Wednesday, February 1, 2017

அர்ப்பணம்

'அவர் புடமிடுபவர் போலவும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார்.
லேவியரின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார்.
அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள்.'
(காண். மலா 3:1-4)

நாளை அர்ப்பணத்தின் திருநாள்.

ஆண்டவர் இயேசுவை அவரது பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாள்.

இதை ஒளியின் திருநாள் என்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்று நம்மையே நாம் மெழுகுதிரியின் ஒளியாக இறைவனின் ஒளியில் கரைத்துக்கொள்கின்றோம்.

நாளைய முதல் வாசகத்தில் புடமிடும் உருவகம் தரப்பட்டுள்ளது.

அந்த உருவகத்தை மட்டும் இன்று சிந்திப்போம்.

'வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போல' அவர் அமர்ந்திருப்பார்.

கொல்லன் பட்டறையில் வெள்ளியைத் தூய்மைப்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இயல்பாகவே அழுக்குகள் நிறைந்திருக்கும் வெள்ளிக்கட்டி. அந்தக் கட்டியை நெருப்பில் இட்டு அந்தக் கொல்லன் அதைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அந்த வெள்ளி கண்ணாடி போல கொல்லனின் முகத்தை பிரதிபலிக்கும். அதுதான் சரியான பதம். அந்த நேரத்தில் அதை அவர் வெளியே எடுத்துவிட வேண்டும். அல்லது வெள்ளி நெருப்பில் கரைந்துவிடும்.

ஆக, கொல்லனின் முகத்தை பிரதிபலிக்கும் வரை நெருப்பில்  வெள்ளி இடப்படுவது அவசியம்.

அர்ப்பணம் என்பது நான் என் அருள்பொழிவு நாளன்று கொடுப்பதா?

இல்லை.

அன்று, நெருப்பில் நான் என்னையே இடுகிறேன். அதுமுதல் என் அர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டவர் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் என் இயல்பில் அவரின் முகம் என்னில் தெரியும். அப்போதுதான் என்னை நெருப்பிலிருந்து அவர் வெளியே எடுப்பார்.

ஆக, அர்ப்பணம் என்பது ஓர் அன்றாட நிகழ்வு.

இயேசு ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட நாள் அன்று அவரின் அர்ப்பணம் தொடங்குகிறது.

நம் கைகளில் மின்னும் எல்லா வெள்ளியுமே புடமிடப்பட்டு, மெருகூட்டப்பட்டு, வடிவமைக்குப்பட்டு நம் கைகளில் ஏறுகிறது.

இன்று என்னையே நான் கண்ணாடி முன் நின்று பார்ப்பது போல,

என்னையே கண்ணாடியாக மாற்றி நான் அவர் முன் நிற்க வேண்டும்.

அவரின் முகம் என்னில் தெரியத் தொடங்குகிறதா?

5 comments:

  1. அருட்பொழிவு நாளன்று நெருப்பில் நான் என்னையே இடுகிறேன். அதுமுதல் என் அர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டவர் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் என் இயல்பில் அவரின் முகம் என்னில் தெரியும். அப்போதுதான் என்னை நெருப்பிலிருந்து அவர் வெளியே எடுப்பார். அர்ப்பண வாழ்வுக்கு அருமையான விளக்கமும் உண்மையும். பாராட்டுக்கள். அவரின முகம் என்னில் தெரியத் தொடங்குகிறதா? என்ற கேள்வி துறவிகளை மேலும் சிந்திக்க வைக்கிறது. நன்றி.

    ReplyDelete
  2. ஆண்டவர் இயேசுவை அவரது பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்த நாளை 'சுத்திகரிப்புத் திருநாள்', 'அர்ப்பணத்திருநாள்' எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.'ஒளியின் திருநாள்' என தந்தை இடும் பெயரும் அழகாக உள்ளது; அர்த்தமுள்ளதாகவும் உள்ளது.தந்தையின் அருள்பொழிவு அன்று ஆரம்பித்த அவரது அர்ப்பணம்,நெருப்பில் இடப்பட்டு அந்த நெருப்பினூடே'அவரின்' முகம் இவரில் தெரியும் போது 'அவர்' இவரை வெளியே எடுப்பார் என்கிறார்.எத்தனை அழகான உருவகம்! இந்த அர்ப்பணம்,அருள் பொழிவு செய்தவர்களுக்கு மட்டுமே சொந்த மானதா என்ன? இல்லை...என்னைப்போன்ற பொது நிலையில் இருப்பவர்களும் கூட யாம் பெற்ற திருமுழுக்கின் மூலம் அர்ப்பண வாழ்விற்குள் அடி எடுத்து வைக்கிறோம். நானும் எனக்குப் புடமிடப்பட்டு,மெருகூட்டப்பட்டு அவர் முகம் என்னில் தெரியும் வரை என்னைக் கண்ணாடியாக மாற்ற படைக்கப்பட்டவள் தானே! நம் திருநாட்கள் ஒவ்வொன்றும் எத்தனை எத்தனை அழகான விஷயங்களை நமக்குப் போதிக்கின்றன! தந்தையின் அர்ப்பண வாழ்வு இன்னும் சிறக்க,மெருகூட்டப்பட என் செபம் உதவட்டும்!!கொல்லன் பட்டறையில் வெள்ளி புடமிடப்படுவதை தந்தை விவரித்துள்ளன விதம் ஒரு கொல்லன் பட்டறைக்குள் சென்று வந்த உணர்வைத்தருகிறது. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. Anonymous2/02/2017

    Yesu happy feast. Good morning. Have a blessed month of Feb

    ReplyDelete
  4. Anonymous2/02/2017

    Yesu happy feast. Good morning. Have a blessed month of Feb

    ReplyDelete
  5. The connection with the first reading with respect to the feast is aptly made...super fr...

    ReplyDelete