Sunday, August 16, 2015

பாதி வழி, மீதி வழி

அன்று மாலை நேரம். தெருவில் ஒரே கூட்டம். ஆம், இந்த நாசரேத்தூர் இயேசு வந்தாலே இப்படித்தான் அவரைச் சுற்றிலும் எப்பவும் கூட்டம் கூடியே இருக்கும். பேய் பிடித்தவர்கள், காதுகேளாதவர்கள், கண்தெரியாதவர்கள் என ஏதோ திறந்தவெளி மருத்துவமனை போலத்தான் அவரின் பிரசன்னம் இருக்கும்.

அந்தப் பக்கம் பல்லக்கில் சென்றுகொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவனுக்கு ஏறக்குறைய 30 வயது இருக்கும். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனது பல்லக்கு, அதைத் தூக்க நான்கு அடிமைகள், அவனின் பளபளக்கும் ஆடை இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடுலாம் அவன் ஒரு பெரிய பணக்காரன் என்று. வெளியே கூட்டத்தின் சலசலப்பு கேட்டு, பல்லக்கின் திரை விலக்கிப் பார்க்கிறான். இயேசுவின் முகம் சட்டென இவரை நோக்கி அதே நொடியில் திரும்புகிறது. நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் நிலவு மட்டும் பளிச்சென்று தெரிவது போல இயேசுவும் இவனுக்குத் தனியாக தெரிந்தார். 'பல்லக்கை நிறுத்துங்கள்!' என்று கையசைக்கிறான். பல்லக்கு நிற்கிறது. பல்லக்கை மெதுவாக இறக்கி அவனை இறங்குவதற்காக முழந்தாளிடுகிறார்கள் தூக்கி வந்த அடிமைகள். ஏதோ ஒன்று இயேசுவை நோக்கி இவனை இழுக்க, தன்னை மறந்து இயேசு நோக்கி செல்கிறான்.

இவனின் பட்டாடைகளையும், பரிவாரங்களையும், நறுமணத்தைலத்தையும் நுகர்ந்தவர்கள் தாங்களாகவே நகர்ந்து வழிவிடுகின்றனர். 'இயேசுவைப் பார்ப்பது இவ்வளவு சுலபமா?' என நினைத்துக்கொண்டே அவரை நெருங்கியவன் இயேசுவின் அருகில் சென்றுவிடுகிறான்.

'நல்லா இருக்கியா?' என்கிறார் இயேசு. இவனுக்கு தலையும், புரியவில்லை. காலும் புரியவில்லை. 'உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என்று இயேசு அவனைக் கேட்கின்றார். 'இந்தக் கேள்வியை நான்தானே இதுவரை மற்றவர்களிடம் கேட்டிருக்கிறேன்! எனக்கு இவர் என்ன செய்ய முடியும்? என்னிடம்தான் எல்லாம் இருக்கிறதே!' என்று நினைத்துக் கொண்டிருந்தவன், சட்டென, 'நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டுவிடுகிறான்.

'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று பதிலளிக்கிறார்.

'கட்டளைகளா? எவற்றை?' தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறான். 'இவற்றையெல்லாம் நான் சிறுவயதிலிருந்தே கடைப்பிடிக்கிறேனே!' பதிலும் சொல்கிறான்.

'இன்னும் உனக்கு ஒன்றும் குறைவுபடுகிறது!' இது இயேசுவின் வார்த்தை.

இவனுக்குள் சின்ன கோபம்: 'என்னது என்னிடம் குறையா? சொல்லிலா? பொருளிலா? என்ற தொனியில், 'என்ன குறை?' என எதிர்கேள்வி கேட்கிறான். 'நீ போய் உனக்குள்ளதையெல்லாம் விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின் வந்து என்னைப் பின்தொடர்!'

கொஞ்ச நேரம் நிலைகுலைந்து போய்விடுகிறான். 'இதுதான் என்னிடம் உள்ள குறையா?' 'எதை விற்பது? யாருக்கு விற்பது? என்னிடம் உள்ளதை வாங்குவதற்கு இந்த ஊரில் எவனிடம் பணம் இருக்கிறது? நான் ஏன் விற்க வேண்டும்?' யோசித்துக் கொண்டிருந்தவன் நின்று கொண்டே இருக்க, இயேசு நகர்ந்து விடுகிறார்.

எப்போது பல்லக்கு ஏறினோம், எப்போது வீட்டிற்கு வந்தோம் என்ற நினைவே இல்லை அவனுக்கு. பசியில்லை. நேரே படுக்கைக்குப் போகிறான். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். வெளியே வந்து ஜன்னலின் பூப்போட்ட திரையை விலக்கி விட்டுப் பார்க்கிறான். ஒரு பெரிய மனப்போராட்டம் அவனுக்குள். 'இன்று நான் ஏன் அவரைப் பார்த்தேன்?'

'நிலைவாழ்வு (eternal life) பற்றித்தானே நான் கேட்டேன். அவர் நிறைவாயிருப்பதைப் (being perfect) பற்றிச் சொன்னாரே! நிலைவாழ்வு வேறு, நிறைவு வேறா?' அவன் மனம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நாளைய நற்செய்தியின் (காண். மத் 19:16-22) கதாபாத்திரம் இந்த இளைஞன்தான்.

பாதி வழி வந்தவனுக்கு, மீதி வழி செல்ல துணிச்சல் இல்லை.

நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 2:11-19) இஸ்ரயேல் மக்களுக்கும் இதே சோதனைதான். பாதிவழி கடவுளோடு வந்தவர்கள் மீதிவழி அவரோடு போக மறுத்து வேற்றுத் தெய்வங்களை நாடுகின்றனர்.

இரண்டு இறைவாக்குப் பகுதிகளிலும் இருக்கும் ஒரு வார்த்தை 'விற்பது!'

'இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே அவர், கொள்ளையடிப்போரிடம் அவர்களை விற்றுவிட்டார் (he sold to them!) (ஆனால், மொழிபெயர்ப்பு 'ஒப்படைக்க' என தவறாக செய்யப்பட்டுள்ளது). அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர்' (நீத 2:14).

'நீர் போய் உம் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு...' (மத் 19:21)

ஒரு சின்ன கேள்வி இயேசுவுக்கு: 'எதற்காக உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்? உடைமைகளை அப்படியே ஏழைகளுக்குக் கொடுத்துவிடலாமே! ஏன் ஆண்டவரே இப்படி ஒரு வேலையை இரண்டு வேலையா ஆக்குறீங்க?' 

ஆனால், இயேசுவின் வார்த்தையில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

'விற்பது' என்றால் என்ன?

விற்பவர்தான் உரிமையாளர். மற்றவர் வாங்குபவர். இரண்டு பேருக்கும் இடையில் விற்கப்படும் பொருளும், பதிலுக்குக் கொடுக்கப்படும் பணமும் இருக்கிறது. இதில் விற்பவர் விற்கும்போது அந்தப் பொருளின் மேல் உள்ள உரிமையை இழக்கிறார். அதே நேரத்தில் உரிமை இருக்கும் ஒருவரால்தான் ஒரு பொருளை விற்க முடியும். ஆக, இந்த வலிதான் மிகக் கொடுமையானது. 'என் கண்முன் என் உரிமையை விட்டுக்கொடுப்பது!' இந்த வலியை அந்த இளைஞன் உணர வேண்டும் என நினைக்கிறார்போல இயேசு.

முதல் வாசகத்தில் இந்த வலியை இறைவன் அனுபவித்தார். ஒவ்வொரு முறையும் மிதியானியர்கள் படையெடுத்தார்கள், அம்மோனியர்கள் படையெடுத்தார்கள், எகிப்தியர்கள் படையெடுத்தார்கள் என வாசிக்கிறோமே. இந்த நேரங்களில் எல்லாம் இறைவனுக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்? தன் உரிமைப்பொருளான மக்களை தன் கண்முன்னே மற்றவர்கள் எடுத்துக்கொள்ளுமாறு விட்டுவிடுகிறார். எதற்காக? அவர்களைத் திருத்துவதற்காக. ஆனால், இப்படி விட்டுவிட்ட மக்களை நீதித்தலைவர்களை அனுப்பி உடனே மீட்டுக்கொள்கின்றார்.

உடைமைகளை நேரடியாக ஏழைகளுக்குக் கொடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னிடம் இருக்கும் பல்லக்கும், பட்டாடைகளும் ஏழைகளுக்குத் தேவையில்லாததாக இருக்கலாம். ஆக, நான் அடுத்தவருக்கு கொடுக்கும்போது அல்லது தியாகம் செய்யும்போது, என்னிடம் பயன்படாத ஒன்றையோ, அல்லது அடுத்தவருக்குப் பயன்படாத ஒன்றையோ கொடுக்கும்போது அதில் நிறைவு இருப்பதில்லை. ஆனால் பணம் எல்லாரும் பயன்படுத்தக்கூடியது. ஆகையால் விற்றால் அதை எல்லாருக்கும் கொடுக்கலாம். (இயேசுவின் காலத்தில் பணப்புழக்கம் இருந்தது. 'பொருளுக்குப் பொருள் கொடுக்கும் பழக்கம்' - barter system - அப்போது இல்லை).

இந்த இளைஞன் என் சிந்தனைக்கு மூன்று கேள்விகளை முன்வைக்கிறான்:

1. பாதி வழியா, நீண்ட வழியா? இயேசுவைப் பின்தொடர்வது கஷ்டமா? இல்லை. ஆனால், என்ன கஷ்டம் என்றால் எப்போதும் பின்தொடர்வதுதான். நல்லவனாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. என்றைக்கும் நல்லவனாய் இருப்பதுதான் பெரிய விஷயம். இயேசுவைப் பின்பற்றுவதிலும் சரி, அல்லது என்னுடைய கெட்ட பழக்கங்களில் எதையாவது விடுவது என்பதிலும் சரி, விடாமுயற்சி மிக முக்கியமானது. இந்த இளைஞனால் பாதிவழிதான் போக முடிந்தது. இஸ்ரயேல் மக்களுக்கும் விடாமுயற்சி குறைவாகவே இருந்தது முதல் ஏற்பாட்டில். இன்று என் பின்பற்றுதல் எப்படி இருக்கிறது?

2. நிலைவாழ்வா? நிறைவா? நிறைவாழ்வு என்பது இறப்புக்குப் பின் நிகழ்வது. இதைத்தான் அந்த இளைஞனும் கேட்டிருக்கிறார். ஆனால், அடுத்த உலகில் நடக்கும் அல்லது நடக்காத நிலைவாழ்வு குறித்து கவலைப்படுவதை விட, இந்த உலகில் நீ நிறைவாக இருக்கிறாயா? என அக்கறைகொள் என்கிறார் இயேசு. இதைத்தான் நம் கிறிஸ்தவ மதத்தைப் பற்றிச் சொல்லும்போது, காரல் மார்க்ஸ், "Christianity promises a pie in the sky when you die" என்று நையாண்டி செய்கின்றார். ஆக, இறப்புக்குப் பின் நடக்கும் வாழ்வைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இறப்புக்கு முன் உள்ள வாழ்வை நான் நிறைவாக வாழ்கிறேனா?

3. ஒன்றின்மேல் உரிமை கொண்ட ஒருவனால்தான் அதை விட்டுக்கொடுக்க முடியும். என் உடலின் மேல் உரிமை கொண்டிருந்தால்தான், இனி அது எனக்குத் தேவையில்லை என்று சொல்லி கற்பு வாழ்வை தெரிந்து கொள்ள முடியும். என் முடிவெடுக்கும் திறனில் நான் உரிமை கொண்டிருந்தால்தான், கீழ்ப்படிதல் என்ற வாக்குறுதிக்காக அதை விட்டுக்கொடுக்க முடியும். ஆக, உரிமையும் இருக்க வேண்டும். உரிமையை விட்டுக்கொடுக்கும் துணிச்சலும் வேண்டும். இதுதான் புதிய சீடத்துவம். அருட்பணி நிலையில், என் மக்களின்மேல் உரிமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் நான் அவர்களுக்குப் பணிசெய்ய முடியும். அதே நேரத்தில் உரிமையை விட்டுக்கொடுக்கும் துணிச்சலும் வேண்டும். அப்போதுதான் என் மகிழ்ச்சி என்னிடம் இருக்கும். அல்லது பறிபோய்விடும். இன்று நான் எதன் மேலெல்லாம் உரிமை கொண்டிருக்கிறேன்?

பாதிவழி வந்த இளைஞனாய், பாதிவழி வந்த இஸ்ரயேலராய் இல்லாமல் 
மீதிவழியும் நடக்க அருள்தா இறைவா!


1 comment:

  1. என்ன ஃபாதர் ஏதாவது திரைப்படம் எடுக்கும் உத்தேசமா என்ன? பட்டாடைகளோடும்,பரிவாரங்களோடும் வந்த பணக்கார இளைஞன் பாமர்ர்களின் நண்பன் பரமனை தரிசிக்க வரும் காட்சியை தாங்கள் வர்ணித்துள்ள வித்த்தைத் தான் குறிப்பிடுகிறேன்.அவர்கள் இருவருக்கிடையே நடக்கும் வார்த்தைப் பரிமாற்றங்கள் கூட மிக இயல்பாக உள்ளன; நம்மையும் யோசிக்க வைக்கின்றன." இவ்வுலக வாழ்வை நிறைவாக வாழ்ந்தாலே மறு உலக வாழ்வு நிலையானதொன்றாகிவிடும்"... பச்சை மரத்தில் பதிந்த ஆணியாய் ஒலிக்கிறது.ஆம்....நமக்கு உரிமையுள்ள பொருட்களை மட்டும்தான் நாம் இல்லாதவர்களுக்காக விட்டுக்கொடுக்க முடியும்...அதையும் அவ்களுக்குதவாத பொருளாக இல்லாமல் உதவும் பணமாக அளிக்க வேண்டும்....அதில் சிறிது 'வலி'யும் சேர்ந்து வந்தாலும் கூட.இப்படி தாங்கள் யோசிப்பது, பார்ப்பது எல்லாமே ஒரு அருட்பணியாளருக்கே உரிய கோணத்தில் இருப்பதுதான் தங்களின் பலம்.இந்த பலம் தங்களைப் பாதி வழி மட்டுமல்ல...மீதி வழியையும் தாண்டச்செய்வதோடு பல மைல்களையும் கடக்கச் செய்யும்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete