Friday, March 24, 2017

உம் சொற்படியே

நாளை 'கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை' (மங்கள வார்த்தை திருநாள்) கொண்டாடுகிறோம்.

இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

அ. கடவுளின் மீட்பிற்கு மனித உதவி தேவை

'மங்கள வார்த்தை திருநாள்' கடவுளின் ஆற்றலுக்கே சவால் விடுகிறது. எப்படி? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், மனிதர்களின் துணையில்லாமல் அவர்களை மீட்டிருக்கலாமே? எதற்காக மனுக்குலத்தின் உதவியை நாட வேண்டும்? கடவுளின் மீட்புத்திட்டம் மனிதரின் உதவியில்லாமல் நிறைவேற முடியாது. கடவுள் தனக்கு உதவி செய்ய வேண்டி தன் தூதரை அனுப்புகின்றார். கடவுள் மரியாளை நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்.

ஆ. கடவுள் சாதாரணவை(வர்)களின் கடவுள்

இன்று நாம் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் உதவியைத்தான் அதிகம் நாடுகிறோம். பொருளாதாரத்தில், பதவியில், அதிகாரத்தில் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் துணையை நாடுவதற்கு எத்தனையோ வகையில் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கிறது. எருசலேம் என்ற நகரத்தையும், நகர்வாழ் நங்கையரையும் நாடிச் செல்லாமல், நாசரேத்தை நாடிவருகிறார்.

இ. மாஸ்டர் பிளான் (Master Plan) அல்ல மாஸ்டர்ஸ் பிளான் (Master's Plan)

நம்ம வாழ்வில் நாம போடும் மாஸ்டர் பிளான் தோல்வியாகத்தான் போகும். படைப்பின் தொடக்கத்தில் மாஸ்டர்ஸ் பிளானை (கடவுளின் பிளானை) கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு மாஸ்டர் பிளான் போடுகின்றனர் ஆதாமும், ஏவாளும். விளைவு பாவம் வந்து சேர்கிறது. ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். செபதேயுவின் மக்கள் இயேசுவிடம் வந்து வலப்புறம், இடப்புறம் இடம் கேட்டதும் மாஸ்டர் பிளான்தான். யூதாசு தலைமைச்சங்கத்திடம் சென்று பேரம் பேசியதும் மாஸ்டர் பிளான்தான். ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிகின்றன. மாஸ்டர்ஸ் பிளான் மட்டும்தான் வெற்றி பெறுகிறது. மேலும், மாஸ்டர்ஸ் பிளானை விடுத்து நாம் நம் மாஸ்டர் பிளானை வைத்துக்கொண்டு நிற்கும்போது அது நிறைவேறாமல் போனால் ஏமாற்றமும், விரக்தியும் நம் கன்னத்தில் அறைகின்றன. மரியாள் தன் பிளானைப் பற்றி கவலைப்படவே இல்லை. 'இதோ நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்று தன் பிளானைக் கிழித்துப் போட்டுவிட்டு, மாஸ்டர்ஸ் பிளானை கையில் எடுத்துக்கொள்கின்றார்.

நிற்க.

கடவுளின் முதல் 'ஆமென்' உலகை படைத்தது.

மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.

காலங்கள் உம்முடையன.

யுகங்களும் உம்முடையன.

உம்சொற்படியே நிகழட்டும் - இன்றும், என்றும்.

இதுவே மனுக்குலத்திற்கு மங்களமான செய்தி.


2 comments:

  1. " மங்கள வார்த்தைத் திருநாள்" இறைவன் மனிதனை நோக்கி நகர்ந்த பயணத்தின் துவக்க நாள்.அன்று மரியாளின் பதில் 'இல்லை' என்றிருந்திருந்தால் இம்மனுக்குலம் என்னவாயிருக்கும்? பதில் தெரிந்து கொள்ள இயலாக் கேள்வி."கடவுள் மரியாளை நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்;கடவுள் சாதாரணமானவர்களின் கடவுள்; மாஸ்டர் ப்ளானைத் தவிர்த்து,மாஸ்டர்ஸ் ப்ளானைத் தழுவும் போதுமட்டுமே நமக்கு வெற்றி கிட்டுகிறது"என்ற விஷயங்களை எல்லாம் தாண்டி, பதிவின் இறுதியில் வரும் அந்த வரிகள்.....
    கடவுளின் முதல் 'ஆமென்' உலகைப்படைத்தது.
    'மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.
    காலங்கள் உம்முடையன.
    யுகங்களும் உம்முடையன.
    உம் சொற்படியே நிகழட்டும்-இன்றும்,என்றும்.
    இதுவே மனுக்குலத்துக்கு மங்களமான செய்தி.
    அடைமழைக்குப் பின்னே தோன்றும் அழகான வானவில்லின் பல நிறக் கீற்றுக்களாகத் தெரிகின்றன. தந்தைக்குத் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous3/25/2017

    Happy Feast of Annunciation of Jesus Birth

    ReplyDelete