Wednesday, March 22, 2017

பின்னோக்கி

“முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்” (காண். எரே 7:23-28)

நாளைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக எரேமியா இறைவாக்கினர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது இதுதான்: ‘பின்னோக்கிச் சென்றார்கள்’

திரைப்படங்களில் ‘பின்னோக்கிய ஒளிப்பதிவு’ (ரிவர்ஸ் ஷாட்)இருப்பதை நாம் பார்த்திருப்போம். தன் வீட்டின் தோட்டத்தின் நடுவில் நிற்கும் கதாநாயகியின்மேல் அங்கே மறைந்திருக்கும் கதாநாயகன் பக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றுவான். கதாநாயகி சொத சொத என்று நனைந்து போவாள். அதற்கு அடுத்த ஷாட்டில் அப்படியே அவள்மேல் ஊற்றப்பட்ட தண்ணீர் மீண்டும் பக்கெட்டுக்குள் சென்று சேரும். கதாநாயகி மீண்டும் தண்ணீர் மறைந்து காய்ந்துவிடும்.

ஆக, பின்னோக்கி நடக்கும் நிகழ்வில் நிகழ்வின் நோக்கம் நிறைவேறுவதில்லை. அதாவது, கதாநாயகி நனைவதில்லை.

அடுத்ததாக, பின்னோக்கி செல்லும்போது நாம் நம் இலக்கை அடைய முடிவதில்லை.

மாட்டுத்தாவணியில் இருந்து நான் ஆரப்பாளையம் நோக்கிச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கோரிப்பாளையம் சிக்னலில் இருக்கும் நான் அப்படியே திரும்பி வந்த வழியில் பயணம் செய்தால், நான் மாட்டுத்தாவணியைத்தான் அடைய முடியுமே தவிர, ஆரப்பாளையத்தை அடைய முடியாது.

ஆனாலும், பின்னோக்கி நடப்பது நமக்கு சில நேரங்களில் பிடிக்கிறது.

நாம் வயது வந்து வளர வளர வாழ்வில் நிறைய சவால்களை, பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில், ‘ச்சே, குழந்தையாகவே இருந்திருக்கலாமே!’ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், பின்னோக்கி நடப்பதால் நம் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை.

இல்லையா?

ஓடாத கடிகாரம் கூட இரண்டு முறை சரியான நேரம் காட்டும்.

ஆனால், பின்னோக்கி ஓடும் அல்லது மெதுவாக ஓடும் கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தை காட்டுவதில்லை.

அதுதான் இஸ்ரயேல் மக்களிடமிருந்த பிரச்சினை.

தங்கள் வேர்களை மட்டும் நினைத்துக்கொண்டு அதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்க விரும்பினார்களே தவிர, விழுதுகளை நோக்கி நகர விரும்பவில்லை.

இயேசுவிடம் நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) வரும் சிலர், ‘பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்’ என்கின்றனர். இயேசுவுக்கு முன் இருந்தவர்கள் அப்படித்தான் பேய்களை ஓட்டினர். ஆக, அந்த சிலரும் தங்கள் சிந்தனையில் பின்னோக்கி ஓடுகிறார்கள்.

வாழ்வில் நடந்து முன்னேறுவோம்.


2 comments:

  1. "இவன் பேய்களின் தலைவன் பெயல்சபூலைக் கொண்டே பேய் ஓட்டுகிறான்" என இயேசுவைப்பார்த்துச் சொல்லும் சிலரை சிந்தனையில் பின்னோக்கி ஓடுபவர்கள் என்கிறார் தந்தை.இப்படித்தான் நாமும் பல சமயங்களில் இறந்த கால சம்பவங்களை அசை போடுவதிலேயே திருப்தி கண்டு நிகழ்காலத்தை மட்டுமின்றி,எதிர்காலத்தையும் கோட்டை விடுகின்றோம். வேர்களின் மயக்கத்தை விட்டு விட்டு விழுதுகளைத் தேடி ஓட ஆரம்பிப்போம். மிகச்சரியே! (இந்தப்பதிவின் இரண்டு வரிகளை அவற்றின் அழகுக்காகவும்,தந்தையின் சிந்தனை ஓட்டத்திற்காகவும் பாராட்ட விரும்புகிறேன்..." ஓடாத கடிகாரம் கூட இருமுறை சரியான நேரம் காட்டும்.ஆனால் பின்னோக்கி ஓடும் அல்லது மெதுவாக ஓடும் கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தைக் காட்டுவதில்லை" ...இந்த வரிகளே அவை) எப்பவுமே தன் சிந்தனை ஓட்டத்தில் தனித்துவம் காட்டும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Kavitha michael3/23/2017

    "பின்னோக்கி செல்லும்போது நாம் நம் இலக்கை அடைய முடிவதில்லை" ஆழமான சிந்திக்க வைக்கும் கருத்து இது.நடந்தவற்றையே நினைத்து நாம் நம் காலத்தை ஓட்டுவோமானால் நிகழ்காலமும் வரும் எதிர்காலமும் நம் கண்களை விட்டு மறைந்தும் அதனை நாம் வாழ மறந்தும் முடங்கி விடுகிறோம்.எனவே நாம் நம் வாழ்வில் பழையநிலையை கடந்து புதியநிலைக்கு நடந்து முன்னேறுவோம் என்பதனை தன் அழகு தமிழில் அழகாக எடுத்துரைத்த அன்புத்தம்பிக்கு பாராட்டுக்கள் பல.

    ReplyDelete