Sunday, August 30, 2015

ஆண்டவரோடு இருப்போம்!

இறப்பை நமக்கு பிடிப்பதில்லை.

அல்லது பிறப்பை பிடிக்கும் அளவுக்கு நமக்கு இறப்பைப் பிடிப்பதில்லை.

இறப்பில் ஒரு திரை விழுகிறது. திரைக்கு அந்தப் பக்கம் என்ன என்பது நமக்குத் தெரிவதில்லை. திரைக்கு அந்தப் பக்கம் சென்ற எவரும் இதுவரை நம்மிடம் வந்து 'இப்படித்தான் இருக்கும்!' என்று எதையும் சொல்லியதில்லை. ஏன்? வாழும்போதே அடுத்த நிமிடத்திற்கும் நமக்கும் இடையேகூட ஒரு திரை இருக்கின்றதே.

இறப்பு நம் குடும்பத்தில், சமுதாயத்தில் ஒரு நிரப்பமுடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிடுகின்றது.

நாம் கண்ட கனவுகளை, கட்டிய கோட்டைகளை பொடியாக்கிவிடுகிறது.

என்னதான் இறப்பை நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அது ஒரு அழையா விருந்தாளியாக நம் நடுவீடு வரை வந்துவிடுகிறது.

ஆனால், இறப்புதான் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது.

வாழ்வை வேகமாக்கி முன்னே தள்ளுகிறது.

பிறப்பை போன்றே இறப்பும் ஒரு எதார்த்தம்.

நம் உரையாடலில் முதல் வார்த்தை இறந்தால்தானே அடுத்த வார்த்தை பிறக்க முடியும்!
நம் நடையில் முதல் அடி இறந்தால்தானே அடுத்த அடி பிறக்க முடியும்!
நம் உடலில் முதல் செல் இறந்தால்தானே அடுத்த செல் பிறக்க முடியும்!
ஆக, இறத்தலும், பிறத்தலும் இணைந்தே செல்கின்றன.

'கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்வு முடிவதில்லை. வாழ்வு மாற்றப்படுகிறது. மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும், விண்ணகத்தில் நிலையான வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!' என்று திருப்பலியில் நாம் தொடக்கவுரையில் செபித்தாலும், மனத்தின் ஓரத்தில் முடிவில்லா வாழ்வு குறித்த கேள்விக்கு நாம் விடை தெரியாமலேயே நிற்கின்றோம்.

தொடக்கத் திருச்சபையினர் கொண்டிருந்த பல கேள்விகளுள் முதன்மையாக இருந்ததும் இறந்தோர் உயிர்ப்பே. இந்தக் கேள்விக்குத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-17) விடையளிக்க முயற்சி செய்கின்றார். தெசலோனிக்கருக்கு எழும் கேள்விகள் இரண்டு:

1. இறப்பிற்குப் பின் வாழ்வு இருக்கிறதா?
2. இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு நமக்கு இயேசுவால் அல்லது அவரது உயிர்ப்பால் வந்தது என்றால், இயேசுவுக்குமுன் இறந்தவர்கள் நிலை என்ன? அவர்களும் உயிர்ப்பார்களா?

இவற்றில் இரண்டாவது கேள்வி மிக நுணுக்கமானது. 'ஆம், உயிர்ப்பார்கள்' என்று பதில் சொன்னால், 'அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்பார்கள். 'இல்லை, உயிர்க்க மாட்டார்கள்' என்று பதில் சொன்னால், 'இயேசுவின் உயிர்ப்புக்கு ஆற்றல் இல்லையா?' என்று கேட்பார்கள். வழுக்குகின்ற மணலில் இப்போது பவுல் நின்றுகொண்டிருக்கின்றார்.

பவுலின் பதில் ரொம்ப சிம்பிள்:

நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கிறோம். ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். ஆக, நாம் இருந்தாலும், இறந்தாலும் ஆண்டவரோடு இருப்போம். அதாவது, உயிரோடு இருப்போம்.

இந்தப் பதில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டும் இருந்தார்கள் என்றால் சரி என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், எண்ணற்ற மதங்கள், எண்ணற்ற கடவுளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இறந்தவுடன் அவரை யார் கிறிஸ்தவர், இசுலாமியர், இந்து, மதம் சாராதவர் என அடையாளம் கண்டு, அந்தந்த இடத்திற்கு 'சார்ட் அவுட்' செய்வார்? கிறிஸ்தவ மதத்திலேயே எத்தனை பிரிவுகள்? சிலருக்கு மூவொரு இறைவன், சிலருக்கு இயேசு, சிலருக்கு யெகோவா, சிலருக்கு தூய ஆவி என வேறு வேறு இன்-சார்ஜ் இருக்க, அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்?

'இறப்பிற்குப் பின் வாழ்வு என்று எதுவும் இல்லை!' என்று சொல்லவும் முடியவில்லை. 'இருக்கிறது!' என்று நம்பவும் முடியவில்லை. எளிதான வழியை பாஸ்கல் என்ற விஞ்ஞானி சொல்கிறார்: 'இருக்கிறது என்றே நம்பு! ஏனெனில் இல்லாமல் போனாலும் பிரச்சினையில்லை. ஆனால், இல்லை என்று நீ நம்பி அது இருந்துவிட்டால் அப்போது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!'

பவுலுக்கு மணல் சறுக்கியதுபோல நமக்கும் இன்று மணல் சறுக்குகின்றது.

நாளைய முதல் வாசகம் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றி சொல்கிறது என்றால், நாளைய நற்செய்தி வாசகம் (காண். லூக்கா 4:16-30) இறப்பிற்கு முன் உள்ள இயேசுவின் வாழ்வு பற்றி சொல்கின்றது.

'எல்லாரும் வாழ்வு பெறுவர்!' என்று போதிக்கும் இயேசு இரண்டுமுறை தன் சொந்த மக்களால் கொலைமுயற்சிக்கு ஆளாக்கப்படுகின்றார்: முதலில், நாசரேத்து மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்குவதன்மூலம் அவரை மனதளவில் கொலைசெய்ய முயல்கின்றனர். இரண்டாவதாக, அவரை உடலளவில் கொல்லும் முயற்சியாக மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் செல்கின்றனர். ஆனால், இரண்டிலும் இயேசு தப்பிவிடுகின்றார்.

என்ன ஒரு முரண்பாடு?

தங்கள் வாழ்வுக்கே அர்த்தம் தெரியாத மானிடம், தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க வந்த கடவுளை கொன்றுவிட நினைக்கிறது.

'இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப்பற்றிக் கவலைப்படுவதை விட இறப்பிற்கு முன் உள்ள வாழ்வைப்பற்றிக் கவலைப்படுவோம்!' என்று ஒற்றைவரியில் சொல்லி 'ஆமென்!' என முடிக்கவும் எனக்கு மனமில்லை.

ஏனெனில் இறப்புக்கு முன் உள்ள வாழ்வுபற்றித்தான் அனுதினம் நாம் கவலைப்படுகிறோமே!


3 comments:

  1. நம்மை ஒரு மோன நிலைக்குக் கொண்டு செல்லும் பதிவு.தந்தை வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிறார்.அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்ற கவலைக்கிடையே வாழும் மனிதன் ஒருபுறம்.அடுத்தடுத்து சம்பாதிக்கும் செல்வத்தை எங்கே கொண்டு முடக்குவது என்று தவிக்கும் மனிதன் மறுபுறம். இவர்கள் எங்கிருந்து இறப்பைப் பற்றியோ,அதற்குப்பின் உள்ள வாழ்வையோ பற்றி நினைக்க முடியும்? அதெல்லாம் நம்மைப் போல இதிலும் சேராமல் அதிலும் சேராமல் இருக்கும் இரண்டும் கெட்டான்களுக்கு மட்டுமே!இறப்புதான் பிறப்பிற்கு அர்த்தம் கொடுக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடிந்த நம்மால் அந்த வாழ்வு இப்படித்தான் இருக்கும் என அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.தங்கள் வாழ்வுக்கே அர்த்தம் தெரியாத மானிடம்,தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க வந்த கடவுளைக் கொன்றுவிட நினைக்கிறது.ஆனாலும் "ஆண்டவர் உயிரோடு இருப்பதால் நாம் இருந்தாலும்,இறந்தாலும் ஆண்டவரோடு இருப்போம்"கொஞ்சம் குழப்பம் தான்.ஆயினும் இதை நான் நம்புகிறேன்.ஏனெனில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்வு முடிவதில்லை; மாற்றப்படுகிறது. நமக்கு முன்னால் சென்றவர்கள் பல வகைகளில் இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.பாவம் தந்தை......எல்லா தரப்பினருக்கும் புரியவைக்க எத்தனை விதமான வார்த்தைகளை எத்தனை வகைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.இப்படியெல்லாம் யொசித்துக் குழம்ப வேண்டாமெனும் காரணத்தினால்தான் சிறு பிராயத்திலேயே 'விசுவாசம்' எனும் வார்த்தையை நமக்குப் பழக்கப் படுத்தி விடுகிறார்களோ!!!

    ReplyDelete
  2. தந்தையே, இயேசுவுக்கு புகழ்! இன்றைய பதிவை ஆண்டவரோடு இருப்போம்!என்ற தலைப்பை விட ஆண்டவரோடு வாழ்ந்து இறப்போம்! என்று பதித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். .இருந்தாலும் உங்களை குறை சொல்ல முடியுமா மிக அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களின் பதிவு. அருட்தந்தைக்கு வாழ்த்துக்கள் ! என்னதான் இறப்பை நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அது ஒரு அழையா விருந்தாளியாக நம் நடுவீடு வரை வந்துவிடுகிறது.இது 100 சதவீதம் உண்மை.ஏனென்றால் எனக்கும் இறப்பே பிடிகாது .என் வாழ்வில் நான் சந்தித்த முதல் இறப்பு என் அப்பாவின் இறப்பு அது ஒரு அழையா விருந்தாளியாக வந்தது என் வாழ்வில்.அந்த இறப்பை இன்று நினத்தால் கூட என் இதயமே சுக்கு நூறாகிவிடும்.ஆனால் அந்த இறப்பின் மூலம் கடவுள் எனக்கு கற்று தந்த பாடத்தை சொல்ல என் வாழ்நாளே போதாது.பவுல் மணலில் சறுக்கப்பட்டது போல நானும் சறுக்கபட்டேன்.ஆனால் என்னை இறை மகன் ஏசுவும் அன்னை மரியாவும் கைவிடவில்லை இந்நாள்வரை.நான் எங்கு நடந்தாலும்,அமர்ந்தாலும் , பயணம் செய்தாலும் என் அப்பாவும், ஏசுவும், அன்னை மரியாளும் என் உடன் இருப்பதை உணர்கின்றேன்.
    தந்தை சொல்கிற வார்த்தை அனைவருக்கும் இனிப்பாக இருக்க முடியாது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தவும் முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில் ஆணி அடித்தார் போல் பகிரங்கமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் . இதை நாங்கள் ஏற்றுகொள்ள துணிவை தரவேண்டி எங்களுக்காக ஜெபியுங்கள்,நாங்களும் ஜெபிகின்றோம் ! நாம் அறிந்த இயேசு நம்மை அறிந்த இயேசு என்றும் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.கிறிஸ்துவோடு இருப்போம் அவரில் வாழ்வோம். அவருக்காக இறக்கவும் தயாராகுவோம்! மிக அருமையான மற்றும் அற்புதமான உண்மைகளை எதார்த்தமாக பதிவில் படைத்த என் பாச தந்தைக்கு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நன்றிகள் ! மரியே வாழ்க !

    ReplyDelete
  3. Yea, "Let us be with the Lord".
    What a heading!
    That indeed is the best sum and substance of our existence.

    Someone once wrote: "Find what you love and let it kill you.
    Let it drain you of your all. Let it cling onto your back and weigh you down into eventual nothingness.
    Let it kill you and let it devour your remains.
    For all things will kill you, both slowly and fastly, but it’s much better to be killed by a lover."

    I would add: "Let us find not an impersonal "WHAT' but a personal 'WHO" who loves us FIRST...and then permit Him to devour us in His embrace..

    ReplyDelete