Thursday, March 23, 2017

நானல்ல அவர்

“நீ இறையாட்சியினின்று தொலைவில் இல்லை” (மாற்கு 12:28-34)

இயேசு தான் சந்தித்த இரண்டு இளைஞர்களிடம் இறையாட்சி பற்றிப் பேசுகிறார்.

முதல் இளைஞரை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 12:28-34) சந்திக்கின்றோம். இவர் ஒரு திருச்சட்ட அறிஞர். எல்லாம் தெரிந்தவர். நல்லவர் யார், கெட்டவர் யார், நல்லது எது, கெட்டது எது, கடவுள் யார், கடவுள் அன்பு என்ன என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தவர் இவர்.

ஆகையால்தான் முதன்மையான கட்டளை எது? என்று இயேசு சொன்னதை அப்படியே பற்றிக்கொள்கின்றார்.

இவரிடம் இயேசு, ‘நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை’ என்கிறார்.

இன்னொரு இளைஞரை நாம் லூக்கா நற்செய்தியில் (23:32-43) சந்திக்கின்றோம்.

இவருக்கு எதுவுமே தெரியாது. கடவுள் என்ன, யார் என்பதும், நல்லது, கெட்டது பற்றியும் கண்டுகொள்ளாதவர்.

ஆனால், இவர் இயேசுவைப் பார்த்து சொன்னதெல்லாம், ‘நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!’ என்ற ஒற்றை வரிதான்.

இதுதான் முழுமையான நம்பிக்கை. முழுமையான சரணாகதி.

ஆகையால்தான், ‘நீ இன்றே என்னோடு இறையாட்சியில் இருப்பாய்’ என இயேசு அவரை அரவணைத்துக்கொள்கிறார்.

இறையரசு நோக்கிய பயணம் மூன்று நிலைகளில் நடக்கிறது:

அ. ‘எல்லாம் நான். எதுவும் அவரல்ல’
ஆ. ‘நான் பாதி. அவர் பாதி’
இ. ‘எல்லாம் அவர். எதுவும் நானல்ல’

இந்த மூன்றையும் நாம் மகாபாரதத்திலும் பார்க்கின்றோம். பாஞ்சாலியின் சேலை துச்சாதனால் உரியப்படுகிறது. தன்னைக் காப்பாற்ற, ‘கண்ணா!’ என்று கிருஷ்ணபகவானை அழைக்கிறார்.

அ. முதலில் இரண்டு கைகளாலும் தன் சேலையை பற்றிக்கொள்கின்றார்.
ஆ. ஒரு கையைக் கொண்டு சேலையையும் மறு கையால் வானை நோக்கி கண்ணனையும் அழைக்கின்றார்.
இ. சேலையை விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி, ‘கண்ணா’ என்கிறார். சேலை உரிய உரிய வந்துகொண்டே இருக்கிறது.

‘நானல்ல அவர்’ என்ற நிலையே இறையாட்சியின் உன்னத நிலை.

இந்த நிலையை நோக்கி திரும்பி வந்தவர்களின் ஆசியைப் பட்டியல் இடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். ஓசேயா 14:1-9)

1 comment:

  1. " நானல்ல; அவர்"...இந்த நிலையை நோக்கித் திரும்பி வந்தவர்களின் ஆசீர்வாதமாக "அவன் லீலி போல் வளருவான்;லெபனோனின் மரம் போல் வேரூன்றி நிற்பான்;நானே அவனுக்கு செவி சாய்த்து அவன் மேல் அக்கறை கொண்டுள்ளேன்"... .. எனும் வரிகளை ஓசேயாவிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளாகக் காண்கிறோம் நாளைய முதல் வாசகத்தில்.. தன் இழிநிலையை உணர்ந்து அவரிடம் ' சரணாகதி' அடைபவர்களை மட்டுமே இறைவனும் தன் நிலை விட்டுக்குனிந்து நோக்கித் தன்னவராக அள்ளி அணைத்துக் கொள்ளுகிறார். எல்லாம் தெரிந்த 'ஏகாம்பரங்களை' விட ஒன்றும் தெரியாத 'ஓட்டாண்டிகளே' 'அவர்' பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் என்பதற்கு 'நல்ல கள்ளனை' சிறந்த எடுத்துக்காட்டாக முன் வைக்கிறார் தந்தை." இறைவா!" என அலறும்போது பாத்திமா என்ன....பாஞ்சாலி என்ன எல்லோரும் அவரின் பிள்ளைகளே! " பாஞ்சாலி சபதத்தைக் கண் முன் அரங்கேற்றிய தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete