Wednesday, March 8, 2017

தீயோராகிய நீங்களே

'தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்!'

கொடைகள் கொடுப்பது அல்லது அன்பளிப்புகள் கொடுப்பது ஒரு சிறந்த உணர்வு.

அன்பளிப்புகள் கொடுப்பது வாங்குவதைப் பொறுத்தவரை மனிதர்கள் ஐந்து வகை:

அ. நான் யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன். நான் யாரிடமும் வாங்கவும் மாட்டேன்

இந்த வகையினர், 'உனக்குரியது உனக்கு. எனக்குரியது எனக்கு' என்று இருப்பவர்கள். எதிலும் ஒரு கோடு கிழித்து வாழ்வார்கள் இவர்கள். அந்தக் கோட்டைத் தாண்டவும் மாட்டார்கள். அவர்களின் கோட்டைத் தாண்டி மற்றவர்கள் வருவதையும் விரும்ப மாட்டார்கள்.

ஆ. நான் யாரிடமும் கேட்க மாட்டேன். யாராவது கொடுத்தாலும் மறுக்க மாட்டேன்.

இவர்கள் கொஞ்சம் தன்மானம், கொஞ்சம் தாராளம் என்று வாழ்பவர்கள்.

இ. நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். ஆனால் யார் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன்.

இத்தகையோர் கொடுக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். அல்லது கொடுக்க மறுப்பார்கள்.

ஈ. நான் யாரிடமும் வாங்க மாட்டேன். ஆனால் எல்லாருக்கும் கொடுப்பேன்.

இவ்வகையினர் தங்களுக்கு அன்பளிப்பு வந்துவிட்டால் பரிதவித்துவிடுவார்கள். தனக்கு வந்த அன்பளிப்பை மற்றவர்களுக்கு எப்படியாவது திருப்பி செலுத்திவிட நினைப்பார்கள்.

உ. கொடுக்கும்போது முகமலர்ச்சியோடு கொடுப்பார்கள். வாங்கும்போது முகமலர்ச்சியோடு வாங்கிக்கொள்வார்கள்.

இந்த வகையினரை நான் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் சந்தித்தேன்.

நாம பல நேரங்களில் அன்பளிப்பை இலஞ்சம் என நினைத்துக்கொள்கிறோம். அது தவறு?

உதாரணத்திற்கு, எனக்கு யாராவது அன்பளிப்பு கொடுக்கிறார் என்றால், அவர் என்னை வைத்து ஏதாவது காரியம் சாதிக்க நினைக்கிறார் என நினைத்துக்கொள்வதுதான் இலஞ்ச மனநிலை. இது அடிப்படையில் களையப்பட வேண்டியது. இப்படி இருக்கும்போது என்ன நினைப்பு வருகிறது என்றால், நான் மற்றவரைவிட உயர்ந்தநிலையில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்.

'அவருக்கு எல்லாம் இருக்கிறது. அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும்' என்ற எண்ணமும் சில நேரங்களில் நமக்கு வரும். இப்படி நினைப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் கைகளை விரிக்க மாட்டார்கள். இந்த மனநிலையில் என்ன நடக்கிறது என்றால், கொடுப்பவர் மற்றவரைவிட தான் தாழ்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார். இதுவும் தவறு.

இத்தாலியில் நாம் யாருக்கு அன்பளிப்பு கொடுத்தாலும், 'நன்றி' என்று சொல்லி உடனே வாங்கிக்கொள்வார்கள். 'வேண்டாம்,' 'எதுக்கு இதெல்லாம்,' 'என்னிடம் இது இருக்கு,' என்றெல்லாம் சொல்லி புறக்கணிக்கமாட்டார்கள். ஏனெனில் இறைவனே இவர்கள் வழியாகக் கொடுக்கிறார் என்பது இவர்களின் நம்பிக்கை. மேலும், அன்பளிப்பை வாங்கிய உடனே கொடுத்தவர் முன் பிரித்துவிடுவார்கள். அது எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் சரி. தன்னிடம் அந்தப் பொருள் நிறைய இருந்தாலும்கூட அதை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள். சட்டை என்றால் தான் அணிந்திருக்கும் சட்டையே உடனே கழற்றிவிட்டு புதியதை அணிந்துகொள்வார்கள். வாட்ச் என்றால் அதையும் உடனே கட்டிக்கொள்வார்கள். அப்படி செய்து கொடுத்தவரின் முகத்தில் புன்சிரிப்பை பரிசளிப்பார்கள்.

நிற்க.

இவ்வளவு எதிர்பார்ப்புகளோடு நாம் கொடுப்பதால்தான் இயேசு, 'தீயோராகிய நீங்களே நற்கொடைகள் வழங்குகிறீர்கள்' என்கிறார்.

கடவுள் வழங்கும் கொடைகளுக்கு நாம் பதில் அன்பளிப்பு கொடுக்க முடியாது.

அந்த அன்பளிப்பை பெற்றுக்கொள்ள குழந்தை உள்ளம் அவசியம். ஏனெனில் அவர் நம் தந்தை.

என் ஆற்றல், என் நேரம், என் உறவு, என் வேலை, என் குடும்பம் என அனைத்தும் அவரின் கொடை என மட்டும் வாழ்ந்தால் எத்துணை நலம்.

2 comments:

  1. மனதுக்கு மிகவும் இணக்கமான டாபிக்.ஆனாலும் இன்றையப்பதிவை வாசிக்கையில் சில நெருடல்களும் இருக்கத்தான் செய்தன." அன்பளிப்புகள் கொடுப்பது ஒரு சிறந்ந உணர்வு" என்று கூறும் தந்தை அதைக்கொடுப்பவர்களின் பலதரப்பட்ட மனநிலையை எடுத்து வைக்கிறார்.ஒரு அன்பளிப்பைக் கொடுப்பவர் இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்தாலே அந்தக் " கொடுத்தலின் அழகு,மகிழ்ச்சி" இவை கண்டிப்பாக நீர்த்துப்போய்விடும். என்னைப்பொறுத்தவரை ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என மனம் சொல்லுவதும்,கொடுத்தலும் ஒரே வேவ்லெங்த்தில் இருக்க வேண்டும்.'நாளை கொடுப்போம்,அடுத்தவாரம் கொடுப்போம்' எனத்தள்ளிப்போட்டு கொடுக்க முடியாமலே போன சந்தர்ப்பங்களும்,அவை ஏற்படுத்திய இரணங்களும் அதை அனுபவித்தவர்களுக்கே புரியும். கொடுக்க வேண்டுமெனில் நம்மிடம் எப்பொழுதுமே பொருட்குவியல் இருக்க வேண்டுமெனும் அவசியமில்லை. கொடுக்க வேண்டுமெனும் நினைப்பு வரும்போதே கொடுப்பதற்கு ஏதேனும் ஒரு பொருளோ,விஷயமோ கிடைத்துவிடும்.தனிமையில் வாடும் ஒருவரைப்பார்த்து ஒரு புன்முறுவலுடன் " நல்லா இருக்கீங்களா?" என்று கேட்பதும் கூட நாம் கொடுக்கும் ஒரு அன்பளிப்பே!இத்தாலி மக்களின் அன்பளிப்பு கொடுக்கும் முறையைப் பகிர்ந்து கொள்கிறார் தந்தை." தூரத்துப்பச்சை" எப்பவுமே இனிப்பதென்பது இயல்புதானே! இத்தாலியர்கள் பரிசு கொடுத்தவரின் முன்பாக அதைப்பிரித்தால் அதைப் பெரிய விஷயமாகப் பாராட்டும் நாம் அதையே நம்மவர் செய்கையில் " அலையுறான் பாரு" எனவும் சொல்லத்தானே செய்கிறோம்? ஒன்றை உறுதி செய்ய விரும்புகிறேன்...." கொடுப்பவருக்கு எத்தனை தாராளமனம் வேண்டுமோ,அதே தாராள மனம் அதைப்பெறுபவருக்கும் இருப்பது அவசியம்" இதைத்தான் " குழந்தை உள்ளம்" என்கிறார் தந்தை.ஆனாலும் அந்த வரிகள்... "என் ஆற்றல்,என் நேரம்,என் உறவு,என் வேலை, என் குடும்பம் என அனைத்தும் அவரின் கொடை என மட்டும் வாழ்ந்தால் எத்துணை நலம்!". என் நெருடல்கள் அத்தனையும் மாயமாய் மறைந்து விட்டன இந்த வரிகளில்! யாரையும் யோசிக்க வைக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete
  2. Kavitha michael3/14/2017

    எனக்கு கிடைத்தது அனைத்துமே கடவுளின் வல்லமையால் மட்டுமே என்பதை உணரும் பொழுது மனதிற்குள் ஒரு சாந்தம் தன்னடக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது.உணரவைத்த உன்னத தோழமைக்கு உளங்கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும்

    ReplyDelete