புக்கள் காலத்திற்கு உட்பட்டவை. ஆனால் படைத்தவர் காலத்தைக் கடந்தவர்.

காலத்திற்கு உட்பட்ட நிலையிலுருந்து காலத்திற்கு உட்படாத நிலைக்குத் தன் சீடர்களை இந்த அத்திமர எடுத்துக்காட்டு வழியாக அழைக்கின்றார் இயேசு.

அதாவது, சீடத்துவத்தில் சாக்குப் போக்கிற்கு இடமில்லை.

'இது நேரம் இல்லையே' என்றும், 'எனக்குத் தெரியாது' என்றும், 'என்னால் இப்போது முடியாது' என்றும் சீடர்கள் சொல்ல முடியாது. எந்நேரமும் கனி தருதல் அவசியம்.

நிற்க.

நாளை பள்ளிகள் தொடங்குகின்றன. திருச்சியில் இன்று பெரும்பாலான இடங்களில் பள்ளிக் குழந்தைகளும் பெற்றோர்களும் வாளிகளும், பைகளுமாய் நடந்துகொண்டிருந்தனர். அம்மாவுக்கு வழிகாட்டும் பிள்ளைகள், பிள்ளைகளுக்கு புத்தி சொல்லும் அம்மாக்கள், கால்கடுக்க நடந்து ஆட்டோ பணத்தை மிச்சம் பிடித்து தங்கள் பிள்ளைகளின் மூடிய கையிடுக்கில் நுழைக்கும் அப்பாக்கள் என நிறையப் பேரைக் காண முடிந்தது. இந்தப் பிள்ளைகளின் கண்களின் கண்ணீரிலும் நனையாத அவர்களின் நம்பிக்கையைக் காண நம்மால் முடியும்.

ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தைகள் இனி அறிவிலும், உடல்பலத்திலும் வளர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கனி தர வேண்டும்.

மேற்காணும் அத்திமரம் இந்தக் குழந்தைகளுக்கும், நமக்கும் சொல்வது ஒன்றுதான்: கனிவதற்கு காலம் என்று எதுவும் இல்லை. எல்லா நேரமும் கனிதர நம்மால் முடியும். அதற்கேற்ற உழைப்பும், திறனும் நம்மிடம் இருக்கும்போது.

இந்தப் புதிய கல்வி ஆண்டு கனிதரும் ஆண்டாக அமைய வாழ்த்துகளும், செபங்களும்!

சந்திப்பு

நாளைய (31 மே 2018) நற்செய்தி (லூக்கா 1:39-56)

சந்திப்பு

நாளை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நாளின் நற்செய்திப் பகுதியில் வரும் எலிசபெத்தின் வார்த்தைகள் என்றும் என்னைக் கவர்பவை. வயது கூட கூட வார்த்தைகள் குறையும். வார்த்தைகளில் முதிர்ச்சி இருக்கும். இல்லையா?

'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்.
உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
உம் வார்த்தை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'

ஒவ்வொரு வாக்கியமாகப் பார்ப்போம்:

'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்று இளவல் மரியாவை வாழ்த்துகிறார். தனக்கே கடவுளின் அரும்பெரும் செயல் நடந்திருந்தாலும், தானே ஆசி பெற்றவராக இருந்தாலும், தன்னைவிட மரியாள் சிறியவராக இருந்தாலும், அவரிடம் கடவுள் நிகழ்த்திய செயலை முதன்மைப்படுத்தி, மரியாளை ஆசி பெற்றவர் என்கிறார். இது எலிசபெத்தின் பரந்த மனம்.

'உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!' - குழந்தையைப் பற்றி எதுவும் மரியா சொல்லாமNலேய எலிசபெத்துக்கு எப்படி எல்லாம் தெரிந்தது? இது அவருடைய நுண்ணறிவு.

'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? - இயேசுவைத் தன் ஆண்டவராக எடு;த்துக்கொள்கிறார். மீட்பு வரலாற்றை ஒரே நொடியில் நீட்டிப் பார்க்கிறார். இது அவருடைய மேலாண்மை அறிவு.

'என் வயிற்றில் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது' - தன் உள்ளத்தின், உடலின் உணர்வுகளை முழுமையாக அறிந்த அறிவாளி.

'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என நம்பிய நீர் பேறுபெற்றவர்' - இந்த இடத்தில் இவர் தன் கணவன் செய்த தவறை மனதில் நினைத்திருப்பார். ஆண்டவர் சொன்னதை என் கணவர் நம்பல. ஊமையா கிடக்குறார். ஆனா, நீ நம்புன - என்று மரியாளின் நம்பிக்கையைப் புகழ்கிறார்.

குழந்தையைக் கருத்தரிக்கும்போது அதன் தாய் வளர்சிதை மாற்றத்திற்கு ஆளாகிறார் என்பது நாம் அறிந்ததே. இது பெரிய வலியைத் தாய்க்குத் தரும். இப்படிப்பட்ட வலியிலும் இவர் மகிழ்ச்சியோடும், தன் அருகில் இருக்கும் மரியாளும் மகிழ்ச்சி கொள்ளவும் காரணமாக இருக்கின்றார்.

மகிழ்ச்சி - இது சந்திப்பின் உணர்வு.

Tuesday, May 29, 2018

இயலுமா?

நாளைய (30 மே 2018) நற்செய்தி (மாற் 10:32-45)

அவர் அவர்களிடம்: 'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'

அவர்கள் அவரிடம்: 'இயலும்'

அவர் அவர்களிடம்:  '... ஆனால் என் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல...'

நிற்க.

நோஸ் கட், மூக்குடைப்பு, ஊக்கு வாங்குதல், பல்பு வாங்குதல் - இந்தச் சொல்லாடல்களை நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா?

நாம் எதிர்பாராத பதிலை அல்லது செயலை நமக்கே மற்றவர் திருப்பிவிடுவதே நோஸ்கட் என வரையறுத்துக்கொள்வோம்.

'உங்க அரியணையில வலப்புறம் ஒருவர், இடப்புறம் ஒருவர் அமர முடியுமா?' என்று செபதேயுவின் மக்கள் கேட்ட போது, இயேசு, 'முடியும்' அல்லது 'முடியாது' அல்லது 'என் தந்தைக்குத்தான் தெரியும்' என்று சொல்லியிருக்கலாம். அதைவிட்டு, 'இது உங்களுக்கு இயலுமா? அது உங்களுக்கு இயலுமா?' எனக் கேட்கிறார்.

அவர்கள் 'இயலாது' என்று சொல்வார்கள் என இயேசு நினைக்க, அவர்கள் 'இயலும்' எனச் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் டுவிஸ்ட். இயேசுவுக்கு என்ன பதில் என்று சொல்லத் தெரியாமல் எதை எதையோ சொல்லி சமாளிப்பது போல எழுதுகிறார் நற்செய்தியாளர்.

'தலைவராக இருக்க வேண்டியவர் தொண்டராக இருக்கட்டும்' என்கிறார் இயேசு.

ஆனால், தலைவர் தலைவராகவே இருக்கட்டுமே. அதில் என்ன தவறு?

தொண்டராக இருப்பது சில நேரங்களில் மாயையைத்தான் உருவாக்குகிறது. நம்ம பிரதமர் மோடி தலப்பா கட்டிகிட்டு ரோடு கூட்டுறாருன்னு வச்சிக்குவோம். அவர் தன்னையே தொண்டராக மாற்றுகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் அப்படியேவா இருந்துடப்போறாரு? மீண்டும் 10 லட்சம் ரூபாய் சட்டையை அணிந்துகொண்டு நகர்வலம் வரத்தான் போகிறார்?

தலைவராக இருக்கவும், தொண்டராக இருக்கவும் நம்மால் இயலும்.

இடம்தான் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது.

Monday, May 28, 2018

இவற்றோடு கூட இன்னல்களையும்

நாளைய (29 மே 2018) நற்செய்தி (மாற் 10:28-31)

இவற்றோடு கூட இன்னல்களையும்

பேதுரு இயேசுவிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே' என்றார். (காண். மாற் 10:28)

தாங்கள் அனைத்தையும் இயேசுவுக்காக விட்டுவிட்டு வந்ததை இங்கே அவருக்கே நினைவுபடுத்துகின்றார் பேதுரு. இயேசுவும் விட்டுவிட்ட அனைத்தும் 100 மடங்கு கிடைக்கும் என வாக்குறுதி தருகின்றார். இந்த வாக்குறுதியில் மாற்கு நற்செய்தியில் மட்டுமே, 'இவற்றோடு கூட இன்னல்களையும்' என்ற சொல்லாடல் உள்ளது.

எங்கெல்லாம் நற்செய்திப்பகுதியில் நெருடல் இருக்கிறதோ அங்கெல்லாம் உண்மை இருக்கிறது என்பது நற்செய்தி விளக்கத்திற்கான அடிப்படை விதி.

இயேசு சொல்வதுபோலவே அவரைப் பின்பற்றுபவர்களுக்கு 100 வீடுகள், சகோதரர்கள், சகோதரிகள், தாய், தந்தை, பிள்ளைகள், நிலபுலன்கள் கிடைக்கின்றன. 100க்கு மேலேயும் கிடைக்கின்றன. ஆனால், இவற்றோடு கூட இன்னல்கள் என்று இயேசு எதைச் சொல்கிறார்? இயேசுவின் சமகாலத்தில் குருத்துவம் இல்லை. ஆக, இயேசுவின் இந்த வாக்குறுதி குருக்கள் மற்றும் துறவிகளுக்கானது என்று எண்ணத் தேவையில்லை. இயேசுவைப் பின்பற்றும் அனைவரும் இதைப் பெறுவர். இது ஒரு உருவகம்தான். அதாவது, இயேசுவில் அனைவரும் அனைவரோடும் இணைக்கப்பெறுவர் என்பதே பொருள்.

இயேசு சொல்லும் 'இன்னல்' என்பதன் பொருள் என்ன?

இன்னல்கள் என்பவை சீடர்கள் வெளிப்படையாக அனுபவிக்கின்ற துன்பங்கள் என்றாலும்கூட, ஒவ்வொரு சீடரின் உள்ளத்திலும் எழுகின்ற 'தெரிவு' (சாய்ஸ்) என்பதுதான் அந்த இன்னல்.


Sunday, May 27, 2018

ஒன்று குறைவுபடுகிறது

நாளைய (28 மே 2018) நற்செய்தி (மாற் 10:17-27)

ஒன்று குறைவுபடுகிறது

அவர்: 'உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும் ... பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.'

அவர் சொன்னதைக் கேட்டு இவர் முகவாட்டத்தோடு சென்றார்.

நிற்க.

மாற்கு நற்செய்தியில் வரும் இந்த இளவல் என்னில் ஒருசேர வியப்பு, பொறாமை, ஏக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்.

இன்றைய இளவல்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கின்றன. நல்ல ஃபோன், பைக், கார், வீடு, சம்பளம், ஃப்ரன்ஸ் இருக்கணும் என்று ஆசைகள் இருக்க, நாம் காணும் இந்த இளவலுக்கு விநோதமான ஆசை இருக்கிறது: 'நிலைவாழ்வு பெற வேண்டும்.' இதில் இவர்மேல் வியப்பு.

இரண்டாவதாக, 'போதகரே, நான் சிறுவயதுமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்துவந்துள்ளேன்.' - இது என்னில் பொறாமை உணர்வைத் தூண்டுகிறது. அதாவது, இந்த இளவல் தன்னை அறிந்தவராக இருக்கிறது. தன்னறிவு என்பது பெரிய கொடை. சிறுவயதிலேயே இவருக்கு இது வந்துவிட்டது என்பது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

மூன்றாவதாக, பாதிவழி வந்தவர் மீதி வழி வர முடியவில்லை. 'என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டவர், 'இதைச் செய்' என்று சொன்னவுடன் முகவாட்டத்தோடு செல்கின்றார். 'அவருக்கு நிறைய சொத்து இருந்தது' என மாற்கு இடைச்செருகல் செய்கின்றார். 

'ஒன்று குறைவுபடுகிறது' என்ற சொன்ன இயேசு இரண்டு குறைகளைச் சொல்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது: 'அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடு,' 'என்னைப் பின்தொடர்.'

ஒருவேளை அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம் அந்த இடத்தில் கடவுள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவார். அவரைப் பின்தொடர நாம் தொடங்கிவிடுவோம். ஆகையால்தான் பற்றுக்களை இழக்கச் சொல்கின்றார் இயேசு. 

மேலும், 'கடவுளின் துணையில் தான் இந்தச் செயல் சாத்தியமாகும்' என்கிறார்.

இன்று நிலைவாழ்வு பெற என்னில் குறைவுபடுவது என்ன?

இந்த இளவல் போல நான் இயேசுவிடம் இக்குறை பற்றி பேசுகின்றேனா? அல்லது என்னிலே நிறைவு கண்டு அமைதி கொள்கிறேனா?

Monday, May 21, 2018

யார் பெரியவர்?

நாளைய (22 மே 2018) நற்செய்தி (மாற்கு 9:30-37)

யார் பெரியவர்?

சின்னக் குழந்தைகள் ரொம்ப வித்தியாசமானவர்கள். அவர்களை இந்த உலகத்தின் கவலைகள் தீண்டுவதில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளி ஒன்றில் தன் பிள்ளைகளைச் சேர்க்க என் நண்பர் ஒருவர் சென்றிருந்தார். காலையில் நுழைவுத்தேர்வு வைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளும் எழுதினார்கள். தேர்வு எழுதி முதல்வர் அறைக்கு வெளியே பெற்றோரும் பிள்ளைகளும் காத்திருந்தனர். பிள்ளைகளின் சேர்க்கை, பள்ளிக்கட்டணம், புதிய யூனிஃபார்ம், அவர்களின் ஆட்டோ செலவு என எல்லாவற்றையும் கணக்குப்போட்டுக்கொண்டிருந்த நண்பர் ரொம்ப ஸீரியஸாக உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் வந்த அவரது மகள், 'அப்பா, சாயங்காலம் நாம டிரெய்ன்ல போவோமா?' என்று கேட்டது. அவர் கவலை மறந்து சிரித்துவிட்டார். பெரியவர்களின் கவலைகள் சிறியவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களது உலகம் தனி உலகம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களிடம் தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி பேசுகின்றார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத, அதைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் தங்களுக்கென்ற உள்ள ஓர் உலகத்தில் இருக்கின்றனர். வழியில் விவாதம் வேறு. வழியில் இவர்கள் விவாதித்தது என்னவென்றால், 'யார் பெரியவர்?' என்ற கேள்வி.

'உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது' என்று சொல்கின்ற இயேசு குழந்தையை உருவகமாக வைக்கின்றார்.

சீடர்கள் செய்த இந்த செயலே அவர்களின் குழந்தைத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. அப்படியிருக்க ஏன் குழந்தையை எடுத்துக்காட்டாக வைக்க வேண்டும்?

அவர்கள் விவாதித்த பொருள் தவறு.

குழந்தைகள் ஒருபோதும் தங்களுக்குள் பெரியவர், சிறியவர் பாகுபாடு பார்ப்பதில்லை.

'யார் பெரியவர்?' என்ற கேள்வி அன்றாடம் நாம் நம்மை அறியாமல் கேட்கும் கேள்விதான்.

நம்மைக் கடக்கும் நபர் நமக்கு வணக்கம் சொல்லாத போது,

நம் குழந்தைகள் நம் பேச்சைக் கேட்காதபோது,

சாலையில் நம் வாகனத்தை இன்னொரு வாகனம் முந்திக்கொண்டு செல்லும்போது,

வகுப்பில் நம் பாடத்தை நம் மாணவர்கள் கவனிக்காதபோது,

இப்படி பல நேரங்களில், 'யார் பெரியவர்?' 'நான் பெரியவர் இல்லையா?' என்ற கேள்விகள் மூளையின் ஏதோ ஒரு மூளையில் மின்னி மறைகின்றன. ஆனால், உண்மையில் பெரியவர்-சிறியவர் என்பதெல்லாம் நம் மனதின் எண்ணம்தான் தவிர வெளியில் ஒன்றுமில்லை.

வெளியில் ஒன்றுமில்லை. எல்லாம் மனதில்தான். இதுதான் குழந்தையுள்ளம்.

Sunday, May 20, 2018

அவன் இறந்துவிட்டான்

நாளைய (21 மே 2018) நற்செய்தி (மாற்கு 9:14-29)

அவன் இறந்துவிட்டான்

நாளை மீண்டும் ஆண்டின் பொதுக்காலத்தை தொடங்குகிறோம். தவக்காலம் மற்றும் பாஸ்கா காலத்தில் நாம் பெற்ற அருள்வரங்களை மெதுமெதுவாக அசைபோடும் காலம் பொதுக்காலம்.

மாற்கு நற்செய்தியாளர் நம்மோடு இந்தப் பயணத்தில் உடன்வருகின்றார்.

நாளைய நற்செய்தியில் இயேசு தீய ஆவியை விரட்டும் நிகழ்வை வாசிக்கின்றோம். திருத்தூதர்கள் விரட்ட முடியாத தீய ஆவியை இயேசு விரட்டுகின்றார்.

இந்த நிகழ்வு ஒரு நம்பிக்கைப் பயணமாக இருக்கிறது. எப்படி?

தீய ஆவி ஒரு சிறுவனைப் பிடித்துக்கொள்கிறது. பாவம்! இந்தப் பேய்க்கு வயது வித்தியாசம் எல்லாம் தெரியாது போல! அந்தச் சிறுவனுக்கு வலிப்பு உண்டாக்குவதோடல்லாமல், தீயிலும், நெருப்பிலும் தள்ளிவிடவும் முயற்சி செய்கிறது. இந்த சிறுவனின் அப்பா அடுத்த கதைமாந்தர். தன் மகனது நோயை எப்படியாவது யாராவது குணமாக்கிவிட வேண்டும் என்று ஒரு தாய்போல காத்திருக்கின்றார். அந்த நாளும் வருகிறது. சீடர்களிடம் கொண்டுவருகின்றார். அவர்களால் ஓட்ட முடியவில்லை.

நம்பிக்கையில் எழும் முதல் தயக்கம் இது. அதாவது, ஒரு படி சறுக்குகிறது. 'சரி போதும்' என ஓய்ந்திருக்கலாம் இவர். 'இன்னொரு முறை முயற்சிப்போம்' என இரண்டாம் முறை முயற்சிக்கிறார்.

'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எங்களுக்க உதவி செய்யும்' என்று இயேசுவிடம் கேட்கின்றார் அப்பா.

'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார் இயேசு.

'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என தாள்பணிகின்றார் அப்பா.

பேயை ஓட்டியாயிற்று. எழுந்து நிற்க வேண்டிய சிறுவன் விழுந்து கிடக்கிறான்.

'அவன் இறந்துவிட்டான்' என்கிறது கூட்டம்.

அதாவது மறைமுகமாக, 'நீ தோற்றுவிட்டாய்' என்று அப்பாவை கேலி செய்கிறது கூட்டம்.

ஆனால், இயேசு அவன் கையைப் பிடித்து தூக்கிவிடுகிறார்.

நிற்க.

நம்பிக்கையில் இரண்டு சறுக்கல்கள் வரும்:

முதல் சறுக்கல், நாம் வேண்டுவது கிடைக்காதபோது.

இரண்டாவது சறுக்கல், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்மறை எண்ண ஓட்டம்.

முதல் வகை சறுக்கலிலிருந்து எழ நாம் கைகளை மீண்டும் ஊன்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டாம்; வகை சறுக்கலிலிருந்து எழ நாம் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்.

என் வாழ்வில் நான் செத்துவிட்டவை என்று நம்பிக்கையில்லாமல் விட்டவற்றிற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க என்னால் முடியுமா?

'எல்லாம் முடிந்துவிட்டது' என்று நான் மற்றவர்களின் முயற்சிகளுக்கு குறுக்கே நிற்கின்றேனா?


Friday, May 18, 2018

இவருக்கு என்ன ஆகும்?

தன் உயிர்ப்புக்குப் பின் இயேசு பேதுருவையும் (21:15-19), யோவானையும் (21:20-25) சந்திக்கும் நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்கின்றார். 'என் ஆடுகளைப் பேணிவளர்' என்று தன் திருஅவையை பேதுருவிடம் ஒப்புவித்த இயேசு இறுதியில் அவரிடம், 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.

பேதுரு இயேசுவைப் பின்தொடர ஆரம்பிக்கின்றார்.

சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்த அவர் இயேசுவின் அன்புச் சீடரும் (யோவான்) பின்தொடர்கிறார் என்று கண்டு, 'ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?' என்று என்று கேட்கின்றார்.

'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்ந்து வா!' என்கிறார் இயேசு.

கடந்த வாரத்தில் நிகழ்வு ஒன்றை வாசித்தேன்.

நெடுஞ்சாலையில் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் தனக்கு முன்னால் செல்லும் காரை முந்துகிறார். முந்தி கொஞ்ச தூரம் சென்று கண்ணாடியில் தனக்குப் பின் வரும் காரைப் பார்த்துப் பெருமிதம் கொள்கின்றார். தான் முந்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் அவர் முந்திய கார் இவரை முந்திவிடுகிறது. மறுபடியும் தன் காரின் வேகத்தைக் கூட்டி அவரை முந்துகின்றார். பின் மற்றவர் முந்துகின்றார். இப்படியாக முன்னால் பார்க்க, பின்னால் பார்க்க என்று முந்திக்கொண்டிருந்த அவர் திடீரென்று உணர்கின்றார் தான் கடக்க வேண்டிய சேவை சாலையை தாண்டிவிட்டோம் என்று. முன்னோக்கிச் செல்பவரை முந்த நினைப்பதும், பின்பக்க கண்ணாடியை பார்த்துக்கொண்டே யார் நம்மை முந்துகிறார் என்று பார்த்துக்கொண்டே இருப்பதும் நம் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதோடு, நம் பயணத்தின் இலக்கை அடைவதற்கும் இடராக அது மாறுவிடுகின்றது.

பேதுருவின் பிரச்சினை அதுதான்.

தன் பின் நடந்து வரும் யோவானை கண்ணாடியில் பார்த்து, 'இவர் என்னைவிட பெரியதாக எதுவும் பெற்றுக்கொள்வாரோ?' என எண்ணிவிடுகிறார். இவரின் வேகம் குறைகிறது. இயேசு உடனே எச்சரிக்கின்றார்.

திருஅவையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட பேதுரு தன் கண்களை தனக்கு முன் செல்லும் இயேசுவின்மேல் மட்டுமே பதிக்க வேண்டும் என்றும், தனக்குப் பின், தனக்கு அருகில் வருபவர் மற்றும் வருபவை பற்றி அவர் கவலைப்படத்தேவையில்லை எனவும் அறிவுறுத்துகின்றார் இயேசு.

தன் பாட்டி வீட்டிற்குச் செல்லும் ஆலிஸ் வழியில் உள்ள பூந்தோட்டங்களை இரசித்துக்கொண்டே வீட்டிற்கான வழியைத் தவறவிட்டதை நாம் 'ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்' நாவலில் வாசிக்கின்றோம்.

பூந்தோட்டங்களும், பூக்களும் அழகுதாம். ஆனால், நம் இலக்கு அதைவிட அழகு.

'இவருக்கு என்ன ஆகும்?' என்று கேட்காமல் அவரைப் பின்தொடர்தல் நலம்.

Wednesday, May 16, 2018

இடம் பொருள் ஏவல்

ஆயிரத்தவர் தலைவர் முன் நிற்கின்ற பவுல் அந்த இடத்தில் கூடியிருந்த நபர்கள் பரிசேயர்கள், சதுசேயர்கள் என இரண்டு குழுவினராக இருப்பதை உய்த்துணர்கின்ற பவுல், 'நான் ஒரு பரிசேயன்' என அறிக்கையிடுகின்றார்.

இவர் ஒரு பக்கம் சார்ந்து பேசுகிறார் என்பதாக நினைத்து சதுசேயர் அணி வெகுண்டெழுகிறது.

இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை நடக்க பவுல் தப்பிவிடுகின்றார்.

ஆக, வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பது பவுலின் விடயத்தில் உண்மையாகிறது.

பவுலை பிய்த்துக்கொண்டு போகும் அளவிற்கு பிரிவினை வந்துவிடுகிறது.

ஆனால்,

இறுதியில், 'துணிவோடிரும்!' என ஆண்டவர் அவர் அருகில் நிற்கின்றார்.

இதுதான் வாழ்க்கை.


Tuesday, May 15, 2018

எபேசு உரை

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் உரைகளில் பவுலின் எபேசு உரை (காண். திப 20:17-38) மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருஅவையின் கட்டமைப்பு, மூப்பர்களின் பணி, இறைவார்த்தைப்பணியின் முக்கியத்துவம் என நிறைய கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்தாலும், மூன்று விடயங்களை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

1. 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை'

எபேசின் மூப்பர்களோடு பழகி, உறவாடி, ஊக்குவித்த பவுல் அவர்களைவிட்டு இப்படிச் சொல்லித்தான் பிரிகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் அவரின் மனப்பக்குவத்தை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றன: ஒன்று, அவர் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு வழிநடத்தப்பட்டார். அந்த வழிநடத்துதலை அவர் தன் தன்னலத்திற்காக ஒருபோதும் உடைக்க விரும்பவில்லை. இரண்டு, பவுல் வாழ்வின் எதார்த்தம் அறிந்தவராக இருந்தார். நம் வாழ்வில் நாம் நம் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் பவுலைப் போல சொல்லியிருக்க மாட்டோம். ஆனால், நம் வாழ்வில் பார்த்த, பழகிய பல நபர்களை நாம் அதற்குப் பின் பார்க்கவே இல்லை. நாம் இனி பார்க்க மாட்டோம் என்று பழகினால் ஒருவேளை நம்மால் முழுமையாக ஒருவரை அன்பு செய்ய முடியுமோ எனத் தோன்றுகிறது.

2. 'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை'

அதாவது, என்னுடைய ஆடம்பர தேவைக்கும் நான் ஆசைப்படவில்லை. என் அத்தியாவசியத் தேவைக்கும் ஆசைப்படவில்லை. என்னே ஒரு உன்னதமான பக்குவம்! எல்லாம் இழக்கும் ஒருவருக்கு எல்லாவற்றையும் விட ஆசை இருக்கும் என்கிறது ஜென் மரபு. ஆனால், பவுல் அதையும் வென்றெடுக்கிறார். மேலும், தன் தேவைக்கு தானே, தனது கைகளே உழைத்ததாக பெருமிதம் கொள்கின்றார். நத்திங் ஒர்த் எவர் கம்ஸ்...
என்பார்கள். ஆக, என் கைகள், என் ஆற்றல், என் முயற்சி என வரும் ஒன்றில் நம் மனம் மகிழ்ச்சி கொள்ளல் வேண்டும்.

3. 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை!'

'நான் யார் பொருளுக்கும் ஆசைப்படவில்லை' என்று சொல்லி சில நேரங்களில் நாம் ஒதுங்கிக்கொள்வதுண்டு. பவுல் இன்னும் ஒருபடி மேலே போய், 'நான் ஆசைப்படாவிட்டாலும், அடுத்தவர்களுக்குக் கொடுக்கிறேன்' என்கிறார். 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை' என்று இயேசுவே சொன்னதாக பவுல் குறிப்பிடுகிறார். இயேசுவின் இந்த வார்த்தைகள் நற்செய்தி நூல்களில் இல்லை. ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் இருக்கலாம். கொடுக்கும்போது நாம் நிறைய அடைகிறோம் என்பதைக் குறிக்கவே அதை பேறுடைமை என்கிறார் பவுல்.

Monday, May 14, 2018

இடமாற்றம்

நாளைய (15 மே 2018) நற்செய்தி (யோவா 17:1-11)

இடமாற்றம்

தன் தந்தையிடம் தன் சீடர்களுக்காக இறைவேண்டல் செய்யும் இயேசு, 'இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்' என்கிறார்.

மேலும், நாளைய முதல் வாசகத்தில் (திப 20:17-27) எபேசு நகரின் மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்ற பவுல், 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை' என்று சொல்லி விடைபெறுகின்றார்.

ஒருவர் இருக்க - மற்றவர் பிரியும் அனுபவம் விடுதியில் அல்லது குருமடத்தில் அல்லது துறவற பயிற்சி நிலையத்தில் படித்தவர்களுக்கு கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் நாள். காலையிலேயே அம்மா வந்துவிடுவார். நாம் ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் உள்ள அனைத்தையும் கொண்டுவந்திருப்பார். புதிய சோப்பு, புதிய சோப்பு டப்பா, புதிய டூத் பேஸ்ட், பிரஸ், டவல், போர்வை, என நாம் எழுதியதையும், நாம் எழுதாத பூந்தி, முறுக்கு போன்றவற்றையும் வாங்கி வந்திருப்பார். கடந்து போன மாதங்களுக்கான பாக்கி ஃபீஸ், எப்போதாவது அடுத்த மாதத்துக்கும் சேர்த்து ஃபீஸ் - அடுத்த மாதத்துக்கும் சேர்த்து ஃபீஸ் கட்டும்போது ஏதோ உலகத்தில் நாமதான் பெரிய பணக்காரர் போன்ற உணர்வு வந்து போகும்! - இப்படி எல்லாம் முடிந்து மாலை நேரம் வர வர துக்கம் தொண்டையைப் பிடிக்கும். இதிலும் அடுத்த நாள் கணிதவியல் அல்லது இயற்பியில் தேர்வு என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படியே அம்மாவோடு ஓடிப்போய்விடலாமோ என்று தோன்றும். 5 மணி ஆகிவிடும். அம்மா புறப்பட்டுவிடுவார். கேட் வரை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடப்பார். அவர் சென்ற சில நிமிடங்களில் கொண்டு வந்த பொருள்களை பாக்ஸில் வைத்துவிட்டு, முகம் கழுவி, ஸ்டடி ஹாலில் அமர்ந்து கணிதம் அல்லது இயற்பியல் புத்தகத்தைத் திறந்தால் எல்லாம் புதிதாக இருக்கும். கண்களில் வடியும் கண்ணீர்த் துளிகளுக்கு இடையே பித்தாகரஸ் தியரமும், நியுட்டனின் விதிகளும் வெறும் புள்ளிகளாகத் தெரியும்.

'நீ இங்க இரு - நான் போகிறேன்' என்று சொல்வதுபோல அம்மா விடுதியிலிருந்து விடைபெறுவார்.
'நீ இங்க இரு - நான் போகிறேன்' என சீடர்களிடமிருந்து இயேசு விடைபெறுகிறார்.
'நீ இங்க இரு - நான் போகிறேன்' என மூப்பர்களிடமிருந்து பவுல் விடைபெறுகிறார்.

இருக்கும் இடம் கஷ்டமாக இருந்தால் இருப்பு வருத்தம் தரும். போகும் இடம் மகிழ்ச்சியாக இருந்தால் செல்லுதல் மகிழ்ச்சி தரும்.

பவுல் போகும் இடம் மகிழ்ச்சியான இடம் அல்ல. ஆனால் இயேசு போகும் இடம் மகிழ்ச்சியான இடம்.

சில நேரங்களில், நம் மனநிலைதான் இடத்தையும்தாண்டி மகிழ்ச்சியை தந்துவிடுகிறது.

அம்மா சென்ற அந்த மாலை அடுத்த நாள் மறந்துவிடுகிறது. வகுப்பறை, பள்ளி, டெஸ்ட் என மனது மற்றவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறது.

இடமாற்றம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், இடங்கள் சங்கமிப்பது இறைவனில் என்று நினைப்பவர்களுக்கு அது அப்படித் தெரிவதில்லை. ஆகையால்தான், இயேசுவும் பவுலும் எளிதே இடம் மாறுகின்றனர்.


Tuesday, May 8, 2018

முழு உண்மை

நாளைய (9 மே 2018) நற்செய்தி (யோவா 16:12-15)

முழு உண்மை

'உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.'

- இயேசுவின் இறுதி வார்த்தைகளில் வரும் 'முழு உண்மை' என்ற சொல்லாடலை நாம் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அது என்னங்க முழு உண்மை?

உண்மை அல்லது பொய். இவ்வளவுதான.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கதாநாயகன் சொல்வார்: 'ஒரு பொய் சொல்லும்போது அதுல கொஞ்சம் உண்மை கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது.' ஆக, பொய்யிலும் உண்மை இருக்கிறது. அப்படி என்றால், உண்மையிலும் பொய் இருக்கலாம். முழு உண்மை என்பது பொய் இல்லாத உண்மையா?

இயேசு மற்றும் பிலாத்து உரையாடலில் பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா அது என்ன?' என்று கேட்பார். தொடர்ந்து தன் மனைவியிடம், 'கிளவுதியா, உண்மை என்றால் என்ன?' எனக் கேட்பார். அதற்கு மனைவி, 'அதை நீயே உணராவிட்டால் அதை யாரும் உனக்குக் கற்பிக்க முடியாது' என்பார் மனைவி.

'சத்' என்றால் சமஸ்கிருதத்தில் இருப்பு என்பது பொருள். ஆக, இருப்பு இருப்பாக இருக்கும்போது அது உண்மையாக இருக்கிறது. இருப்பில் கறை படியும்போது அது பொய் ஆகிவிடுகிறது. 'இது இல்லை. இது இல்லை' என்று ஒவ்வொன்றாகக் களைந்துவிடும்போது இறுதியில் நிற்கும் இருப்பே உண்மை. அந்த உண்மையை நோக்கிய பயணத்தில் உதவி செய்பவர் தூய ஆவியார்.


Monday, May 7, 2018

தன்மாண்பு

தன்மாண்பு

நாம ஒரு பக்கம் வண்டிய திருப்புனா, அது இன்னொரு பக்கம் போகுது! என்ற நிலை திருத்தூதர்கள் பவுலுக்கும், சீலாவுக்கும் கூட வருகின்றது.

பிலிப்பி நகரில் பவுலும், சீலாவும் பணி செய்துகொண்டிருக்கின்றனர் (காண். திப 16:16-40). குறி சொல்லும் ஆவியைக் கொண்டிருந்த ஓர் அடிமைப்பெண் இவர்களை யார் என்று அறிந்து, இவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்: 'இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள். மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்.' பவுல் மற்றும் சீலாவைப் பற்றிய நல்ல வார்த்தைகளே இவை என்றாலும், பவுல் கோபப்பட்டு இவரிடமிருந்து ஆவியை விரட்டி விடுகின்றார். ஆவி போய்விட்டதால் இவரை அடிமையாக வைத்து வேலை பார்த்து வந்த தலைவருக்கு வருவாய் போய்விட்டது. கோபமும், பொறாமையும் கொண்ட அவர், திருத்தூதர்களுக்கு எதிராக கலக்கம் உருவாக்க, பவுலும், சீலாவும் சிறையிடப்படுகின்றனர்.

சிறையிடப்பட்ட இரவில் இவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு, கதவுகள் உடைகின்றன. கைதிகள் தப்பித்திருக்கலாம் என நினைக்கிற சிறைத்தலைவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார். 'நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்! உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்!' என்று பவுல் ஆறுதல் சொல்ல, அவசர அவசரமாக வந்த அவர், 'பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?' என்கிறார்.

இதற்கிடையில் பவுலும், சீலாவும் போகலாம் என அறிவிக்கப்பட, 'உரோமைக்குடிமக்களை இப்படியா தொந்தரவு செய்வது?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார் பவுல்.

இவர்கள் உரோமைக்குடிகள் என்றவுடன் பதறியடித்து வந்த தலைமை அதிகாரிகள் இவர்களிடம் மன்னிப்பு வேண்டுகின்றனர்.

சிறைக்கதவுகள் திறந்திருந்தும் பவுலும், சீலாவும் ஏன் வெளியே போகவில்லை?

இதை நான் காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகத்தோடு ஒப்பிட விழைகிறேன்.

நம்மை அழிக்க நினைக்கும் எதிரியிடமிருந்து தப்பி ஓடாமல், நேருக்கு நேர் நின்று நம் உரிமை நிலைநாட்டப்படும் வரை இறங்கிவராமல் இருப்பதுதான் அது.

மேலும், திருத்தூதர்கள் தங்கள் வாழ்வில் முதன்மையானது என்பதை அறிந்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து தப்புவது முக்கிமல்ல. 'கதவு திறந்து கிடந்தது. நாங்கள் வந்தோம்' என சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் தங்களை நினைக்கவில்லை. தப்பி ஓடாமல் இருந்ததால் சிறைக்காவலரின் குடும்பமே மனமாற்றம் அடையவும், தலைவர்கள் தங்கள் தவற்றை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.

வளைந்து கொடுக்காத இந்த தன்மாண்பு நமக்கு நல்ல பாடம்.

Sunday, May 6, 2018

லீதியா

நாளைய (7 மே 2018) முதல் வாசகம் (திப 16:11-15)

அலங்கரிக்கப்பட்ட அரங்கங்களிலும், தூய்மையான ஆலயங்களில் நடக்கவில்லை திருத்தூதர்களின் தூதுப்பணி.

ஆற்றங்கரைகளிலும், காற்றுத் தூசியிலும் தான் நடந்தேறியது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் திப 16:11-15ல் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவர் செய்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இவர் வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார்.

'...அவற்றுக்குச் சொல்லுமில்லை. பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.'
(திபா 19:3-4)

Friday, May 4, 2018

புதிய கதவு

நாளைய (5 மே 2018) முதல் வாசகம் (திப 16:1-10)

புதிய கதவு

கடவுள் ஒரு கதவை அடைத்தால், இரண்டு கதவுகளைத் திறந்துவிடுவார் என்ற வாக்கு பவுலின் வாழ்வில் உண்மையாகிறது.

தன்னை திருத்தூதர்களுக்கு அறிமுகம் செய்த, தன் முதல் தூதுரைப் பயணத்தில் உடனிருந்த உற்ற தோழன் பர்னபா அவரிடமிருந்து பிரிய நேரிட்டது.

அந்தப் பிரிவை, வருத்தத்தை கடவுள் உடனே ஈடுசெய்கிறார்.

தன் அன்பு பிள்ளையான திமொத்தேயு பவுலுக்கு அறிமுகம் ஆகிறார் (காண். திப 16:1-5)

பவுல் திமொத்தேயுவின் மேல் கொண்டிருந்து அளவுகடந்த அன்பிற்கு அவர் அவருக்கு எழுதிய கடிதங்களே சான்று.
திமொத்தேயுவின் தாய் யூதர். தந்தை கிரேக்கர்.

இரண்டு பின்புலங்களில் இருந்து வருபவர்கள் வாழ்வில் பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரண்டு உலகங்களுக்கு, இரண்டு மதங்களுக்கு, இரண்டு சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனவர்கள். ஒன்றைவிட இரண்டு பெரிதுதானே.

தகுந்த நேரத்தில் தகுந்த நபரை அறிமுகம் செய்வது இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று.

பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத் தொடக்கத்தில் பவுல்-சீலா-திமொத்தேயு என மூவர் இருந்தாலும், இவர்களோடு லூக்காவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் உள்ள கதையாடல்களில், 'நாங்கள் சென்றோம்,' 'நாங்கள் தங்கினோம்' என்று தன்மை பன்மையில் எழுதுகின்றார்.

திருத்தூதர்கள் ஆசியா, பித்தினியா போன்ற பகுதிகளுக்குச் செல்ல விரும்புகின்றனர் (காண். திப 16:6-10). ஆனால், இயேசுவின் ஆவியார் அவர்களைத் தடுக்கின்றார். ஆக, அவர்கள் துரோவா செல்கின்றனர். மேலும், துரோவாவில் ஒரு காட்சி கண்டு, மாசிதோனியாவுக்குச் செல்கின்றனர்.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியவை:

அ. தூய ஆவியார், 'அங்கே போகக்கூடாது!' என்று தடுக்கின்றார்
ஆ. கனவில் 'இங்கே வாங்க!' என்று அழைக்கப்படுகிறார்கள்

அதாவது, முழுக்க முழுக்க தூய ஆவியானவரின் உடனிருப்பையும், தங்களுக்கு வரும் கனவுகள் மற்றும் காட்சிகளையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

உள்ளுணர்வு (intuition) கொண்ட ஒருவரால்தான் இந்த இரண்டையும் உணர முடியும்.

காலங்காலமாக கனவுகள் நமக்கு மறைபொருளாகவே இருக்கின்றன.

என்ன நடந்தாலும், 'கடவுளின் தீர்மானம் என்ன?' என்பதை உணர்ந்து அதன்படி நடக்கின்றனர் திருத்தூதர்கள்.

Thursday, May 3, 2018

சுமக்க முடியாத சுமை

நாளைய (4 மே 2018) முதல் வாசகம் (திப 15:22-31)

சுமக்க முடியாத சுமை

இன்று மாலை திருச்சி பேராலயத்தில் நடந்த குருத்துவ அருள்பொழிவு விழாவுக்குச் சென்றிருந்தேன். தனது மறையுரையில் திருச்சி ஆயர் அருள்பணியாளர் திருப்பலி மற்றும் திருநிகழ்வுகளின்போது அணியும் மேலாடை அல்லது திருவுடை மற்றும் ஸ்டோலா குறித்து விளக்கம் தந்தார். குருக்களின் அருள்பொழிவின் அடையாளம்தான் இந்த மேலாடை எனவும், இந்த மேலாடை இல்லாமல் அருள்பொழிவு பெற்றவர் திருநிகழ்வில் பங்கேற்கக் கூடாது என்றும் சொன்னார்.

நிற்க.

திருப்பலிக்கு முன்னதாக சில அருள்பணியாளர்கள் தாங்கள் அணிய வேண்டிய மேலாடை அல்லது திருவுடை கனமாக இருப்பதாக முணுமுணுத்தார்கள்.

நிற்க.

நாளைய முதல் வாசகத்தில் எருசலேமின் சங்கத்தின் முடிவை புறவினத்து மக்களுக்கு அறிவிக்க பவுல் மற்றும் பர்னபாவோடு எருசலேமின் திருத்தூதர்கள் யூதா மற்றும் சீலாவை அனுப்புகின்றனர். சீலா என்பது பெண்ணின் பெயர் என நினைத்திருந்தேன். ஆனால் இது ஆணின் பெயரே.

'இன்றியமையாததைத் தவிர அதிகமான வேறு எந்த சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்' என திருத்தூதர்கள் தூது அனுப்புகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள்:

அ. தாங்கள் செய்யும் எந்த முடிவையும் தூய ஆவியானவரின் துணையோடே செய்கின்றனர் திருத்தூதர்கள்.
ஆ. சுமைகளைச் சுமத்தாமல் இருக்க வேண்டும் என மிகவும் அக்கறைப்படுகின்றனர் திருத்தூதர்கள்.

நாளைய நற்செய்தியிலும் இயேசு தனது சீடத்துவத்தின் சுமையை அன்பு என்ற ஒற்றைச்சொல்லாகச் சுருக்கி சுமையை எளிதாக்கிவிடுகின்றார்.

மேற்காணும் இரண்டு விடயங்களும் நம் வாழ்வில் இருக்க நாம் முயற்சி செய்யலாமே! செய்கின்ற அனைத்திலும் தூய ஆவியானவரின் துணையை நாடுவோம். எந்தவிதத்திலும் யாருக்கும் எதிலும் சுமையாக இருக்காமல் முயற்சி செய்வோம்.


Tuesday, May 1, 2018

கலந்து பேசி


வீடுகளில் முக்கியமான பிரச்சினைகள் பற்றிப் பேசும்போதும், திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைத் திட்டமிடும்போதும், 'வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்' அல்லது 'கலந்துகிட்டு சொல்றேன்' என்று சொல்வது இயல்பு.

தொடக்கத் திருச்சபையில் புதிதாக திருமுழுக்கு பெற்ற புறவினத்தார் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான முடிவை பவுலும் பர்னபாவும் தாங்களே எடுக்காமல், எருசலேமில் உள்ள திருச்சபையார், திருத்தூதர்கள், மற்றும் மூப்பர்களோடு கலந்து பேசிவிட்டுச் சொல்வதாக வாக்குறுதி கொடுக்கின்றார்.

இது பவுல் மற்றும் பர்னபா திருத்தூதர்களோடு கொண்டிருந்த நல்லிணக்கத்தையே குறிக்கின்றது. பல நேரங்களில் நாம் எதிர்மறை கருத்துக்களும், பிரிவினை எண்ணங்களும் குழும வாழ்வில் வரக்கூடாது என நினைக்கிறோம். ஆனால், குழும வாழ்வில் இவை வந்தே தீரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதைக் கலந்து பேசி சரிசெய்வதுதான். ஏனெனில் இரண்டு மனங்கள்-மூளை இணைந்து செயல்படும்போது அதன் வெளிப்பாடு மூன்றைவிட பெரிதாகவே இருக்கும். மேலும், பவுல் மற்றும் பர்னபாவின் கலந்து பேசுதல் அவர்களின் பணிவாழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தளமாகவும் இருக்கிறது.

நாளைய நற்செய்தியில் இணைந்திருத்தல் மற்றும் கனிதருதல் பற்றி பேசுகின்றார் இயேசு. கலந்து பேசி பிரச்சினைக்கு விடை காணுதலும் ஒருவகை இணைந்திருத்தல் மற்றும் கனிதருதலே.


தச்சனின் மகன்

நாளை உழைப்பாளர் தினம். நாளை தூய வளனாரை தொழிலாளர், உழைப்பாளி எனக் கொண்டாடி மகிழ்கிறது தாய்த்திருச்சபை.

அம்மா, அப்பாக்கள் சாதாரண கூலி வேலை செய்வதை பிள்ளைகள் அவ்வளவு எளிதாக வெளியில் சொல்வதில்லை. ஒரு டாக்டரின் மகன், ஒரு பொறியாளரின் மகன், ஒரு வழக்குரைஞரின் மகன், ஒரு ஆசிரியரின் மகன் என உள்ள வட்டத்தில் மில்லுக்கு வேலை செய்யும் ஒருவரின் மகன் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். 'உங்க அப்பா என்ன வேலை செய்றார்?' என்ற கேள்விக்கு பெரும்பாலும் அவர் 'மில் சூபர்வைசர்' என்று பதில் சொல்வார்.

வேலையை நாம் அதன் கூலி மற்றும் செய்முறையை வைத்து நல்ல வேலை, கெட்ட வேலை என்று பிரித்துவிடுவதால்தான் அதைச் செய்பவர்களையும் நல்லவர்கள், கெட்டவர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரித்துவிடுகின்றோம்.

'இவர் தச்சனின் மகன் அல்லவா!'

இயேசுவைக் காயப்படுத்த அவரின் சமகாலத்தவர் கையாண்ட ஒரு பெரிய உத்தி அவரின் பழைய காலத்தை நினைவூட்டுவது. பழைய காலத்தை ஒருவருக்கு நினைவூட்டுவதன் மூலம், 'நீ ஒன்னும் பெரிய ஆளு இல்ல!' 'நீ தச்சனின் மகன்தான்!' 'உனக்கு எப்படி விவிலியம் தெரியும்?' 'உனக்கு எப்படி திருச்சட்டம் தெரியும்?' 'உனக்கு எப்படி வல்லசெயல்கள் செய்யத் தெரியும்?' என்று மறைமுகமாகக் கேட்டனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால் இயேசு ஒருபோதும் இதற்கு எதிர்வினை ஆற்றவே இல்லை.

'ஆம். நான் தச்சனின் மகன்தான்' என்று ஏற்றுக்கொள்வதுபோல இருக்கிறது அவருடைய மௌனம்.

மற்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். ஆனால் இயேசு தன்னை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவே இல்லை. தன்னை ஏற்றுக்கொள்பவரே தன்னை முழுமையாக வளர்த்தெடுக்க முடியும். வளர்த்தெடுத்த தன்னை மற்றவருக்குக் கொடுக்க முடியும்.

உழைப்பு சில காலம்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

70 வருடம் வாழ்கின்ற வாழ்க்கையில் நாம் 25 முதல் 55 வரை வெறும் 30 ஆண்டுகள்தாம் உழைக்கிறோம். 25க்கு முன்னும் 55க்கு; பின்னும் நாம் உழைக்கவில்லை என்றாலும் நம் இயல்பில் ஒன்றும் குறைவுபடுவதில்லையே. ஆக, உழைப்பை இரசிக்கும் அளவுக்கு ஓய்வையும் நாம் இரசிக்க வேண்டும். பல நேரங்களில் ஓய்வு வேலை செய்வதற்கான தயாரிப்பு என பார்க்கப்படுகிறது.

ஆகையால்தான் உழைப்பை பற்றி பேசுகின்ற நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர், 'ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்' என்று வேண்டிவிட்டு, வேகமாக 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்' என்கிறார்.

உழைப்பின் தினமாகிய நாளை கடவுள் தந்த இந்த மனித உழைப்பிற்காக, மனித உழைப்பின் பிதாமகன் ஆதாமுக்காக நன்றி கூறுவோம்.

உழைப்ப மட்டும் இல்லையென்றால் கடவுளிடம் கையேந்துபவர்களாக நாம் நின்றிருப்போம். உழைப்பு மட்டுமே கடவுளோடு நம்மைக் கைகோர்க்க வைக்கிறது. உழைப்பால் நாம் கடவுளின் உடன்படைப்பாளர்கள் ஆகிறோம்!

உழைப்பு தின வாழ்த்துக்கள்.