Wednesday, October 11, 2023

விடாமுயற்சி – நோக்கம் - பரிவு

இன்றைய இறைமொழி 

வியாழன், 12 அக்டோபர் 2023

பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் வியாழன்

மலாக்கி 3:13-4:2. லூக்கா 11:5-13.

விடாமுயற்சி – நோக்கம் - பரிவு

'இறைவேண்டலில் நாம் மேற்கொள்ள வேண்டிய விடாமுயற்சி; எதைக் கேட்கிறோம், தேடுகிறோம், தட்டுகிறோம் என்பது பற்றிய தெளிவான நோக்கம்; விண்ணகத் தந்தையின் பரிவு.'

தம் சீடர்களுக்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்கிற இயேசு, இறைவேண்டலில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியை, உவமை வழியாக எடுத்துரைக்கிறார். நண்பரின் ஒருவருடைய கதவு நள்ளிரவில் தட்டப்படுகிறது. தன்னிடம் வந்திருக்கிற வழிப்போக்கரின் பசிக்காக அவர் தன் நண்பரின் கதவைத் தட்டுகிறார். நண்பரிடம் அப்பம் இருக்கிறது. ஆனால், எழுந்து தருவதற்கான மனம் இல்லை. ஆனால், கதவு தொடர்ந்து தட்டப்படும்போது, தொந்தரவின் பொருட்டாவது கதவு திறக்கப்படுகிறது.

மிகவும் எதார்த்தமான உறவுநிலை எடுத்துக்காட்டு இது. நாம் ஒருவர் மற்றவருக்கு பரிவு காட்ட வேண்டும் என்று நாம் கற்றறிந்தாலும், வாழ்வியல் நிலை என்று வரும்போது பரிவு காட்டுவதற்கு நாம் தயங்குகிறோம். ஆனால், பரிவு காட்டப்பட வேண்டிய நபர் தொடர்ந்து நமக்குத் தொந்தரவு கொடுக்கும்போது அவர் நம்மை விட்டு அகல வேண்டும் என்ற தன்னலத்தின் பொருட்டாவது நாம் பரிவு காட்டுகிறோம்.

உவமையில் காணும் நண்பரும் நாமும் ஒன்றுதான். இங்கே நம் பரிவுச் செயல்பாடு என்பதை நம் நட்பையோ, அல்லது நம் நண்பரின் தேவையோ, அல்லது அறநெறியின் எதிர்பார்ப்பையோ அல்ல, மாறாக, நம் தன்னலத்தை – தொந்தரவு நீங்க வேண்டும் என்ற தன்னலத்தை – மையமாக வைத்ததாக மட்டும் இருக்கிறது. மற்றொரு பக்கம், கதவு தட்டுகிற நபர் எப்படியாவது பரிவைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில், தட்டுவதற்கு வேறு கதவுகள் இல்லை அவருக்கு. ஆக, விடாமுயற்சி அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

இறைவேண்டல் சில நேரங்களில் விண்ணப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. நம் விண்ணப்பங்கள் நிறைவேறும் வரை நாம் விடாமுயற்சியுடன் கேட்க வேண்டும் என்பது பொருள். நாம் கேட்கிற அனைத்து விண்ணப்பங்களும் நிறைவேறி விடுமா? என்னும் கேள்வி அல்லது ஐயம் வேறு.

இரண்டாவதாக, 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' என்று அறிவுறுத்துகிறார் இயேசு. இயேசுவின் இச்சொற்கள் மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. இங்கே, அவை இறைவேண்டல் பற்றிய பகுதியில் உள்ளன. இறைவேண்டலோடு மட்டுமல்ல, நம் வாழ்வின் நோக்கத்தோடும் இணைத்து இச்சொற்களைப் புரிந்துகொள்ளலாம். 'நாம் கேட்காத வரை நாம் பெறுகிற பதில் இல்லை என்பதே' என்பது நம் வாழ்வியல் அனுபவம். நாம் கேட்காத எதையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதுதான் எனக்கு வேண்டும் என்னும் நோக்கத் தெளிவு நம்மிடம் இருக்கிறதா? இதைத்தான் நான் தேடுகிறேன் என்ற தெளிவு இல்லாமல் இருக்கும்போது நாம் இங்கும் அங்கும் அலைபாய்ந்துகொண்டு இருக்கிறோம். நம் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. அல்லது முல்லா போல எங்கோ தொலைத்துவிட்டு, இங்குதான் வெளிச்சம் இருக்கிறது என்று இன்னொரு இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் தட்டாத வரை கதவுகள் திறக்கப்படுவில்லை. ஆக, தெளிவான நோக்கம், அந்த நோக்கத்தால் உந்தப்படுகிற செயல், அச்செயலில் தேவையான விடாமுயற்சி ஆகியவை இருக்கும்போது நாம் வாழ்க்கை என்ற இறைவேண்டலில் வெற்றி பெறுகிறோம்.

மூன்றாவதாக, 'மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? முட்டை கேட்டால் தேளைக் கொடுப்பாரா?' எனக் கேட்கிறார் இயேசு. மத்தேயு நற்செய்தியில் 'அப்பம் கேட்டால் கல்லைக் கொடுப்பாரா?' (7:9) என்று உள்ளது. அதாவது, நன்மையைக் கேட்டால் தீமையைக் கொடுப்பாரா? என்பதே கேள்வி. மேலும், மண்ணில் வாழும் நாமே நன்மை-தீமை அறிந்து நன்மை செய்யக் கற்றிருக்கிறோம் என்றால், விண்ணில் வாழும் நம் தந்தை எந்த அளவுக்கு நம்மேல் பரிவு காட்டுவார். அவர் நாம் கேட்பதை விட அதிகமாக தூய ஆவியைக் கொடுக்கிறார் என்று சொல்கிறார் இயேசு. நாம் நம் தந்தையிடம் இறைவேண்டலில் கேட்பது தூய ஆவியாக மட்டுமே இருக்க வேண்டும். தூய ஆவி தம்மைவிட்டு அகன்றதால் சிம்சோனும் சவுலும் அழிவைக்காண்கிறார்கள். கடவுளின் பரிவுள்ளத்தை இயேசு இங்கே வெளிப்படுத்துகிறார். இதையே, 'நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே மாட்சி' (எபே 3:20-21) என்கிறார் பவுல்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி ஓர் உருவகத்தைக் கையாளுகிறார்: 'நீதியின் கதிரவன் ... நலம் தரும் மருந்து.' படைகளின் ஆண்டவருக்குச் செவிமடுப்பதால் என்ன பயன்? என்று கேள்வி கேட்டு, செருக்குடன் வாழ்வோர் அழிக்கப்படுவதையும், கடவுளுக்குப் பணியாற்றுபவர்கள் வெற்றி பெறுவதையும் எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர். ஆண்டவராகிய கடவுள் ஒரே நேரத்தில் பரிவும் நீதியும் காட்டுபவராக இருக்கிறார்.

நிற்க.

'இறைவேண்டல் என்பது அனைத்து மாந்தர்களின் பொது அனுபவம்' என்னும் தலைப்பின்கீழ், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, 'வாழ்கிற மற்றும் உண்மையான கடவுளே ஒவ்வொருவரையும் இறைவேண்டலை நோக்கி அழைக்கிறார். அந்த இறைவேண்டல் ஒரு மறைநிகழ்வான சந்திப்பு' (எண். 2267) என்றும், கடவுளே நம்மில் இறைவேண்டலை முன்னெடுக்கிறார், 'நாம் செய்யும் இறைவேண்டல் அவருக்கான பதிலிறுப்பே' (எண். 2567) என்றும் மொழிகிறது.


அருள்திரு யேசு கருணாநிதி

மதுரை உயர்மறைமாவட்டம்

இரக்கத்தின் தூதுவர்



No comments:

Post a Comment