Thursday, October 3, 2019

அசிசி நகர் பிரான்சிஸ்

இன்றைய (4 அக்டோபர் 2019) திருநாள்

அசிசி நகர் பிரான்சிஸ்

இன்று நாம் அசிசி நகர் புனித பிரான்சிஸின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். 'இவர் பெற்றிருந்த மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம் ஆகியவற்றை நாங்களும் பெற்றுக்கொள்ள வரம் தாரும்' என்று இன்றைய திருப்பலி சபை மன்றாட்டு செபிக்கிறது.

மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம்.

இன்று நமக்குத் தேவையான மதிப்பீடுகளும் கொடைகளும் இவை.

இந்நாள்களில் சிறுநுகர் வாழ்வு ('மினமலிஸ்ட் லிவிங்') அதிகமாக பேசப்படுகிறது, செயல்படுத்தப்படுகிறது. வீட்டிலிலுள்ள தொலைக்காட்சி, கணிணி, மியூசிக் ப்ளேயர், புத்தகங்கள், ப்ளான்னர் என அனைத்தையும் அகற்றிவிட்டு, அனைத்தையும் உள்ளங்கைக்குள் ஸ்மார்ட்ஃபோனாக வைத்துக்கொள்ளச் சொல்கிறது சிறுநுகர் வாழ்வு. பொருள்கள் இன்று குறைந்து நம் வீடு வெறுமை ஆனாலும், நம் மனத்தில் இன்னும் வெறுமை இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

பிரான்சிஸ் பெர்னாதோனே என்ற செல்வ இளவலாக இருந்த அவர் தன்னுடைய நகரின் முற்றத்தில் தன் மேலாடையையும் அகற்றிவிட்டு தன்னுடைய இறைவனைப் பின்பற்றிச் செல்பவராக மாறுகின்றார் அசிசி நகர் பிரான்சிஸ்.

இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏழு வாழ்க்கைப் பாடங்களை இன்று சிந்திப்போம்.

1. நம் அனைவருக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு

'பிரான்சிஸ் பெர்னாதோனே தன்னுடைய 20 வயது வரை நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்ற இளவலாக இருந்தார்' என்று பிரான்சிஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும், 'நானே பாவத்தில்தான் இருந்தேன்' என்று பிரான்சிஸூம் எழுதுகின்றனர். ஆனால், இயேசுவைப் பின்பற்றிய நாளில் அவர் தன்னுடைய இறந்தகாலத்தை அப்படியே துடைத்தெறிந்தார். குற்றவுணர்வால் குறுகிவிடவோ, தன்னுடைய பிரமாணிக்கமின்மையை முன்னிட்டு அழவோ இல்லை அவர். இன்று நான் என்னுடைய இறந்தகாலத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, என்னை மன்னிக்கத் தயாரா?

2. கடவுள் நம் துன்பத்தின் வழியாகப் பேசுகிறார்

தன்னுடைய உடலில் இயேசுவின் ஐந்து காயங்களை ஏற்கும் வரையும், ஏற்ற பின்பும் நிறைய துன்பங்களை அனுபவித்தார் பிரான்சிஸ். தனிமை, விரக்தி, சோர்வு, உடல்நலக்குறைவு, சகோதரர்களின் புரிந்துகொள்ளாமை என நிறைய துன்பங்களை எதிர்கொண்டாலும் இவை அனைத்திலும் இறைவனின் முகத்தைப் பார்த்தார் பிரான்சிஸ். என்னுடைய வாழ்வில் தனிமை, விரக்தி, சோர்வு, ஏமாற்றம், பிரிவு வரும்போது, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு வியப்பாயிற்று' என்று என்னால் சொல்ல முடியுமா?

3. நம்முடைய பாதுகாப்பு வளையத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்

நம்முடைய வலுவின்மையே நம்முடைய பாதுகாப்பு வளையம். 'இப்படியே இருந்துவிடலாமே!' 'இந்த நுகத்தை நான் அப்படியே என் கழுத்தில் மாட்டிக்கொள்கிறேனே' என்று நாம் விடமுடியாத பல வலுவின்மைகளைத் தூக்கிக்கொண்டு திரிகிறோம். 'விடமுடியாத பழக்கம் விரைவில் தேவையாகிவிடும்' என எச்சரிக்கிறார் அகுஸ்தினார். பிரான்சிஸ் தன்னுடைய விருப்பு, வெறுப்பு என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார். பிரான்சிஸிடம் இருந்த மிகப்பெரிய வலுவின்மை அவர் மற்றவர்கள் மேல் காட்டிய வெறுப்பு. ஆனால், இப்படி வெறுப்பு காட்டிய அவர் காலப்போக்கில், 'அண்ணன் கதிரவனே, தங்கை நிலாவே' என்று இயற்கையின்மேலும் அன்பு பாராட்டுகிறார். ஏனெனில், அவர் தன்னுடைய பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார்.

4. மனசே, உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தானும் தன்னுடைய சபையின் சகோதரர்களும் தாழ்ச்சி, எளிமை என்று வாழ வேண்டும் என்றும், நிறைய தவமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த பிரான்சிஸ் சில நேரங்களில், நம் மனதிற்கும் உடலுக்கும் தளர்வு தேவை என்று உணர்ந்தார் பிரான்சிஸ். நோன்பு இருந்த ஓர் இரவில் தன்னுடைய உடன் சகோதரர், 'ஐயோ! பசி! சாகப் போகிறேன்!' என்று அழுது புலம்பியபோது, உடனடியாக உணவு கொடுத்த பிரான்சிஸ், அச்சகோதரரைக் கடிந்துகொள்ளவில்லை.

5. குழப்பம் நல்லதுதான்

ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி எழுப்பிய, ஆண்டவரின் காயங்களைத் தன்னகத்தே தாங்கிய, ஆண்டவரிடம் இறைவேண்டலில் இணைந்திருந்த பிரான்சிஸின் வாழ்வில் நிறைய மனக்குழப்பங்களும் இருந்தன. ஐயமும், குழப்பமும் அவரை பல நேரங்களில் வருத்தின. குழப்பங்கள், பயம் வரும்போதெல்லாம், 'இது ஏன்?' என்று தன்னையே இன்னும் குழப்பிக்கொள்ளாமல், காத்திருந்தார். ஐயம் என்னும் மேகம் வேகமாக மறைந்தது, கரைந்தது. இன்று என்னுடைய வாழ்வில் குழப்பமான பொழுதுகளில் நான் எவ்வளவு அங்கலாய்க்கிறேன்? ஏன் பொறுமை இழக்கிறேன்? 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்' (காண். உரோ 8:28) என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?

6. கற்புநெறி போராட்டமும் நல்லதே

ஆண்டவருக்கான அர்ப்பணம் தன் உடலிலிலும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் பிரான்சிஸ். ஆனால், அதற்கு நிறையச் சோதனைகள் வந்தன. அவற்றை எதிர்கொண்டார் அவர். தான் உடல் அளவில் கிளர்ச்சி அடைந்தபோதெல்லாம் வெளியில் ஓடிவந்து பனியில் உருண்டும் அதைச் சரி செய்தவர். ஒருமுறை இவரைச் சந்திக்க இவருடைய தோழி கிளாரா புறப்பட்டு வரவா என்று கேட்டபோது, 'நம் வாசலில் லீலீ மலர் பூக்கும் நேரம் நீ வா!' என்று அவரைச் சந்திப்பதைத் தள்ளிப் போடுகிறார் பிரான்சிஸ். பனி பெய்துகொண்டிருந்த நேரத்தில் லீலி எப்படி பூக்கும்? 'நான் சந்திக்கும் ஆன்மீகச் சந்திப்பையும் உடல் சந்திப்பாக இவர் நினைத்துவிட்டாரே?' என்று கடவுளிடம் கிளாரா புலம்ப, பனியிலும் லீலி பூத்தது என்பது வரலாறு.

7. இறைவேண்டல் இன்றியமையாதது

இன்றைய நாள்களில் இதை நான் மிகவும் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன். இறைவேண்டலில் நான் என்னுடைய இறைவனின் தொப்புள்கொடியோடு என்னையே இணைத்துக்கொள்கிறேன். நான் பெறுகின்ற எந்தக் கிளர்ச்சி அனுபவத்திற்கும் தளர்ச்சி உண்டு. ஆனால், தளர்ச்சி தராத ஓர் அனுபவம் இறைவேண்டல் மட்டுமே. 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று அறிந்திருந்தார் பிரான்சிஸ். எனக்கு எது தேவையோ அதைப் பொறுத்தே ஒன்றிற்கு நான் மதிப்பு அளிக்கிறேன். தேவையும் மதிப்பும் இணைந்தே செல்கின்றன. எழுதுவதற்குத் தேவை இருக்கும்போதுதான் பேனா மதிப்பு பெறுகிறது. தேவை இல்லாத எதுவும் சுமையாக மாறிவிடுகிறது. எழுதாதபோது பேனா பைக்குச் சுமைதானே. இறைவனின் தேவையை நான் உணர்ந்தால் இறைவேண்டலுக்கான மதிப்பு கூடும்.

இன்றைய புனிதர் இப்பாடங்களை நாம் வாழ்வாக்க நம்மைத் தூண்டி எழுப்புவாராக!

3 comments:

  1. அருமையானதொரு புனிதரைப்பற்றிய அழகானதொரு பதிவு.பல நேரங்களில் நாம் நினைக்கிறோம் ஏதோ புனிதர்கள் ஆகாயத்தினின்று நேரடியாக்க் குதித்தவர்கள் என்று. ‘ இல்லை’ என்று சொல்கின்றன தந்தையின் வரிகள்.செல்வப் பின்னனியில். பிறந்த பிரான்சிஸ் தன் பாவப்பின்னனியையும் ஒப்புக்கொண்ட காரணத்தினால் மட்டுமே அவரால் புனிதராக முடிந்தது.இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அழகான வாழ்க்கைப்பாடங்களைப் பட்டியலிடுகிறார் தந்தை.அதில் என் மனத்தைத்தொட்டது... ‘துன்பங்களின் வழியாக இறைவனைத் தொடுவது. பேசும் அளவிற்கு இது எளிதா? தெரியவில்லை. ஆனால் “துன்பங்களும் ,சோர்வுகளும் வாழ்வில் படையெடுக்கையிலும் கூட அது முடிந்தேயாக வேண்டும் நம்மால்” என்று சொல்கிறார் பிரான்சிஸ்.அவரோடு இணைந்த தந்தையின் வரிகள் “ இது ஆண்,டவரால் நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு வியப்பாயிற்று.” என்று சொல்ல நம்மாலும் முடியவேண்டுமென சொல்லாமல் சொல்கின்றன.புனித பிரான்சிஸ் குறித்த தந்தையின் செய்திகள் அனைத்துமே அவர் பெயர் தாங்கிய சபையின் சகோதரிகளிடம் படித்ததனால் தெரிந்திருந்தாலும் அந்த இறுதி..” கற்பு நெறி போராட்டமும்நல்லதே!” எனும் பகுதியின் செய்தி புதியது மட்டுமல்ல...வியப்புக்குரியதும் கூட.. “இறைவேண்டல் தேவையானது” எனும் பகுதியின் செய்தி என்னை வியக்கவைக்கிறது.” தேவையானது ஒன்றே” என்பதை மட்டுமல்ல..அது என்னவென்றும் தெரிந்து வைத்துள்ளார் பிரான்சிஸ்.இதையொட்டிய தந்தையின் வரிகள்...”எனக்கு எது தேவையோ,அதைப்பொருத்தே அதற்கு மதிப்பளிக்கிறேன்.எழுதுவதற்கு தேவைப்படும் பேனா எழுதாதபோது பைக்குச் சுமையாக மாறிவிடுகிறது.”...அருமை.இன்பறையப்திவில் வரும் அத்தனையையும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒன்றையாவது பற்றிக்கொண்டு “ அவர்” வழி நடப்போம்.புனித பிரான்சிஸுக்கு அழகானதொரு கவிபாடிய தந்தையும் ஒரு “புனிதராக” இறைவனை வேண்டுகிறேன்.நன்றியும்!வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. Well written. Thanks.
    Philip Benis
    Pondicherry

    ReplyDelete