சில இறைவார்த்தை பகுதிகள் தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை அப்படியே நம் கண்கள் முன்பாக நடத்திக்காட்டும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட இறைவார்த்தைப் பகுதிகளில் இருந்துதான் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை நாம் வாசிக்கின்றோம்.
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 16:1,6-7,10-13) சாமுவேல் இறைவாக்கினர் தாவீது அரசரை அருள்பொழிவு செய்யும் நிகழ்வை நமக்குச் சொல்கிறது. இந்த வாசகத்தை வாசிக்கும் நாம் அப்படியே அந்தக்காட்சியின் ஒரு உறுப்பாக மாறிவிடுகிறோம் என்பதுதான் ஆச்சர்யம். ஒரு பாலஸ்தீனத்துப் பாலைவனம். அதன் நடுவில் ஈசாயின் வீடு. அவருக்கு ஏழு மகன்கள். நெடுந்தூரம் பயணம் செய்து வருகிறார் சாமுவேல். தனக்கு கடவுள் கொடுத்திருக்கும் பணியை நிறைவேற்றும் முகமாக கையில் எண்ணெய் நிறைந்த கொம்பு ஒன்றை வைத்திருக்கிறார். வீட்டிற்குள் நுழைந்தவர் ஈசாயின் மூத்த மகன் மூக்கும், முழியுமாக இருந்ததை பார்த்தவுடன் ஓடிச்சென்று அருள்பொழிவு செய்ய முனைகின்றார். ‘தம்பி, பொறுங்க! இவர் இல்ல அவர்!’ என அவரை தடுக்கின்றார் கடவுள். இப்படியே ஒவ்வொருவராக கடந்து செல்ல, கடைசியில் கடைக்குட்டி தாவீது அழைத்துவரப்படுகின்றார். ‘சிவந்த மேனியும், ஒளிரும் கண்களும் கொண்ட அழகிய தோற்றம்’ என்ற வார்த்தைகளை வாசிக்கும்போதே, நம்மால் செந்நிற மேனி கொண்ட, அங்கங்கே அரும்பி நிற்கும் பூனை முடி கொண்ட, வெளிச்சத்தில் மின்னும் தாவீதை கற்பனை செய்துவிட முடிகிறது.
சாமுவேல் இறைவனின் துணைகொண்டு தகுந்த நபரைக் கண்டுகொள்கின்றார்.
இந்த நிகழ்வில் சாமுவேல் இரண்டு பார்வை நிலைகளைக் கடந்து வருகின்றார். முதலில், தான் பார்ப்பது போல பார்க்கின்றார். இரண்டாவதாக, கடவுள் பார்ப்பது போல பார்க்கின்றார். அல்லது முதலில், மனிதர் பார்ப்பது போல பார்க்கின்றார். இரண்டாவதாக, கடவுள் பார்ப்பது போல பார்க்கின்றார்.
கடவுள் தரும் அக ஒளி அவருக்கு பார்வை மாற்றத்தை தருகின்றது. ஒளி இருந்தால்தான் பார்க்க முடியும் என்பது அறிவியல் உண்மை. அதாவது, ஒளி பொருள்களின் மேல் பட்டு, அந்த ஒளி மீண்டும் நம் கண்களின் ஒளித்திரையை நோக்கி பயணம் செய்தால்தான் அந்தப் பொருள் நம் கண்ணில் படுகிறது.
ஆக, ஒளி, எதிரொளி, பார்க்கிறவரின் ஒளித்திரை இந்த மூன்றும் சரியாக இருந்தால்தான் பார்வை சாத்தியமாகும்.
கடவுள் காட்டிய ஒளி எதிரொளியாக சாமுவேலின் ஒளித்திரையில் விழுந்ததால், சாமுவேல் தாவீதை அரசராக அடையாளம் கண்டுகொள்கின்றார்.
இதே திசை இயக்கம்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். யோவா 9:1-41) காணக்கிடக்கிறது. கதையும், இறையியலும் மிக அழகாக கலந்த கலவை என்றும், இது யோவான் நற்செய்தியாளரின் இலக்கியத் திறத்திற்கான முக்கியமான சான்று என்றும் இந்த இறைவாக்கு பகுதி கருதப்படுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம்:
அ. பார்வை அற்றவர் பார்வை பெறுதல் (9:1-12)
ஆ. உரையாடல்களும் கேள்விகளும் (9:13-41)
அ. பார்வை அற்றவர் பார்வை பெறுதல் (9:1-12)
‘இயேசு சென்று கொண்டிருக்கும்போது’ என்று நற்செய்தி தொடங்குகிறது. அவர் எங்கே சென்று கொண்டிருந்தார் என்பதும், எப்போது சென்று கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படவில்லை. பார்வையற்ற ஒருவரை வழியில் இயேசு காண்கின்றார். ஆக, பார்வை உள்ள ஒருவர் தான் பார்வை அற்றவரைக் காண முடியும். பார்வையற்ற நபர் இயேசுவைப் பார்த்தார் என்றால் கதை அப்படியே முடிந்துவிடும். அந்நேரம் இயேசுவின் சீடர்களும் உடனிருக்கின்றனர். ‘ரபி, இவர் பார்வையற்றவராய் பிறக்க காரணம் இவர் செய்த பாவமா? அல்லது இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர். பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு வரும் என்பதும், பிறக்குமுன்பே ஒருவர் பாவம் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும் யூதர்களின் கருத்து. ஆகையால்தான் இந்தக் கேள்வி. மேலும், இங்கே பாவம் என்பது அறநெறி பிறழ்வு அல்ல. மாறாக, கடவுளின் வெளிப்பாட்டிற்குத் தகுந்த பதில் அளிக்காத நிலையே பாவம். ஆனால், இயேசு சீடர்களின் கேள்விக்கு வேறு பதிலை அளிக்கின்றார். அவரின் பார்வையற்ற நிலை பாவத்தால் வந்தது அல்ல. மாறாக, கடவுளின் திட்டம் வெளிப்படுவதற்காக வந்தது என்கிறார். “நான் உலகில் இருக்கும்வரை நானே ஒளி!” என்று தன்னை அவர்களுக்கு ஒளியாக வெளிப்படுத்துகிறார் இயேசு.
தன் உமிழ்நீரால் சேறு உண்டாக்கி பார்வை அற்றவரின் கண்களில் பூசி, சிலோவாம் குளத்தில் போய் கழுவுமாறு கட்டளையிட்டு அனுப்பிவிடுகிறார் இயேசு. அந்த நபர் தனியாகச் சென்றாரா? யார் உடன் சென்றார்கள்? தண்ணீரில் கழுவிய பின் அவர் யாரை முதல்முதலாக பார்த்தார்? இந்தக் கேள்விகளுக்கு விடையில்லை. ஆனால், பார்வை பெற்றவுடன் அந்த நபர் திரும்பி வருகிறார். இந்த நிகழ்வில் இயேசுவும், சீடர்களும், பார்வையற்ற நபரும் மட்டுமே இருந்தாலும், மற்ற யூதர்களும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகையால்தான், பார்வை பெற்று வந்த நபரைப் பார்த்து, அவரைப் பற்றி மக்கள் பேச ஆரம்பிக்கின்றார்கள். ‘டேய் இவனை யார்னு தெரியுதா?’ ‘இவன்தான் கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன்’ ‘இவன்தான் அவன்’ என சிலரும், ‘அவனல்ல இவன்’ என சிலரும் பேசுகின்றனர். ஆனால், அவர் ‘நான்தான் அவன்’ என தன்னை புதிய மனிதனாக அவர்கள் முன் நிறுத்துகின்றார்.
‘ஆகா, இவனுக்கு பார்வை கிடைத்துவிட்டது!’ என சமூகம் அவனைக் கொண்டாடவில்லை. உடனடியாக, அது எப்படி என ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறது. ஒருவன் நல்ல நிலைக்கு உயர்ந்தால் நாமும் பல நேரங்களில் அதை பாராட்டுவதில்லைதானே. ‘அவன் இப்படி சம்பாதித்தான். அப்படி சம்பாதித்தான்’ என குறை கண்டுபிடிக்க தொடங்கிவிடுகிறோம். இவர்களின் உள்ளத்து தவறான உணர்வை அறியாமல், அவரும் பச்சை பிள்ளை போல எல்லாவற்றையும் ஒப்புவிக்கத் தொடங்குகின்றார்.
‘இயேசு எனப்படும் மனிதர்’ என இயேசுவை அடையாளம் காட்டுகிறார். இவரின் இந்த வார்த்தை மிக முக்கியம். ஏனெனில், இதுவே ‘இவர் ஓர் இறைவாக்கினர்’ (9:17) ‘இவர் ஓர் ஆண்டவர்’ (9:38) என அடுத்தடுத்த நிலையில் இவரின் நம்பிக்கையாக உயரும்.
இந்தப் பகுதியின் நிறைவில் பார்வை அற்றவர் பார்வை பெற்றுவிட்டார்.
நாடகத்தின் முதல் பகுதி முடிகிறது.
ஆ. உரையாடல்களும் கேள்விகளும் (9:13-41)
நாடகத்தின் இரண்டாம் பகுதியை ஐந்து காட்சிகளாக பிரிக்கலாம்:
காட்சி 1: பார்வை பெற்றவரும் பரிசேயர்களும் (13-17)
காட்சி 2: யூதர்களும் பார்வை பெற்றவரின் பெற்றோர்களும் (18-23)
காட்சி 3: பார்வை பெற்றவரும் பரிசேயர்களும் (24-34)
காட்சி 4: இயேசுவும் பார்வை பெற்றவரும் (35-38)
காட்சி 5: இயேசுவும் பரிசேயர்களும் (39-41)
இயேசு உமிழ்நீரால் சேறு உண்டாக்கி குணம் தந்தது தான் பரிசேயர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இப்படி குணம் தருவது கிரேக்க-உரோமை காலத்தில் நடைமுறையில் இருந்தாலும், இயேசு இதைச் செய்த நாள் ஓய்வுநாள் என்பதால் இது குற்றமாகிறது. மிஷ்னா சபாத் 7.2ன் படி ஓய்வுநாளில் ‘(மாவு) பிசைவது’ என்பது தடைசெய்யப்பட்ட செயல். உமிழ்நீரால் சேறு பிசைந்ததால் இயேசு இந்த தடையை மீறியவர் ஆகின்றார்.
ஆக, இப்படி தடைமீறிய பாவி நல்லது செய்ய முடியுமா?
இதுதான் அடுத்த வாதம்.
‘பாவியாக இருந்தால் எப்படி நலம் தர முடியும்? ஆக, அவர் பாவமில்லாதவர்’ - இது பார்வை பெற்றவரின் வாதம்.
‘இல்லை. அவர் கடவுளிடமிருந்து வந்தவர் அல்ல. அப்படி வந்திருந்தால் அவர் எப்படி தடையை மீறுவார்?’ - இது பரிசேயர்களின் வாதம்.
இந்த விடைதெரியாத கேள்விகளுக்கு நடுவே சிக்கித்தவிக்கின்றனர் வாசகர்கள்.
‘அவரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்க, ‘அவர் ஓர் இறைவாக்கினர்’ என்கிறார் பார்வை பெற்றவர்.
காட்சி அப்படியே பெற்றோர்களின் இல்லத்திற்கு மாறுகின்றது.
பார்வை அற்றவரின் பேச்சை ஏற்றுக்கொள்ளாத பரிசேயர்கள் பஸ் பிடித்து பெற்றோர்களைத் தேடிப் போகிறார்கள். ‘எப்படியும் இயேசுவைக் குற்றவாளி ஆக்க வேண்டும்’ என்ற முனைப்பில்தான் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள். பெற்றோர்கள் பரிசேயர்களுக்குப் பயந்துகொண்டு, ‘அவன் வயதுவந்தவன்தானே. அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லி விலகிக்கொள்கிறார்கள்.
மீண்டும் வாக்குவாதம் தொடர்கிறது.
பார்வை பெற்றவரும் அவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிக்கிறார். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
இறுதியில், இயேசுவும் பரிசேயர்களும் உரையாடுகின்றனர்.
‘பார்வை அற்றோர் பார்வை பெறவும், பார்வை உடையோர் பார்வையற்றோர் ஆகவும் வந்தேன்’ என்கிறார் இயேசு.
ஆக, இங்கே முதலில் ‘பார்வை’ என்பது நேரிடையாகவும், இரண்டாவதாக ‘உருவகமாகவும்’ கையாளப்படுகிறது.
‘நாங்களுமா பார்வையற்றோர்?’
இந்தக் கேள்வி பரிசேயர்களின் கேள்வியாக இருந்தாலும், இந்த நிகழ்வை வாசிக்கும் ஒவ்வொருவரும் இயேசுவைப் பார்த்து இதைக் கேட்கவேண்டியதாகின்றது.
இயேசு இந்தக் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாமல், ‘பாவம் செய்வதே பார்வையற்ற நிலை’ என முடிக்கின்றார்.
யோவான் நற்செய்தியின் அழகு என்னவென்றால், ஒவ்வொரு நிகழ்விலும் யோவான் அர்த்தத்தை இரண்டு நிலைகளில் பதிவு செய்வார்: மேலோட்ட நிலை, ஆழ்நிலை. மேலோட்ட நிலையில் இந்த நிகழ்வில் பார்வை பெறுதல் என்பது கண்பார்வை பெறுவதையும், ஆழ்நிலையில் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்பதையும் குறிக்கிறது.
இந்தக் கருத்தை ஒட்டியே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 5:8-14) தூய பவுலடியார் எபேசு நகரத் திருச்சபையை அறிவுறுத்துகின்றார். ‘ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்’ என்று தொடங்கி, ‘தூங்குகிறவனே, விழித்தெழு. இறந்தவனே, உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என கிறிஸ்துவின் ஒளியை ஒவ்வொருவரும் பெற்று, எதிரொளிக்க அழைக்கின்றார்.
இவ்வாறாக,
பார்வை இல்லாத நிலையிலிருந்து பார்வை பெற்ற நிலைக்கு கடந்து செல்கின்றார் அந்த நபர்.
பார்வை இருந்தும் இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் பரிசேயர்கள்.
ஆக, இயேசுவின் ஒளி பார்வையற்ற நபரின் மேல் எதிரொளித்ததால் அவர் இயேசுவை, ‘மனிதராகவும்,’ ‘இறைவாக்கினராகவும்,’ ‘ஆண்டவராகவும்’ கண்டுகொள்கின்றார். பரிசேயர்களிடம் அந்த ஒளி இல்லை. ஆக, அவர்களால் இயேசுவைக் கண்டுகொள்ள முடியவில்லை.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் இவை:
1. எதிர்மறை என்பது பிரச்சினையா அல்லது வாய்ப்பா?
பார்வையற்ற நபரைக் கண்டவுடன், ‘பார்வை அற்ற நிலை’ என்பது ஓர் எதிர்மறை நிகழ்வு. அந்த நிகழ்வை இரண்டு வகையாகப் பார்க்கலாம். சீடர்கள் இதை பிரச்சினையாகப் பார்க்கின்றனர். ஆகையால், ‘இது இவரின் தவறா? அல்லது பெற்றோரின் தவறா?’ எனக் கேட்கின்றனர். ஆனால் இயேசு இதை வாய்ப்பாகப் பார்க்கின்றார். ஆகையால் தான், ‘கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தார்’ என்கிறார் இயேசு. நம் வாழ்வில் நமக்கு வரும் எதிர்மறை நிகழ்வுகளை நாம் அணுகும்விதம் எப்படி இருக்கிறது? பிரச்சினையாகப் பார்க்கும்போது நாம் ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக பார்க்கின்றோம். வாய்ப்பாகப் பார்க்கும்போது நாம் பொறுப்புணர்வுள்ளவர்களாக மாறுகின்றோம்.
2. கூட்டத்தினர், யூதர்கள், பரிசேயர்கள்
இந்த மூன்றுபேரும் பார்வை பெற்ற நபரோடு வாக்குவாதம் செய்கின்றனர். பார்வை இல்லாத நபர் அதே நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர் பார்வை பெற்றது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. நாம் வாழும் உலகம் இப்படிப்பட்டதுதான். நாம் தாழ்வான நிலையில் இருந்தால் அதே நிலையில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என நினைக்கின்றது. ஆக, இந்த உலகத்தில் நாம் துணிந்து வாழ வேண்டும். மேலும், நாம் இப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. தாழ்ந்திருக்கும் ஒருவர் உயர்ந்துவர முயற்சி செய்தால் நாம் இன்னும் உற்சாகப்படுத்தி தூக்கிவிட வேண்டும்.
3. அவன் வயதுவந்தவன்தானே!
பார்வை அற்றவர்-பெற்றவரின் பெற்றோர்கள் சொல்லும் மறுமொழி, ‘அவன் வயதுவந்தவன்தானே. அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொல்கின்றனர். இறையனுபவம் என்பது இப்படித்தான். நான்தான் அதை அனுபவிக்க வேண்டும். எனக்காக அல்லது எனக்குப் பதிலாக என் பெற்றோரோ, எனக்கு வழிகாட்டியாய் இருப்பவர்களோ அதை அனுபவிக்க முடியாது.
4. மானிட மகனிடம் நம்பிக்கை கொள்கிறீரா?
பார்வை அற்ற அந்த நபர் இயேசுவை ‘மனிதராகவும்,’ ‘இறைவாக்கினராகவும்,’ ‘ஆண்டவராகவும்’ கண்டுகொள்கின்றார். ‘ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்’ என சரணாகதி ஆகின்றார். கடவுளைப் பற்றிய நம் உரையாடல்கள், விவாதங்கள், மற்றும் தேடல்கள் அனைத்தின் இறுதியிலும் நமக்குத் தேவை இந்த சரணாகதியே.
5. நாங்களுமா பார்வையற்றோர்?
பரிசேயர்களின் இந்தக் கேள்வியிலேயே, ‘ஆம்’ என்ற பதில் மறைந்திருக்கிறது. இன்று நாம் பார்வை பெற்றவர்களாக இருந்தாலும் நாம் கண்டுகொள்ளாத ‘ப்ளைன்ட் ஸ்பாட்’ நம்மில் நிறைய இருக்கலாம். கடவுளைக் கண்டுகொள்வது இருக்கட்டும். நாம் ஒருவர் மற்றவரைக் கண்டுகொள்ள முடிகின்றதா? அப்படி இருக்கும் நேரங்களில் எல்லாம் நாமும் பார்வை அற்றவர்களே.
இறுதியாக,
கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. பூமிக்குக் கீழே குகைகளைத் தோண்டி ஒரு ஊரே குடியிருந்தது. அந்த ஊர் மக்கள் கதிரவனைக் கண்டதே இல்லை. கதிரவன் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும்? என்ற ஆர்வம் அவர்களிடம் பிறக்கிறது. அதைப்பற்றிய நிறைய கதைகளை வாசிக்கின்றனர். ஒருநாள் ஓர் இளைஞன் அந்த ஊர் மக்களை ஒளியை நோக்கி வழிநடத்திச் செல்கின்றார். பூமியின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் அவர்கள் கண்கள் கூசிற்று. ‘இந்த ஒளி வேண்டாம்!’ என அவர்கள் முணுமுணுக்கத் தொடங்கினர். நண்பகல் ஆனவுடன் அவர்களால் ஒளியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தங்களை மேற்புரத்திற்கு அழைத்துவந்த இளைஞனைக் கல்லால் எறிந்து கொன்றுவிட்டு, தாங்கள் தங்கள் குகைகளைத் தேடி புறப்படுகின்றனர்.
“நாங்களுமா பார்வையற்றோர்?”
அழகானதொரு பதிவு. ஈசாயின் புதல்வர்கள் எழுவரில் ஒருவரான 'தாவீதை ' சாமுவேல் அவருக்கிருந்த 'அக ஒளி'யின் துணையோடு 'திருப்பொழிவு' செய்யும் விதத்தை நாம் நேரில் காண்பது போல் தந்தை வார்த்தைகளில் வடித்திருப்பது போற்றுதற்குரியது.இன்றைய நற்செய்தியில் பார்வையற்றவன் பார்வை பெறுதலை விவரிக்குமிடம்...'அவன் எதனால் பார்வையின்றிப் பிறந்தான்?' என்று மக்கள் வைக்கும் காரணங்களுக்கு மத்தியில்," இறைவுளம் நிறைவேற" என இயேசு கூறுமிடம்,நம்மிடம் உள்ள குறைகளை நெருடலாகப்பாராமல் அவற்றின் வழியே இறைவன் செயலாற்றுவார் என்று நம்பிக்காத்திருக்கச் செய்கிறது.அந்த இறுதி வரிகள்...'ஒளி' யையே கண்டிராத குகைவாழ்மக்களை ஒளியைக் காண்பதற்காக பூமிக்கு மேல் அழைத்து வந்த இளைஞனைக் கல்லால் அடித்துக்கொன்ற மக்கள் "நாங்களுமா பார்வையற்றோர்?" என நம்மையும் கேட்கச்செய்வது மட்டுமின்றி "பாவத்திலிருப்பதே பார்வையற்ற நிலை" என்பதையும் புரிய வைக்கின்றனர்.இந்த வாரத்தின் வாசகங்களும்,விளக்கங்களும் நாம் வாழ்ந்து காட்ட வேண்டிய 'வாழ்க்கைப்பாடம்' என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும் புரிய வைத்திருக்கும் தந்தைக்கும்,மற்றும் அனைவருக்கும் 'ஞாயிறு' வாழ்த்துக்கள்!!!
ReplyDelete