Tuesday, September 1, 2015

வெறும் கூச்சல்

கடந்த வியாழன் அன்று மதிய உணவிற்காக எலிசா பாட்டி வீட்டிற்குச் சென்றேன். அவருக்கு வயது 79. சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டியிடம், 'உங்கள் வாழ்க்கை தத்துவம் என்ன?' என்று கேட்டேன். 'உனக்கு என்ன காஃபி பிடிக்கும்?' என்று கேட்டாலே எனக்கு பதில் சொல்வதற்கு 10 நிமிடம் ஆகும். ஆனால் இவ்வளவு பெரிய கேள்விக்கு உடனே பதில் சொன்னார் பாட்டி: "Poche, ma buone!" 'குறைந்த பொருட்கள், ஆனால் சிறந்த பொருட்கள்!' ("Poche cose, ma buone cose!") இதை அப்படியே நீட்டினால், 'குறைந்த நபர்கள், ஆனால் சிறந்த நபர்கள்', 'குறைந்த சொற்கள், ஆனால் சிறந்த சொற்கள்', 'குறைந்த பயணம், ஆனால் சிறந்த அனுபவம்' என எல்லாவற்றிலும் பொருத்திப் பார்க்கலாம். எலிசா பாட்டியின் வாழ்க்கை தத்துவம் இன்று நாம் நடைமுறையில் காணும் வாழ்க்கைத் தத்துவத்திற்கு முரணாக இருக்கிறது. எப்படி? இன்று நாம் எதையும் 'நிறைய' அதாவது 'அதிகமாக' இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நிறைய பொருட்கள் வாங்கணும், நிறைய சாப்பிடணும், நிறைய படம் பார்க்கணும், நிறைய நேரம் பேசணும், நிறைய இடங்கள் போகணும், ஃபேஸ்புக்கில் நிறைய லைக்ஸ் விழணும், அல்லது நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்கணும், நிறைய படிக்கணும், நிறைய ஃபோட்டோ எடுக்கணும், ஃபோனில் நிறைய மெமரி இருக்கணும் என எல்லாமே அதிகமாகவே எதிர்பார்க்கின்றோம். ஆனால் எதிலும் 'அதிகத்தை' எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் 'சிறந்ததை' எதிர்ப்பார்க்கிறோமா என்றால் அதன் பதில் பல நேரங்களில் 'இல்லை' என்றே இருக்கின்றது.

'விளைவை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீணான வார்த்தை' என்பார் சே குவேரா.

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 4:31-37) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது. கப்பர்நகூமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இயேசு நுழைந்தபோது அங்கே ஒரு நபருள் குடியிருந்த தீய ஆவி நம்பிக்கை அறிக்கை சொல்கிறது. மிக அழகான வார்த்தைகளில் அதைப் பதிவு செய்கிறார் லூக்கா:

'ஐயோ! நாசரேத்து இயேசுவே! உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்!'

ஆக, இந்த தீய ஆவிக்கு இயேசுவின் சொந்த ஊரிலிருந்து அவரின் கடவுள்தன்மை வரை இயேசுவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது.

'wow...what a belief?' என்று இயேசு தட்டிக்கொடுத்தாரா?

இல்லை.

'வாயை மூடு! வெளியே போ!' - அடுக்கடுக்காய் கட்டளையிடுகின்றார்.

'எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க! நான் யாருன்னு இப்போதாவது தெரியுதா?' என்று இயேசு இந்ந நிகழ்வை தனக்கான விளம்பரமாக பயன்படுத்தி, தன் இறையரசை கொஞ்சம் 'விற்பனை' செய்திருக்கலாம். ஆனால் அப்படியும் அவர் பயன்படுத்தவில்லை.

ஏன்?

தீய ஆவியின் அல்லது மனிதர்களின் நம்பிக்கை அறிக்கையினால் கடவுளின் குணமும், பண்பும் மாறப்போவதில்லை.

கடவுள் எப்போதும் ஒரே போலத்தான் இருக்கின்றார்.

ஆனால், நாம் கடவுள் மேல் கொள்ளும் நம்பிக்கையும், அவரை அழைக்கும் விதமும் நம்முள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, கடவுளை 'அப்பா' என நான் அறிக்கையிடுகின்றேன் எனில், எல்லாரையும் 'சகோதரன், சகோதரி' என்று பார்க்கும் பக்குவம் என்னில் பிறக்கிறது. ஆக, 'கடவுள் என் அப்பா' என்னும் என் நம்பிக்கை என்னுள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குகிறது.

கடவுளை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதில் நான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தப் பார்வைதான் என் அறநெறியையும் பாதிக்கிறது. உதாரணத்திற்கு, கடவுள் 'என்னை எப்போதும் மன்னிக்கக்கூடியவர்' என நான் சொல்லிக்கொண்டு, 'என்ன செய்தாலும் கடவுள் மன்னித்துவிடுவாரே!' என நான் தவறுகள் செய்துகொண்டே நான் இருந்தால், என் பார்வை தவறுதானே! என் தவறுகளைத் திருத்த நான் என்ன செய்ய வேண்டும்? 'கடவுள் கண்டிப்பானவர்' என்று என் பார்வையை மாற்ற வேண்டும்.

நற்செய்தியில் நம்பிக்கை அறிக்கை செய்வது ஒரு தீய ஆவி. தீய ஆவியின் நம்பிக்கையால் அல்லது அதன் வார்த்தைகளால் அதன் இயல்பு ஒருபோதும் மாறப்போவதில்லை. அது எப்போதும் தீய ஆவியாகவே இருக்கத்தான் செய்யும். ஆகவேதான், 'நீ பேசும் வார்த்தைகளால் உனக்கே பயனில்லாதபோது பின் ஏன் பேசுகிறாய்? வாயை மூடு!' எனக் கடிந்து கொள்கிறார் இயேசு.

ஞாயிறு திருப்பலிகளில் நாம் திருத்தூதர் அல்லது நிசேன் திருச்சங்க நம்பிக்கை அறிக்கை சொல்கிறோம். இந்த நம்பிக்கை அறிக்கையோ, அல்லது இயேசுவைப் பற்றிய நம் தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கையோ நம்மைப் பாதிக்கவில்லை அல்லது நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனில் நாமும் வாயை மூடிக்கொண்டிருப்பதே நலம்!

இறப்பிற்கு பின் உள்ள வாழ்வு பற்றி நேற்று பேசத் தொடங்கிய பவுல் நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 5:1-6, 9-11) இறப்பிற்கு முன் உள்ள வாழ்வு பற்றி அறிவுரை தருகின்றார்.

இறப்பிற்கு முன் உள்ள வாழ்விற்கு பவுல் ரொம்ப புத்திமதி சொல்லவில்லை. அவரும் நம்ம எலிசா பாட்டி மாதிரிதான்: 'குறைவாக செய்ய வேண்டும். ஆனால் சிறந்ததைச் செய்ய வேண்டும்!'

அப்படி என்ன செய்ய வேண்டும்?

1. 'ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்!'
2. 'ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்!'

உள்ளத்தில் தளர்ந்தவர்கள், உடலில் தளர்ந்தவர்கள், உறவில் தளர்ந்தவர்கள், உணர்வில் தளர்ந்தவர்கள் என எல்லாருக்கும் கொஞ்சம் 'ஊக்கம்' என்ற டானிக் கொடுக்கவும், 'நான் வளர்வது போல, நீயும் வளர்' என அடுத்தவர் வளர இடம் கொடுப்பதும் அவசியம் ஆகிறது.

இந்த புதிய மாதத்தில் நான் ஒரு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்கிறேன்:

ஒவ்வொரு நாள் இரவு தூங்கப்போகுமுன் நான் ஒரு தாளில் எழுதப்போகிறேன். என்னவென்று?

1. இன்று நான் ஊக்குமூட்டிய மூன்று நபர்கள்.
2. இன்று அடுத்தவர் வளர்வதற்கு நான் எடுத்த மூன்று முயற்சிகள்.

'குறைவாகச் செய்தாலும், சிறந்ததாகச் செய்யாவிடில்', நிறைவாக நாம் செய்வதாக நாம் நினைக்கும் அனைத்தும் தொழுகைக்கூடத்தில் தீய ஆவி போடும் வெறும் கூச்சல்போல அல்லவா இருக்கும்!


2 comments:

  1. நான் கடவுளைப் பார்க்கும் பார்வை என் அறநெறியைப் பாதிக்குமெனில் அந்தப் ' பார்வைக்கு' ஒரு பொருளும், பக்குவமும் வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றன தந்தையின் வரிகள்.குறைவாகச் செய்யினும்,நிறைவாக்ச் செய்யினும் நாலு பேருக்கு நன்மை பயப்பதையே செய்ய வேண்டும் என்பது அறிஞோர் வார்த்தை." விளைவை ஏற்படுத்தாத எந்த வார்த்தையுமே வீணானது எனில் விளைவை ஏற்படுத்தாத வாழ்வைப் பற்றி என்ன சொல்வது? என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க உள்ளத்தில்,உடலில்,உணர்வில்,உறவில் தளர்ந்தவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி ' என்னைப்போல் நீயும் வளரவேண்டுமெனத்' தட்டிக்கொடுப்பது எத்துணை அழகான விஷயம்! இதைச் செயலாக்கத் தந்தையின் வழியை நாமும் பின்பற்றலாமே! " வானதூதரின் மொழியில் நான் பேசிடினும் அன்பு எனக்கில்லையெனில் ஓசையிடும் வெண்கலம் போலாவேன்" என்ற உண்மையை மெய்ப்பிக்கும் வரிகள்.அன்னைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த மாத்த்தின் முதல் நாளில் தந்தைக்கும்,மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு என் வணக்கங்களும் இந்த புது மாதத்தின் வாழ்த்துக்களும்.இன்றைய பதிவு மிக மிக அற்புதமான் படைப்பு.எப்படி தந்தையே உங்களால் இப்படி சிந்திக்க முடியுது.அனைத்து சிந்தனைகளுக்கும் நன்றிகள்.கடவுளும் அன்னை மரியாவும் உங்களை இன்னும் மேன்மேலும் ஆசிர்வதிக்க இந்த புது மாதத்தில் என் அனைத்து ஜெபங்களிலும் உங்களுக்காக ஜெபிகின்றேன். உங்கள் பதிவில் எனக்கு பிடித்த வரிகள் இதுதான் உள்ளத்தில் தளர்ந்தவர்கள், உடலில் தளர்ந்தவர்கள், உறவில் தளர்ந்தவர்கள், உணர்வில் தளர்ந்தவர்கள் என எல்லாருக்கும் கொஞ்சம் 'ஊக்கம்' என்ற டானிக் கொடுக்கவும், 'நான் வளர்வது போல, நீயும் வளர்' என அடுத்தவர் வளர இடம் கொடுப்பதும் அவசியம் ஆகிறது. ஆக எத்தகைய துன்பங்களுக்கு எதிராகவும் நம்மால் துணிவோடு போராட முடியும். அதற்கு கடவுள் நம்பிக்கை மட்டும் வேண்டும். அந்த கடவுள் நம்பிக்கையை வைத்து இயேசு எவ்வாறு, தீய ஆவிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றாரோ, அதேபோல நாமும் வாழ்க்கைப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் பிறரை ஊக்கமூட்டுவதில்.என்னை நாள்தோறும் ஊக்கமூட்டும் தந்தைக்கு நன்றிகள்.நான் பிறரை ஊக்கமூட்டுவேன்,பிறரை வளர்ப்பேன்,என் வாழ்வில் பிறர்க்கு இடம் கொடுப்பேன்.உங்களது ஜெபத்தில் இன்று என்னை நினைவு கூறுங்கள்.எங்களை இந்த புது மாதத்தில் அசீர்வதியுங்கள்.தந்தைக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களும் ,நன்றிகளும் !
    மன்றாடுவோம்: அதிகாரத்தோடும், வல்லமையோடும் போதித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். எங்கள் வாழ்வையும், எங்கள் வார்த்தைகளையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். எங்களது சொற்களுக்கும், செயல்களுக்கும் இடையே இடைவெளி இல்லாதபடி எங்களை காத்துக்கொள்ளும். முரண்பாடில்லா வாழ்வு மூலம் எங்கள் வாழ்விலும் நாங்கள் அதிகாரம் பெறுவோமாக . உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

    ReplyDelete