Monday, October 9, 2023

ஆனால் தேவையானது ஒன்றே!

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 10 அக்டோபர் 2023

பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் செவ்வாய்

யோனா 3:1-10. லூக்கா 10:38-42

ஆனால் தேவையானது ஒன்றே!

கடந்த ஓராண்டாகப் பயன்படுத்தி வந்த எனது ஐஃபோன் திடீரென நேற்றுச் செயலிழந்தது. பயன்பாடு அனைத்தையும் ஓரிரவுக்குள் என் ஆஃபிஸ் ஆன்ட்ராய்ட் ஃபோனுக்கு மாற்றினேன். இரண்டு ஃபோன் பயன்படுத்துதல் நலமே என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, இயேசு மரியாவுக்கு பெத்தானியாவில் சொன்ன சொற்களை எனக்கும் சொல்வதாக உணர்கிறேன்: 'ஆனால், தேவையானது ஒன்றே!'

நிற்க.

இறையன்பு, பிறரன்பு ஆகிய கட்டளைகளை திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளைகளாக திருச்சட்ட அறிஞருக்கு முன்மொழிந்தார் இயேசு. பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக அமைந்தது 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்னும் நல்ல சமாரியன் உவமை. இறையன்புக் கட்டளையின் விளக்கமாக அமைகிறது, 'ஆனால் தேவையானது ஒன்றே' என்னும் மார்த்தா-மரியா இயேசு நிகழ்வு.

இறையன்பு – பிறரன்பு – நல்ல சமாரியன் - மரியா எனப் பாடங்களைக் கட்டமைப்பதன் வழியாக, இறையன்பே வாழ்வின் தொடக்கமும் நிறைவுமாக இருக்கிறது என மிக அழகாகப் பதிவு செய்கிறார் லூக்கா. நல்ல சமாரியன் உவமையாகவும், பெத்தானியாவின் மரியா நேரடியான வாழ்வியல் நபராகவும் நம் முன் நிற்கிறார்கள்.

இயேசு பெத்தானியாவுக்குச் செல்கிறார். மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்கிறார். இல்லம் வந்த போதகரின் காலடிகளில் அமர்கிறார் மரியா. மார்த்தாவைப் பற்றி லூக்கா இப்படிப் பதிவு செய்கிறார்: 'மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி!' 

இதை வாசிக்கும்போதே மார்த்தாவின் செயல்பாடுகளை நம்மால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. மார்த்தா மற்ற இருவரிடமிருந்தும் - இயேசு, மரியா – தன்னையே தனிமைப்படுத்திக்கொள்கிறார். தன் வேலைகளுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். 

இறைவனிடமிருந்து நம்மையே தனிமைப்படுத்தும்போது நிகழ்வன எவை? பரபரப்பு, தனிமை, வேலைப் பளு, புலம்பல், கவலை, கலக்கம். இவற்றை இயேசுவே மார்த்தாவுக்குச் சுட்டிக்காட்டுகிறார்: 'நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்?'

தொடர்ந்து, 'ஆனால் தேவையானது ஒன்றே' என்றும், அதுவே மரியா தேர்ந்துகொண்ட நல்ல பங்கு என்றும் சொல்கிறார் இயேசு. வயிற்றுத் தேவைகள் நிறைவேறினால்தான் நாம் இறைவனின் காலடிகளில் அமர முடியும் என்பது எதார்த்தம் என்றாலும், வயிற்றுத் தேவையைத் தாண்டிய இறைத்தேடல் அவசியம் என்பதை இங்கே பாடமாக வைக்கிறார் இயேசு.

நம் வாழ்வில், 'தேவையான அந்த ஒன்றை' நாம் கண்டுவிட்டோமா? அல்லது இன்னும் நமக்கு நாமே பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறோமா? இன்று நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு பதற்றம் நம்மைப் பற்றிக்கொண்டுவிட்டது. நிறைய வேலைகள் செய்தால்தான் நாம் நன்றாக இருப்பதாக உணர்கிறோம். ஓய்ந்திருப்பவர்களைச் சோம்பேறிகள் என்றும், நேரத்தை வீணடிப்பவர்கள் என்றும் சொல்கிறோம். நிறைய வேலைகளுக்குப் பின்னர் அவை எந்த நேர்முகத்தைத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் நம்மிடம் விடையில்லை.

கொஞ்சம் பரபரப்பு குறைத்து, தேவையான அந்த ஒன்றைப் பற்றிக்கொள்வோம்.

முதல் வாசகத்தில், யோனாவை இரண்டாம் முறை அழைத்து நினிவேக்கு அனுப்புகிறார் ஆண்டவராகிய கடவுள். மூன்று நாள் நடந்து கடக்க வேண்டிய நகரை, ஒரே நாளில் ஓட்டமும் நடையுமாகக் கடந்து மனமாற்றத்தின் நற்செய்தியை ஏனோ தானோ என்று அறிவிக்கிறார் யோனா. அந்த ஏனோ தானோ நற்செய்தியும் அவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவரும் மனம் மாறுகிறார்கள். விலங்குகளும் சாக்கு உடை அணிகின்றன. ஆண்டவரின் சினம் தணிகிறது.

பரபரப்பான யோனாவின் செய்தியும், தேவையான ஒன்றைப் பற்றிக்கொள்ள நினிவே மக்களைத் தூண்டுகிறது.

தேவையான ஒன்றைத் தேடிப் பற்றிக்கொண்டோர் பேறுபெற்றோர்! 


No comments:

Post a Comment