Friday, March 3, 2017

ஆற்றல் கசிவு

'நோயற்றவருக்கு அல்ல. நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.'

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 100 மருத்துவர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். மருத்துவமனையில் 1000  பேர் சிகிச்சைக்கு காத்திருக்கின்றனர். சிகிச்சைக்கு காத்திருக்கும் இவர்களை அப்படியே விட்டுவிட்டு, 500 மருத்துவர்களும் கோரிப்பாளையம் - புதூர் சாலை, கோரிப்பாளையம் - சிம்மக்கல் சாலை, கோரிப்பாளையம் - அண்ணாநகர் சாலையில் நின்று வருவோர் போவோருக்கு மருத்துவம் செய்ய ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

அ. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் அவதிப்படுவர். சிலர் இறந்து போவர்.

ஆ. மேற்காணும் 3 சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் உருவாகும்.

இ. சாலையில் போவோர் வருவர் கேலி பேசுவர்.

ஈ. அவசரமாக வேலைக்குச் செல்வோர் மருத்துவர்கள்மேல் கோபம் கொள்வர்.

உ. யாரும் மருத்துவர்களின் சேவையை பாராட்ட மாட்டார்கள்.

ஏனெனில்,

சாலையில் செல்வோர் யாருக்கும் மருத்துவர்களின் தேவை இல்லை.

ஆக, எது நமக்குத் தேவையோ அதையே நாம் தேடுகிறோம். அல்லது பாராட்டுகிறோம்.

தேவை இல்லாத போது கிடைக்கின்ற ஒன்றை நாம் விரும்புவதோ, ரசிப்பதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை. சில நேரங்களில் அது நமக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது.

தேவையானது தேவையில் இருப்பவருக்கு கிடைக்கும்போது அது விரும்பப்படுகிறது.

மற்றொரு பக்கம்,

இன்று மேலாண்மையில் அதிகம் பேசப்படுகின்ற வார்த்தை 'ஆற்றல் கசிவு' (எனர்ஜி லீக்).

இது எப்போது உருவாகிறது?

தேவையானவருக்கு தேவையானதைக் கொடுக்காமல், தேவையில் இல்லாதவருக்கு தேவையானது என நாமாக ஒன்றை நினைத்துக் கொடுக்கும்போது.

எடுத்துக்காட்டாக,

மருத்துவர் நோய் உற்ற ஒருவருக்கு வைத்தியம் பார்க்கும்போது அவரின் ஆற்றல் வீணாவதில்லை. நோயைக் கண்டுபிடிக்கிறார். மருந்து கொடுக்கிறார்.

ஆனால், நோய் அற்ற ஒருவருக்கு வைத்தியம் பார்க்கும்போது, அவரின் ஆற்றல், நேரம், மருந்து, அறிவு, பொறுமை அனைத்தும் வீணாகிறது.

நல்லா யோசிச்சு பாருங்களேன்:

காலையில இருந்து வேலை அல்லது படிப்பு என ஓடிக்கொண்டிருப்போம். அப்போது சோர்வே இருக்காது.

ஆனால், அரை மணி நேரம் அமர்ந்து டிவி பார்த்து எழுந்தால் மிகச் சோர்வாக இருக்கும்.

இதற்குக் காரணம், ஆற்றல் கசிவு.

தேவையில்லாத ஒன்றை தேவை என நினைத்து நம் ஆற்றலை செலவிடும்போது தேவையான ஆற்றலை நாம் இழந்துவிடுகிறோம்.

இயேசு தனது பணிவாழ்வில் ஒருபோதும்; தன் ஆற்றலைக் கசிய விடவில்லை.

ஆகையால்தான் அவரால் நிறையப் பேரை தொட முடிந்தது.


1 comment:

  1. "ஆற்றல் கசிவு".... புதிய வார்த்தை.தேவையானவருக்குத் தேவையானவற்றைக்கொடுக்காமல்,தேவையில் இல்லாதவருக்கு தேவையானது என நாமாக ஒன்றை நினைப்பது..... மற்றும் கொடுப்பது....இது பொதுவாக பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாத பெற்றோரும், மாணாக்கரைப் புரிந்து கொள்ளாத ஆசிரியப் பெருமக்களும் செய்யும் தவறு எனப்படுகிறது. தேவையில்லாத ஒன்றைத் தேவை என நினைத்து நம் ஆற்றலைச் செலவிடும் போதும் இந்த " ஆற்றல் கசிவு" ஏற்படுகிறது எனும் தந்தையின் கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.இந்தத் தவக்காலத்தில் நம் வாழ்க்கையை அலசிப்பார்க்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.தேவையற்ற விஷயங்களில் நம் ஆற்றலையும் ,சக்தியையும் விரயம் செய்யாமல் நம் ஆற்றல் யாருக்குத் தேவையோ,எப்பொழுது தேவையோ....நிலமையறிந்து உபயோகப்படுத்துவோம்.இயேசுவின் பாதையில் நம் செய்கையின் மூலம்...ஆற்றலின் மூலம் ஒரு சிலரையாவது நாம் "தொட" முடிந்தால் இந்த தவக்காலம் நமக்கு அர்த்த முள்ள காலமாக அமையும்.செபம்,தவம் எனும் விஷயங்களைத்தாண்டி நம் நல் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களையும் தரும் தந்தைக்கு என் நன்றியும்,வாழ்த்தும்!!!

    ReplyDelete