Friday, January 27, 2017

தண்ணீர் படாத தலையணை

'படகின்மீது தொடர்ந்து அலைகள் மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது.
அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.'

நாளைய நற்செய்திப் பகுதியும் (காண். மாற்கு 4:35-41), முதல் வாசகப் பகுதியும் (காண். எபிரேயர் 11:1-2,8-19) மிக அழகாகப் பொருந்திச் செல்கிறது.

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை' என்கிறது முதல் வாசகம்.

'உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' எனக் கேட்கிறது நற்செய்தி வாசகம்.

தலையணையிலிருந்து தொடங்குவோம்.

படகு எல்லாம் தண்ணீர் வந்து விட்டது. ஆனால், இயேசுவின் தலையணை நனையவில்லை.

அவருக்கு அந்த நேரத்தில் தூக்கம் எப்படி வந்தது?

தூக்கம் ஒரு கொடை.

'பிணம்போல் தூங்கி' என வர்ணிக்கிறார் பட்டினத்தார். அதாவது, ஒருவருக்கு கிடைக்கும் பெரிய ஆசி பிணம்போல் தூங்குவதாம். அதிக வேலை, அதிக பயணம், அதிக அழுத்தம், அதிக இறுக்கம் தூக்கத்தைக் கொடுக்கும் என்று சொல்கின்றனர் சிலர். ஆனால், பல நேரங்களில் தூக்கம் இல்லாமல் போய்விடும்.

'அவன் அன்பு செய்யப்படுகிறான். அதனால் தூங்குகிறான். நான் இங்கே அலைக்கழிக்கப்படுகிறேன் தூக்கமின்றி' என்பான் கிளேடியேட்டர் திரைப்பட வில்லன்.

ஆக, நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்றால் நல்லா தூக்கம் வரும்.

ஆனால், சில நேரங்களில் நம் அன்புக்குரியவர்கள் பேசிய சில சொற்களோ, அன்றைய நாளில் நடந்து கொண்ட விதமோ கூட நம் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

ஆக,
வேலையினாலும் தூக்கம் இல்லை.

அன்பினாலும் தூக்கம் இல்லை.

ஆனால், இயேசு எப்படி தூங்கினார்?

காரணம், 'நம்பிக்கை' என்ற ஒற்றைச் சொல்.

'கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் பாதுகாப்பைப் பற்றிய ஐயமற்ற நிலையில் அவர் இருந்தார்.' அந்த ஐயமற்ற நிலையே நம்பிக்கை.

நம்பிக்கை எப்போதும் மனதால் பார்க்கும்.

கண்களுக்குப் புலப்படுவதைத் தாண்டி மனத்தால் பார்ப்பதே நம்பிக்கை.

எப்படி?

நான் எனக்குரியவருக்கு ஃபோன் அடிக்கிறேன். ஃபோன் நிச்சயதார்த்தமாக (என்கேஜ்ட்) இருக்கிறது. உடனே, 'அவர் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்?' என்ற சந்தேகம் எழுகிறது. அவர் அதைப்பற்றி என்னிடம் சொல்லாதபோது என் ஐயம் வலுக்கிறது. உடனே என் பாதுகாப்பின்மை உணர்வு என்னும் அலை என் படகை அலைக்கழிக்கிறது. நான் அவர்மேல் கோபம் கொள்ள அல்லது மௌனம் கொள்ள ஆரம்பிக்கிறேன்.

ஆனால், காதுகள் கேட்ட என்கேஜ்ட் ஒலியையும் தாண்டி நான் அவரின் இதயத்துடிப்பை கேட்க முடிந்தது என்றால் அதுதான் நம்பிக்கை. அந்த இடத்தில் தவறான புரிதல் வர வாய்ப்பில்லை.

இயேசு மட்டும்தான் படகையும், அலைகளையும், கடலையும் தாண்டிப் பார்த்தார்.

கண்களால் பார்ப்பது குறுகியது. மனத்தால் பார்ப்பது அகலமானது.

என் அன்பிற்குரியவர் என்ன சேலை அணிந்திருப்பார், எப்படி முகத்தை திருப்பி பேசிக்கொண்டிருப்பார், எந்த வெங்காயத்தை எப்படி அறுத்துக் கொண்டிருப்பார், எந்தக் காரில் எப்படி இறங்குவார் என நான் இங்கிருந்தே பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் நம்பிக்கை.

'என் தந்தை என்னை எப்படி தாங்கியிருக்கிறார்!' என இயேசு நினைத்ததால் தான் அலைக்கழிக்கப்படும் படகிலும் அமைதியாகத் தூங்க முடிந்தது.

நிற்க.

இரண்டு நாட்களுக்கு முன் மதுரை இரயில் சந்திப்பில் சின்னத்தாயம்மாள் என்ற பாட்டியைப் பார்த்தேன். சிறப்பு என்னவென்றால் அவரின் முடி சடையாக இருந்தது. அம்மனின் அருள் இருந்தால் தான் சடை விழும் என்பது என் அய்யாமை சின்ன வயதில் சொன்ன ஒன்று. சும்மா அந்த தாயம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன். அம்மனின் அருள்கேட்க இருக்கன்குடி செல்வதாகச் சொன்னார்.

கரூரில் இருந்த புறப்பட்ட அவர் கைகளில் இருந்தது பயணச்சீட்டு மட்டுமே.

'ஏதாவது வாங்கித் தரவா?' என்று கேட்டேன்.

'வேண்டாம். அம்மா பார்த்துக்கொள்வாள்!' என்றார்.

அவர் கண்களில் தெரிந்தது நம்பிக்கை.

ரயில்கள் ஓடும் சத்தத்திலும் கொஞ்ச நேரத்தில் பிளாட்பாரத்து நாற்காலியில் தூங்கிப் போனார்.

தன் கைகளையே தலையணையாக வைத்துக்கொண்ட இந்த தாயம்மா இயேசுவையும் மிஞ்சிவிட்டார்.


3 comments:

  1. " தன் கைகளையே தலையணையாக வைத்துக்கொண்ட இந்த தாயம்மா இயேசுவையும் மிஞ்சி விட்டார்".எத்தனை அழகும்,அழுத்தமும் கொண்ட வரிகள்...வாழும் இயேசுக்கள் நம் முன்னே இருந்தும் பல நேரங்களில் அவர்கள் கண்டு கொள்ளப்படாமலே போய்விடுகிறார்கள்..தந்தையின் அந்த ஒற்றை வரியில் என் புரிதல் இதுதான்.இந்தத் தூக்கம் பற்றிய பதிவு...ஏதோ தூக்கத்தைப் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை போலத் தோன்றுகிறது.ஒருவருக்குக் கிடைக்கும் ஆசி 'பிணம் போல் தூங்குவது' எனில் சத்தியமாக அந்த ஆசி எனக்கில்லை.அதிக வேலை,அதிக பயணம்,அதிக அழுத்தம்,அதிக இறுக்கம்,...இதெல்லாம் கூட எனக்குத் தூக்கத்தை தருவதில்லை. ஒரு சிறிய மன நெருடல் போதும் விடிய விடிய என்னை அலைக்கழிப்பதற்கு.அப்படியெனில் நான் இறை நம்பிக்கை இல்லாதவளா? மனிதர் மேல் உள்ள நம்பிக்கை ஆட்டம் காணும் போதும் நம் நம்பிக்கை சிதையலாமே? ஆனால் மனித நம்பிக்கையை எப்படி இறை நம்பிக்கையோடு முடிச்சு போட முடியும்?ப முடிய வேண்டும் என்கிறார் தந்தை. "கண்களுக்குப் புலப்படாத இறைவனின் பாதுகாப்பைப் பற்றிய ஐயமற்ற நிலைக்கு இணையான எண்ணமே ஒருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை; குறுகிய கண்களால் பார்க்காது அகலமான மனத்தால் ஒருவரைப் பார்ப்பதுவே நம்பிக்கை"... இத்தகைய நம்பிக்கை தான் நாம் பயணம் செல்லும் விமானத்தின் விமான ஓட்டி யார் என்று தெரியாத நிலையிலும், நாம் செல்லும் புகைவண்டி மற்றும் பேரூந்தை ஓட்டுபவர் யார் என்று தெரியாத நிலையிலும் நம்மால் குறட்டை விட்டுத்தூங்க வைக்கிறது.இது கூட இறைநம்பிக்கையின் இன்னொரு முகம் என நினைக்கிறேன்.' அல்லும் பகலும் என்னைக் காக்கும் இறைவன் கண் அயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை" என்று நம்புவதே இறை நம்பிக்கை.இப்படிப்பட்ட ஒரு இறை நம்பிக்கையே நாம் நம்மை அடுத்திருப்போரையும் நம்பச் செய்யும்.அதற்கு மேலும் கலக்கம் என்ற ஒன்று வரின் 'நம்மவள்தானே', 'நம்மவர்தானே' என்ற எண்ணமே நம் நம்பிக்கையைத் தாங்கி நிற்கும். 'இறை நம்பிக்கை சார்ந்த மனித நம்பிக்கை இதுவே ' என்று சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete