Friday, December 17, 2021

ஆண்டவரே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 2 (18 டிசம்பர் 2021)


ஆண்டவரே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாளின் இரண்டாம் நாளில், 'ஓ அதோனாய்' ('ஓ ஆண்டவரே!') என்று நாம் கிறிஸ்துவை அழைக்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்குப் பல தலைப்புகள் கொடுத்தாலும் - எல்-ரெகோய், யாவே யீரே, யாவே நிஸ்ஸி, எல்-ஷடாய் - 'எலோஹிம்,' மற்றும் 'யாவே' என்னும் இரு பெயர்களால் தங்கள் கடவுளை அழைத்தனர். இவ்விரண்டு பெயர்களில், 'எலோஹிம்' ('கடவுளர்கள்') என்பது பொதுப்பெயர். 'யாவே' ('ஆண்டவர்') என்பது இயற்பெயர். 'யாவே' என்ற சொல் ஆண்டவருடைய பெயர் என்பதால், இஸ்ரயேல் மக்கள், அந்தச் சொல்லிற்குப் பதிலாக, 'நான்கெழுத்துச் சொல்' அல்லது 'அதோனாய்' என்னும் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். புனித தோமையார் எழுதிய நற்செய்தி நூலில் (ஏற்றுக்கொள்ளப்படாத நூல்), 'நானே ஆண்டவர்' என்று இயேசு தன்னை தோமாவுக்கு வெளிப்படுத்தியதாக ஒரு பகுதி உண்டு. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் என்று வழங்கும் பெயரை, நாம் இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்தி அழைக்கின்றோம். மேலும், 'கிரியோஸ்' என்னும் கிரேக்கச் சொல்லை, 'ஆண்டவர்,' 'தலைவர்,' 'ஐயா' என்றும் மொழிபெயர்க்கலாம். 'ஆண்டவர்' என்பது தொடக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அறிக்கையில் முதன்மையான சொல்லாக இருந்தது. அதனால்தான் புனித பவுல், 'தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்' (காண். பிலி 2:11) என்று எழுதுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 23:5-8) வரப்போகும் நாள்கள் பற்றி எரேமியா முன்னறவிக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருக்கின்றனர். அவர்கள் நாடுகடத்தப்பட்டபோது அவரை ஆட்சி செய்த யூதாவின் அரசரின் பெயர் 'செதேக்கியா.' 'செதேக்கியா' என்றால் 'ஆண்டவரின் நீதி' என்பது பொருள். 'ஆண்டவரின் நீதி' என்னும் பெயரைத் தாங்கிய அரசர் மக்களை நீதியுடன் ஆட்சி செய்யாமல் தங்கள் தந்தையரைப் போல சிலைவழிபாட்டில் ஈடுபட்டார். ஆகவே அடிமைத்தனம் வருகின்றது. மக்களை மீண்டும் மீட்டுத் தங்கள் தாய்நாடு சேர்க்கும் ஆண்டவரின் பெயர், 'யாவே சித்கேனூ' ('ஆண்டவரே நமது நீதி') என்று கொடுக்கப்பட்டுள்ளது. நமது நீதியாக ஆண்டவர் இருப்பார் என்னும் வாக்குறுதி இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பை யோசேப்பு பெறுகின்றார். 'ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றுகின்றார்,' 'ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை நிகழ்ந்தன,' 'ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' என்று மூன்று முறை 'ஆண்டவர்' என்னும் சொல் இந்நிகழ்வில் வருகின்றது. யோசேப்பு தன் மனத்தில் ஒன்றை உரைக்கின்றார். ஆனால், ஆண்டவர் வேறொன்றை உரைக்கின்றார். தன் திட்டம் ஒதுக்கி இறைத்திட்டம் ஏற்கின்றார் யோசேப்பு. இந்நிகழ்வைப் பற்றி தன் திருத்தூது மடலில் - தந்தையின் இதயத்தோடு – எழுதுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், 'யோசேப்பின் வாழ்வில் எதுவுமே தான் நினைத்தது போல அவருக்கு நடக்கவில்லை, இருந்தாலும் அனைத்தையும் அவர் முணுமுணுப்பின்றி ஏற்றுக்கொண்டார்' ஏற்றுக்கொண்டார் என எழுதுகின்றார். வாழ்வின் எதார்த்தங்கள் நாம் விரும்புவதுபோல இருப்பதில்லை என ஏற்றுக்கொள்கின்றார் யோசேப்பு. மௌனம் ஒன்றே அவருடைய பதிலிறுப்பாக இருக்கின்றது. தன் திட்டம் வைத்திருந்தவரை இறைத்திட்டம் ஏற்குமாறு தடுத்தாட்கொள்கின்றார் ஆண்டவர். இயேசுவின் பிறப்பு வழியாக, 'கடவுள் நம்மோடு' என இறங்கி வருகின்றார். ஆக, ஆண்டவர் மனுக்குலத்தோடு உடனிருக்கும் மனிதராக மாறுகின்றார்.

இன்றைய நாளில் நாம் கற்கும் பாடங்கள் எவை?

இறைத்திட்டம் கனவில் வெளிப்படுத்தப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம் முதல் பாடம். வாழ்வின் எதார்த்தங்கள் நம் எதிர்பார்ப்புகளுக்குள் அடங்கவில்லை என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கின்ற துணிச்சல் இரண்டாவது பாடம்.

'ஆண்டவரே, வாரும்!'

 

1 comment:

  1. நேற்று “ ஞானத்தை” அழைத்த நாம் இன்று ஆண்டவரையே கூவி அழைக்கிறோம்.இந்த “ ஆண்டவர்” எனும் சொல்லுக்கு அகராதியில் எத்தனை மறு பக்கங்கள்! தந்தையாம் கடவுளின் மாட்சிமைக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுகளும் அறிக்கையிடும்…. பவுலின் நம்பிக்கைக்கு அச்சாரமான வார்த்தைகள்.
    பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரேல் மக்களுக்கு ஆறுதலான “ நமது நீதியாக ஆண்டவர் இருப்பார்” எனும் வார்த்தைகள்…
    “ ஆண்டவர் மனுக்குலத்தோடு உடனிருக்கும் மனிதராக மாறுகிறார்” என்று நற்செய்தி ஆண்டவருக்குப் பெருமை சேர்த்திடினும்….இங்கே யோசேப்பின் வாழ்வில் ஆண்டவரின் விளையாட்டு நம் நெஞ்சங்களைத் தொடுகின்றன.” யோசேப்பின் வாழ்வில் எதுவுமே அவர் நினைத்தது போல் நடக்கவில்லை எனினும் அனைத்தையும் முணுமுணுப்பின்றி ஏற்றுக்கொண்டார்” என அவரைப்பற்றிய திருத்தந்தையின் வார்த்தைகள் ஆண்டவர் மனது வைத்தால் யாரையும் எப்படி வேண்டுமானாலும் இசைய வைக்கலாம் என்று புரிகிறது.
    எந்த நிலையில் இறைத்திட்டம் வெளிப்படுத்தப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், வாழ்வின் எதார்த்தங்கள் நம் எதிர்பார்ப்புகளை மீறிச்சென்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலும் நமக்கு வேண்டுமென தந்தை சுட்டிக்காட்டும் பாடங்களை நம் வாழ்வாக்குவோம்.
    “ ஆண்டவரே, வாரும்!” எனும் வார்த்தைகள் அவர் செவிகளில் விழுமளவிற்கு அவரைக் கூவி அழைப்போம்! பாடம் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete