Sunday, August 16, 2015

நேர மேலாண்மை

'... ஆகவே காலத்தை முற்றிலும் பயன்படுத்துங்கள்' (எபேசியர் 1:16)

'ஞானத்தோடு வாழுங்கள்!' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற தூய பவுலடியார் உடனடியாக 'நேரத்தை முற்றிலும் பயன்படுத்துங்கள்!' என்று நேர மேலாண்மை பற்றிப் பேசுகின்றார்.

'நேர மேலாண்மையே வாழ்க்கை மேலாண்மை' என்பார்கள்.

மேலும், 'வாழ்க்கையை அன்பு செய்யும் எவரும் நேரத்தை விரயம் செய்வதில்லை. ஏனெனில் வாழ்க்கை என்ற ஓவியம் வரையப்படுவது நேரம் என்ற பலகையில்தான்' என்று சொல்வார் என் பேராசிரியர் ஒருவர்.

ஒருமுறை நம்மைக் கடக்கும் நேரம் கடந்ததாகவே இருக்கிறது.

'இன்று நாம் ஆன்லைனில் சேமித்த நேரத்தை ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!'

'திடீரென்று கிடைக்கும் ஃப்ரீ டைம் கண்டிப்பாக வீணடிக்கவே படுகிறது!'

'Procrastination: Don't postpone anything to tomorrow that can be done day after tomorrow!"

இதெல்லாம் இந்த வாரத்தில் நான் அங்கே இங்கே படித்த வாசகங்கள்.

நான் இரண்டாம் ஆண்டு இறையியல் படித்துக் கொண்டிருந்தபோது அருட்திரு. ஐசக் என்ற பேராசிரியர் நேர மேலாண்மை குறித்து வகுப்பெடுத்தார். அன்றிலிருந்து ஏதோ என்னால் முடிந்தவரை அவரின் அறிவுரைகளை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

1. Goal. நேரம் சரியாகச் செலவிடப்பட வேண்டுமென்றால் என் இலக்கு என்ன என்பதை நான் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, சினிமா பார்ப்பது நேரம் விரயமா? ஒரு விஞ்ஞானிக்கு அது நேர விரயம். ஆனால், திரைப்பட விமர்சகருக்கு அதுதான் அவரின் இலக்கு. ஆக, நம் இலக்கைப் பொறுத்தே நேரம் விரயம் செய்யப்படுகிறதா அல்லது பயன்படுத்தப்படுகிறதா என்பதை நாம் கணிக்க முடியும்.

2. Stephen Covey's Urgent-Important Quadrant. ஸ்டீஃபன் கோவே சொல்லும் அறிவுரை: நாம் செய்யும் வேலைகளை 'முக்கியம்', 'அவசரம்' என்ற வார்த்தைகளை வைத்து, (1) அவசரம் - முக்கியம், (2) முக்கியம் - அவசரமில்லை, (3) அவசரம் - முக்கியமில்லை, (4) அவசரமில்லை - முக்கியமில்லை என நான்கு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு கட்டங்களில் இரண்டாம் கட்டத்தில் உள்ள வேலைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டாம் கட்டம்தான் நம் இலக்கு நோக்கி நம்மை முன்னேற்றுகின்றது.

3. Eating the elephant. சிலர் நேரமில்லை எனப் புலம்புவார்கள். இவர்களுக்கு 'யானை டெக்னிக்;' இருக்கிறது. அது என்ன யானை டெக்னிக்? யானையை முழுதாக சாப்பிட முடியுமா? ஒரு கோழியை முதலில் முழுதாக சாப்பிட முடியுமா? ஒரு கிலோ கோழியை ஐம்பது கிராம் வீதம் 20 நாட்களில் சாப்பிட்டுவிட முடியும். அதுபோல ஆயிரம் கிலோ யானையை ஐம்பது கிராம் வீதம் பிரித்தால் ஐந்தரை ஆண்டுகளில் சாப்பிட்டுவிட முடியும். ஆக, யானையை சாப்பிடவே முடியாது என்று சொல்ல முடியாது. ஒரு பெரிய புத்தகம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்;. அதைப் படிக்க நேரமில்லை என்று நாம் சொன்னால் நேரமே கிடைக்கப்போவதில்லை. ஆனால், ஒரு நாளுக்கு ஐம்பது பக்கங்கள் என வைத்தால், 20 நாட்களில் நாம் 1000 பக்கங்கள் வாசித்துவிட முடியும்.

4. Eating the frog. அடுத்த டெக்னிக் 'தவளையை சாப்பிடுவது!' என்னங்க தவளையை எப்படி சாப்பிடுவது? ஒரு தட்டுல பிரியானி வைச்சு, அதுல ஒரு தவளையையும் வச்சி கண்டிப்பாக இரண்டையும் சாப்பிடனும்னு சொன்னா, நாம் எதை முதலில் சாப்பிடுவோம்? நமக்குப் பிடித்த அல்லது சாப்பிடுவதற்கு எளிதான பிரியானியைத்தான். ஆனால், நாம் பிரியானி சாப்பிடும்போது இந்தத் தவளை நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். ஆக, கண்ணை மூடிக்கொண்டு முதலில் தவளையை சாப்பிட்டுவிட்டால், பின் பிரியானியை ரசிக்க நேரம் கிடைக்கும். நான் பள்ளிக்கல்வி பயின்றபோது உயிரியல் பாடம் பிடிக்கும் என்பதால் அதையே படித்துக்கொண்டிருப்பேன். ஆனால், தவளை போல இயற்பியலும், கணிதமும் பயமுறுத்திக்கொண்டே இருக்கும். கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதைச் செய்துவிட்டால் சின்னச் சின்ன வேலைகள் இலகுவாக இருக்கும்.

5. Surplus time. உபரி நேரம். அதாவது, நாம் பயணம் செய்யும்போது, வரிசையில் காத்திருக்கும் போது, நோய்வாய்ப்பட்டிருக்கும்போது கிடைக்கும் நேரம் இது. பேங்குக்கு போறோம். டி.டி. எடுக்கணும். பெரிய வரிசை இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் டி.டி. சலானை திருப்பி, திருப்பி படிப்பது? அல்லது எவ்வளவு நேரம்தான் அழைப்பே வராத செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டிருப்பது? கையில் ஒரு புத்தகம் இருந்தால் உடனே படிக்கத் தொடங்கலாம். படிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அந்த நேரத்தில் எதையாவது சிந்தித்து முடிவெடுக்கலாம். வருகின்ற நாட்களில் செய்ய வேண்டியவை குறித்து யோசிக்கலாம்.

6. Pooling. சேர்த்துக்கொள்ளுதல். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்த கடைப்பிடிக்கப்படும் ஒரு நல்ல செயல் 'காரில் சேர்த்துக்கொள்ளுதல்' (car pooling). உதாரணத்திற்கு, நானும், என் பக்கத்துவீட்டுக்காரரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு திருமணத்திற்கு போக வேண்டும் என வைத்துக்கொள்வோம். இருவரிடமும் கார் இருக்கிறது. இருவரும் தனித்தனியே செல்ல வசதி படைத்தவர்கள்தாம். ஆனால், ஒருவர் தியாகம் செய்து மற்றவரை தன்னுடன் அழைத்துச் செல்வது. இப்படிச் செய்வதால் ஒரு காருக்குரிய எரிபொருள் முழுவதும் மிச்சமாகிறது. மற்றவரின் வேலையும் முடிந்து விடுகிறது. இதை நம்ம ஊருல செய்ய நம்மளோட 'கௌரவம்' குறுக்கிடலாம்! இதையே நாம் நேர மேலாண்மைக்குப் பயன்படுத்தலாம். அதாவது, வேலைகளை சேர்த்துக்கொள்வது. இப்ப கோயிலுக்குப் போகணும்னு வச்சிக்குவோம். போற வழியில் காய்கறி கடை இருக்குனா, கையில ஒரு பையும் கொண்டு போகணும். செபம் முடிந்து வரும் வழியில் காய்கறி வாங்கிட்டு வந்திடலாம். அதெப்படி கோயிலுக்கு பை எடுத்துட்டு போறதுன்னு யோசிக்கக் கூடாது. கூச்சப்படக்கூடாது. 'அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு' நாம அவங்களைப் பற்றி நினைச்சிட்டு இருக்கக் கூடாது. நம்ம நேரம்தான் நமக்கு முக்கியம்! நாமதான் நமக்கு முக்கியம்! (நல்லா இருக்குல இந்த 'philosophy'!)

7. Delegation. பணிப்பகிர்வு. எல்லா வேலையையும் நான்தான் செய்வேன் அப்படின்னு நினைக்கிறதும் தவறு. எந்த வேலையெல்லாம் அடுத்தவர்களிடம் கொடுக்க முடியுமோ, அதை அவர்கள் செய்ய விட்டுவிட வேண்டும். உதாரணத்திற்கு, ஐஸ்வர்யா ராய் டான்ஸ் ப்ரோகிராம் நடக்குது என வைத்துக்கொள்வோம். அவங்களோட வேலை நல்லா டான்ஸ் ஆடணும் அவ்வளவுதான்.  ஒருவேளை ஐஸ்வர்யா ராய், 'டிக்கெட் அடிக்கிறதுல இருந்து, அதை விற்பது, இடம் முன்பதிவு செய்வது, தகவல் சொல்லிக்கொண்டிருப்பது' என எல்லா வேலையையும் செய்யத் தொடங்கினால், அவருக்கு டான்ஸ் பழக நேரம் இருக்காது. அப்புறம் மேடையிலும் நல்ல நிகழ்ச்சியைத் தர முடியாது. எது நான் முதன்மையானதாகச் செய்ய வேண்டியதோ அதைச் செய்துவிட்டு, மற்றதை மற்றவர் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு தரும் எளிய விதி:

'ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் சொல்லுங்கள்!'

அவ்வளவுதான்!

இதை நாம் சரியாகச் செய்தாலே நம் நேரத்தில் 50 சதவிகிதம் மிச்சமாகும்.

மற்றொன்று, பகவத்கீதையின் தினாச்சார்யா (Dhinacharya) சொல்வது:

'ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு வேலை. அந்த நேரத்தில் அந்த வேலை மட்டுமே!'
(A time for everything and everything in its time)

'ஆகவே, காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்!'



2 comments:

  1. பாச தந்தை அவர்கள் மிக அழகாக நேரத்தை பற்றியும் அதை பயன்படுத்தும் விதத்தை பற்றியும் தன் வாழ்வில் நடந்த நிகழ்வோடு நனறாக ஒப்புமை செய்துள்ளார்கள்.அதாவது இலக்கு,ஸ்டீஃபன் கோவே சொல்லும் அறிவுரை,'யானை டெக்னிக்;' தவளையை சாப்பிடுவது!' உபரி நேரம்,சேர்த்துக்கொள்ளுதல்,பணிப்பகிர்வு இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு தரும் எளிய விதியை பற்றியும் மற்றும் பகவத் கீதையுடன் இணைத்து இன்றைய நாளிற்கு சுவை ஊட்டி இருக்கிறார்கள்.இவை எல்லாம் முதலில் எனக்கும் மற்றும் என் மாணவர்களுக்கும் ஒரு நல்ல பாடம்.நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.ஆக காலங்கள் கடவுளுக்கு சொந்தம் நாம் அனைவரும் கடவுளின் சொந்த பிள்ளைகள்.கடவுள் மட்டுமே நமக்கு சொந்தம் என்பதை உணர்தவர்களாக காலத்தை நன்றாக பயன்படுத்துவோம்.நன்றி தலைவா.

    ReplyDelete
  2. தந்தையே! முதல் முறை தங்கள் வலைப்பதிவைப்படித்தவுடன் என் மண்டைக் காஞ்சு போச்சு என்பதுதான் உண்மை.ஆனால் அதையே இரண்டாம் முறை வாசிக்க வைத்த பொறுமை எனக்கு அதை ஓரளவு புரியவும் வைத்தது. என் மனத்தில் நின்ற வரிகள்..." வாழ்க்கையை அன்பு செய்யும் எவரும் நேரத்தை விரயம் செய்வதில்லை; ஏனெனில் வாழ்க்கை என்ற ஓவியம் வரையப்படுவது நேரம் என்ற பலகையில் தான்." உண்மையைத்தவிர வேறில்லை.தங்களை நெறிப்படுத்திய விஷயங்களை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ள நினைக்கும் தங்களின் பெருந்தன்மைக்கு ஒரு சபாஷ்! தங்களின் பகிர்தல் அத்தனையுமே வாழ்ந்து காட்டப்பட வேண்டியவைதான் எனினும் அந்த " Eating the elephant"ம்," Eating the frog" ம் என்னை ரொம்பவே கவர்ந்தன.உலகப்பிரமாணமான அனைத்தையும் சொல்லி விட்டு இறுதியாக அதை இயேசு தரும் எளிய விதியோடும், பகவத்கீதையின் வரிகளோடும் தாங்கள் முடிக்கும் பாணி தாங்கள் எதைச்செய்திடினும் அதை ஒரு 'அருட்பணியாளரின்' கோட்டைக்குள் கொண்டுவந்து விடுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete