Tuesday, March 21, 2017

பெருமை

மனித உந்தியக்கங்களில் (instinct) ஒன்று 'தன்னை முதன்மைப்படுத்துவது அல்லது முக்கியப்படுத்துவது' ('sense of feeling important').

இயேசுவிடம் வந்த செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவானின் கோரிக்கை என்ன? 'ஒருவர் வலப்புறமும், மற்றவர் இடப்புறமும் அமர வேண்டும்.' அதாவது, மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தாலும் தாங்கள் உட்கார வேண்டும். அல்லது எல்லாரும் உட்கார்ந்திருந்தாலும் தாங்கள் முக்கியமான இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்.

இந்த உந்தியக்கம்தான் நம்மில் 'பெருமை,' 'சிறுமை' என்ற உணர்வை உருவாக்குகிறது.

இப்படிப்பட்ட உணர்வைத்தான் நாளைய முதல்வாசகம் (இச 4:1,5-9) இஸ்ரயேல் மக்களுக்குத் தருகிறது.

தங்கள் சுற்றுவட்ட நாடுகள் மற்றும் மக்களினங்களோடு தங்களையே ஒப்புமை செய்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். அப்படி ஒப்பீடு செய்யும்போது, 'அவர்களிடம் இல்லாத ஒன்று என்னிடம் என்ன இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அந்தக் கேள்விக்கு நிறைய விடைகள் கிடைக்கின்றன.

'இவர்களுக்குத்தான் பாலும் தேனும் பொழியும் கானான் நாடு வாக்களிக்கப்பட்டது.'

'இவர்களைத்தான் கடவுள் பாலைவனத்தில் பசியாற்றினார்.'

'இவர்கள் கடவுள்தான் நெருக்கமான கடவுள். இவரோடு நண்பர்கள்போல உரையாட முடியும்.'

'இந்த இனம் ஞானமும், அறிவாற்றலும் பெற்றிருந்தது.'

'இவர்களின் கடவுள் இவர்களின் குரலுக்குச் செவிகொடுப்பார்.'

இப்படியாக பெரிய லிஸ்டே வருகிறது.

நிற்க.

இந்த 'பெருமை' என்ற அடையாளம் இவர்களுக்கு வெளியே இருந்து வருகிறது.

ஆனால், இந்த இனத்தைச் சாராத நமக்கு எங்கிருந்து வரும்?

அது நம் உள்ளத்தில் கண்டுகொள்ளப்பட வேண்டும்.

ஆக, பெருமை என்பதை நாம் நமக்கு வெளியில் ஒன்றோடு அல்லது ஒருவரோடு கட்டிவைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போது என்ன ஆகும்? அந்த ஒன்று அல்லது ஒருவரிடமிருந்து விலக நேர்ந்தால் சிறுமை உணர்வு பற்றிக்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, முதல் இருக்கையில் அமர்வது எனக்கு பெருமை உணர்வு தருகிறது என வைத்துக்கொள்வோம். நான் என் உணர்வை அந்த இருக்கையில் கட்டி வைத்துவிடுகிறேன். ஒருவேளை எனக்கு அந்த முதல் இருக்கை கிடைக்கவில்லை என்றால் நான் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணரத் தொடங்குகிறேன்.

ஆனால், அதற்கு மாறாக நான் பெருமை உணர்வை என் அகத்துள் கண்டுகொண்டேன் என்றால், முதல் இருக்கை என் பெருமையை கூட்டாது, கடைசி இறுக்கை எனக்கு சிறுமை தராது.

ஆக, நாளைய நற்செய்தி வாசகம் (மத் 5:17-19) சொல்வது போல, விண்ணரசில் சிறியவர் அல்லது பெரியவர் என்பது ஒருவரின் அகம் சார்ந்தது.

3 comments:

  1. " உந்தியக்கம்"... அழகான புதியதொரு வார்த்தை." முதன்மையானோர் கடையராவதும்,கடையரானோர் முதன்மையாளராவதும்" வாழ்க்கையும்,காலமும் நமக்குக் கற்றுத்தரும் பாடம். பிற மக்களுக்கு இல்லாத, தங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு விஷயத்தைத் தேடிப்போய் பல விஷயங்களைக் கண்டுபிடிப்பதாகப் பட்டியலிடுகிறார் தந்தை.ஆனால் இவை அனைத்தும் புறத்தைச் சேர்ந்தவை என்பதால் புறந்தள்ளப்பட வேண்டியவை என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.நாம் தேர்ந்து கொள்ளப்போவது அகம் சம்பந்தப்பட்டதா இல்லை புறம் சம்பந்தப்பட்டதா? விண்ணரசில் நாம் யார்...சிறியவரா இல்லை பெரியவரா? இக்கேள்விகளுக்கு விடை தேடுவோம். 'உந்தியக்கம்' சொல்வது பெருமையோ இல்லை சிறுமையோ.....இஸ்ரேல் மக்களிடம் இருந்ததாகச் சொல்லப்படும் விஷயங்கள் அவை புறத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் கூட நம்முள் பொறாமையை ஏற்படுத்துவதென்னவோ உண்மை.யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  2. Kavitha michael3/22/2017

    பெருமையையும் சிறுமையையும் தன் அகத்தே கொண்டிருந்தோமானால் நம் வாழ்வில் வெறுமை என்பதே இல்லை.wow!congrats bro

    ReplyDelete
  3. Kavitha michael3/22/2017

    பெருமையையும் சிறுமையையும் தன் அகத்தே கொண்டிருந்தோமானால் நம் வாழ்வில் வெறுமை என்பதே இல்லை.wow!congrats bro

    ReplyDelete