Friday, December 10, 2021

மீண்டும் வாரும்!


நாளின் (11 நவம்பர் 2021) நல்வாக்கு

மீண்டும் வாரும்!

மீண்டும் மீண்டும் வருதலும் காணுதலும் மனித உறவுகளில் முக்கியமான ஒரு கூறு. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவிலும், அவர் மீண்டும் வர வேண்டும் என்றும், அவருடைய முகத்தை மீண்டும் காண வேண்டும் என்றும் நாம் ஏங்குகின்றோம்.

முதல் ஏற்பாட்டில், ஏனோக் மற்றும் எலியா இறப்பைத் தழுவவில்லை. இவர்கள் என்றும் வாழ்கிறார்கள் என்பது யூத நம்பிக்கை. இந்தப் பின்புலத்தில்தான் மெசியாவின் வருகைக்கு முன்னர் எலியா மீண்டும் வருவார் என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். எலியா இறைவாக்கினரைப் பற்றி நாம் 1 அரசர்கள் நூலில் வாசிக்கின்றோம். எலியா அரசருக்கு சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் சாற்றும் புகழஞ்சலியே இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 48:1-4,9-11). எலியாவுக்கும் நெருப்புக்கும் நெருக்கம் உண்டு. நெருப்பு போல எழுகின்றார். அவருடைய சொல் நெருப்பு போல பற்றியெரிகிறது. பஞ்சம் பரவிக்கிடந்த காலத்தில் - அதாவது, வளம் கொழிக்கும் நிலங்கள் பாலை போலப் பற்றியெரிந்த நேரத்தில் - அவர் இறைவாக்குரைக்கின்றார். பாகால் இறைவாக்கினருக்கு எதிராக எழுந்து, தன் இறைவனின் மேன்மையை நிரூபிக்கும் நிகழ்வில் நெருப்பு இடம் பெறுகிறது. இறுதியாக, நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் அவர் மேலே எடுத்துக்கொள்ளப்படுகின்றார். இறைவாக்கினர் எலியாவின் காலத்தில் பாகால் வழிபாடு இஸ்ரயேலில் அதிகமாக இருந்தது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட்டு, பாகாலுக்குப் பலி செலுத்தினர். ஏனெனில், கானான் நாட்டில் பாகால் கடவுள் மழைபொழியும் வளமைக் கடவுள் என்று அறியப்பட்டார். மேலும், பாகால் கடவுளை வழிபடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பீடங்களும் அசேராக் கம்பங்களும் அவர்களை மிகவும் ஈர்த்தன. தங்கள் கடவுளை மறந்து பாகாலின் பின்னால் செல்கின்றனர். தங்கள் பிரமாணிக்கத்தில் தவறுகின்றனர். அவர்களுடைய இதயம் உறைந்து போய்க்கிடந்தது. பனி போல உறைந்து கிடந்த அவர்களுடைய உள்ளங்களுக்கு உயிர் தருவதற்கு எலியா என்னும் நெருப்பு தேவைப்பட்டது.

நற்செய்தி வாசகத்தில், உருமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து இயேசுவோடு உரையாடிக்கொண்டிருக்கும் திருத்தூதர்கள், எலியா பற்றிக் கேட்கின்றனர். 'எலியா மீண்டும் வர வேண்டும்' என்னும் மக்களின் நம்பிக்கையை எடுத்துச் சொல்கின்றனர். இயேசுவும் அதை ஏற்றுக்கொண்டு, 'எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். ஆனால், மக்கள் அவரைக் கண்டுணரவில்லை' என்று சொல்கின்றார். அவர் நேரடியாகப் பதில் கூறாமல், உருவகமாக, திருமுழுக்கு யோவானே மீண்டும் வந்த எலியா என்று உரைக்கின்றார். மேலும், மானிட மகனும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக வேண்டும் என்பதையும் சொல்கின்றார். 'சீடர்கள் புரிந்துகொண்டனர்' என்று பதிவு செய்கின்றார் மத்தேயு. திருமுழுக்கு யோவானே எலியா என்பதை இயேசு அறிந்துகொண்டார். ஆனால், மற்றவர்கள் அறியவில்லை. அவரை அறிந்துகொள்ளாததால் இயேசுவையும் மெசியா என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் இயேசுதான் எலியா என்றும் நினைத்தனர்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?

(அ) கடவுள் நம்மை மீண்டும் மீண்டும் சந்திக்க வந்துகொண்டே இருக்கின்றார். இது அவருடைய உடனிருப்பைக் காட்டுகின்றது.

(ஆ) கடவுளின் வருகையை அறிதலுக்குத் திறந்த மனம் தேவை. இன்றும் கடவுள் நம் நடுவில் தொடர்ந்து வருகின்றார். அவரை நாம் அறிந்துகொள்கின்றோமா?

(இ) 'உம் முக ஒளி எம்மேல் படுவதாக! அதனால் நாங்கள் வாழ்வோம்!' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். இறைவனின் ஒளி நம்மேல் படுவதற்குத் தடையாக இருக்கின்ற காரணிகள் எவை?


1 comment:

  1. “ மீண்டும் வாரும்!” இவ்வார்த்தைகளுக்கான தந்தையின் விளக்கம் அருமை! தங்கள் கடவுளை மறந்ததோடில்லாமல் பிரமாணிக்கம் தவறி, பனிபோல அவர்கள் உள்ளம் உறைந்து கிடந்த நேரத்தில், இஸ்ரேல் மக்களின் உள்ளங்களை உருக வைக்க வந்த நெருப்பே எலியா என்றுரைக்கிறது முதல் வாசகம்….
    இயேசுவின் உருமாற்ற நிகழ்வை உரைக்கும் நற்செய்தி;திருத்தூதர்களின் அறியாமை எனும் தேக்க நிலை; “திருமுழுக்கு யோவானே எலியா” என்று இயேசுவுக்குத் தெரிந்த விஷயம் ஏன் அவரின் சீடர்களுக்குத் தெரியவில்ல்லை? இயேசுவில் மெசியாவைப் பார்க்கவும் அவர்கள் கண்கள் கட்டப்பட்டிருந்தன. இது நமக்கும் பொருந்தும்.பல நேரங்களில் நம்மைத்தேடி பல வடிவங்களில் வரும் இயேசுவை நாம் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் தொடர்ந்து வருகிறார் அவர். அவரை ஏற்றுக்கொள்ள தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து களைய முற்படுவோம்.
    “ உம் முக ஒளி எம்மேல் படுவதாக!” என்று திருப்பாடலாசிரியரோடு இணைந்து நாமும் இறைவேண்டல் செய்வோம்! திருவருகைக்காலத்திற்கேற்றதொரு பதிவு! தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete