Tuesday, December 28, 2021

வெளிப்பாடு அருளும் ஒளி

நாளின் (29 டிசம்பர் 2021) நல்வாக்கு

வெளிப்பாடு அருளும் ஒளி

இன்றைய இரண்டு வாசகங்களிலும், 'ஒளி' என்னும் உருவகம் முதன்மையாக இருக்கிறது. 

'ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்' என்று முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான், ஒளியில் நிலைத்திருப்பது என்பது அன்பு செய்வதைக் குறிப்பதாக முன்மொழிகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், 'மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை' என்கிறார் சிமியோன். இங்கே, ஒளி என்பது இயேசுவையும் அவர் தருகின்ற மீட்பையும் குறிக்கிறது.

ஒளி என்பதை நாம் இன்று எப்படிப் புரிந்துகொள்வது?

அன்பு என்பது ஒளியாக மாற முடியும்.

ஏனெனில், நாம் அன்பு செய்யும்போது நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் புதிய புரிதலைப் பெறுகின்றோம். அன்பின் ஒளி கொண்டு நாம் மற்றவர்களை நன்றாகப் பார்க்க முடிகிறது.

சில நேரங்களில் அன்பு என்னும் ஒளி நம் பார்வையை மறைக்கவும் செய்யலாம். நம் அன்புக்குரியவர்களின் தவறுகளை, பிறழ்வுகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவும் அன்பு நம்மைத் தூண்டுகிறது.

குழந்தை இயேசுவை நம் கைகளில் ஏந்துகின்ற நாம் சிமியோன் போல அக்குழந்தையின் கண்களில் நம் கண்களைக் கண்டோம் எனில், நாமும் மீட்புப் பெறலாம்.

1 comment:

  1. தன்னைப்பரப்பி இருளகற்றும் ஒளி போன்றது அடுத்தவரின் சோகம் போக்கி சுகம் தரும் “ அன்பு” என்று சொல்ல வருகிறது இன்றையப்பதிவு.குழந்தை இயேசுவை முதன்முறையாகக் கைகளில் ஏந்திய சிமியோன் கண்டது பிற இனத்தாருக்கு ஒளியும்,இஸ்ரவேலின் பெருமையும் என்கிறார்.அன்பின் ஒளி கொண்டு மற்றவரைப் பார்த்தால் அவரின் தவறுகளை…பிறழ்வுகளை நம்மால் ஓரங்கட்ட முடியும்.நம் பார்வையும் சிமியோனின் பார்வையை ஒத்திருந்தால் மீட்பு நமதே எனும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete