Friday, November 4, 2022

செல்வம்

இன்றைய (5 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 16:9-15)

செல்வம்

நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் உவமையின் தொடர்ச்சியாக, 'நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்' என இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார். இங்கே, 'செல்வம்' என்பது இலக்கை அடைவதற்கான வழியே அன்றி, அது இலக்கு அல்ல என்று இயேசு தெளிவுபடுத்துகின்றார். 

தொடர்ந்து, அவர் இரு போதனைகளை வழங்குகின்றார்:

(அ) மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் மிகப் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார்

இதையே சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்' (காண். 19:1) என்கிறார். சிறியவைதாம் பெரியவற்றை நிர்ணயிக்கின்றன. மேலும், சிறியவற்றில் நம்பிக்கையாய் இருப்பதில் நாம் பயிற்சி பெறுகிறோம். அப்படி நாம் பயிற்சி பெறுவதால் பெரியவற்றை எதிர்கொள்வது நமக்கு எளிதாயுள்ளது.

(ஆ) இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது

செல்வம் மற்றும் கடவுள் என்னும் இரு தலைவர்களை, முறையே, 'பொருள்' மற்றும் 'அருள்' என அழைக்கின்ற திருவள்ளுவர், 'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம்' எனச் சொல்லி, பொருள் மற்றும் அருளை இரு உலகங்களின் தன்மைகளாக முன்வைக்கின்றார். பொருளுக்கும் அருளுக்கும் ஒரே நேரத்தில் பிரமாணிக்கமாக இருக்க முடியாது என்பது இயேசுவின் பாடம். 

லூக்கா நற்செய்தியில் சீடத்துவம் பற்றிய போதனை வரும் இடங்களில் எல்லாம், பணத்துறப்பு அல்லது செல்வத் துறப்பு பற்றிய குறிப்பும் வருகின்றது. செல்வம் அல்லது பணம், சீடத்துவத்தின் பெரிய தடைக்கல் என்பது லூக்காவின் புரிதல்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பிலி 4:10-19), செல்வம் அல்லது பணத்தைப் பற்றிய மேலும் இரு புரிதல்களைக் காண்கிறோம். பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலின் நிறைவு அறிவுரைப் பகுதியைத் தொடங்கும் பவுல், அவர்கள் எருசலேம் திருஅவைக்கு அனுப்பிய காணிக்கைக்காக நன்றி கூறுகின்றார். மேலும், பணத்தைப் பற்றிய தன்னுடைய புரிதலையும் முன்வைக்கின்றார்:

(அ) பொருள் கொண்டு அருள் தேடுதல்

பிலிப்பி நகரத் திருஅவையினர், தங்களுடைய பொருளைக் காணிக்கையாகக் கொடுத்ததன் வழியாக, பொருளைக் கொண்டு அருளைச் சம்பாதிக்கின்றனர். அல்லது, செல்வத்தைக் கொண்டு கடவுளைச் சம்பாதிக்கின்றனர். அழியும் செல்வத்தை, அழியாத நற்பயனாக மாற்றிக்கொள்கிறார்கள்.

(ஆ) சமமான மனநிலை

'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழத் தெரியும்' எனப் பெருமை கொள்கிறார் பவுல். இதையே 'சூன்ய நிலை' என அழைக்கிறது ஜென் தத்தவம். இந்த நிலைக்கு வந்துவிட்டால், ஒருவர் தான் இல்லாமலும் வாழ முடியும். தொடர்ந்து, 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' என்கிறார் பவுல். இந்த இறையனுபவமே அவரின் சமமான மனநிலைக்குக் காரணம்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு சொல்வது என்ன?

செல்வம்.

'செல்வோம்' என்பதனால்தான் இதன் பெயர் 'செல்வம்' என்கிறார் கவியரசு கண்ணதாசன். நம்மைவிட்டு அதை விரைவில் சென்றுவிடும். அது செல்லுமுன் அதன் தன்மையை அருளாக மாற்றிவிடுவது சிறப்பு. மேலும், 'கடவுள் தன் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்' என்று ஒருவர் மற்றவரை வாழ்த்துவது இன்னும் சிறப்பு.

செல்வம் இல்லாமல் வாழ முடியாது. செல்வம் இல்லாமல் பவுலால் அவரது கடிதத்தை எழுதியிருக்க முடியாது. செல்வம் இல்லாமல் இறைமக்களுக்கு உதவி செய்திருக்க முடியாது.

ஆனால், செல்வம் செல்லும்.


No comments:

Post a Comment