Wednesday, February 15, 2017

கூப்பிட

'என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' (காண். மாற்கு 8:27-33)

இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது:

தான் போதித்ததை வாழ்ந்து காட்ட இயேசுவுக்கே கஷ்டமாக இருந்ததா?

'சினம் கொள்ளாதீர்கள். உங்கள் சகோதரரை 'முட்டாள்,' என்றோ, 'அறிவிலியோ,' என்று அழைக்காதீர்கள்!' என்று சொன்ன இயேசுவால் தன் அன்புச்சீடர் பேதுருவை, 'சாத்தானே' என்று எப்படி அழைக்க முடிந்தது?

நமக்கு அடுத்திருப்பவர் நல்லது செய்தால் அவரை, 'கடவுளே' என்று புகழ்வதில்லை.

ஆனால், கெட்டது செய்தால் உடனடியாக, 'சாத்தானே' என்று திட்டிவிடுகிறோம்.

இருட்டில் திடீரென எதையாவது பார்த்து பயந்தால், 'பேய்' என அலறுகிறோம். ஏன் 'கடவுள்' என்று அலறுவதில்லை. பேய் இருப்பதை நம்பும் அளவுக்கு கடவுள் இருப்பதை நாம் நம்புவதில்லை.

பேதுருவைப் பார்க்க எனக்கு பாவமாக இருக்கிறது.

'நான் ரொம்ப கஷ்டப்படுவேன். எல்லாரும் என்னை அடிப்பாங்க. சிலுவையில அறைவாங்க!' என புலம்புகிறார் இயேசு.

'இல்லப்பா...உனக்கு இப்படி எல்லாம் நடக்காது!' என நேர்முகமாக சப்போர்ட் செய்கிறார் பேதுரு.

ஆக, நேர்முகமாகப் பார்ப்பதும் கூட கடவுள் பார்வையில் தவறாக இருக்கலாம்.

பேதுரு செய்த தவறுதான் என்ன?

'குறுகிய பார்வை அல்லது எண்ணம்'

மனிதர்கள் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள். இவர்களால் இந்த இரண்டிற்கும் உட்பட்டுத்தான் எண்ணவும், பேசவும் முடியும்.

ஆனால், துன்பம், சிலுவை, இறப்பு என்பவை எல்லாம் உயிர்ப்பு என்ற ஒன்றோடு தொடர்புடையவை என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.

பேதுரு மனிதர்தான். ஆக, அவரால் மனிதர்நிலையில்தான் சிந்திக்க முடியும்.

அதற்காக, அவரை 'பேய்' என்று திட்டுவதா?

பேதுருவின் மனைவி இதைக் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் இயேசுவை ஒரு வழி பண்ணியிருப்பார்.

'ஏன்யா...போனாப் போகுதுன்னு உன் பின்னாடியே சுத்துனா, என் வீட்டுக்காரரையே 'பேய்'னு கூப்பிடுறியா?' என்று கண்டிப்பாக சண்டை போட்டிருப்பார்.

'இல்லம்மா...நான் என்ன சொல்ல வந்தேன்னா...உன் வீட்டுக்காரர் கொஞ்சம் பெருசா எண்ணலாம்தான்னு சொன்னேன்!' என்று இயேசுவும் சமாதானம் செய்திருப்பார்.

இன்னைக்கு நாம யாரையும் தயவுசெய்து இப்படி கூப்பிட வேண்டாம்!


1 comment:

  1. " என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவரே எனக்குத் தாயும் சகோதர்ரும்" என இயேசு உரைக்கையில் இனித்த நமக்கு அவர் பேதுருவைப் பார்த்து " என் கண் முன் நில்லாதே சாத்தானே" எனக்கடிந்து கொள்ளும் போது ஏன் கசக்க வேண்டும்? " இறைவனுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணும்" பேதுருவை இயேசு ' சாத்தானே' என்றழைப்பது வேண்டுமானால் கொஞ்சம் ஓவர் என நாம் நினைக்கலாம். இலையெனில் இறைவனின் வழியில் செல்ல நினைக்கும் ஒருவரை தடம் புரள வைக்கும் ஒரு செயலின் எதிர்மறையான ஒரு வீரியத்தை நமக்கு அவரால் எப்படி உணர்த்த இயலும்? நாமும் கூட அப்படித்தான்... நம் பிள்ளைகள் மற்றும் அன்புக்குரியவர்கள் தவறு செய்யும் போது அதைக் கண்டுகொள்ளாமல் போவது மட்டுமின்றி சமயங்களில் அதை ஊக்குவிக்கவும் செய்கிறோம்.அன்பு நம் கண்களைத் திரையிட்டு மறைத்து விடுகிறது.அதேபோல் நமக்குரியவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு நாம் தடையாக இருப்பதும் கூட இறைவன் பார்வையில் அருவருப்பான விஷயம் என்பதையும் நாம் உணரவேண்டிது மிக முக்கியம். இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்த்தால் இயேசுவின் வார்த்தைகளை ஒத்துக்கொள்ளவே தோன்றும்.அவருக்கு 'மனித இயல்பு' என்ற ஒன்றும் இருந்தது என்பது அவரின் வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும்.தந்தைக்கு ஒரு கேள்வி..... இருட்டில் நாம் 'கடவுள்', 'பேய்' என்று அலறும் அளவுக்கு காட்சிகள் காண்பது ஒரு நடைமுறை விஷயமா என்ன? இருப்பினும் தந்தையின் "கிராமத்தானுக்குக் கதை சொல்லும் பாணி"யும் இரசிக்கும் படித்தான் இருக்கிறது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete