Thursday, August 13, 2015

தற்கையளிப்பும், நன்றியும்

1941ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி நாட்கள். ஜெர்மனியில் நாசிசம் கோலோட்சிய நேரம். ஆஸ்விஸ்ஷ் (Auschwitz) சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் தப்பி விடுகின்றனர். அவர்கள் தப்பிச் செல்ல, உள்ளே இருப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கிறது. கார்ல் ஃப்ரிட்ஸ்ஷ் (Karl Frizsch) என்னும் துணைக் காப்பாளர் பத்துக் கைதிகளைத் தேர்வு செய்து அவர்களை பசியால் சாகடிக்க உத்தரவிடுகின்றார். தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரான்சிஸ் கயோவ்னிசெக் (Franciszek Gajowniczek), 'ஐயோ! என் மனைவி! என் குழந்தைகள்!' என்று கதறுகின்றார். கதறியவரின் கண்ணீர் துடைக்க, 'உனக்குப் பதில் நான் போகிறேன்!' என்று தண்டனை ஏற்கின்றார். பசி, தாகம் என்று பத்துப்பேரில் ஒன்பது பேர் மடிய, இந்த ஒருவர் மட்டும் திடகாத்திரமாக இருக்கின்றார். பொறுமையில்லாத சிறை மேலதிகாரி, 'கார்பாலிக் அமிலத்தை ஊசியில் செலுத்துங்கள்!' என ஆணையிடுகிறார். தன் இடது கையை உடனே நீட்டி சிரிஞ்சின் வலிக்குத் தயாராகி, தன் 47ஆம் வயதில் 'தன் நண்பன் ஒருவனுக்காக' உயிர் துறக்கின்றார் மாக்ஸிமிலியன் மரிய கோல்பே (Maximilian Maria Kolbe). (நன்றி: en.wikipedia.org)

நாளை இவருடைய திருநாள்.

கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கவில்லையென்றாலும், கிறிஸ்துவின் போதனையை உண்மையாக்க உயிர்துறந்தவர் இவர்.

தனக்காக இந்த அருட்பணியாளர் இறந்ததைக் கேள்விப்பட்ட பிரான்சிஸ் கயொவ்னிசெக்கின் குடும்பத்தார் யாராவது ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. கண்டுபிடித்து அவரிடம், 'உங்க அப்பா, அல்லது தாத்தா கோல்பேயைப் பற்றி என்ன சொன்னார்?' என்று கேட்க வேண்டும்.

நமக்காக இயேசு சிலுவையில் உயிர் துறந்தார், தியாகம் செய்தார் என்று நாம் சொல்கிறோமே. இந்த தியாகம் நமக்கு பல நேரங்களில் புரிவதே இல்லை. இந்தத் தியாகத்தை நன்றாகப் புரிந்தவர் பிரான்சிஸ் மட்டுமே.

'உனக்காக நான் இறக்கிறேன்!' என்று சொல்லும் மனப்பக்குவம் கோல்பேக்கு எப்படி வந்தது? 'இனி இழக்க ஒன்றுமில்லை!' என்ற விரக்தியிலா? அல்லது 'என் வாழ்வே இழப்பதற்காகத்தான்!' என்ற தற்கையளிப்பிலா? தற்கையளிப்பால்தான்!

இன்று ஒரு அருட்பணியாளராக நான் என்னையே சுயஆய்வு செய்து பார்க்கிறேன். 'என் நேரம் வீணாகிறது!' 'என் வேலை பாதிக்கப்படுகிறது!' 'இது எனக்கு வேண்டும்!' என நான் சொல்லும்போதெல்லாம் கோல்பேயைவிட்டு தூரமாகத்தான் இருக்கிறேன். 'என் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கவில்லையென்றாலும்' என்னிடம் உள்ள மற்றவைகளைக் கொடுக்கும் துணிச்சல்கூட இல்லாமல் இருக்கிறேனோ?

'இதுதான் என் நம்பிக்கை' என தான் வைத்திருந்த தன் இன்னுயிரையும் இழக்கத் தயாரானார் கோல்பே. கோல்பே தன்னை இழந்ததால், வாழ்வு பெறுகின்றார் பிரான்சிஸ்.

ஆக, இந்தப் புனிதர் இரண்டு பரிமாணங்களில் நமக்கு அர்த்தம் கொடுக்கின்றார்:

ஒன்று, இவரைப் போல நாம் நம்மைக் கையளித்தால் அடுத்தவர்கள் வாழ்வு பெறுவார்கள். இது தற்கையளிப்பு.

இரண்டு, அடுத்தவர்கள் தங்களை இழப்பதால்தான் நாம் வாழ்வு பெறுகிறோம் என்ற உணர்ந்து அடுத்தவர்கள் நமக்காக செய்யும் தியாகங்களை எண்ணிப் பார்ப்பது. இது நன்றி.

இந்த தற்கையளிப்பையும், நன்றியையும்தான் நாளைய இறைவார்த்தைகளும் நமக்குச் சொல்கின்றன.

முதல் வாசகத்தில் (காண். யோசுவா 24:1-13) வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையுமுன் மக்கள்முன் உரையாற்றுகின்ற யோசுவா, யாவே இறைவன் அவர்களுக்கு ஆற்றிய அரும்பெரும் செயல்களையும், அவரின் தற்கையளிப்பையும் நினைவூட்டி, 'தாங்கள் உழுது பயிரிடாத இடத்தில் அறுவடை செய்ததற்காக, கட்டாத நகர்களில் வாழ்வதற்காக, நடாத திராட்சை மற்றும் ஒலிவத்தோட்டங்களின் பயனை அனுபவிப்பதற்காக' (24:13) என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க அவர்களை அழைக்கின்றார்.

நாமும் அன்றாடம் இந்த மக்களைப் போல இறைவனின் பராமரிப்பை உணரவே செய்கின்றோம். நாம் படைக்காத சூரியன் நம்மைத் தழுவுகிறது. நாம் உற்பத்தி செய்யாத தண்ணீர் நம் தாகம் தீர்க்கிறது. நாம் கண்டுபிடிக்காத நிலவும், நட்சத்திரங்களும் நம் கூரையை அலங்கரிக்கின்றன. இவைகள் இறைவனின் கைவண்ணம்தானே (திபா 8:3). இவைகளுக்காக நாம் நன்றி சொல்லவேண்டும்தானே!

நாளைய நற்செய்தியில் (காண். மத் 19:3-12) விவாகரத்து பற்றிய சர்ச்சையை இயேசுவிடம் சிலர் கொண்டுவர, விவாகரத்து பற்றிய முதல் ஏற்பாட்டுச் சட்டம் ஆண்களைப் பாதுகாத்து, பெண்களைத் தெருவில் விடுவதுபோல அநீதியாக இருக்கிறது என்று தோலுரித்துக் காட்டும் இயேசு, 'உங்களின் கடின உள்ளமே' விவாகரத்திற்குக் காரணம் என்கிறார். ஆக, இந்தக் கடின உள்ளத்தால், திருமண உறவில் ஒருவர் மற்றவருக்கு தங்கள் தற்கையளிப்பையும், நன்றியையும் காட்டாதபோது விவாகம் ரத்தாகிவிடுகின்றது. திருமண உறவில் ஒருவருக்கொருவர் உயிரை விடவேண்டும் என்பதல்ல. சின்ன சின்ன பிடிவாதங்களை விட்டுக்கொடுத்தாலே போதும். சின்ன விஷயங்களுக்கு நன்றி சொன்னாலும் போதும். சின்னஞ்சிறியவைகள்தானே வாழ்வில் பெரிய மகிழ்வைத் தருகின்றன.

தொடர்ந்து இயேசு மணத்துறவின் மேன்மையைச் (இதற்காக, திருமண உறவு 'தாழ்வு' என்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது!) சொல்கின்றார். 'விண்ணரசின் பொருட்டு மணமாகாத நிலையை சிலர் ஏற்றுக்கொள்கின்றனர்' என்று இயேசு சொல்கிறாரே, இந்த மணத்துறவின் நோக்கம் ஒருவர் மற்றவரிடமிருந்து ஒதுங்கிக்கொள்வதற்கான மறைவிடம் அல்ல. மாறாக, ஒருவர் மற்றவருக்காக தன்னையே முற்றிலுமாகக் கையளிக்கும், அடுத்தவரின் உடனிருப்பை நன்றி கூறிக் கொண்டாடும் ஒரு சுதந்திரம். கோல்பேயின் மணத்துறவே, திருமண பந்தத்தில் இருந்த பிரான்சிசுக்கு தன்னையே தியாகம் செய்யும் சுதந்திரத்தைத் தருகின்றது.

ஆக, அருள்நிலையோ, பொதுநிலையோ, தற்கையளிப்பும், நன்றியும் இருந்தால் நாமும் கோல்பேக்கள்தாம்!


2 comments:

  1. அருள்நிலையோ, பொதுநிலையோ சின்ன சின்ன பிடிவாதங்களை விட்டுக்கொடுத்தாலே போதும். சின்ன விஷயங்களுக்கு நன்றி சொன்னாலும் போதும். சின்னஞ்சிறியவைகள்தானே வாழ்வில் பெரிய மகிழ்வைத் தருகின்றன.என்பதை ஆணித்தரமாக கூறிய பாச தந்தைக்கு நன்றிகள் பல .ஆக, அருள்நிலையோ, பொதுநிலையோ, தற்கையளிப்பும், நன்றியும் இருந்தால் நாமும் கோல்பேக்கள்தாம்! என்பதற்கு இணங்க அருள்நிலையில் உள்ளவர்களுக்கும் ,குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இறை ஆசிர் நிறைய கிடைக்க உங்களது ஜெபத்தை உரிதாக்குங்கள் நாங்களும் கோல்பேயாக மாற ஜெபியுங்கள்!ஜெபிகின்றோம் !

    ReplyDelete
  2. புனித கோல்பே பற்றிக் கூறும் வார்த்தைகள்.."தற்கையளிப்பும்,நன்றி உணர்வும்"... எத்தனையோ கோல்பேக்களின் தியாகத்தால் தான் நாம் வாழும் வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ளது என உணர்ந்தாலே போதும்...நன்றி எனும் வார்த்தை நம் வாழ்வின் அங்கமாகிவிடும்.பிரான்சிஸ் கயொவ்னிசெக்கின் குடும்பத்தாரைப்பார்த்து " உங்க அப்பா அல்லது தாத்தா கோல்பேயைப்பற்றிக் கேட்க வேண்டுமென தந்தையின் ஆசை எடுத்த காரியத்தில் அவருக்குள்ள இன்வால்வ்மென்டைக் காட்டுகிறது.அருள் நிலையோ,பொதுநிலையோ நன்றியுணர்வும் தற்கையளிப்புமிருந்தால் நாமும் கோல்பேக்கள்தாம்.இக்கூற்றில் உள்ள உண்மை நம்மையும் ஆத்தும சோதனைக்கு இட்டுச் செல்கிறது.சொல்ல வந்ததை ஆணி அடித்தாற்போல் வார்த்தைகளில் பதிக்கும் தந்தைக்கு என் பாராட்டு!!!

    ReplyDelete