Friday, March 31, 2017

அவரவர் வீட்டுக்கு

இன்று மாதத்தின் முதல் நாள். இந்த மாதம் இனிய மாதமாகட்டும்.

'அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்' (காண். 7:40-53)

இயேசுதான் மெசியாவா என்ற கேள்வி யூதர்களிடம் எழுகின்றது. சிலர் ஆம் என்றும், சிலர் இல்லை என்றும் சொல்ல அவர்களிடையே பிரிவினை தோன்றுகிறது.

இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு விடயங்கள் தடைகளாக இருக்கின்றன:

அ.அவர் பிறந்த ஊர் அனைவருக்கும் தெரியும்.
ஆ. அவர் கலிலேயாவைச் சார்ந்தவர்.

ஆக, கடவுள் செயலாற்றினாலும், 'இல்லை. இது இப்படியல்ல. அப்படித்தான்' என்று சொல்லி மனித மனம் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இதே போன்ற ஒரு நிகழ்வு 1 சாமுவேல் 8ல் நடக்கிறது.

'எங்களுக்கு ஓர் அரசன் வேண்டும்' எனக் கேட்கிறது இஸ்ரயேல் கூட்டமைப்பு.

'இல்லை. தர முடியாது. ஆண்டவர்தாம் உங்கள் அரசன்' என வாதிடுகிறார் சாமுவேல்.

இறுதியில், ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குக் களைந்து செல்கின்றனர்.

இதே வார்த்தைகளைத்தான் இன்றைய நற்செய்தியிலும் பார்க்கின்றோம்.

அதாவது, வாழ்வில் சண்டை சச்சரவுகள் வெளியில் நடக்கும்போது நாம் நம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். எதற்காக?

அ. விடை தெரியாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பதால் நேரமும், ஆற்றலும்தான் விரயமாகிறதே ஒழிய, யாருக்கும் எந்த உபயமும் இல்லை.

ஆ. நம் வீட்டுக்குச் செல்லும்போது நம் வீட்டில் உள்ள பிரச்சினையை சரி செய்யத் துவங்கிவிடுகிறோம். வீட்டில் உள்ள பிரச்சினையை சரி செய்யாமல் ஊர் பிரச்சினையை ஏன் சரி செய்ய துடிக்க வேண்டும்?

இ. வீடு நமக்கு ஒரு பாதுகாப்பு வளையம். அங்கே வாக்குவாதங்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் இடமில்லை. ஆக, வீட்டுக்குப் போனால் விவாதங்கள் மறைந்துவிடும்.

இதைத்தான் இன்றைய முதல்வாசகத்தில் பார்க்கிறோம்.

மக்கள் தன்னை விவாதப் பொருள் ஆக்கிவிட்டபோது, யாவே இறைவன் என்னும் தன் வீட்டிடம் அடைக்கலம் புகுகின்றார் எரேமியா.


நேரம்

'அவருடைய நேரம் இன்னும் வரவில்லை'

நேரம் பற்றிய புரிதலை 'க்ரோனோஸ்' மற்றும் 'கைரோஸ்' எனப்படும் இரண்டு கிரேக்க பதங்களில் வழங்குகிறது இரண்டாம் ஏற்பாடு. க்ரோனோஸ் என்பது கடிகார அல்லது நாள்காட்டி நேரம். கைரோஸ் என்பது வாழ்வியல் நேரம் - பிறப்பு, இறப்பு, உடல்நலம், நோய் போன்றவற்றை குறிப்பவை.

இன்றைய நற்செய்தியில் பயன்படுத்தப்படும் வார்த்தை 'கைரோஸ்'

இந்த வார்த்தையைத்தான் சபை உரையாளயர் பயன்படுத்துகின்றார்: 'ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு.'

இயேசுவுக்கு நேரம் நல்லா இருந்ததால் கொலை செய்ய தேடியவர்கள் நடுவிலும் அவரால் நடக்க முடிகிறது.

எல்லாம் நேரப்படியே நடந்தால் நாம் ஏன் உழைக்க வேண்டும்?

அல்லது

என் வாழ்வை நான் செதுக்குகின்றேனா?

இந்த இரண்டுமே என்றும் தொடரும் டென்ஷன்.

Wednesday, March 29, 2017

மறந்ததால்

நாளைய முதல் வாசகத்தின் (காண். விப 32:7-14) முதலிலும், இறுதியிலும் 'மறந்து' என்ற வினைச்சொல் கையாளப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனை மறந்ததால் தங்களுக்கென பொன்னாலான கன்றுக்குட்டி ஒன்றை செய்துகொள்கின்றனர்.

யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களை மறந்ததால் அவர்களை அழிக்க நினைக்கின்றார்.

இவர்களுக்கு இடையே பொது ஆளாக இருப்பவர் மோசே.

இதுதான் மோசேயின் முக்கியத்துவம்.

கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நிற்கும் அவர் மனிதர்களுக்கு ஆதரவாக சான்று பகர்கின்றார். 

Tuesday, March 28, 2017

நானாக எதுவும்

'நானாக எதுவும் செய்ய இயலாது!'

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் பணியில் தன் தந்தை இருக்கும் உடனிருப்பைப் பற்றி பேசுகின்றார்.

இன்று 'எல்லாமே நான்' அல்லது 'எல்லாமே நான் மட்டும்' என்ற நிலை இருக்க வேண்டும் மேலாண்மையில் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இயேசு ஒரு மாற்று மேலாண்மையை முன்வைக்கின்றார்:

'அடுத்தவர் இருப்பதால் நான் இருக்கிறேன்'

அல்லது

'நாம் இருப்பதால் நான் இருக்கிறேன்'

இந்தக் கூட்டு ஆற்றல் அல்லது இயக்கம் நம் குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும், திருச்சபைக்கும் நல்ல பாடம்.

Monday, March 27, 2017

நீர் நலம்பெற விரும்புகிறீரா?

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து,
'நலம்பெற விரும்புகிறீரா?' என்று அவரிடம் கேட்டார்.
'ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை.
நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்' என்று
உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
(யோவான் 5:5-7)

இந்த நற்செய்திப் பகுதியை வாசித்தவுடன் உங்கள் உள்ளத்தில் வரும் முதல் உணர்வு என்ன? நோயுற்றிருந்த அந்த நபர் உங்களில் எந்த உணர்வை உருவாக்குகிறார்? அவர் மேல் உங்களுக்குக் கோபம் வருகிறதா? அல்லது இரக்கம் வருகிறதா?

மீண்டும் ஒருமுறை மேற்காணும் வசனங்களை வாசித்துப் பாருங்களேன்.

என் அருட்பணிவாழ்வின் இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுத்தியானத்தில் தியான உரை வழங்க வந்திருந்த அருட்தந்தை இந்த நற்செய்திப் பகுதியோடுதான் தன் உரையைத் தொடங்கினார்.

அன்று இந்த நற்செய்திப் பகுதியை வாசித்த போது எனக்கு இந்த நோயுற்றிருந்த நபர் மேல் கோபம் தான் வந்தது. ஏன் கோபம்?

ஓராண்டல்ல, ஈராண்டல்ல, முப்பத்தெட்டு ஆண்டுகள் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கின்றார். 'ஏன் குணமாகவில்லை?' என்று கேட்டதற்கு, 'யாரும் இறக்கிவிடவில்லை!' என்று மற்றவர்களைக் குறைசொல்லுகின்றார். ஒருநாளைக்கு ஒரு படி என அவர் அந்தக் குளத்தில் இறங்க முயற்சித்திருந்தாலும், பதினெட்டு நாட்களில் பதினெட்டு படிகள் இறங்கியிருப்பார் (தொல்பொருள் ஆராய்ச்சியின் தகவல்படி அந்தக் குளத்தில் 18 படிகள் உள்ளன. நம்ம சபரிமலை உங்களுக்கு நினைவிற்கு வருகிறதா? அங்கேயும் ஐயப்பன் வீற்றிருக்கும் கருவறைக்குச் செல்ல 18 படிகள்தாம். ஐயப்பனுக்கு '18ஆம் படியான்' என்ற பெயரும் உண்டு. மீனாட்சி திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திலும் 18 படிகள்தாம் என நினைக்கிறேன்(!). ஒன்றும் எட்டும் ஒன்பது, நவகிரகங்களின் இரட்டிப்பு என இதற்குக் காரணங்கள் சொல்லலாம்!). நம்ம கதாநாயகன் அப்படி இறங்குவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த வாழ்க்கை முறை பிடித்தும் கூட இருந்திருக்கலாம். உடல்நலம் சரியில்லை. ஒரு வேலைக்கும் போக வேண்டாம். யாராவது எதாவது கொடுத்தால் சாப்பிடுவோம். சாப்பிட்டு விட்டு தூங்குவோம். உடல்நலம் சரியானால் வேலைக்கெல்லாம் போக வேண்டியிருக்கும். இப்படி ஓய்ந்து போய் இருந்திருக்கலாம். தன் வாழ்க்கையை மற்றவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது ஏற்புடையதா? இல்லை.

ஆனால், இன்று இந்த நற்செய்திப் பகுதியை வாசித்த போது அவர் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. இரக்கம் தான் வருகிறது.

இந்த முப்பத்தெட்டு ஆண்டுகள் குளிரையும், வெயிலையும், மழையையும் பொறுத்துக் கொண்டு அவர் எப்படி அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் கிடந்திருப்பார். எத்தனை பேர் அவரைக் கண்டும் காணாமல் சென்றிருப்பார்கள். இன்றும் ரோமின் தெருக்களிலும், ரயில்வே நிலையங்களிலும் யாராவது படுத்திருப்பது போல தெரிந்தால் ஒதுங்கிச் செல்லவே மனம் சொல்கிறது. எத்தனைபேர் அவரை ஒரு இடையூறு என நினைத்திருப்பார்கள்! அவருடைய பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் அவரை வந்து பார்க்கவே இல்லையா? அவரை யாரும் தேடவேயில்லையா? 'வானத்துப் பறவைகளுக்கு உணவளித்த இறைவன் எனக்கும் உணவளிப்பார்', 'வயல்வெளி மலர்களை உடுத்தும் இறைவன் என்னையும் உடுத்துவார்' என இறைவனின் பராமரிப்பின்மேல் முழுமையாக நம்பிக்கை கொண்டவரும் இவராகத் தான் இருந்திருக்க முடியும். அல்லது ஒருவேளை கடவுளின் தூதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்தக் குளத்தில் இறங்கி நீரைக் கலக்காமல் இருந்திருக்கலாம். ஆக, கடவுளின் வரவிற்கான உச்சகட்ட எதிர்நோக்கில் இவர் இருந்திருக்கலாம்.

இப்படியாக ஒரே நேரத்தில் கோபமும், இரக்கமும் தூண்டுகின்றார் இந்த முகம் தெரியாத மனிதர்.

இவர் இன்று எனக்குச் சொல்வது என்ன?

நானும் முப்பத்து மூன்று ஆண்டுகளாய் (இன்னும் முப்பத்தெட்டு ஆகவில்லை!) அல்லது பதினெட்டு ஆண்டுகளாய் ஏதாவது ஒரு தவறான பழக்கத்தை வைத்துக்கொண்டு அதைத் தவிர்க்க முடியாமல் அல்லது தவிர்க்க விரும்பாமல் இருக்கலாம். இதெல்லாம் என்ன பெருசா! யார்தான் இப்படிச் செய்யல? எல்லா நேரமும் நல்லவரா இருக்க முடியுமா? யார் வந்து இதைப் பார்க்கப் போறா? என்று எனக்கு நானே சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு என் வாழ்வில் எந்தவொரு இயக்கமும் இல்லாமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு, 'குளம் கலங்குமா! கலங்காதா!' என்றுகூட பார்த்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை இந்தப் பழக்கங்களை விட்டுவிட நான் பயப்படலாம்.

இப்படி எந்த நிலையில் இருந்தாலும், ஒருநாள் இயேசு என்னருகில் வருவார்.

'நீர் நலம்பெற விரும்புகிறீரா?' எனக் கேட்பார்.

அப்போது என் பதில் என்னவாக இருக்கும்?

'இப்பவேவா! இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!' என்று சொல்வேனா? அல்லது 'இந்தப் பழக்கம் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' என்று பயப்படுவேனா?

எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் ஒருநாள் விடத்தான் வேண்டும். அதை இன்றே விடலாமே! இந்தப் படிக்கட்டு போதும்! எழுந்து ஊருக்குள் செல்வோம்!


Saturday, March 25, 2017

நாங்களுமா பார்வையற்றோர்?

சில இறைவார்த்தை பகுதிகள் தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை அப்படியே நம் கண்கள் முன்பாக நடத்திக்காட்டும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட இறைவார்த்தைப் பகுதிகளில் இருந்துதான் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை நாம் வாசிக்கின்றோம்.
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 16:1,6-7,10-13) சாமுவேல் இறைவாக்கினர் தாவீது அரசரை அருள்பொழிவு செய்யும் நிகழ்வை நமக்குச் சொல்கிறது. இந்த வாசகத்தை வாசிக்கும் நாம் அப்படியே அந்தக்காட்சியின் ஒரு உறுப்பாக மாறிவிடுகிறோம் என்பதுதான் ஆச்சர்யம். ஒரு பாலஸ்தீனத்துப் பாலைவனம். அதன் நடுவில் ஈசாயின் வீடு. அவருக்கு ஏழு மகன்கள். நெடுந்தூரம் பயணம் செய்து வருகிறார் சாமுவேல். தனக்கு கடவுள் கொடுத்திருக்கும் பணியை நிறைவேற்றும் முகமாக கையில் எண்ணெய் நிறைந்த கொம்பு ஒன்றை வைத்திருக்கிறார். வீட்டிற்குள் நுழைந்தவர் ஈசாயின் மூத்த மகன் மூக்கும், முழியுமாக இருந்ததை பார்த்தவுடன் ஓடிச்சென்று அருள்பொழிவு செய்ய முனைகின்றார். ‘தம்பி, பொறுங்க! இவர் இல்ல அவர்!’ என அவரை தடுக்கின்றார் கடவுள். இப்படியே ஒவ்வொருவராக கடந்து செல்ல, கடைசியில் கடைக்குட்டி தாவீது அழைத்துவரப்படுகின்றார். ‘சிவந்த மேனியும், ஒளிரும் கண்களும் கொண்ட அழகிய தோற்றம்’ என்ற வார்த்தைகளை வாசிக்கும்போதே, நம்மால் செந்நிற மேனி கொண்ட, அங்கங்கே அரும்பி நிற்கும் பூனை முடி கொண்ட, வெளிச்சத்தில் மின்னும் தாவீதை கற்பனை செய்துவிட முடிகிறது.
சாமுவேல் இறைவனின் துணைகொண்டு தகுந்த நபரைக் கண்டுகொள்கின்றார்.
இந்த நிகழ்வில் சாமுவேல் இரண்டு பார்வை நிலைகளைக் கடந்து வருகின்றார். முதலில், தான் பார்ப்பது போல பார்க்கின்றார். இரண்டாவதாக, கடவுள் பார்ப்பது போல பார்க்கின்றார். அல்லது முதலில், மனிதர் பார்ப்பது போல பார்க்கின்றார். இரண்டாவதாக, கடவுள் பார்ப்பது போல பார்க்கின்றார்.
கடவுள் தரும் அக ஒளி அவருக்கு பார்வை மாற்றத்தை தருகின்றது. ஒளி இருந்தால்தான் பார்க்க முடியும் என்பது அறிவியல் உண்மை. அதாவது, ஒளி பொருள்களின் மேல் பட்டு, அந்த ஒளி மீண்டும் நம் கண்களின் ஒளித்திரையை நோக்கி பயணம் செய்தால்தான் அந்தப் பொருள் நம் கண்ணில் படுகிறது.
ஆக, ஒளி, எதிரொளி, பார்க்கிறவரின் ஒளித்திரை இந்த மூன்றும் சரியாக இருந்தால்தான் பார்வை சாத்தியமாகும்.
கடவுள் காட்டிய ஒளி எதிரொளியாக சாமுவேலின் ஒளித்திரையில் விழுந்ததால், சாமுவேல் தாவீதை அரசராக அடையாளம் கண்டுகொள்கின்றார்.
இதே திசை இயக்கம்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். யோவா 9:1-41) காணக்கிடக்கிறது. கதையும், இறையியலும் மிக அழகாக கலந்த கலவை என்றும், இது யோவான் நற்செய்தியாளரின் இலக்கியத் திறத்திற்கான முக்கியமான சான்று என்றும் இந்த இறைவாக்கு பகுதி கருதப்படுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம்: 
அ. பார்வை அற்றவர் பார்வை பெறுதல் (9:1-12)
ஆ. உரையாடல்களும் கேள்விகளும் (9:13-41)
அ. பார்வை அற்றவர் பார்வை பெறுதல் (9:1-12)
‘இயேசு சென்று கொண்டிருக்கும்போது’ என்று நற்செய்தி தொடங்குகிறது. அவர் எங்கே சென்று கொண்டிருந்தார் என்பதும், எப்போது சென்று கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படவில்லை. பார்வையற்ற ஒருவரை வழியில் இயேசு காண்கின்றார். ஆக, பார்வை உள்ள ஒருவர் தான் பார்வை அற்றவரைக் காண முடியும். பார்வையற்ற நபர் இயேசுவைப் பார்த்தார் என்றால் கதை அப்படியே முடிந்துவிடும். அந்நேரம் இயேசுவின் சீடர்களும் உடனிருக்கின்றனர். ‘ரபி, இவர் பார்வையற்றவராய் பிறக்க காரணம் இவர் செய்த பாவமா? அல்லது இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர். பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு வரும் என்பதும், பிறக்குமுன்பே ஒருவர் பாவம் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும் யூதர்களின் கருத்து. ஆகையால்தான் இந்தக் கேள்வி. மேலும், இங்கே பாவம் என்பது அறநெறி பிறழ்வு அல்ல. மாறாக, கடவுளின் வெளிப்பாட்டிற்குத் தகுந்த பதில் அளிக்காத நிலையே பாவம். ஆனால், இயேசு சீடர்களின் கேள்விக்கு வேறு பதிலை அளிக்கின்றார். அவரின் பார்வையற்ற நிலை பாவத்தால் வந்தது அல்ல. மாறாக, கடவுளின் திட்டம் வெளிப்படுவதற்காக வந்தது என்கிறார். “நான் உலகில் இருக்கும்வரை நானே ஒளி!” என்று தன்னை அவர்களுக்கு ஒளியாக வெளிப்படுத்துகிறார் இயேசு.
தன் உமிழ்நீரால் சேறு உண்டாக்கி பார்வை அற்றவரின் கண்களில் பூசி, சிலோவாம் குளத்தில் போய் கழுவுமாறு கட்டளையிட்டு அனுப்பிவிடுகிறார் இயேசு. அந்த நபர் தனியாகச் சென்றாரா? யார் உடன் சென்றார்கள்? தண்ணீரில் கழுவிய பின் அவர் யாரை முதல்முதலாக பார்த்தார்? இந்தக் கேள்விகளுக்கு விடையில்லை. ஆனால், பார்வை பெற்றவுடன் அந்த நபர் திரும்பி வருகிறார். இந்த நிகழ்வில் இயேசுவும், சீடர்களும், பார்வையற்ற நபரும் மட்டுமே இருந்தாலும், மற்ற யூதர்களும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகையால்தான், பார்வை பெற்று வந்த நபரைப் பார்த்து, அவரைப் பற்றி மக்கள் பேச ஆரம்பிக்கின்றார்கள். ‘டேய் இவனை யார்னு தெரியுதா?’ ‘இவன்தான் கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன்’ ‘இவன்தான் அவன்’  என சிலரும், ‘அவனல்ல இவன்’ என சிலரும் பேசுகின்றனர். ஆனால், அவர் ‘நான்தான் அவன்’ என தன்னை புதிய மனிதனாக அவர்கள் முன் நிறுத்துகின்றார்.
‘ஆகா, இவனுக்கு பார்வை கிடைத்துவிட்டது!’ என சமூகம் அவனைக் கொண்டாடவில்லை. உடனடியாக, அது எப்படி என ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறது. ஒருவன் நல்ல நிலைக்கு உயர்ந்தால் நாமும் பல நேரங்களில் அதை பாராட்டுவதில்லைதானே. ‘அவன் இப்படி சம்பாதித்தான். அப்படி சம்பாதித்தான்’ என குறை கண்டுபிடிக்க தொடங்கிவிடுகிறோம். இவர்களின் உள்ளத்து தவறான உணர்வை அறியாமல், அவரும் பச்சை பிள்ளை போல எல்லாவற்றையும் ஒப்புவிக்கத் தொடங்குகின்றார். 
‘இயேசு எனப்படும் மனிதர்’ என இயேசுவை அடையாளம் காட்டுகிறார். இவரின் இந்த வார்த்தை மிக முக்கியம். ஏனெனில், இதுவே ‘இவர் ஓர் இறைவாக்கினர்’ (9:17) ‘இவர் ஓர் ஆண்டவர்’  (9:38) என அடுத்தடுத்த நிலையில் இவரின் நம்பிக்கையாக உயரும்.
இந்தப் பகுதியின் நிறைவில் பார்வை அற்றவர் பார்வை பெற்றுவிட்டார்.
நாடகத்தின் முதல் பகுதி முடிகிறது.
ஆ. உரையாடல்களும் கேள்விகளும் (9:13-41)
நாடகத்தின் இரண்டாம் பகுதியை ஐந்து காட்சிகளாக பிரிக்கலாம்:
காட்சி 1: பார்வை பெற்றவரும் பரிசேயர்களும் (13-17)
காட்சி 2: யூதர்களும் பார்வை பெற்றவரின் பெற்றோர்களும் (18-23)
காட்சி 3: பார்வை பெற்றவரும் பரிசேயர்களும் (24-34)
காட்சி 4: இயேசுவும் பார்வை பெற்றவரும் (35-38)
காட்சி 5: இயேசுவும் பரிசேயர்களும் (39-41)
இயேசு உமிழ்நீரால் சேறு உண்டாக்கி குணம் தந்தது தான் பரிசேயர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இப்படி குணம் தருவது கிரேக்க-உரோமை காலத்தில் நடைமுறையில் இருந்தாலும், இயேசு இதைச் செய்த நாள் ஓய்வுநாள் என்பதால் இது குற்றமாகிறது. மிஷ்னா சபாத் 7.2ன் படி ஓய்வுநாளில் ‘(மாவு) பிசைவது’ என்பது தடைசெய்யப்பட்ட செயல். உமிழ்நீரால் சேறு பிசைந்ததால் இயேசு இந்த தடையை மீறியவர் ஆகின்றார்.
ஆக, இப்படி தடைமீறிய பாவி நல்லது செய்ய முடியுமா?
இதுதான் அடுத்த வாதம்.
‘பாவியாக இருந்தால் எப்படி நலம் தர முடியும்? ஆக, அவர் பாவமில்லாதவர்’ - இது பார்வை பெற்றவரின் வாதம்.
‘இல்லை. அவர் கடவுளிடமிருந்து வந்தவர் அல்ல. அப்படி வந்திருந்தால் அவர் எப்படி தடையை மீறுவார்?’ - இது பரிசேயர்களின் வாதம்.
இந்த விடைதெரியாத கேள்விகளுக்கு நடுவே சிக்கித்தவிக்கின்றனர் வாசகர்கள்.
‘அவரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்க, ‘அவர் ஓர் இறைவாக்கினர்’ என்கிறார் பார்வை பெற்றவர்.
காட்சி அப்படியே பெற்றோர்களின் இல்லத்திற்கு மாறுகின்றது.
பார்வை அற்றவரின் பேச்சை ஏற்றுக்கொள்ளாத பரிசேயர்கள் பஸ் பிடித்து பெற்றோர்களைத் தேடிப் போகிறார்கள். ‘எப்படியும் இயேசுவைக் குற்றவாளி ஆக்க வேண்டும்’ என்ற முனைப்பில்தான் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள். பெற்றோர்கள் பரிசேயர்களுக்குப் பயந்துகொண்டு, ‘அவன் வயதுவந்தவன்தானே. அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லி விலகிக்கொள்கிறார்கள். 
மீண்டும் வாக்குவாதம் தொடர்கிறது. 
பார்வை பெற்றவரும் அவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிக்கிறார். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
இறுதியில், இயேசுவும் பரிசேயர்களும் உரையாடுகின்றனர்.
‘பார்வை அற்றோர் பார்வை பெறவும், பார்வை உடையோர் பார்வையற்றோர் ஆகவும் வந்தேன்’ என்கிறார் இயேசு.
ஆக, இங்கே முதலில் ‘பார்வை’ என்பது நேரிடையாகவும், இரண்டாவதாக ‘உருவகமாகவும்’ கையாளப்படுகிறது. 
‘நாங்களுமா பார்வையற்றோர்?’
இந்தக் கேள்வி பரிசேயர்களின் கேள்வியாக இருந்தாலும், இந்த நிகழ்வை வாசிக்கும் ஒவ்வொருவரும் இயேசுவைப் பார்த்து இதைக் கேட்கவேண்டியதாகின்றது.
இயேசு இந்தக் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாமல், ‘பாவம் செய்வதே பார்வையற்ற நிலை’ என முடிக்கின்றார். 
யோவான் நற்செய்தியின் அழகு என்னவென்றால், ஒவ்வொரு நிகழ்விலும் யோவான் அர்த்தத்தை இரண்டு நிலைகளில் பதிவு செய்வார்: மேலோட்ட நிலை, ஆழ்நிலை. மேலோட்ட நிலையில் இந்த நிகழ்வில் பார்வை பெறுதல் என்பது கண்பார்வை பெறுவதையும், ஆழ்நிலையில் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்பதையும் குறிக்கிறது.
இந்தக் கருத்தை ஒட்டியே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 5:8-14) தூய பவுலடியார் எபேசு நகரத் திருச்சபையை அறிவுறுத்துகின்றார். ‘ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்’ என்று தொடங்கி, ‘தூங்குகிறவனே, விழித்தெழு. இறந்தவனே, உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என கிறிஸ்துவின் ஒளியை ஒவ்வொருவரும் பெற்று, எதிரொளிக்க அழைக்கின்றார்.
இவ்வாறாக,
பார்வை இல்லாத நிலையிலிருந்து பார்வை பெற்ற நிலைக்கு கடந்து செல்கின்றார் அந்த நபர்.
பார்வை இருந்தும் இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் பரிசேயர்கள்.
ஆக, இயேசுவின் ஒளி பார்வையற்ற நபரின் மேல் எதிரொளித்ததால் அவர் இயேசுவை, ‘மனிதராகவும்,’ ‘இறைவாக்கினராகவும்,’ ‘ஆண்டவராகவும்’ கண்டுகொள்கின்றார். பரிசேயர்களிடம் அந்த ஒளி இல்லை. ஆக, அவர்களால் இயேசுவைக் கண்டுகொள்ள முடியவில்லை.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் இவை:
1. எதிர்மறை என்பது பிரச்சினையா அல்லது வாய்ப்பா?
பார்வையற்ற நபரைக் கண்டவுடன், ‘பார்வை அற்ற நிலை’ என்பது ஓர் எதிர்மறை நிகழ்வு. அந்த நிகழ்வை இரண்டு வகையாகப் பார்க்கலாம். சீடர்கள் இதை பிரச்சினையாகப் பார்க்கின்றனர். ஆகையால், ‘இது இவரின் தவறா? அல்லது பெற்றோரின் தவறா?’ எனக் கேட்கின்றனர். ஆனால் இயேசு இதை வாய்ப்பாகப் பார்க்கின்றார். ஆகையால் தான், ‘கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தார்’ என்கிறார் இயேசு. நம் வாழ்வில் நமக்கு வரும் எதிர்மறை நிகழ்வுகளை நாம் அணுகும்விதம் எப்படி இருக்கிறது? பிரச்சினையாகப் பார்க்கும்போது நாம் ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக பார்க்கின்றோம். வாய்ப்பாகப் பார்க்கும்போது நாம் பொறுப்புணர்வுள்ளவர்களாக மாறுகின்றோம்.
2. கூட்டத்தினர், யூதர்கள், பரிசேயர்கள்
இந்த மூன்றுபேரும் பார்வை பெற்ற நபரோடு வாக்குவாதம் செய்கின்றனர். பார்வை இல்லாத நபர் அதே நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர் பார்வை பெற்றது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. நாம் வாழும் உலகம் இப்படிப்பட்டதுதான். நாம் தாழ்வான நிலையில் இருந்தால் அதே நிலையில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என நினைக்கின்றது. ஆக, இந்த உலகத்தில் நாம் துணிந்து வாழ வேண்டும். மேலும், நாம் இப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. தாழ்ந்திருக்கும் ஒருவர் உயர்ந்துவர முயற்சி செய்தால் நாம் இன்னும் உற்சாகப்படுத்தி தூக்கிவிட வேண்டும்.
3. அவன் வயதுவந்தவன்தானே!
பார்வை அற்றவர்-பெற்றவரின் பெற்றோர்கள் சொல்லும் மறுமொழி, ‘அவன் வயதுவந்தவன்தானே. அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொல்கின்றனர். இறையனுபவம் என்பது இப்படித்தான். நான்தான் அதை அனுபவிக்க வேண்டும். எனக்காக அல்லது எனக்குப் பதிலாக என் பெற்றோரோ, எனக்கு வழிகாட்டியாய் இருப்பவர்களோ அதை அனுபவிக்க முடியாது. 
4. மானிட மகனிடம் நம்பிக்கை கொள்கிறீரா?
பார்வை அற்ற அந்த நபர் இயேசுவை ‘மனிதராகவும்,’ ‘இறைவாக்கினராகவும்,’ ‘ஆண்டவராகவும்’ கண்டுகொள்கின்றார். ‘ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்’ என சரணாகதி ஆகின்றார். கடவுளைப் பற்றிய நம் உரையாடல்கள், விவாதங்கள், மற்றும் தேடல்கள் அனைத்தின் இறுதியிலும் நமக்குத் தேவை இந்த சரணாகதியே. 
5. நாங்களுமா பார்வையற்றோர்?
பரிசேயர்களின் இந்தக் கேள்வியிலேயே, ‘ஆம்’ என்ற பதில் மறைந்திருக்கிறது. இன்று நாம் பார்வை பெற்றவர்களாக இருந்தாலும் நாம் கண்டுகொள்ளாத ‘ப்ளைன்ட் ஸ்பாட்’ நம்மில் நிறைய இருக்கலாம். கடவுளைக் கண்டுகொள்வது இருக்கட்டும். நாம் ஒருவர் மற்றவரைக் கண்டுகொள்ள முடிகின்றதா? அப்படி இருக்கும் நேரங்களில் எல்லாம் நாமும் பார்வை அற்றவர்களே.
இறுதியாக,
கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. பூமிக்குக் கீழே குகைகளைத் தோண்டி ஒரு ஊரே குடியிருந்தது. அந்த ஊர் மக்கள் கதிரவனைக் கண்டதே இல்லை. கதிரவன் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும்? என்ற ஆர்வம் அவர்களிடம் பிறக்கிறது. அதைப்பற்றிய நிறைய கதைகளை வாசிக்கின்றனர். ஒருநாள் ஓர் இளைஞன் அந்த ஊர் மக்களை ஒளியை நோக்கி  வழிநடத்திச் செல்கின்றார். பூமியின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் அவர்கள் கண்கள் கூசிற்று. ‘இந்த ஒளி வேண்டாம்!’ என அவர்கள் முணுமுணுக்கத் தொடங்கினர். நண்பகல் ஆனவுடன் அவர்களால் ஒளியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தங்களை மேற்புரத்திற்கு அழைத்துவந்த இளைஞனைக் கல்லால் எறிந்து கொன்றுவிட்டு, தாங்கள் தங்கள் குகைகளைத் தேடி புறப்படுகின்றனர்.
“நாங்களுமா பார்வையற்றோர்?”

Friday, March 24, 2017

உம் சொற்படியே

நாளை 'கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை' (மங்கள வார்த்தை திருநாள்) கொண்டாடுகிறோம்.

இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

அ. கடவுளின் மீட்பிற்கு மனித உதவி தேவை

'மங்கள வார்த்தை திருநாள்' கடவுளின் ஆற்றலுக்கே சவால் விடுகிறது. எப்படி? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், மனிதர்களின் துணையில்லாமல் அவர்களை மீட்டிருக்கலாமே? எதற்காக மனுக்குலத்தின் உதவியை நாட வேண்டும்? கடவுளின் மீட்புத்திட்டம் மனிதரின் உதவியில்லாமல் நிறைவேற முடியாது. கடவுள் தனக்கு உதவி செய்ய வேண்டி தன் தூதரை அனுப்புகின்றார். கடவுள் மரியாளை நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்.

ஆ. கடவுள் சாதாரணவை(வர்)களின் கடவுள்

இன்று நாம் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் உதவியைத்தான் அதிகம் நாடுகிறோம். பொருளாதாரத்தில், பதவியில், அதிகாரத்தில் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் துணையை நாடுவதற்கு எத்தனையோ வகையில் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கிறது. எருசலேம் என்ற நகரத்தையும், நகர்வாழ் நங்கையரையும் நாடிச் செல்லாமல், நாசரேத்தை நாடிவருகிறார்.

இ. மாஸ்டர் பிளான் (Master Plan) அல்ல மாஸ்டர்ஸ் பிளான் (Master's Plan)

நம்ம வாழ்வில் நாம போடும் மாஸ்டர் பிளான் தோல்வியாகத்தான் போகும். படைப்பின் தொடக்கத்தில் மாஸ்டர்ஸ் பிளானை (கடவுளின் பிளானை) கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு மாஸ்டர் பிளான் போடுகின்றனர் ஆதாமும், ஏவாளும். விளைவு பாவம் வந்து சேர்கிறது. ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். செபதேயுவின் மக்கள் இயேசுவிடம் வந்து வலப்புறம், இடப்புறம் இடம் கேட்டதும் மாஸ்டர் பிளான்தான். யூதாசு தலைமைச்சங்கத்திடம் சென்று பேரம் பேசியதும் மாஸ்டர் பிளான்தான். ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிகின்றன. மாஸ்டர்ஸ் பிளான் மட்டும்தான் வெற்றி பெறுகிறது. மேலும், மாஸ்டர்ஸ் பிளானை விடுத்து நாம் நம் மாஸ்டர் பிளானை வைத்துக்கொண்டு நிற்கும்போது அது நிறைவேறாமல் போனால் ஏமாற்றமும், விரக்தியும் நம் கன்னத்தில் அறைகின்றன. மரியாள் தன் பிளானைப் பற்றி கவலைப்படவே இல்லை. 'இதோ நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்று தன் பிளானைக் கிழித்துப் போட்டுவிட்டு, மாஸ்டர்ஸ் பிளானை கையில் எடுத்துக்கொள்கின்றார்.

நிற்க.

கடவுளின் முதல் 'ஆமென்' உலகை படைத்தது.

மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.

காலங்கள் உம்முடையன.

யுகங்களும் உம்முடையன.

உம்சொற்படியே நிகழட்டும் - இன்றும், என்றும்.

இதுவே மனுக்குலத்திற்கு மங்களமான செய்தி.


Thursday, March 23, 2017

நானல்ல அவர்

“நீ இறையாட்சியினின்று தொலைவில் இல்லை” (மாற்கு 12:28-34)

இயேசு தான் சந்தித்த இரண்டு இளைஞர்களிடம் இறையாட்சி பற்றிப் பேசுகிறார்.

முதல் இளைஞரை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 12:28-34) சந்திக்கின்றோம். இவர் ஒரு திருச்சட்ட அறிஞர். எல்லாம் தெரிந்தவர். நல்லவர் யார், கெட்டவர் யார், நல்லது எது, கெட்டது எது, கடவுள் யார், கடவுள் அன்பு என்ன என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தவர் இவர்.

ஆகையால்தான் முதன்மையான கட்டளை எது? என்று இயேசு சொன்னதை அப்படியே பற்றிக்கொள்கின்றார்.

இவரிடம் இயேசு, ‘நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை’ என்கிறார்.

இன்னொரு இளைஞரை நாம் லூக்கா நற்செய்தியில் (23:32-43) சந்திக்கின்றோம்.

இவருக்கு எதுவுமே தெரியாது. கடவுள் என்ன, யார் என்பதும், நல்லது, கெட்டது பற்றியும் கண்டுகொள்ளாதவர்.

ஆனால், இவர் இயேசுவைப் பார்த்து சொன்னதெல்லாம், ‘நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!’ என்ற ஒற்றை வரிதான்.

இதுதான் முழுமையான நம்பிக்கை. முழுமையான சரணாகதி.

ஆகையால்தான், ‘நீ இன்றே என்னோடு இறையாட்சியில் இருப்பாய்’ என இயேசு அவரை அரவணைத்துக்கொள்கிறார்.

இறையரசு நோக்கிய பயணம் மூன்று நிலைகளில் நடக்கிறது:

அ. ‘எல்லாம் நான். எதுவும் அவரல்ல’
ஆ. ‘நான் பாதி. அவர் பாதி’
இ. ‘எல்லாம் அவர். எதுவும் நானல்ல’

இந்த மூன்றையும் நாம் மகாபாரதத்திலும் பார்க்கின்றோம். பாஞ்சாலியின் சேலை துச்சாதனால் உரியப்படுகிறது. தன்னைக் காப்பாற்ற, ‘கண்ணா!’ என்று கிருஷ்ணபகவானை அழைக்கிறார்.

அ. முதலில் இரண்டு கைகளாலும் தன் சேலையை பற்றிக்கொள்கின்றார்.
ஆ. ஒரு கையைக் கொண்டு சேலையையும் மறு கையால் வானை நோக்கி கண்ணனையும் அழைக்கின்றார்.
இ. சேலையை விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி, ‘கண்ணா’ என்கிறார். சேலை உரிய உரிய வந்துகொண்டே இருக்கிறது.

‘நானல்ல அவர்’ என்ற நிலையே இறையாட்சியின் உன்னத நிலை.

இந்த நிலையை நோக்கி திரும்பி வந்தவர்களின் ஆசியைப் பட்டியல் இடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். ஓசேயா 14:1-9)

Wednesday, March 22, 2017

பின்னோக்கி

“முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்” (காண். எரே 7:23-28)

நாளைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக எரேமியா இறைவாக்கினர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது இதுதான்: ‘பின்னோக்கிச் சென்றார்கள்’

திரைப்படங்களில் ‘பின்னோக்கிய ஒளிப்பதிவு’ (ரிவர்ஸ் ஷாட்)இருப்பதை நாம் பார்த்திருப்போம். தன் வீட்டின் தோட்டத்தின் நடுவில் நிற்கும் கதாநாயகியின்மேல் அங்கே மறைந்திருக்கும் கதாநாயகன் பக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றுவான். கதாநாயகி சொத சொத என்று நனைந்து போவாள். அதற்கு அடுத்த ஷாட்டில் அப்படியே அவள்மேல் ஊற்றப்பட்ட தண்ணீர் மீண்டும் பக்கெட்டுக்குள் சென்று சேரும். கதாநாயகி மீண்டும் தண்ணீர் மறைந்து காய்ந்துவிடும்.

ஆக, பின்னோக்கி நடக்கும் நிகழ்வில் நிகழ்வின் நோக்கம் நிறைவேறுவதில்லை. அதாவது, கதாநாயகி நனைவதில்லை.

அடுத்ததாக, பின்னோக்கி செல்லும்போது நாம் நம் இலக்கை அடைய முடிவதில்லை.

மாட்டுத்தாவணியில் இருந்து நான் ஆரப்பாளையம் நோக்கிச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கோரிப்பாளையம் சிக்னலில் இருக்கும் நான் அப்படியே திரும்பி வந்த வழியில் பயணம் செய்தால், நான் மாட்டுத்தாவணியைத்தான் அடைய முடியுமே தவிர, ஆரப்பாளையத்தை அடைய முடியாது.

ஆனாலும், பின்னோக்கி நடப்பது நமக்கு சில நேரங்களில் பிடிக்கிறது.

நாம் வயது வந்து வளர வளர வாழ்வில் நிறைய சவால்களை, பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில், ‘ச்சே, குழந்தையாகவே இருந்திருக்கலாமே!’ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், பின்னோக்கி நடப்பதால் நம் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை.

இல்லையா?

ஓடாத கடிகாரம் கூட இரண்டு முறை சரியான நேரம் காட்டும்.

ஆனால், பின்னோக்கி ஓடும் அல்லது மெதுவாக ஓடும் கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தை காட்டுவதில்லை.

அதுதான் இஸ்ரயேல் மக்களிடமிருந்த பிரச்சினை.

தங்கள் வேர்களை மட்டும் நினைத்துக்கொண்டு அதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்க விரும்பினார்களே தவிர, விழுதுகளை நோக்கி நகர விரும்பவில்லை.

இயேசுவிடம் நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) வரும் சிலர், ‘பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்’ என்கின்றனர். இயேசுவுக்கு முன் இருந்தவர்கள் அப்படித்தான் பேய்களை ஓட்டினர். ஆக, அந்த சிலரும் தங்கள் சிந்தனையில் பின்னோக்கி ஓடுகிறார்கள்.

வாழ்வில் நடந்து முன்னேறுவோம்.


Tuesday, March 21, 2017

பெருமை

மனித உந்தியக்கங்களில் (instinct) ஒன்று 'தன்னை முதன்மைப்படுத்துவது அல்லது முக்கியப்படுத்துவது' ('sense of feeling important').

இயேசுவிடம் வந்த செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவானின் கோரிக்கை என்ன? 'ஒருவர் வலப்புறமும், மற்றவர் இடப்புறமும் அமர வேண்டும்.' அதாவது, மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தாலும் தாங்கள் உட்கார வேண்டும். அல்லது எல்லாரும் உட்கார்ந்திருந்தாலும் தாங்கள் முக்கியமான இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்.

இந்த உந்தியக்கம்தான் நம்மில் 'பெருமை,' 'சிறுமை' என்ற உணர்வை உருவாக்குகிறது.

இப்படிப்பட்ட உணர்வைத்தான் நாளைய முதல்வாசகம் (இச 4:1,5-9) இஸ்ரயேல் மக்களுக்குத் தருகிறது.

தங்கள் சுற்றுவட்ட நாடுகள் மற்றும் மக்களினங்களோடு தங்களையே ஒப்புமை செய்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். அப்படி ஒப்பீடு செய்யும்போது, 'அவர்களிடம் இல்லாத ஒன்று என்னிடம் என்ன இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அந்தக் கேள்விக்கு நிறைய விடைகள் கிடைக்கின்றன.

'இவர்களுக்குத்தான் பாலும் தேனும் பொழியும் கானான் நாடு வாக்களிக்கப்பட்டது.'

'இவர்களைத்தான் கடவுள் பாலைவனத்தில் பசியாற்றினார்.'

'இவர்கள் கடவுள்தான் நெருக்கமான கடவுள். இவரோடு நண்பர்கள்போல உரையாட முடியும்.'

'இந்த இனம் ஞானமும், அறிவாற்றலும் பெற்றிருந்தது.'

'இவர்களின் கடவுள் இவர்களின் குரலுக்குச் செவிகொடுப்பார்.'

இப்படியாக பெரிய லிஸ்டே வருகிறது.

நிற்க.

இந்த 'பெருமை' என்ற அடையாளம் இவர்களுக்கு வெளியே இருந்து வருகிறது.

ஆனால், இந்த இனத்தைச் சாராத நமக்கு எங்கிருந்து வரும்?

அது நம் உள்ளத்தில் கண்டுகொள்ளப்பட வேண்டும்.

ஆக, பெருமை என்பதை நாம் நமக்கு வெளியில் ஒன்றோடு அல்லது ஒருவரோடு கட்டிவைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போது என்ன ஆகும்? அந்த ஒன்று அல்லது ஒருவரிடமிருந்து விலக நேர்ந்தால் சிறுமை உணர்வு பற்றிக்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, முதல் இருக்கையில் அமர்வது எனக்கு பெருமை உணர்வு தருகிறது என வைத்துக்கொள்வோம். நான் என் உணர்வை அந்த இருக்கையில் கட்டி வைத்துவிடுகிறேன். ஒருவேளை எனக்கு அந்த முதல் இருக்கை கிடைக்கவில்லை என்றால் நான் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணரத் தொடங்குகிறேன்.

ஆனால், அதற்கு மாறாக நான் பெருமை உணர்வை என் அகத்துள் கண்டுகொண்டேன் என்றால், முதல் இருக்கை என் பெருமையை கூட்டாது, கடைசி இறுக்கை எனக்கு சிறுமை தராது.

ஆக, நாளைய நற்செய்தி வாசகம் (மத் 5:17-19) சொல்வது போல, விண்ணரசில் சிறியவர் அல்லது பெரியவர் என்பது ஒருவரின் அகம் சார்ந்தது.

Sunday, March 19, 2017

யோசேப்பு

நேற்று மாலை வாக்கிங் சென்ற போது சாந்தி அக்கா வந்தார். பாப்பிறை குருமடத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது அவர் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நாள்களில் தான் அவருடைய கணவரும் இறந்துபோனார்.

பார்த்து ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஆனதால், 'எப்படி இருக்குறீங்க அக்கா?' என்று கேட்டேன்.

'நல்லா இருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே இருந்தவர் டக்கென கண் கலங்கிவிட்டார்.

'என்னை பாதியில் விட்டு விட்டு அவர் போய்விட்டார்'

'எனக்கு இருக்கும் ஒரு மகன். அவன் ஒரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டான். என் பேச்சை கேட்கவில்லை. ஒரு குழந்தை. இப்போது அந்தப் பெண் இவனிடமிருந்து விவாகரத்து கேட்கின்றாள்'

'இரண்டு பேரும் சண்டையில் வீட்டில் இருந்த பாதிப்பொருள்களை உடைத்துவிட்டனர்'

'வாய்த்ததும் (கணவன்!) சரியில்லை. வந்ததும் (மகன்) சரியில்லை' என்று சொல்லிக்கொண்டே இருந்தவரின் ஆட்டோ வர, அவர் ஒரு புன்முறுவலோடு அதில் ஏறிச்சென்றுவிட்டார்.

நிற்க.

நாளை தூய யோசேப்பு, மரியாளின் கணவர் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

எனக்கு மிக மிக மிக பிடித்த புனிதர் இவர்.

இவரைப் பார்த்த நாள்முதல்தான் என் வாழ்வில் மாற்றம் வந்தது. எப்படி?

ஒன்பதாம் வகுப்பில் நான் குருமாணவனாக அடி எடுத்து வைத்தபோது, ஞானஒளிவுபுரம் குருமடம் இருந்தது இவரின் ஆலயத்தின் வளாகத்தில்தான். நான் முதல் முதலாக வாசகம் வாசித்தது, முதன் முதலாக முன்னுரை கொடுத்தது, நன்மை கொடுத்தது என தொடர்ந்து, நான் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றது என எல்லாம் இவரைச் சுற்றியே நடந்தது. நான் இதே பணித்தளத்தில் உதவிப்பங்குத்தந்தையாக இருந்தது அதன் முத்தாய்ப்பு.

சாந்தி அக்காவுக்குள் ஒரு மனக்குமுறல் இருந்ததுபோல, யோசேப்புக்கும் இருந்தது.

தனக்கு நிச்சயம் ஆகியிருக்கிற இளவல் மரியா கருவுற்றிருப்பது அவருக்கு நெருடலாக இருக்கும்.

ரொம்ப பிராக்டிக்கலா பாருங்களேன்!

எனக்கு பிடிச்ச தோழி ஒருத்திக்கு ஃபோன் பண்ண, அவளின் ஃபோன் என்கேஜ்ட் ஆக இருந்தாலே, ஒரு சின்ன இன்செக்யூரிட்டி நம்மை கவ்விக்கொள்கிறது.

'யார்ட்ட பேசிகிட்டு இருப்பா?'

இந்தக் கேள்வியின் பின்னால் இருப்பது சந்தேகம் அல்ல. மாறாக, பொஸஸிவ்னஸ். என்னவள் என்னிடம்தான் - என்னிடம் மட்டும்தான் - பேச வேண்டும் என்ற உணர்வு. இந்த பொஸஸிவ்னஸ்தான் நட்பை இணைக்கிறது. இதன் மறுமுகம் என்னவென்றால், சில நேரங்களில் இதுவே சில நேரங்களில் நட்பை பிரித்துவிடுகிறது.

மரியாளின் மேல் உள்ள பொஸஸிவ்னஸ்தான், 'இவர் எப்படி கருத்தாங்கியிருக்கிறார்?' என்ற கேள்வியை யோசேப்பு எழுப்ப காரணமாகிறது.

யோசேப்பிடம் நான் இரசிக்கும் குணத்தை இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிடலாம்:

அ. அவரின் தன்மானம் (dignity)

தன் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், மரியாளின் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவரை மறைவாக விலக்கிவிட திட்டமிடுகின்றார். தன்மானம் உள்ள ஒருவர்தான் மற்றவரின் தன்மானத்தையும் மதிப்பார்.

தன் மகன் இயேசுவுக்கு இவர் இந்த குணத்தைத்தான் சொல்லிக்கொடுத்திருப்பார்.

இயேசு எந்த ஒரு நேரத்திலும் தன் தன்மானத்தை இழந்துவிடவே இல்லை.

'வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் காட்டுங்கள்' என்று சொன்னவர், தான் தலைமைக்குருவின் அரண்மனையில் அறையப்பட்டபோது, 'ஏன் என்னை அறைந்தாய்?' என்று கேட்கின்றார்.

ஆ. அவரின் பயமின்மை (fearlessness)

மரியாவை ஏற்றுக்கொண்டபின் தனக்கு என்ன நேர்ந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளலாம் என்ற பயமின்மை. திருமணத்திற்கு முன்னேயே குழந்தை, குழந்தைக்கு நெருக்கடி, அங்கே ஓட்டம், இங்கே ஓட்டம், குழந்தை காணாமல்போகிறது, வேகமாக வளர்கிறது, ஊரெல்லாம் போதிக்கிறது - யோசேப்பு நினைத்த மாதிரி அவருக்கு வாழ்க்கை அமையவே இல்லை. இருந்தாலும் பயமில்லாமல் இருக்கிறார். 'இதை செய்யணும், அதை செய்யணும்' என்ற பரபரப்பு இல்லை. 'இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை' என்ற பதற்றம் இல்லை.

முழுமையான மனச்சுதந்திரம் உள்ள ஒருவர்தான் பயமில்லாமல் இருக்க முடியும்.

'தன்மானம்,' 'பயமின்மை' - இவற்றைத்தான் நம் அப்பாக்களும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

யோசேப்பு - நல்ல கணவர், நல்ல அப்பா.


Saturday, March 18, 2017

காலிக்குடம்

எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை இறைவன் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வந்தபோது அவர்கள் கண்ணெதிரே செங்கடல். என்னதான் கடல் தண்ணீரால் நிறைந்திருந்தாலும் அதில் ஒரு வாய் குடிக்க முடியுமா? கடலைப் பிளந்து கட்டாந்தரையில் அவர்களை நடக்கச் செய்கின்றார் கடவுள். கடலையே வற்றச் செய்த அவர் தங்கள் தண்ணீர்க்குடங்களையும் வற்றச் செய்துவிட்டார் என முணுமுணுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். 'எவ்ளோ பெரிய விடயம் செய்து கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்? இனி அடிமைத்தனம் இல்லை. வன்முறை இல்லை' என கொண்டாடுவதற்குப் பதிலாக, 'தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை' என முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனர் மக்கள்.

ஒரு முறை இப்படித்தான். ஆற்றங்கரையில் விளையாடிக்கொண்டிருந்த தன் குழந்தையைக் கவனிக்காமல் தாய் நிற்க, குழந்தை ஆற்றுக்குள் இறங்கி விளையாட ஆரம்பிக்கிறது. ஆற்றின் ஓட்டம் வேகமாக இருக்க, குழந்தையை இழுத்துச் செல்கிறது ஆறு. 'யாராவது காப்பாற்றுங்களேன்?' என அலறிக்கொண்டே கரையில் ஓடிவருகிறாள் தாய். இவளின் அழுகுரல் கேட்ட இளைஞன் ஒருவன் ஆற்றுக்குள் குதித்து குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் கொடுக்கின்றாள். கொஞ்ச நேரத்தில், 'ஐயோ! காணோமே! காணோமே!' என மீண்டும் அழுகின்றாள் தாய். 'என்னமா, அதான் குழந்தை கிடைச்சுடுச்சுல. அப்புறம் என்ன?' எனக் கேட்கின்றான் இளைஞன். 'குழந்தையின் ஒரு கால் செருப்பைக் காணோமே!' என தொடர்ந்து அழுகிறாள் அவள்.

ஆக, ஒரு தேவை நிறைவேறியவுடன் அடுத்த தேவை வந்து நம் உள்ளத்தை நிறைத்துக்கொள்கிறது. இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து நிறைகுடமாய் இருந்த இஸ்ரயேல் மக்கள் காலிக்குடமாக நிற்கின்றார்கள் இன்றைய முதல் வாசகத்தில்.

பாவம் மேலோங்கி நின்று மனுக்குலத்தின் குடங்களைக் காலி செய்தபோது, அருள்நிலையால் அதை நிரப்பி நம்பிக்கையால் வழிந்தோடச் செய்கின்றார் என 'காலிக்குடமாக' இருந்த நம்பிக்கையாளர்களின் நிலையை இன்றைய இரண்டாம் வாசகத்தில் விளக்கிச் சொல்கிறார் பவுல்.

காலிக்குடம் கொண்டு வந்து தண்ணீர் மொள்ள வந்த சமாரியப்பெண் குடத்தை கிணற்றடியில் போட்டுவிட்டு தன் நகர் திரும்பி தன் நகரத்தார் அனைவரையும் இயேசுவிடம் அழைத்துச் செல்வதை இன்றைய நற்செய்தி நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

காலிக்குடம் வருகிறது. காலிக்குடம் தனியாக விடப்படுகிறது.

ஆக, தண்ணீர் எடுக்க வந்த பெண் தண்ணீர் எடுக்காமலேயே வீடு திரும்புகிறார்.

இந்த இளவல் ஒரு காலிக்குடம்.

முதலில் இவள் ஒரு பெண். இயேசுவின் சமகாலத்தில் இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட பாலினம் பெண் இனம்.

இவள் ஒரு சமாரியப்பெண். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732ல் அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள் அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத ரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும் சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர். இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால் இயேசு அதையும் மீறி சமாரியப்பெண்ணிடம் 'தண்ணீர்' கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு.
இவள் 'ஒரு மாதிரியான பெண்.' பெண்கள் காலை அல்லது மாலையில்தான் நீர் எடுக்க கிணற்றுக்கு வருவர். இந்தப் பெண் நண்பகலில் வருகின்றார். 'யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது' என்பதற்காகவா? அல்லது ஊர் வாயில் விழக்கூடாது என்பதற்காகவா? அல்லது மற்ற பெண்களும் அவரை ஒதுக்கிவிட்டார்களா? இந்தப் பெண்ணின் அறநெறி பற்றி நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. 'இவர் ஐந்து கணவரைக் கொண்டிருந்தார்' என்பதிலிருந்து இவர் அறநெறி பிறழ்வில் இருந்தவர் என நாம் முடிவுசெய்யக்கூடாது. ஏனெனில் 'லெவிரேட் திருமணம்' என்னும் 'கொழுந்தன் திருமணமுறையில்' இவர் திருமணம் செய்திருக்கலாம். இருந்தாலும், இவரின் நண்பகல் வருகை நமக்கு நெருடலாக இருக்கிறது.

ஆக, பிறப்பாலும், பின்புலத்தாலும், பிறழ்வாலும் காலியான குடமாக தண்ணீர் எடுக்க வருகின்றார் இவர்.

இயேசுவுக்கு இந்தப் பெண்ணின் பிறப்பும், பின்புலமும், பிறழ்வும் கண்களுக்குத் தெரியவில்லை. அவரின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த காலிக்குடம் மட்டும்தான்.

'குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்!' என்கிறார் இயேசு.

ஏற்கனவே கிணற்றருகில் இருப்பவர் இயேசு. ஆனால் இந்தப் பெண்ணோ இப்போதுதான் வருகின்றார். முறைப்படி பெண்தான் இயேசுவிடம் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும். அல்லது இந்தப் பெண் தண்ணீர் இறைப்பதை இயேசு பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, 'கொஞ்சம் வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டிருக்கலாம்.

'தண்ணீர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து உரையாடல் தொடங்கி தொடர்கிறது.

'நீர் எப்படி தண்ணீர் கேட்கலாம்?'

'தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை'

'நான் தரும் தண்ணீர்'

'தாகம் எடுக்காது'

'அந்த தண்ணீரை எனக்குத் தாரும்'

என தண்ணீரே உரையாடலின் முக்கிய வார்த்தையாக இருக்கிறது.

வெகு சில நிமிடங்களே தாகம் தீர்க்கும் மிகச் சாதாரண தண்ணீரை எடுக்கச் சென்ற இளவலிடம் இயேசு இறையியல் பேச ஆரம்பிக்கின்றார். இதுதான் கடவுளின் பண்பு. நாம் ஒரு தேவை என அவரிடம் சென்றால், அந்த தேவையைக் கடந்து அடுத்தடுத்த நிலைக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கின்றார். 

'உனக்கு ஐந்து கணவர்கள் உண்டு' என இயேசு சொல்வதை 'உனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டு' எனவும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில் இயேசுவின் காலத்துச் சமாரியர்கள் ஐந்து கடவுளர்களை வழிபட்டனர் (காண். 2 அரசர்கள் 17:24). அத்தோடு விடவில்லை இயேசு. 'இந்த மலையிலும் அல்ல. அந்த மலையிலும் அல்ல. கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்பிற்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்' எனச் சொல்கிறார் இயேசு. 

'நீர் இறைவாக்கினர் என நான் கண்டுகொண்டேன்' என அறிக்கையிட்ட சமாரியப்பெண்ணிடம், 'நானே அவர் - நானே கிறிஸ்து' என தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு.

நிக்கதேம் என்ற யூத ஆணுக்கு இரவில் கிடைக்காத இந்த வெளிப்பாடு, பெயரில்லாத இந்த சமாரியப் பெண்ணுக்கு நண்பகலில் கிடைக்கிறது. இதுவும் கடவுளின் செயல்பாடே.

இறைவனின் அருள்நிலையைத் தாங்கமுடியாத அந்த கண்ணீர் குடம் தான் கொண்டுவந்த தண்ணீர் குடத்தை அப்படியே போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறது. தாங்க முடியாத மகிழ்ச்சியில் நாம் பிறரை நோக்கி ஓடுகிறோம். கபிரியேல் தூதரிடம் மங்கள வார்த்தை கேட்ட மரியாள் யூதேயா மலைநாடு நோக்கி ஓடுகிறார். உயிர்த்த இயேசுவை தோட்டத்தில் பார்த்த மகதலா மரியா சீடர்களை நோக்கி ஓடுகிறார். இந்த இளவல் யாரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள நினைத்தாளோ அவர்களை நோக்கி ஓடுகிறாள். அதாவது, 'என்னை ஏற்றுக்கொள்ள ஒருவர் இருக்கிறார்' என்ற உறுதி வந்தவுடன், 'என்னை ஏற்றுக்கொள்ளாமல் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலையில்லை' என அவர்களை நோக்கி ஓடுகின்றாள் இளவல்.

இதற்கிடையில் உணவு வாங்க ஊருக்குள் சென்ற சீடர்கள் திரும்பி வருகின்றார்கள். தான் இதுவரை பேசிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாத ஒரு டாபிக்கை எடுத்துப் பேசிகின்றார் இயேசு. 'அறுவடை இருக்கு, அரிவாள் இருக்கு, கதிர்கள் முற்றி இருக்கு, வேலைக்காரங்க சம்பளம் வாங்குறாங்க' என்ற இயேசுவின் பேச்சு நகைச்சுவையைத் தருகின்றது. அதாவது, ஃபோனில் நாம் மிக ரம்மியமாக நம் இளவலோடு உரையாடிக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் குறுக்கே யாராவது வந்தால் அவரிடம் சம்பந்தமில்லாமல் நாம் பேசும் உரையாடல்போல இருக்கிறது இயேசுவின் உரையாடல்.

ஊருக்குள் சென்ற இளவல், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?' என மக்களுக்கு அறிவிக்கின்றார். 'வந்து பாருங்கள்' என்ற வார்த்தையை இயேசு தன் முதற்சீடர்களைப் பார்த்துச் சொல்கிறார். மேலும், பிலிப்பு நத்தனியேலிடம் சொல்லும் வார்த்தையும் இதுவே. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 'இவர்தான் மெசியா' என உறுதியாக அறிவிக்காமல், 'இவராக இருப்பாரோ!' என தயக்கம் காட்டுகிறார் இளவல். இறையனுபவத்தில் தயக்கம் மிக அவசியம். சில நேரங்களில், 'இதுதான் இறைவன். இதுதான் இறையனுபவம்' என கடவுளுக்கு செக்ரட்டரி மாதிரி அவரை முற்றிலும் அறிந்தவர்போல நாம் பேசுகிறோம். பல மதங்கள் தொட்டில் கட்டி ஆடும் நம் இந்திய மரபில் இந்த தயக்கம் இன்னும் அதிகம் அவசியமாகிறது. இல்லை என்றால், 'என் கடவுள்தான் பெரியவர்' என நாம் அடுத்தவரை தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுவோம்.

இளவலின் பேச்சைக் கேட்டு சமாரிய நகரத்தார் அனைவரும் இயேசுவிடம் வருகின்றனர். அந்த மக்களின் தாராள உள்ளத்தையும் நாம் பார்க்க வேண்டும். 'என்னிடம் நிறைய தங்கம் இருக்கிறது என நீ உன் சொந்தக்காரனிடம் சொல். அவன் உன்னை நம்ப மாட்டான்' என்கிறார் பவுலோ கோயலோ. அதாவது, 'இவனிடம் என்ன இருக்கிறது? இவனைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே' என சொந்தக்காரர்கள் எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால், இந்த மக்கள் அப்படி அல்ல. 'யார் சொன்னா?' என்பது முக்கியமல்ல. 'என்ன சொன்னாள்?' என்பதுதான் முக்கியம் என இயேசுவை நோக்கி புறப்படுகின்றனர். தங்கள் ஊரில் தங்குமாறு இயேசுவிடம் கேட்கின்றனர். தாங்கள் இறையனுபவம் பெற்றவர்களாக, 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்' என அறிந்துகொண்டோம் என நம்பிக்கை அறிக்கை செய்கின்றனர்.

நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். குருக்களின் மறையுரை, வழிபாடு, ஞாயிறு மறைப்போதனை, வகுப்புகள் என நிறைய வழியில் நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், அந்த அறிவு முழுமையானது அல்ல. அனுபவம் வழியாக இயேசுவை அறிய புறப்பட வேண்டும்.

'இறைவாக்கினர்,' 'கிறிஸ்து,' 'மீட்பர்' என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலத்தில் மக்களின் காலிக்குடம் தாகம் என இருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு தாகம் இருக்கிறது அவர்களிடம். 'ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?' என்ற கேள்விதான் அது.

ஒவ்வொரு ஆன்மாவும் இதே தேடலோடு தான் இருக்கின்றது. ஆகையால்தான், 'உமக்காகவே படைக்கப்பட்ட எங்கள் ஆன்மாக்கள் உம்மை நாடித் தேடி உம்மில் ஒன்றாகும்வரை அமைதி காண்பதில்லை' என கசிந்துருகுகிறார் தூய அகஸ்தினார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்;க்கைப் பாடம் என்ன?

1. நான் ஒரு காலிக்குடம்

என் கிணறு வற்றும் நேரத்திலும், 'ஆண்டவர் என்னோடு இருக்கிறாரா?' என்ற கேள்வி எழும் நேரத்திலும், என் வாழ்வின் பொருள் என்ன என நான் கேட்கும் நேரத்திலும் நான் செய்ய வேண்டியது என்ன? என் வீட்டில் ஓய்ந்திருக்காமல், என் காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு கிணறு நோக்கி நடைபோட வேண்டும். அது நண்பகலாக இருந்தாலும். ஏனெனில் என் தாகம் தீர்ப்பவர், என் காலிக்குடத்தை நிரப்பவல்லவர் எனக்காக அங்கே காத்துக்கொண்டு இருப்பார். இஸ்ரயேல் மக்களின் காலிக்குடங்களை நிரப்ப ஒரேபு மலையில் காத்துக்கொண்டிருக்கிறார் யாவே இறைவன். சமாரியப் பெண்ணின் காலிக்குடத்தை நிரப்ப கிணற்றடியில் காத்துக்கொண்டிருக்கிறார் இயேசு. என் இறைவனும் எனக்காக தனிமையில் காத்துக்கொண்டிருக்கும் இறைவன். அவரிடம் நான் எப்படி, எந்த நிலையில், எந்த நேரத்தில் சென்றாலும், 'குடத்தை அப்படி வைத்துவிட்டு இங்கு வந்து அமர்' என என்னை தன் அருகில் அமர வைத்து, என்னை உயர்ந்த தேவைகளை நோக்கி அழைத்துச் செல்ல வல்லவர் அவர்.

ஆனால், நான் சில நேரங்களில் என் காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு கிணற்றை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, கானல் நீரை நோக்கியும் செல்ல வாய்ப்பிருக்கிறது. கானல் நீர் எனக்கு அருகில் இருக்கிறது. என் கண்களுக்கு ஈர்ப்பாக தரையின் மேலேயே இருக்கிறது. கிணறு தூரமாக இருக்கிறது. ஆழமாக இருக்கிறது. என்னதான் அருகிலும், கண்களுக்கு ஈர்ப்பாகவும் இருந்தாலும் கானல் நீர் ஒரு மாயை மட்டுமே. அந்த நீர் என் தாகத்தை ஒருபோதும் தணிக்க முடியாது. ஆக, நான் கிணற்றை நோக்கியே செல்கிறேன் என்பதை அடிக்கடி உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2. என் அருகிருப்பவர் ஒரு காலிக்குடம்

என் வாழ்வில் விரக்தி, துயரம், வெறுமை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை எனக்கு அருகிருப்பவரின் விரக்தியும், துயரமும், வெறுமையுமே. நாம் தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் தன் உள்ளே ஏதாவது ஒரு போராட்டத்தில் இருப்பார். ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு குடம் காலியா இருக்கும். சில நேரங்களில் அடுத்தவரின் குடத்தை நிரப்புவதற்குப் பதிலாக நாம் அந்தக் குடத்தை இன்னும் சுரண்டு புண்ணாக்கிவ அல்லது வற்றச்செய்துவிடுகிறோம். 

அடுத்தவரின் காலிக்குடத்தை நிரப்புக்கூடியவராக நான் இருக்க முடியும்? எப்படி? இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வது போல என் அருள்நிலையில் அடுத்தவருக்கு பங்கு கொடுப்பதன்வழியாக, என் அருளை அடுத்தவருக்கு என் வாழ்வின் வழியாக பகிர்ந்து கொடுப்பதன்வழியாக.

3. என் சமூகம் ஒரு காலிக்குடம்

குடங்கள் காலியானால் மனிதர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்க, அரசுக்கு எதிராக முணுமுணுக்காமல் இருப்பார்களா? இன்று தண்ணீர் தான் அரசியல். காவேரி, முல்லைப்பெரியாறு, நதிநீர் இணைப்பு, தாமிரபரணியில் பெப்சிக்கு தண்ணீர், மீத்தேன் திட்டத்தால் தண்ணீர் வறட்சி, தண்ணீர் வறட்சியால் விவசாயிகள் (தற்)கொலை, மீன்பிடிக்கும் தண்ணீரில் மாற்றானின் அத்துமீறல் என நம் குடங்கள் காலியாகிக்கொண்டிருக்கின்றன. 'என் தங்கம், என் உரிமை' என்று போராடும் நம்மால், 'என் தண்ணீர், என் உரிமை' என போராட முடியவில்லை. நான் சிறுபையனாக இருக்கும்போது நிறைய பெட்டிக்கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடைக்கு வெளியிலும் ஒரு குடத்தில் தண்ணீர் இருக்கும். யாரும் வந்து குடிக்கலாம். கொஞ்ச ஆண்டுகள் கழித்து குடங்கள் கடைக்குள் சென்றன. இன்று அதே குடங்கள் சின்ன சின்ன வாட்டர் பாக்கெட்டுகளாய், பிளாஸ்டிக் பாட்டில்களாய் கடையில் தொங்குகின்றன. 

நம்மை ஆள்பவர்களுக்கு இதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. தங்கள் போலி பிரச்சாரத்தால் மக்களை தன்வயப்படுத்தி தங்கள் ஓட்டு வங்கியை பலப்படுத்தவும், தங்கள் குற்றவாளி தலைவரின் சமாதியில் தியானம் செய்து, ஓங்கி அடித்து ('வெறுங்கழுதைக்குத்தான் வீராப்பு அதிகம்' என ஊரில் சொல்வார்கள்') சத்தியம் செய்வதிலும் குறியாய் இருக்கிறார்கள் அவர்கள்.

வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. 

தாகம் தீர்க்கும் தண்ணீராவது இன்று கிடைக்கட்டும். 

தண்ணீர் எடுக்கச் சென்றவள் வாழ்வின் ஊற்றைக் கண்டுகொள்கிறாள். நம் குடங்கள் காலியாகும்போது நம் பயணம் அவரை நோக்கியதாக இருக்கட்டும். அவரின் ஊற்றில் பருகும் நாம் மற்றவர்களுக்கும் நம் குடங்களைச் சாய்த்துக்கொடுப்போம்.

காலிக்குடங்கள் என்றும் அவர் காலடியில்!

Friday, March 17, 2017

காணாமற்போவதன் சுகம்!

20 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் மாலை செய்திகள் பார்க்க யார் வீட்டுக்காவது ஓடிப் போய் உட்கார்ந்தால், அல்லது பஞ்சாயத்து போர்டு டிவி முன் இடம் போட்டு பார்த்தால், முதலில் 'காணாமற்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' என்று வரிசையாக அறிவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அத்தகைய விளம்பரங்கள் டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை. வரிசையாக அறிவிக்கப்படும் ஒவ்வொரு பெயரையும் பார்க்கும்போது, நானும் காணாமல்போனால் என் பெயர் டிவியில் வருமே என நான் நினைத்ததுண்டு.

இன்று காணாமல்போன மனிதர்கள், நாய்க்குட்டிகள் என நிறைய விளம்பரங்கள் பொதுவிடங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும் ஒட்டப்படுகின்றன. சில இடங்களில் பெரிய வால்போஸ்டர்களும் இருக்கின்றன. இந்த நோட்டீஸ்கள் தேடுபவரின் வசதிக்கும், காணாமல்போனவரின் வசதிக்கும் ஏற்றாற்போல இருக்கும். சில ஃபோட்டோக்களோடு இருக்கும். சில அலங்கோலமான கையெழுத்துக்களில் இருக்கும்.

வீட்டைவிட்டு காணாமல்போனவர்கள், போர் மற்றும் இயற்கை சீரழிவுகளில் இடம்பெயர்ந்து காணாமல்போனவர்கள், திருவிழாக்களில் காணாமல்போனவர்கள், பகை மற்றும் வன்முறையால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எண்ணற்ற காணாமற்போனவர்களைப் பற்றிக் கேள்விப்படுகின்றோம்.

இறந்தவர்களும் காணாமல்தான் போகிறார்கள். அவர்களை நம் கண்களால் காண முடிவதில்லை. இருந்தாலும் அவர்களை இனி நாம் காணவே முடியாது என்பதால் அவர்களை நாம் தேடுவதில்லை. ஆக, ஒருவரின் இறப்பு அவரை நாம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வைக்கிறது. ஆக, ஒருவர் இருந்தாலும் நாம் தேடுவதில்லை. அவர் இறந்தாலும் நாம் தேடுவதில்லை.

நாம் தேடுபவர்கள் யார் என்றால் இதற்கு இடைப்பட்ட காணாமல்போனவர்களைத்தாம். காணாமல்போவது அதன் உரிமையாளருக்கு ஆற்ற முடியாத சோகத்தை தருகிறது. கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் காணாமல்போனவர்கள் தேடுபவர்களைப் பற்றி கவலைப்படுவார்களா? பல நேரங்களில் இல்லை.

சிலர் மற்றவர்களைப் பழிவாங்குவதற்காகவும், பிடிவாதத்தாலும்கூட காணாமல்போவார்கள். சிலர் அடுத்தவர்களுக்கு பயந்து கொண்டு காணாமல்போவார்கள். வீட்டிற்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படிப்பட்டவர்கள். காணாமல்போகும் போது அடுத்தவர்கள் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் அடுத்தவரின் பார்வையிலிருந்து நாம் விலகி இருப்பது நமக்கு சுகமாகத்தான் இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 15:1-32) ஊதாரி மைந்தன் (தந்தை) உவமையை நாம் புதிய கோணத்தில் பார்க்கலாம். காணாமல்போன ஆட்டையும், நாணயத்தையும் அவற்றின் உரிமையாளர்கள் தேடுகின்றனர். ஆனால், காணாமல்போன மகன் எடுத்துக்காட்டில் அவரின் தந்தை தேடுகிறாரா? நன்றாகப் பார்த்தோமென்றால் 'இல்லை' என்ற பதிலே மிஞ்சுகிறது. தந்தை தன் மகனுக்காக காத்திருக்கிறாரே தவிர, அவரைத் தேடவில்லை. இல்லையா? முதல் இரண்டு உவமைகளில் 'ஹெவ்ரிஸ்கோ' (தேடுதல்) என்ற வினைச்சொல்லும், மூன்றாம் உவமையில் 'ஹொராவோ' (பார்த்தல்) என்ற வினைச்சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்க காணாமல்போன மகனை யார் தேடியது? யார் கண்டுகொள்கிறார்? யார் கொண்டாடுகின்றார்?

இளைய மகன் தன்னையே கண்டுபிடித்துக்கொள்கிறான்.

தானே விரும்பி காணாமல் போகின்றான் மகன். அவனுக்கு தன் தந்தையின் மேல் ஏதோ ஒரு கோபம் இருந்திருக்கிறது. ஒருவேளை அவருடைய உடனிருப்பைக்கூட அவன் தாங்க முடியாத சுமையாகப் பார்த்திருக்கலாம். ஆகையால்தான் அவரிடமிருந்து காணாமல் போக நினைக்கின்றான். அப்படி நினைத்தவன் தான் மட்டும் போகாமல், தன்னைப் பற்றிய எந்த நினைவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றெண்ணி தனக்குரியது அனைத்தையும் தூக்கிக் கொண்டு புறப்படுகின்றான். போன வேகத்தில் தான் கொண்டு வந்த அனைத்தையும் செலவழிக்கின்றான். அதாவது, தன்னிடம் இருக்கும் பொருள் அல்லது பணம் அவனுக்கு தன் தந்தையை நினைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆகையால்தான் அவற்றை செலவழிப்பதில், அழிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றான். ஆனால், இந்த முரட்டுக் கோபத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது அவனது வறுமையும், பசியும், வெறுமையும். மகனாக இருந்தவன் வேலைக்காரனாக மாறுகின்றான். பன்றிகள் தின்னும் நெற்றுக்களே அவனுக்குக் கிடைக்கிறது.

அப்படி ஒருநாள் பன்றிகளின் நெற்றுக்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கு தன் (தந்தையின்) வீட்டு நினைவு வருகிறது. இந்நேரம் ரொட்டிகள் சுட்டு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்களே. இந்த உணர்வை ஆங்கிலத்தில் நொஸ்டால்ஜியா என அழைக்கின்றனர். இது ஒரு முக்கியமான உணர்வு. இந்த உணர்வுக்கு நிறைய ஆற்றல் உண்டு. 'ஐயோ! நான் அப்படி இருந்தேனே! இன்று நான் இப்படி இருக்கிறேனே!' என்ற உணர்வு பல நேரங்களில் நம்மையும் மாற்றிவிடும். அப்படித்தான் மாறிப்போகின்றான் இந்த இளைய மகன்.

அவன் அந்நேரம் அறிவு தெளிவுபெறுகின்றான். அவன் 'தனக்குள் வந்தான்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் லூக்கா. அதாவது இதுவரை காணாமல்போயிருந்தவன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். ஆக, இளைய மகன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். காணாமல்போனது அவனுக்கு சுகமாக மாறுகிறது. ஏனெனில் காணாமல்போன நிலையில்தான் அவன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். தன்னைக் கண்டுபிடித்த அவன் இனியும் காணாமல்போகவே மாட்டான். முடிவெடுத்து புறப்படுகின்றான்.

தன்னையே கண்டுபிடித்த இளைய மகன் இனி யாரையும் எளிதாக எதிர்கொள்வான். ஆகையால்தான் தன் வீட்டிற்கு திரும்புவதைப் பற்றி எந்தவொரு பயமும் அவனுக்கு இல்லை. அப்பாவா, அண்ணனா பார்த்துக்கொள்வோம் என புறப்படுகின்றான். மகன் என்ற நிலையிலிருந்து வேலையாள் என்ற நிலைக்கு இறங்கியாயிற்று. அந்த நிலையிலேயே தன்னை இணைத்துக்கொள்ள நினைத்து வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும், உடலுக்கு ஆடையும் கிடைக்க வீடே விருந்தின் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறது.

இயேசு இந்த இடத்தில் உவமையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் தொடர்கிறார். இவ்வளவு நேரம் திரைக்குப் பின் இருந்த மூத்த மகன் உள்நுழைகின்றான். அவன் தந்தைக்கு அருகில் இருந்தாலும் அவனும் காணாமல்போய்தான் இருக்கின்றான். ஆனால், அவன் காணாமல்போன தன் நிலையை கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். ஆகையால்தான் அவனால் தன் தம்பியை தம்பி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உன் மகன்' என்று மூன்றாம் நபரில் விளிக்கின்றான். இளைய மகன் தன்னையே கண்டுகொண்டதால் மகிழ்ச்சி அடைகின்றான். மூத்த மகன் தன்னையே கண்டுகொள்ளாததால் விருந்தின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள மறுக்கின்றான்.

ஆக, இந்தக் கதையின் நாயகன் தந்தை அல்ல. மாறாக, இளைய மகனே. காணாமல்போவதே சுகம் என்று நினைத்தவன், தன்னையே கண்டுகொள்கின்றான். அவன் தன்னையே கண்டுகொண்டதுதான் மேலானது.

எப்படி ஆடு கண்டுபிடித்தவரும், நாணயம் கண்டுபிடித்தவரும், அவற்றை எடுத்துக்கொண்டு அண்டை வீட்டுக்கு ஓடி தங்கள் மகிழ்வைக் கொண்டாடுகிறார்களோ, அதுபோல இளைய மகனும் தான் கண்டுபிடித்த தன்னையே எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு ஓடுகின்றான். 'அப்பா, நான் என்னையே கண்டுபிடித்துவிட்டேன்!' என்று அவரின் கைகளில் விழுகின்றான்.

நாம் ஆசையாய் அணிந்து கொண்ட திருமண மோதிரம் திடீரென்று காணாமற்போய் அதைத் தேடும்போது நாம் அதனுடன் ஒரு புதிய உறவிற்குள் தான் நுழைகின்றோம். கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்து வாங்கிய பைக் திடீரென்று காணாமற்போய் மீண்டும் கிடைக்கும்போது முதலில் பைக் வாங்கிய சந்தோஷம் நம்மைத் தொற்றிக்கொள்கின்றது.

அந்த மூன்று பேர்

தந்தை காத்திருக்கிறார். சில நேரங்களில் தேடுதலை விட காத்திருத்தல் அவசியமானது. நம் அன்பிற்கு உரிய ஒருவர் நம்மைவிட்டு காணாமல்போக நினைக்கிறார் என்றால், அல்லது காணாமல்போகிறார் என்றால், நாம் உடனே அவர்பின் தேடி ஓடுவது முறை அல்ல. தந்தையைப் போல பொறுமையும் காத்திருத்தலும் தேவை. சில நேரங்களில் தன்னை அறிவதற்கு இளைய மகனுக்கு தனிமையும் தூரமும் தேவை. ஆக, அந்த மகனின் தனிமையையும், தூரத்தையும் அனுமதிக்கிறார் தந்தை. என்று வந்தாலும் அவன் என் மகன்தான் என்ற நிலையில் காத்திருக்கிறார். தன்னையே கண்டுபிடித்த ஒருவரால்தான் இப்படி பொறுமைகொண்டிருக்க முடியும்.

இளைய மகன் காணாமல்போகின்றான். கண்டுபிடிக்கின்றான். ஆம். காணாமல்போனாலும் அவன் தன்னையே கண்டுகொள்கிறான். தன்னைக் கண்டுகொள்தல்தான் இன்று நாம் செய்ய வேண்டிய பெரிய வேலை. நம் உறவுகளில், ஏன் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில்கூட சில நேரங்களில் தூரம் தேவை. அவரின் இல்லாமையை நான் உணர வேண்டும். அவர் என்றும் என்னோடு என்று பாடிக்கொண்டே அவரோடு ஒட்டியிருப்பதும் சரியல்ல. உறவுநிலையில் உள்ள தூரத்தில்தான் நாம் நம்மையும், நம் உறவுநிலையில் உள்ளவர்களையும் புரிந்து கொள்கிறோம். ஒரு மரத்தின் நிழலில் மற்றொரு மரம் வளர முடியாது என்பது இயற்கை நியதி. அதுபோலவே உறவுகளின் நிழலில் எப்போதும் இருப்பதும் வளர்ச்சி தராது. சில நேரங்களில் நாம் வன்முறையாக மரத்தை பிடுங்கி அடுத்த இடத்தில் நட வேண்டும். இளைய மகன் தானாகவே தூரமாகச் சென்றான். தானாகவே திரும்பி வந்தான். மேலும், இயற்பியல் விதி சொல்வதுபோல தூரத்தில் இருந்து எறியப்படுகின்ற பந்து வேகமாக வந்து மோதும். நிறைய அழுத்தத்தை கொண்டிருக்கும். இளைய மகன் தூரமாக சென்றாலும் தன் தந்தையின் உள்ளத்தில் இன்னும் அதிக அழுத்தத்தோடு பதிந்து போகிறான்.

மூத்தமகன் காணாமலும் போகவில்லை. கண்டும் பிடிக்கவில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க மட்டும்தான் இந்த மகனுக்கு நேரம் இருக்கிறது. இறுதிவரை தான் யார் என்றும், தன் தந்தை யாரென்றும், தன் தம்பி யாரென்றும் கண்டுபிடிக்காமலேயே போய்விடுகின்றான்.

காணாமல்போவது நம்மையே கண்டுபிடிக்கத்தான் என்றால் காணாமல்போவதும் சுகமே!

Saturday, March 11, 2017

உள் ஒளி

இன்று மாலை என் பழைய புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர், 'இந்த ஃபோட்டோவுல வெள்ளையா (முகம்) இருக்கிறது இப்போ கறுப்பாவும், கறுப்பா (தலைமுடி) இருக்கிறது இப்போ வெள்ளையாவும் இருக்கு' என்றார்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை தியானிக்கின்றோம்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கிடக்கிறார் எனவும், அவர் மிகவும் மெலிந்து விட்டார் எனவும், அவரது முதுகு தண்டுவடம் கூட வெளியே தெரிகிறது எனவும் சொன்னார். நம் கண்முன்னாலேயே மனிதர்களின் உருவம் மாறுகின்றது.

ரொம்ப ஆண்டுகளாகப் பார்க்காத ஒருவரை திடீரென பார்க்கும்போது அவரின் தலைமுடி வெள்ளையாகவும், ஆள் ஒல்லியாகவும் அல்லது குண்டாகவும் இருந்தால், அவரை நாம் முன்னால் பார்த்த முகம் உடனே வந்து போகிறது. 'என்ன அப்படியே மாறிட்டீங்க!' என ஆச்சர்யப்படுகிறோம்.

இன்னும் சிலர் முன்னால் நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள். இன்று ஏதோ ஒரு காரணத்தால் நம்மிடமிருந்து விலகி இருப்பார்கள். அவர்களைப் பற்றி யாராவது நம்மிடம் விசாரித்தால், 'அவர் முன்னால் மாதிரி இல்ல. மாறிட்டார்' என ஆதங்கப்படுகிறோம்.

ஆக, நாமும் நம் கண்முன் நடக்கும் உடல் மாற்றங்களையும், உணர்வு மாற்றங்களையும், உறவு மாற்றங்களையும் பார்க்கின்றோம்.

மாற்றத்தை திடீரென்று பார்க்கும்போது நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குழந்தைகளாக இருந்த நாமே வளர்ந்தோம். சிறுவர்கள் ஆனோம். இளமை வந்தது. வளர்கிறோம். மாறிக்கொண்டே இருக்கிறோம். நம்மில் நிகழும் இந்த மாற்றம் மெதுவாக நடப்பதால் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

தனக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லாரையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து அன்பு செய்தார். அந்த வகையில் இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தனர். 

மலையில் ஏறிச்சென்றவர் உருமாறினார் என மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல் அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது என்கிறார் மத்தேயு. முகம் மட்டுமல்ல. ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் மோசே மற்றும் எலியாவையும் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல், இயேசுவோடு உரையாடிக்கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்:

'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? உமக்கு விருப்பமா?' 

பேதுரு தன் கண் முன்னால் காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய விரும்புகிறார்.

அதாவது ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். நாம் இன்று நிறைய ஃபோட்டோக்கள் எடுக்கிறோம். நம்மை நாமே செல்ஃபி எடுக்கிறோம். அல்லது பிறரை எடுக்கிறோம். அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் செய்கிறோம். ஃபோட்டோ எடுக்கும்போது என்ன நடக்கிறது. நாம் இருக்கும் இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகிறோம். ஆகையால்தான் ஒரு ஃபோட்டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை. ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்துவிடுகிறது.

பேதுரு இயேசுவையும், மோசேயையும், எலியாவையும் மூன்று கூடாரங்களுக்குள் வைத்து அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றார். 

பேதுருவின் கேள்விக்கு இயேசுவோ, மோசேயோ, எலியாவோ பதில் சொல்லவில்லை.

ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்'

பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது.

நம் செபத்திலும் சில நேரங்களில் இப்படித்தான் நிகழும். கடவுளைப் பார்த்து நாம் ஒன்று கேட்க அவர் வேறொன்றை விடையாகச் சொல்வார். 

அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள். 

புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் - விளைவு அச்சம். 

முகங்குப்புற விழுவதை சரணாகதியின் அடையாளம் என்றும், அல்லது பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி விழுந்துகிடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்!' என்கிறார்.

அத்தோடு, 'இங்க நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை யாரிடமும் சொல்லாதீர்கள்!' என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு தொடர்புடையது. எப்படி?

இங்கே தாபோர் மலை. அங்கே கல்வாரி மலை.

இங்கே அவரின் முகம் ஒளிர்கிறது. அங்கே அவரின் முகம் தூசி படிந்து இருக்கிறது.

இங்கே அவரின் ஆடைகள் வெண்ணிறமாக இருக்கின்றன. அங்கே அவரின் உடலில் ஆடைகள் இல்லை.

இங்கே மோசேயும் எலியாவும் உடன் நிற்கின்றனர். அங்கே இரண்டு கள்வர்கள் உடன் நிற்கின்றனர்.

இங்கே பேதுரு இருக்க விரும்புகிறார். அங்கே அவரை விட்டு ஓடிவிடுகின்றார்.

இங்கே வானகத் தந்தையின் குரல் கேட்கிறது. அங்கே மக்கள் மற்றும் படைவீரர்களின் ஏளனம் கேட்கிறது.

இங்கே சீடர்கள் முகத்தை மூடிக்கொள்கின்றனர். அங்கே கதிரவன் தன் முகத்தை மூடிக்கொள்கிறது.

இங்கே வெளிச்சம். அங்கே இருள்.

இங்கே சீடர்களை எழுந்திருக்கச் சொல்கின்றார் இயேசு. அங்கே தானே உயிர்த்து எழுகின்றார்.

ஆனால்,

இரண்டிற்கும் ஒரே ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கிறது.

இங்கேயும், அங்கேயும் மாட்சி பெறுகின்றார் இயேசு.

ஆக, இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு வழியாக இறைமகன் என்னும் மாட்சி பெறுகின்றார். அந்த இறைமகனுக்குச் செவிகொடுங்கள் என்ற செய்திதான் இங்கே சீடர்களுக்குத் தரப்படுகிறது.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை சீடர்கள் எப்படி புரிந்திருப்பார்கள்?

மாற்கு நற்செய்தியாளர் சீடர்களின் புரியாத தன்மையை அடிக்கடி பதிவு செய்கிறார். இயேசுவும், அவருடைய மெசியா அடையாளமும் சீடர்களுக்கு இறுதிவரை மறைபொருளாகவே இருக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் உள்ள முரண் என்னவென்றால் கதிரவன்போல வந்த வெளிச்சம்கூட சீடர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கவில்லை. 

நம் நம்பிக்கை வாழ்விலும் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறது.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதிரவன் போல ஒளிர்ந்தாலும் நம் உள்ளத்தில் இருக்கும் தயக்கம் அல்லது சந்தேகம் என்னும் இருள் களைவதில்லை. மற்றவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்வதெல்லாம் நமக்குப் புரிந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயக்கம் காட்டுகிறது.

சீடர்களின் தயக்கம் இயேசுவின் உயிர்ப்பில்தான் மாறுகிறது. அதுவரை அவர்கள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கின்றனர். ஆக, நம்பிக்கை வருவதற்கும், வளர்வதற்கும் வெளி ஒளி தேவை அல்ல. மாறாக, உள் ஒளியே தேவை.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 1:8-10), 'அழியா வாழ்வை நற்செய்தி வழியாக ஒளிரச் செய்தார்' என திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் தூய பவுல். நற்செய்தி என்பது நாம் வெளியே இருந்து வாசிக்கக் கேட்பது அல்ல. மாறாக, இயேசுவே நற்செய்தி. அந்த நற்செய்தியை நாம் நம் உள்ளத்தில் உணர்தலே ஒளி.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல் 12:1-4) நம் முதுபெரும் தந்தை ஆபிராம் இறைவனால் அழைக்கப்படுகின்றார். 'உன் நாட்டிலிருந்தும், உன் இனத்திலிருந்தும், உன் தந்தைவீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் காட்டும் நாட்டிற்குச் செல்' என்று கட்டளை இடுகின்றார் கடவுள். ஆபிராமும் அவ்வாறே புறப்பட்டுச் செல்கின்றார். இந்த நிகழ்வையே எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்' (எபி 11:8) என எழுதுகின்றார். வெளியே இருளாக இருந்தாலும், தன் உள்ளத்தில் ஒளி இருந்ததால் புறப்பட்டுச் செல்கின்றார் ஆபிராம்.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் கருத்து 'உள் ஒளி.'

இந்த உள் ஒளியை நாம் எப்படிக் கண்டுகொள்வது?

1. ஆண்டவரின் ஆசி

'உனக்கு நான் ஆசி வழங்குவேன்' எனச் சொல்லும் கடவுள் ஆபிராமிடம், 'நீயே ஆசியாக விளங்குவாய்' என்கிறார். இன்று எல்லாவற்றையும் நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் சாதித்துவிடலாம் என நினைக்கிறோம். எல்லாவற்றையும் 'இருக்கிறது. இல்லை' என நிரூபிக்கத் துடிக்கும் அறிவியல், 'கடவுளின் இருப்பையும் இல்லாமையையும்' நிரூபிக்கத் துணிவதில்லை. நாமே எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என நினைத்தாலும், நம்மையும் கடந்து ஒன்று இருக்கிறது என நினைப்பதால்தான், விண்வெளி ஆய்வுக்கூடத்திற்குச் செல்லும் விஞ்ஞானிகள் முதலில் கோவிலுக்குச் செல்கின்றனர். 104 செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்டை சாமியார் ஒருவர் மந்திரிக்கின்றார். 'அனைத்தையும் அதனதன் நேரத்தில் செய்து முடிக்கும் கடவுள் தாமே அனைத்தையும் வழிநடத்துகின்றார்' எனில் அவரின் ஆசியை நாம் பெறுவது அவசியம். அந்த ஆசியை இன்றைய இரண்டாம் வாசகத்தில் அருள் என்கிறார் பவுல். அந்த அருளே நம் உள் ஒளிரும் ஒளி.

2. ஆறுநாள்களுக்குப் பின்

'ஆறு' என்பது 'குறைவு' என்பதைக் குறிக்கும் எண். 'ஆறுநாள்களுக்குப் பின்' இயேசு மலைமேல் ஏறினார் என எழுதுகிறார் மத்தேயு. 'கானாவூரில் ஆறு கற்சாடிகள் இருந்தது' என எழுதுகிறார் யோவான். குறைவானதை நிறைவு செய்கின்றார் இயேசு. சீடர்களின் வாழ்வு இதுவரை 'ஆறுநாள்களாக,' அதாவது, 'குறைவாக' இருக்கிறது. அந்த குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார் இயேசு. நம் வாழ்விலும் நாம் ஆறுநாள்களை வாழ்ந்து கொண்டிருக்கலாம். இல்லத்தில், உள்ளத்தில், உறவுகளில், வேலையில், படிப்பில் என குறைவு இருந்துகொண்டே இருக்கலாம். அந்த நாள்களில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது இயேசுவின் உடனிருப்பை மட்டுமே. குறைவு என புலம்பிக்கொண்டிருக்கும் நம் அருகில் வந்து நம்மை உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்று நிறைவாக்க அவரால் மட்டுமே முடியும். அவரின் உடனிருப்பே உள் ஒளி.

3. இங்கேயே இருப்பது நல்லது

இது நமக்கு வரும் சோதனை. வாழ்வில் ஒன்று நல்லது நடந்தவுடன், ஒளி கிடைத்தவுடன், வழி கண்டவுடன், 'இப்படியே இருப்பது நல்லது' என நினைத்துவிடுகிறோம். அப்படி நினைக்கும்போது நாம் ஏமாந்துவிடுகிறோம். காலையில் விடிகிறது. 'விடிந்துவிட்டது. இப்படியே இருக்கட்டும்' என நான் நினைக்கிறேன் என வைத்துக்கொள்வோம். ஆனால், மாலையில் கதிரவன் மறைகிறது. இருள் வளர்கிறது. எனக்குள் ஏமாற்றம் குடிகொள்கிறது. ஆனால், 'நாளை மீண்டும் கதிரவன் வரும்' என்ற என் நம்பிக்கை என்னை அமைதியாக தூங்கச் செய்கிறது. ஆக, வாழ்வின் நன்மை, தீமைகளை, ஒளி, இருளை அப்படியே பற்றிக்கொள் நினைக்காமல், போகிற போக்கில் மிக எதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் உள் ஒளி.

4. இவருக்குச் செவிகொடுங்கள்

'செவிகொடுங்கள்' என்பதற்கு 'கீழ்ப்படியுங்கள்' என்ற பொருளும் உண்டு. 'இவன் என் பேச்சையே கேட்பதில்லை' என்று நாம் ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது, 'இவருக்கு காது கேட்பதில்லை' என்று பொருள் இல்லை. மாறாக, 'இவர் எனக்கு கீழ்ப்படிவதில்லை' என்றுதான் பொருள். இயேசுவின் உருமாற்றத்தின்போது தந்தையின் அழைப்பு 'கீழ்ப்படியுங்கள்' என்பதாக மட்டுமே இருக்கிறது. கீழ்ப்படிதல் என்பது நான் அணிந்திருக்கும் கிரீடத்தை அகற்றி என் இறைவன் முன் வைத்து சரணாகதி ஆவது. கிரீடம் அணியும் போது நான் என்னையே இறைவனுக்கு நிகராக்கிக்கொள்கிறேன். அங்கே சரணாகதி வருவதற்குப் பதிலாக சண்டை வந்துவிடுகிறது. மாறாக, நான் அதை அகற்றி அவர் முன் வைக்க அவர் என்னை ஆட்கொள்வார். அப்படி ஆட்கொள்ளப்படுதலே உள் ஒளி.

5. எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள். யாருக்கும் சொல்லாதீர்கள்.

இயேசு அடுத்தடுத்து மூன்று கட்டளைகளை இடுகின்றார். 'எழுவது' என்பது நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதையும், 'அஞ்சாதே' என்பது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையும், 'சொல்லாதே' என்பது பொறுமை காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. வேகமான இந்த உலகத்தில் நாம் இந்த மூன்றையும் செய்யத் தவறிவிடுகின்றோம். எனது வீடு, எனது குடும்பம், எனது வேலை, எனது படிப்பு என அப்படியே அமர்ந்துவிடுகிறோம். அவற்றிலேயே அமிழ்ந்துவிடுகிறோம். அல்லது இவற்றைக் குறித்து கலக்கம் கொள்கிறோம். அல்லது பொறுமையற்று அனைத்தையும் அனைவரிடமும் புலம்பித் தள்ளிவிடுகிறோம். 'ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு' என்பதை மறக்காமல் இருப்பதே உள் ஒளி.

இறுதியாக,

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் ஒரு வெற்றுப் பானையைக் காட்டி, 'இதில் என்ன இருக்கிறது?' என்கிறார். எல்லாரும், 'ஒன்றுமே இல்லை' என்று சொல்ல, ஒருவன் மட்டும், 'இதில் காற்று இருக்கிறது!' என்கிறான்.

'இந்தக் காற்றை அள்ளி வெளியே போட முடியுமா?' என்று மீண்டும் கேட்க, எல்லாரும், 'முடியாது' என்கின்றனர்.

ஆனால் அந்த ஒருவன் மட்டும், 'முடியும். பானையில் தண்ணீரை நிரப்பினால் காற்றை வெளியேற்றிவிடலாம்!' என்கிறான்.

ஞானம் பெற்றனர் சீடர்கள்.

நிற்க.

நாம் ஒவ்வொருவரும் ஒரு பானை. இந்தப் பானையை உருமாற்றம் செய்துவிட நாமும் நினைக்கிறோம். அப்படிச் செய்யும்போது நாம் இந்தப் பானையை உடைத்துவிடுகிறோம். உருமாற்றம் அடைய ஒரு வழி உண்டு. உள் ஒளியை ஏற்றுவது. உள் ஒளி ஏறியவுடன் இருளான நம் பானையும் ஒளிர ஆரம்பிக்கிறது.

அந்த ஒளியில் நான் யார் என்பதையும், எனக்கு அருகிருப்பவர் யார் என்பதையும், என் கடவுள் யார் என்பதையும் நான் கண்டுகொள்கிறேன்.

ஆபிராமிலும், பவுலிலும், இயேசுவிலும் ஒளிர்ந்த அந்த உள் ஒளி இன்றும் என்றும் நம்மில் ஒளிர்வதாக!