Friday, March 17, 2017

காணாமற்போவதன் சுகம்!

20 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் மாலை செய்திகள் பார்க்க யார் வீட்டுக்காவது ஓடிப் போய் உட்கார்ந்தால், அல்லது பஞ்சாயத்து போர்டு டிவி முன் இடம் போட்டு பார்த்தால், முதலில் 'காணாமற்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' என்று வரிசையாக அறிவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அத்தகைய விளம்பரங்கள் டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை. வரிசையாக அறிவிக்கப்படும் ஒவ்வொரு பெயரையும் பார்க்கும்போது, நானும் காணாமல்போனால் என் பெயர் டிவியில் வருமே என நான் நினைத்ததுண்டு.

இன்று காணாமல்போன மனிதர்கள், நாய்க்குட்டிகள் என நிறைய விளம்பரங்கள் பொதுவிடங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும் ஒட்டப்படுகின்றன. சில இடங்களில் பெரிய வால்போஸ்டர்களும் இருக்கின்றன. இந்த நோட்டீஸ்கள் தேடுபவரின் வசதிக்கும், காணாமல்போனவரின் வசதிக்கும் ஏற்றாற்போல இருக்கும். சில ஃபோட்டோக்களோடு இருக்கும். சில அலங்கோலமான கையெழுத்துக்களில் இருக்கும்.

வீட்டைவிட்டு காணாமல்போனவர்கள், போர் மற்றும் இயற்கை சீரழிவுகளில் இடம்பெயர்ந்து காணாமல்போனவர்கள், திருவிழாக்களில் காணாமல்போனவர்கள், பகை மற்றும் வன்முறையால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எண்ணற்ற காணாமற்போனவர்களைப் பற்றிக் கேள்விப்படுகின்றோம்.

இறந்தவர்களும் காணாமல்தான் போகிறார்கள். அவர்களை நம் கண்களால் காண முடிவதில்லை. இருந்தாலும் அவர்களை இனி நாம் காணவே முடியாது என்பதால் அவர்களை நாம் தேடுவதில்லை. ஆக, ஒருவரின் இறப்பு அவரை நாம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வைக்கிறது. ஆக, ஒருவர் இருந்தாலும் நாம் தேடுவதில்லை. அவர் இறந்தாலும் நாம் தேடுவதில்லை.

நாம் தேடுபவர்கள் யார் என்றால் இதற்கு இடைப்பட்ட காணாமல்போனவர்களைத்தாம். காணாமல்போவது அதன் உரிமையாளருக்கு ஆற்ற முடியாத சோகத்தை தருகிறது. கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் காணாமல்போனவர்கள் தேடுபவர்களைப் பற்றி கவலைப்படுவார்களா? பல நேரங்களில் இல்லை.

சிலர் மற்றவர்களைப் பழிவாங்குவதற்காகவும், பிடிவாதத்தாலும்கூட காணாமல்போவார்கள். சிலர் அடுத்தவர்களுக்கு பயந்து கொண்டு காணாமல்போவார்கள். வீட்டிற்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படிப்பட்டவர்கள். காணாமல்போகும் போது அடுத்தவர்கள் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் அடுத்தவரின் பார்வையிலிருந்து நாம் விலகி இருப்பது நமக்கு சுகமாகத்தான் இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 15:1-32) ஊதாரி மைந்தன் (தந்தை) உவமையை நாம் புதிய கோணத்தில் பார்க்கலாம். காணாமல்போன ஆட்டையும், நாணயத்தையும் அவற்றின் உரிமையாளர்கள் தேடுகின்றனர். ஆனால், காணாமல்போன மகன் எடுத்துக்காட்டில் அவரின் தந்தை தேடுகிறாரா? நன்றாகப் பார்த்தோமென்றால் 'இல்லை' என்ற பதிலே மிஞ்சுகிறது. தந்தை தன் மகனுக்காக காத்திருக்கிறாரே தவிர, அவரைத் தேடவில்லை. இல்லையா? முதல் இரண்டு உவமைகளில் 'ஹெவ்ரிஸ்கோ' (தேடுதல்) என்ற வினைச்சொல்லும், மூன்றாம் உவமையில் 'ஹொராவோ' (பார்த்தல்) என்ற வினைச்சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்க காணாமல்போன மகனை யார் தேடியது? யார் கண்டுகொள்கிறார்? யார் கொண்டாடுகின்றார்?

இளைய மகன் தன்னையே கண்டுபிடித்துக்கொள்கிறான்.

தானே விரும்பி காணாமல் போகின்றான் மகன். அவனுக்கு தன் தந்தையின் மேல் ஏதோ ஒரு கோபம் இருந்திருக்கிறது. ஒருவேளை அவருடைய உடனிருப்பைக்கூட அவன் தாங்க முடியாத சுமையாகப் பார்த்திருக்கலாம். ஆகையால்தான் அவரிடமிருந்து காணாமல் போக நினைக்கின்றான். அப்படி நினைத்தவன் தான் மட்டும் போகாமல், தன்னைப் பற்றிய எந்த நினைவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றெண்ணி தனக்குரியது அனைத்தையும் தூக்கிக் கொண்டு புறப்படுகின்றான். போன வேகத்தில் தான் கொண்டு வந்த அனைத்தையும் செலவழிக்கின்றான். அதாவது, தன்னிடம் இருக்கும் பொருள் அல்லது பணம் அவனுக்கு தன் தந்தையை நினைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆகையால்தான் அவற்றை செலவழிப்பதில், அழிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றான். ஆனால், இந்த முரட்டுக் கோபத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது அவனது வறுமையும், பசியும், வெறுமையும். மகனாக இருந்தவன் வேலைக்காரனாக மாறுகின்றான். பன்றிகள் தின்னும் நெற்றுக்களே அவனுக்குக் கிடைக்கிறது.

அப்படி ஒருநாள் பன்றிகளின் நெற்றுக்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கு தன் (தந்தையின்) வீட்டு நினைவு வருகிறது. இந்நேரம் ரொட்டிகள் சுட்டு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்களே. இந்த உணர்வை ஆங்கிலத்தில் நொஸ்டால்ஜியா என அழைக்கின்றனர். இது ஒரு முக்கியமான உணர்வு. இந்த உணர்வுக்கு நிறைய ஆற்றல் உண்டு. 'ஐயோ! நான் அப்படி இருந்தேனே! இன்று நான் இப்படி இருக்கிறேனே!' என்ற உணர்வு பல நேரங்களில் நம்மையும் மாற்றிவிடும். அப்படித்தான் மாறிப்போகின்றான் இந்த இளைய மகன்.

அவன் அந்நேரம் அறிவு தெளிவுபெறுகின்றான். அவன் 'தனக்குள் வந்தான்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் லூக்கா. அதாவது இதுவரை காணாமல்போயிருந்தவன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். ஆக, இளைய மகன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். காணாமல்போனது அவனுக்கு சுகமாக மாறுகிறது. ஏனெனில் காணாமல்போன நிலையில்தான் அவன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். தன்னைக் கண்டுபிடித்த அவன் இனியும் காணாமல்போகவே மாட்டான். முடிவெடுத்து புறப்படுகின்றான்.

தன்னையே கண்டுபிடித்த இளைய மகன் இனி யாரையும் எளிதாக எதிர்கொள்வான். ஆகையால்தான் தன் வீட்டிற்கு திரும்புவதைப் பற்றி எந்தவொரு பயமும் அவனுக்கு இல்லை. அப்பாவா, அண்ணனா பார்த்துக்கொள்வோம் என புறப்படுகின்றான். மகன் என்ற நிலையிலிருந்து வேலையாள் என்ற நிலைக்கு இறங்கியாயிற்று. அந்த நிலையிலேயே தன்னை இணைத்துக்கொள்ள நினைத்து வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும், உடலுக்கு ஆடையும் கிடைக்க வீடே விருந்தின் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறது.

இயேசு இந்த இடத்தில் உவமையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் தொடர்கிறார். இவ்வளவு நேரம் திரைக்குப் பின் இருந்த மூத்த மகன் உள்நுழைகின்றான். அவன் தந்தைக்கு அருகில் இருந்தாலும் அவனும் காணாமல்போய்தான் இருக்கின்றான். ஆனால், அவன் காணாமல்போன தன் நிலையை கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். ஆகையால்தான் அவனால் தன் தம்பியை தம்பி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உன் மகன்' என்று மூன்றாம் நபரில் விளிக்கின்றான். இளைய மகன் தன்னையே கண்டுகொண்டதால் மகிழ்ச்சி அடைகின்றான். மூத்த மகன் தன்னையே கண்டுகொள்ளாததால் விருந்தின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள மறுக்கின்றான்.

ஆக, இந்தக் கதையின் நாயகன் தந்தை அல்ல. மாறாக, இளைய மகனே. காணாமல்போவதே சுகம் என்று நினைத்தவன், தன்னையே கண்டுகொள்கின்றான். அவன் தன்னையே கண்டுகொண்டதுதான் மேலானது.

எப்படி ஆடு கண்டுபிடித்தவரும், நாணயம் கண்டுபிடித்தவரும், அவற்றை எடுத்துக்கொண்டு அண்டை வீட்டுக்கு ஓடி தங்கள் மகிழ்வைக் கொண்டாடுகிறார்களோ, அதுபோல இளைய மகனும் தான் கண்டுபிடித்த தன்னையே எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு ஓடுகின்றான். 'அப்பா, நான் என்னையே கண்டுபிடித்துவிட்டேன்!' என்று அவரின் கைகளில் விழுகின்றான்.

நாம் ஆசையாய் அணிந்து கொண்ட திருமண மோதிரம் திடீரென்று காணாமற்போய் அதைத் தேடும்போது நாம் அதனுடன் ஒரு புதிய உறவிற்குள் தான் நுழைகின்றோம். கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்து வாங்கிய பைக் திடீரென்று காணாமற்போய் மீண்டும் கிடைக்கும்போது முதலில் பைக் வாங்கிய சந்தோஷம் நம்மைத் தொற்றிக்கொள்கின்றது.

அந்த மூன்று பேர்

தந்தை காத்திருக்கிறார். சில நேரங்களில் தேடுதலை விட காத்திருத்தல் அவசியமானது. நம் அன்பிற்கு உரிய ஒருவர் நம்மைவிட்டு காணாமல்போக நினைக்கிறார் என்றால், அல்லது காணாமல்போகிறார் என்றால், நாம் உடனே அவர்பின் தேடி ஓடுவது முறை அல்ல. தந்தையைப் போல பொறுமையும் காத்திருத்தலும் தேவை. சில நேரங்களில் தன்னை அறிவதற்கு இளைய மகனுக்கு தனிமையும் தூரமும் தேவை. ஆக, அந்த மகனின் தனிமையையும், தூரத்தையும் அனுமதிக்கிறார் தந்தை. என்று வந்தாலும் அவன் என் மகன்தான் என்ற நிலையில் காத்திருக்கிறார். தன்னையே கண்டுபிடித்த ஒருவரால்தான் இப்படி பொறுமைகொண்டிருக்க முடியும்.

இளைய மகன் காணாமல்போகின்றான். கண்டுபிடிக்கின்றான். ஆம். காணாமல்போனாலும் அவன் தன்னையே கண்டுகொள்கிறான். தன்னைக் கண்டுகொள்தல்தான் இன்று நாம் செய்ய வேண்டிய பெரிய வேலை. நம் உறவுகளில், ஏன் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில்கூட சில நேரங்களில் தூரம் தேவை. அவரின் இல்லாமையை நான் உணர வேண்டும். அவர் என்றும் என்னோடு என்று பாடிக்கொண்டே அவரோடு ஒட்டியிருப்பதும் சரியல்ல. உறவுநிலையில் உள்ள தூரத்தில்தான் நாம் நம்மையும், நம் உறவுநிலையில் உள்ளவர்களையும் புரிந்து கொள்கிறோம். ஒரு மரத்தின் நிழலில் மற்றொரு மரம் வளர முடியாது என்பது இயற்கை நியதி. அதுபோலவே உறவுகளின் நிழலில் எப்போதும் இருப்பதும் வளர்ச்சி தராது. சில நேரங்களில் நாம் வன்முறையாக மரத்தை பிடுங்கி அடுத்த இடத்தில் நட வேண்டும். இளைய மகன் தானாகவே தூரமாகச் சென்றான். தானாகவே திரும்பி வந்தான். மேலும், இயற்பியல் விதி சொல்வதுபோல தூரத்தில் இருந்து எறியப்படுகின்ற பந்து வேகமாக வந்து மோதும். நிறைய அழுத்தத்தை கொண்டிருக்கும். இளைய மகன் தூரமாக சென்றாலும் தன் தந்தையின் உள்ளத்தில் இன்னும் அதிக அழுத்தத்தோடு பதிந்து போகிறான்.

மூத்தமகன் காணாமலும் போகவில்லை. கண்டும் பிடிக்கவில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க மட்டும்தான் இந்த மகனுக்கு நேரம் இருக்கிறது. இறுதிவரை தான் யார் என்றும், தன் தந்தை யாரென்றும், தன் தம்பி யாரென்றும் கண்டுபிடிக்காமலேயே போய்விடுகின்றான்.

காணாமல்போவது நம்மையே கண்டுபிடிக்கத்தான் என்றால் காணாமல்போவதும் சுகமே!

3 comments:

  1. Anonymous3/19/2017

    Lovely Yesu

    ReplyDelete
  2. Anonymous3/19/2017

    Lovely Yesu

    ReplyDelete
  3. அழகானதொரு பதிவு.காணாமல் போன ஆட்டையும்,நாணயத்தையும் அதன் உரிமையாளர்கள் தேடிக்கண்டுபிடிக்கும் நிலையில் காணாமல் போன தன் மகனைத்தேடாது விட்ட தந்தையைக்குறிப்பிடுகிறார் தந்தை.தந்தையின் உடனிருப்பை வெறுத்து வெளியே சென்றவன் தன்னையே கண்டு பிடிக்கிறான்; தந்தையிடம் செல்லத்துடிக்கிறான். தன்னையே உணர்ந்த அவன் இனித்தந்தையை விட்டுப்பிரிய மாட்டான்.தவக்காலத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் நாம் நம்மையே உணருவோம்.தந்தையை விட்டுப் பிரிந்து நின்ற காலங்களுக்காக வருந்துவோம்.சேர்தலின் சுவையை சுவைப்போம்.காலத்துக்கேற்ற பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete