Wednesday, October 2, 2019

திரும்பிவிடும்

இன்றைய (3 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:1-12)

திரும்பிவிடும்

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. இதை இன்னொரு விதத்தில் புரிந்துகொண்டால் தொடங்குகின்ற ஒவ்வொன்றும் நிறைவுபெறும். சூரியன் உதித்தால் அது மறையும். பகல் வந்தால் இரவு வரும். மேலே எழும்பும் எதுவும் கீழே வரும்.

இயேசு தன்னுடைய சீடர்களை அழைக்கின்றார். அழைத்தலின் எதிர்வினையாக அவர்களை அனுப்புகின்றார். அல்லது அழைத்தல் அவர்களுடைய அனுப்பப்படுதலில் நிறைவுபெறுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நெகே 8:1-7,12) எருசலேம் நகரமும் ஆலயமும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அங்கே எஸ்ராவும் நெகேமியாவும் இணைந்து ஆண்டவரின் திருச்சட்டத்தை வாசிக்கின்றனர். அழுதுகொண்டிருந்த அனைவரும் மகிழ்கின்றனர். அல்லது அவர்களுடைய அழுகை மகிழ்ச்சியாக மாறுகிறது, நிறைவுபெறுகிறது.

'திரும்புதல்' என்பதை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, பழைய நிலை மீண்டும் திரும்புவது. எடுத்துக்காட்டாக, நம் வீட்டில் துக்கமான நிகழ்வு ஒன்று நடக்கிறது என வைத்துக்கொள்வோம். அதன் தாக்கம் சில மாதங்கள் இருக்கின்றது. பின் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கிறது. உடனே நாம், 'நம் மகிழ்ச்சி மீண்டும் திரும்பிவிட்டது' என்கிறோம். இரண்டு, நாம் யாருக்காவது பணம் கொடுக்க, கடனாகக் கொடுக்க, அந்தப் பணம் நம்மிடம் மீண்டும் கிடைக்கும்போது, 'பணம் திரும்பிவிட்டது' என்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் மகிழ்ச்சி திரும்புகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'அமைதி உங்களிடம் திரும்பிவரட்டும்' என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்றார்.

மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றை நாம் பல நேரங்களில் நமக்கு வெளியே இருப்பவர்கள் அல்லது இருப்பவைகளிடம் கொடுத்துவிடுகின்றோம். அது தவறு.

மகிழ்ச்சியும், அமைதியும் எனக்குள் இருக்க வேண்டியவை.

என்னுடைய மகிழ்ச்சி அல்லது அமைதியை நான் மற்றவரிடம் கொடுக்க, அவற்றை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அல்லது அவற்றுக்குத் தகுதியடையவர் ஆகவில்லை என்றால், நான் அதனால் மனம் சோர்ந்துவிடக் கூடாது. என் மகிழ்ச்சியும் என் அமைதியும் என்னிடம் திரும்பிவிட வேண்டும்.

அப்படி திரும்பவில்லை என்றால், என்னில் அவரைக் குறித்த கசப்புணர்வு உருவாகும்.

இன்று நான் என்னுடைய அமைதியை எப்போதெல்லாம் இழக்கின்றேன்?

இழந்த அமைதியைப் பெற்றுக்கொள்ள இன்றைய முதல் வாசகம் அழகான பாடத்தைக் கற்பிக்கிறது. அதாவது, சிதைந்த மதில்களையும் ஆலயத்தையும் புதிப்பிப்பது. என்னுடைய உடலும், உள்ளமும் ஒரு மதில் அல்லது ஆலயம் போன்றது. அவை எப்போதும் இறைவனின் உடனிருப்பால் புதுப்பிக்கப்படல் வேண்டும். இந்தப் புதுப்பித்தல் எனக்கு அமைதியை - நான் இழந்தாலும் - திரும்பத் தரும்.

மேலும், இறைவார்த்தையை வாசிப்பதும், தியானிப்பதும், அதன்படி நடப்பதும் நமக்கு நிலையான மகிழ்வையும் அமைதியையும் தரும்.


2 comments:

  1. “ திரும்புதல்” ...எந்த ஒரு திரும்புதல் மகிழ்ச்சியையும் சேர்த்துக்கொண்டுவருகிறதோ,அதுவே உண்மையான திரும்புதலாகும்.ஏனெனில் மகிழ்ச்சி வருகையில் அது தன்னுடன், அமைதியையும் சேர்த்தே கூட்டிவரும்.ஆலயத்திற்கு இணையான என் உடலும் ,உள்ளமும் எப்போதும் இறைவனின் உடனிருப்பால் புதுப்பிக்கப்பட்டால் எனக்குள்ளே உள்ள அமைதியை எத்தனைமுறை நான் இழப்பினும் திரும்பப் பெற முடியும்....அனுபவமிக்க தந்தை சொல்கிறார். இதை மெய்யாக்க இறைவார்த்தையை வாசிக்கவும் ,தியானிக்கவும்,அதன்படி நடக்கவும். அழைப்பு விடுக்கும் தந்தைக்கு வாழ்த்துக்களும் !நன்றிகளும்!!!

    ReplyDelete