Tuesday, December 28, 2021

மாசில்லாக் குழந்தைகள்

நாளின் (28 டிசம்பர் 2021) நற்புனிதர்

மாசில்லாக் குழந்தைகள்

மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய ஏரோது தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தன் வீட்டு உறுப்பினர்களையே கொல்லத் துணிந்தவர். தனக்குப் போட்டியாக ஓர் அரசர் தோன்றுவதை அவர் விரும்பியிருக்க மாட்டார். ஆனால், குழந்தைகள் படுகொலை பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் இல்லை.

இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வு இல்லை என்றால், இதை எப்படிப் புரிந்துகொள்வது?

முதலில், இது ஓர் இலக்கிய உத்தி. அதாவது, பலர் கொல்லப்பட கதாநாயகன் மட்டும் தப்பிப்பது என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. இந்த உத்தியின் வழியாக, கதாநாயாகன் மற்ற எல்லாரையும் விட மேன்மையானவராகக் காட்டப்படுகின்றார். விவிலியத்தில் இதற்கு இரு உதாரணங்களைக் கூறலாம். முதலில், மோசே. பாரவோன் அரசன் எபிரேய ஆண் குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ய, மோசே மட்டும் காப்பாற்றப்படுகின்றார். இரண்டாவதாக, நீதித்தலைவர்கள் நூலில், கிதியோனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட, யோத்தாம் மற்றும் தப்புகின்றார். இப்படித் தப்புகிறவர்கள் அரசாள்வர் என்பதும் இலக்கிய உத்தி.

இரண்டாவதாக, இது ஓர் இறையியல் நிகழ்வு. இயேசுவின் குழந்தைப் பருவக் கதையாடல் நிகழ்வுகளில் முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாகப் பதிவிடுகிறார் மத்தேயு. அந்த வரிசையில், குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வில், இரு இறைவாக்குகள் நிறைவேறுகின்றன. ஒன்று, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' என்னும் ஓசேயா (11:1) இறைவாக்கு. இதில், 'என் மகன்' என்பது 'இஸ்ரயேல் மக்களை' குறிக்கின்றது. இரண்டு, 'ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவள் மறுக்கிறார். ஏனெனில், அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' (எரே 31:15). இந்த இறைவாக்கை எரேமியா நாடுகடத்தலின் பின்புலத்தில் உரைக்கின்றார். ராகேல் என்பவர் யாக்கோபின் மனைவி. இவருடைய கல்லறை எருசலேமுக்கு வெளியே இருந்தது. இஸ்ரயேல் மக்கள் எருசலேமை விட்டு வெளியே நாடுகடத்தப்படும்போது, அவருடைய கல்லறைக்குள் இருந்து அவர் அழுவதாகப் பதிவு செய்கிறார் எரேமியா.

மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்குத் தங்கள் இரத்தத்தால் சான்று பகர்ந்தார்கள் என்று ஆன்மிக அளவில் புரிந்துகொள்வதை என் மனம் ஏற்க மறுக்கின்றது.

தன் குழந்தையைக் காப்பாற்ற நினைத்த கடவுள் மற்ற குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கலாமே? பெரிய ஏரோது குழந்தைகளைக் கொல்லும் வன்மம் கொண்டிருந்தால், குழந்தைகளைக் காப்பாற்றாத கடவுளும் வன்மம் கொண்டிருக்கிறார்தானே!

தன் குழந்தையின் வளர்ப்புத் தந்தையைக் கனவு வழியாக எச்சரித்த கடவுள் மற்ற தந்தையர்களையும் எச்சரித்திருக்கலாமே? அல்லது பெரிய ஏரோதுவை அழித்திருக்கலாமே!

யூதேய மலைநாட்டிலுள்ள சக்கரியா-எலிசபெத்தின் குழந்தை திருமுழுக்கு யோவான் எப்படிக் காப்பாற்றபட்டார்?

கடவுள் தனக்குத் தேவையானவர்களை மட்டும் காப்பாற்றிக்கொள்கிறார் என்றால், அவர் தன்னலம் கொண்டவர் இல்லையா?

ஒரே இரவில் பச்சிளங் குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? கடவுள், ஏரோது, ஞானியர், அகுஸ்து சீசர், வானதூதர், நீங்கள், நான் என்று எல்லாருமே காரணம்தான்.

குழந்தைகளின் இயலாமை, மௌனம், மென்மை, கையறுநிலை ஆகியவை மற்றவர்களின் தன்னலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகாரம் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே விரும்புகிறது. பெரிய ஏரோதுவின் பாதுகாப்பற்ற உணர்வையும், கோழைத்தனத்தையும், மூடத்தனத்தையும் இந்நிகழ்வு வெளிப்படுத்துகின்றது. மற்றொரு பக்கம், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வரலாற்றின் போக்கை தங்களுக்கு ஏற்றாற்போல மாற்ற நினைத்தாலும், இறைவன் அவற்றின் ஊடேயும் தன் திட்டத்தை நிறைவேற்றுகின்றார்.

மாசில்லாக் குழந்தைகள் இன்றும் நம் முன்னர் மடிந்துகொண்டே இருக்கின்றனர்.

1 comment:

  1. “ மாசில்லா குழந்தைகள்”… கண்டிப்பாக இவர்கள் சிந்திய இரத்தம் இயேசு காப்பாற்றப்பட காரணமாகஇருந்ததோ இல்லையோ… அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை என்பது உண்மை.இறந்த குழந்தைகள் நம் பச்சாதாபத்திற்குட்பட்டவர்களே! ஆனால் அதுவே இறைத்திட்டம் என்றான பின் ஏன்? எதற்கு? எப்படி? எனும் கேள்வி நமக்குச்சொந்தமல்ல…சில நல்லவர்களைக் காப்பாற்ற பலர் அழிக்கப்படுவது விவிலியத்தில் அங்குமிங்கும் நாம் பார்ப்பது தானே!
    இன்றும் கூட வளர்ந்த மாசில்லாக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.இல்லங்களில்…வேலை தளங்களில்…பங்குகளில்….அதிகாரம் கோலோச்சும் இடங்களில் என்று! ஒருவரின் மாசற்ற குணத்திற்காக/ நடத்தைக்காக அவர்கள் நசுக்கப்படுவார்களேயானால் அவர்களும் மாசில்லாக் குழந்தைகளே! தினமும் கயவர்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாக்கப்படும் அத்தனை பேருமே மாசில்லாக்குழந்தைகளே! முடிந்தால் அந்தப் புல்லுருவிகளை வேரறுப்போம்.…இல்லையேல் அவர்களின் கண்ணீர் துடைப்போம்….அவர்கள் மடிவதை நிறுத்த முயல்வோம். வளர்ந்தவர்களானாலும் மாசில்லா உள்ளத்தோடு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete