Monday, November 14, 2022

சக்கேயு

இன்றைய (15 நவம்பர் 2022) நற்செய்தி (லூக் 19:1-10)

சக்கேயு

கதைமாந்தர்களை பெயர் சொல்லி அறிமுகம் செய்வதைவிட அவர்களின் உடல், மனப் பண்புகளைச் சொல்லி அறிமுகம் செய்வது லூக்காவின் இலக்கியத்திறத்திற்கு ஒரு சான்று.

'சக்கேயு பார்க்க விரும்பினார்,' 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' என்ற இரண்டு சொல்லாடல்கள் வழியாக சக்கேயு என்னும் கதைமாந்தரை நாளைய நற்செய்தி வாசகப் பகுதியில் அறிமுகம் செய்கிறார் லூக்கா. சக்கேயுவின் விருப்பத்திற்கு முதல் தடையாக இருந்தது அவரின் உடல் அமைப்பு என்பதால் இரண்டையும் ஒரே தொனியில் சொல்கின்றார் லூக்கா.

'சக்கேயு' என்ற பெயர் எந்த வார்த்தையிலிருந்து வந்தது என்று ஆராயும்போது, அறிஞர்கள் இரு வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றனர்: 'சக்கார் யாவே' ('கடவுள் நினைத்தார்' அல்லது 'கடவுளை நினைப்பது'), 'சக்கா யாவே' ('கடவுள் மட்டும்' அல்லது 'கடவுளின் தூய்மை'). இரண்டு வார்த்தைகளுமே சக்கேயுவுக்குப் பொருந்துவதாக இருக்கிறது: 'கடவுள் நினைத்தார்' - ஆகையால்தான், சக்கேயு ஏறி நின்ற மரத்திற்கு அருகில் வருகின்ற இயேசு, அண்ணாந்து பார்த்து, 'விரைவில் இறங்கி வா, உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்கிறார்.

மற்ற வீடுகளுக்கு (மார்த்தா-மரியா, பரிசேயர், தொழுநோயாளர் சீமோன்) உணவருந்தச் செல்லும் இயேசு இங்கே தங்கச் செல்கின்றார். இதைக் கூர்ந்து கவனித்தால் சக்கேயுவின் செயல்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு தங்குவதற்குத் தடையாக இருந்தவை சக்கேயுவின் வீட்டுப் பொருள்கள். அதாவது, 'கடவுள் மட்டுமே' எனப் பெயர் கொண்டிருந்த ஒருவர், 'கடவுளோடு சேர்த்து மற்றவற்றையும் வைத்திருந்தார்.' ஆகையால்தான், கடவுள் வந்தவுடன் மற்றவற்றைக் கழிக்கின்றார்: 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.' 

இயேசுவும், 'இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் மீட்பு என்பது பொருளாதார வழக்கில் பிணைத்தொகை. வீட்டில் உள்ள பாதிச் சொத்து போனவுடன் இயேசு 'மீட்பு' வந்துவிட்டது என்கிறார். பகிர்தலும், சுரண்டல் அகற்றுதலும்தான் மீட்பு என உணர்த்துகின்றார் இயேசு.

'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் தத்துவத்தின் மொழி. சக்கேயு தயாராக இருக்கும்போது இயேசு என்னும் நட்சத்திரம் தோன்றுகிறார். சக்கேயு நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஓர் இனம் புரியாத சோகமும் வேகமும் இழைந்தோடுவதை நம்மால் காண முடிகிறது. 

(அ) சக்கேயுவின் சோகம்

சக்கேயு மூன்று நிலைகளில் சோகமாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, வாழ்வியல் வெற்றிடம். சக்கேயுவிடம் பணம், அதிகாரம், ஆள்பலம் நிறைய இருந்தது. ஆனால், அவை எதுவும் அவருக்கு நிறைவு தரவில்லை. அவர் யூதர்களிடமிருந்து பணத்தை எடுத்து உரோமையர்களிடம் கொடுத்ததால் அவருடைய இனத்தாரே அவரை வெறுத்து அவரிடமிருந்து தள்ளி நின்றிருப்பர். ஆக, உறவுநிலையும் அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்திருக்கும். இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். தன் வெற்றிடத்தை இயேசு நிரப்ப மாட்டாரா என நினைத்து அவரைக் காண ஏக்கமாயிருக்கின்றார்.

இரண்டு, சக்கேயுவின் குறைபாடுகள். 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. இதை அவருடைய ஒட்டுமொத்தக் குறைபாடுகளின் உருவகம் என எடுத்துக்கொள்ளலாம். உடலளவில் குட்டையாக இருக்கின்றார். தன் கோபம், எரிச்சல், அநீதியான எண்ணம் போன்றவற்றால் உள்ளத்தாலும் குட்டையாக இருந்திருப்பார்.

மூன்று, மக்களின் கேலிப் பேச்சுகள். அவருடைய பணியும் அவருக்குக் கடினமாகவே இருந்திருக்க வேண்டும். யாரும் தாங்கள் உழைத்த பொருளை வரியாகத் தானம் செய்வதில்லை. வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே மக்கள் முயற்சி செய்வர். ஆக, அவர்களின் பொய்யைக் கண்டுபிடித்து, அவர்களைத் துன்புறுத்தி, அச்சுறுத்தி வரி வசூலிக்க அவர் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். இவரைப் பாவி என மக்கள் முத்திரை குத்தினர். ஆலயத்திலும், தொழுகைக்கூடங்களிலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். மேலும், உரோமை அரசும் நிறைய அச்சுறுத்தல்களை அவருக்குக் கொடுத்திருக்கும்.

இவ்வாறாக, உள்ளத்தில் வெற்றிடம், உடல் மற்றும் உறவுநிலைகளில் குறைபாடு, மக்களின் கேலிப் பேச்சுகள், கடவுளிடமிருந்து அந்நியப்பட்ட மனநிலை என சோகத்தில் மூழ்கியிருந்த சக்கேயு, தான் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற முடிவெடுக்கின்றார். முடிவெடுக்கின்ற அந்த நொடியில் மாற்றம் நிகழ்கிறது. 

(ஆ) சக்கேயுவின் வேகம்

முடிவெடுத்தவுடன் விரைவாகச் செயல்படுகின்றார். இயேசுவைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் வாழ்வா – சாவா என்பது போல அவரை விரட்டுகிறது. பார்க்க விரும்பும் ஆவல். ஆனால், அடுத்தடுத்த தடைகள். கூட்டம் பெரிய தடையாக இருக்கிறது. உடலளவிலும் அது தடையாக மாறுகிறது. உளவியல் அளவிலும் தடையாக மாறுகிறது. ஆக, தான் தனியே மரத்தில் ஏற முயற்சிக்கின்றார். வயது வந்த ஒருவர் மரத்தில் ஏறுவதை நம் சமூகம் கேலியாகவே பார்க்கும். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தன் உள்ளத்தின் சோகம் இந்தக் கேலியைவிடப் பெரியதாக இருந்ததால், அது அகல்வதற்கு எப்படியாவது ஒரு வழி பிறக்காதா என விரைவாக ஏறுகின்றார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன் அண்ணாந்து பார்க்கிறார். குனிந்து பார்ப்பதுதான் கடவுளின் இயல்பு. ஆனால், இங்கே கடவுள் அண்ணாந்து பார்க்கின்றார். ஒரு நொடி, இங்கே சக்கேயு கடவுளாக மாறுகின்றார். கீழே இயேசு நிற்பதைக் காண்கின்றார். கடவுளுக்கு மேலே நிற்பது நல்லதன்று என்று இறங்கி வருகிறார். 'உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று இயேசு சொன்னபோது சக்கேயுவின் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும்!

அந்த மகிழ்ச்சியில் அவர் மீண்டும் எழுந்து நிற்கின்றார். தன் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும், எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கவும் உறுதி ஏற்கின்றார். தன் வாழ்வின் தேடல் நிறைவுபெற்றதாக உணர்கிறார். இயேசுவைக் கண்டவுடன் தன் வாழ்வு முடிந்துவிட்டதாகவும், இனி தனக்கு எதுவும் தேவையில்லை என்றும் நினைக்கிறார் சக்கேயு.

'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார் இயேசு.

ஆக, மீட்பு என்பது மறுவுலகில், நாம் இறந்த பின்னர் நடக்கும் நிகழ்வு அல்ல. மாறாக, இன்றே இப்பொழுதே நாம் அதை அனுபவிக்க முடியும்.

'இழந்து போனதைத் தேடி மீட்க மானிட மகன் வந்திருக்கிறார்' என்று இயேசு தன் வருகையின் நோக்கத்தையும் முன்வைக்கின்றார்.

மற்றவர்களைப் பொருத்தவரையில் சக்கேயு தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்தார். ஆனால், சக்கேயுவைப் பொருத்தவரையில் அவர் தன் இழத்தலில்தான் அனைத்தையும் பெற்றார்.

நம் வாழ்வின் சோகமும் வேகமும் இறைவனை எதிர்கொள்ளும் நேரங்கள்.

சோகம் நம் உள்ளத்தை நிரப்பினால் வேகம் குறைக்க வேண்டாம். வேகம் கூட்டுதல் சோகத்தைக் களைக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (திவெ 3), யோவான் தன் திருவெளிப்பாட்டு நூலை திருஅவைகளுக்கு எழுதும் முன்னுரைப் பகுதியை வாசிக்கின்றோம். இலவோதிக்கிய திருஅவை குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. அதன் வெதுவெதுப்பான தன்மை கடவுளுக்கு ஏற்புடையதாக இல்லை. சக்கேயு வெதுவெதுப்பாக இருக்க விரும்பவில்லை. 

தனக்குச் செல்வமும் வளமையும் இருந்தாலும், தன் ஆடையற்ற நிலையை உணர்ந்த சக்கேயு இயேசுவை அணிந்துகொள்கின்றார்.



No comments:

Post a Comment