Monday, January 16, 2017

கண்களால் பார்க்க

'அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்க வேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது.' (எபி 6:18-19)

'கண்களால் பார்க்க வேண்டாம் - மனதால் பாருங்கள்!' என அர்ப்பண வெள்ளிவிழா நன்றித்திருப்பலியில் மறையுரை வைத்தேன்.

இன்று மாலை மேற்காணும் எபிரேயர் இறைவாக்குப் பகுதியை வாசித்தபோது நான் சொன்னது சரியா என்று என்னையே திரும்பக் கேட்டுக்கொண்டேன்.

ஏன்?

என் நண்பன் அழகான தங்க மோதிரம் வைத்திருக்கிறான். அவனது விரலும் என் விரலும் ஒன்றுபோல இருக்கிறது. அந்த மோதிரத்தின் மேல் எனக்கு ஓர் ஈர்ப்பு. அதை எடுத்து எனதாக்கிவிடவேண்டும் என்ற சோதனையை மேற்கொள்ள முடியாமல் ஒரு நாள் நான் மோதிரத்தை எடுத்து விடுகிறேன்.

தன் மோதிரம் தொலைந்துவிட்டதாக அவன் அடுத்த நாள் என்னிடம் சொல்கிறான்.

அதை நான் எடுத்தேன் என்பது எனக்குத் தெரியும். என் மனச்சான்றுக்குத் தெரியும்.

ஆனால் அவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

இருந்தாலும் அவன் என்னை எப்போதும் போல அன்பு செய்துகொண்டிருக்கிறான். நட்பு பாராட்டுகிறான்.

இப்போது...இவன் என்னை கண்களால் பார்க்கிறானா? அல்லது மனத்தால் பார்க்கிறானா?

மனத்தால் பார்த்தான் இவன் என்னையும் சந்தேகப்படுவான் அல்லவா?

கண்களால் பார்ப்பதால் மட்டும்தானே அவனுக்கு சந்தேகம் வரவில்லை.

ஆக, மனத்தால் பார்ப்பது நமக்கு சந்தேகத்தை வரவைக்கலாம்.

கண்முன் இருப்பதை நாம் சந்தேகப்படுவதில்லை.

ஆனால், கண்முன் உள்ளதைப் பார்ப்பதற்கும் தொடர் ஊக்கம் வேண்டும் என்கிறது நாளைய முதல் வாசகம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 2:23-28) இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாள்களில் கதிர்களைக் கொய்து உண்கின்றனர்.

இதைப் பார்த்த பரிசேயர்கள் அவரையும், அவர்களையும் கடிந்து கொள்கின்றனர்.

கண்களால் பார்த்தால் அவர்கள் கடிந்த கொள்ள வாய்ப்பில்லை.

ஏனெனில், பசிக்கிறது. சாப்பிடுகிறார்கள். அவ்வளவுதான்!

மனத்தால் பார்க்கும்போதுதான் ஓய்வுநாள், பாவம், பரிசுத்தம், கடவுள், கடலை மிட்டாய், கமர் கட்டு என எல்லாம் வந்துவிடுகிறது.

ஆக, மனத்தால் பார்க்க வேண்டாம். கண்களால் பார்ப்போம்.

2 comments:

  1. தந்தையே! எனக்கென்னவோ தாங்கள் அர்ப்பண வெள்ளி விழாவில் வைத்த "கண்களால் பார்க்க வேண்டாம்; மனத்தால் பாருங்கள்" என்ற மறையுரையே சரி என்று தோன்றுகிறது. " பனை மரத்துக்குக் கீழே அமர்ந்து ஒருவன் பால் குடிக்கும் போது" நம் கண்கள் பார்ப்பது பொய்யாகி விடுமில்லையா? அங்கே அவனை மனத்தால் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் எல்லாம் இருக்காதே! நாம் எல்லோருமே சூழ்நிலைக்கைதிகள் தாம்! இடம்,பொருள்,ஏவல் பொருத்தே ஒருவர் செய்யும் செயல்களின் நிறம் மாறுகிறது என்பது என் கருத்து.தெரியாமலா சொன்னார்கள்!? "கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்" என்று? தீர விசாரிப்பது தான் மனத்தால் பார்ப்பதென நினைக்கிறேன்.அப்படி ஒருவரை மனத்தின் வழியே பார்ப்பதற்கு தீர்க்கமான பார்வை மட்டுமல்ல; எதிரே இருப்பவர் மீது உண்மையான அக்கறை வேண்டும்...அவர் குற்றம் புரிந்திருப்பினும் கூட. அவர் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பதைத்தான் 'மனத்தால் பார்ப்பது' என நினைக்கிறேன்.நம் கண்கள் நம்மை ஏமாற்றக்கூடியவை; ஆனால் நம் மனம் எனும் மனசாட்சிக்கு உண்மை மட்டும் தான் தெரியும். ஆனால் மனத்தால் பார்ப்பதனால் தந்தை சொல்வது போல் பல சிக்கல்களும் இல்லாமல் இல்லை....இந்த பாவம்,புண்ணியம்,பரிசுத்தம் ...போன்ற விஷயங்கள் நம்மை பயமுறுத்துவது மனத்தால் பார்ப்பதன் விளைவுதான்.பின் எப்படித்தான் பார்ப்பது? கடவுளுக்கே வெளிச்சம். " கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்"... பாடல் எங்கோ ஒலிப்பது செவிகளில் விழுகிறது!!!

    ReplyDelete
  2. Anonymous1/17/2017

    Good morning Yesu

    ReplyDelete