Tuesday, August 18, 2015

மரமும், கொடியும், புதரும்

'கதைகள் நமக்குப் பிடிக்கின்றன!' - இப்படிச் சொல்வதைவிட 'கதைகள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன!' என்றுதான் சொல்ல வேண்டும். கதைகள் எந்த அளவுக்கு அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவுக்கு அர்த்தத்தை தங்களுக்குள் மறைத்தும் கொள்கின்றன. ஆகையால்தான், கதைகளை நமக்குப் பிடிக்கிறது. நாம் ஒவ்வொருவருமே ஒரு கதையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கும் ஒரு தொடக்கம், ஒரு பிரச்சினை, ஒரு முடிவு அல்லது உச்சம் என இருக்கிறது.

காந்தியின் சத்தியாகிரகம் ஒரு கதை. ஹிட்லரின் நாசிசம் ஒரு கதை. உலகமயமாக்கல் ஒரு கதை. ஏன் விண்ணரசு என்பதும் ஒரு கதை.

நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 9:6-15) 'மரங்களின் கதையும்,' நாளைய நற்செய்தியில் (மத் 20:1-16) 'திராட்சைத் தோட்ட பணியாளர்கள்' கதையும் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

கிதியோன் இறந்துவிட்டார். அவருக்கு எழுபது மகன்கள். ஏனெனில் அவருக்கு நிறைய மனைவியர் . அப்படித்தான் விவிலியம் சொல்கிறது (நீத 8:30). கிதியோனின் வைப்பாட்டிக்கு பிறந்த அபிமெலக்கு என்பவன் தானாகவே அரசாள முன்வருகின்றான். முன்வந்தவன் சும்மா இருந்தானா? முதல் வேலையாக தனக்கு எதிரிகள் உருவாகிவிடக்கூடாது என்று தன் சொந்த அண்ணன், தம்பியர் 69 பேரை கொன்றுவிடுகின்றான். ஆனால், கடைசி மகன் யோத்தாம் ஒளிந்து கொண்டதால் தப்பிவிடுகின்றான் (9:5) - ஒருவன் தப்பினால்தானே கதை! - இப்படித் தப்பி ஓடிய யோத்தாம் மலைமேல் நின்றுகொன்று, தனக்குக் கீழ் வசிக்கும் செக்கேம் நகர மக்களைப் பார்த்துச் சொல்கிறான் ஒரு கதை - அதுதான், மரங்களின் கதை.

தங்களுக்கு அரசன் வேண்டும் என நினைக்கும் மரங்கள், 'எங்களை அரசாளுங்கள்!' என முதலில் ஒலிவ மரத்திடமும், பின் அத்தி மரத்திடமும், பின் திராட்சைக் கொடியிடமும் செல்கின்றன. ஆனால், இந்த மூன்றும் மறுத்துவிட, அவைகள் முட்புதரிடம் செல்கின்றனர். முட்பதர் உடனே, 'ஆம்!' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், 'என்னிடம் நீங்கள் வரவில்லையென்றால் நான் உங்களை பொசுக்கி விடுவேன்!' என சாபமும் விடுகிறது.

இந்த மரங்கள் மேலிருந்து கீழ்நோக்கி செல்கின்றன. மரங்களில் மிக அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டது ஒலிவ மரம்தான். மதிப்பே இல்லாமல் இருப்பது முட்புதர்.

இந்தக் கதை நமக்குச் சொல்வது என்ன?

அ. 'மேன்மையானதை விட்டு தாழ்வானதற்கு வரமாட்டேன்!'

இது ஒரு நல்ல வாழ்வியல் பாடம். அதாவது, ஒரு நிலையில் புறப்படும் மனித வாழ்க்கை மேல்நோக்கித்தான் செல்ல வேண்டுமே தவிர கீழ்நோக்கி செல்லக் கூடாது. ஆனால், வாழ்க்கை எல்லா நேரங்களிலும் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. குழந்தையாய் இருந்தபோது சிரித்துக் கொண்டே இருந்த நாம் வளர்ந்தவுடன் சிரிப்பை விட்டுவிடுதில்லையா? சின்ன வயதில் நாம் உலகம் என நினைத்த பொம்மை காரை பக்கத்து வீட்டு நண்பன் உடைக்க அதை உடனே மன்னித்த நாம், இன்று தெரியாமல் பேருந்தில் நம் கால்மேல் மற்றவர் கால் பட்டால் கோபப்படுவதோடல்லாமல், 'என்னை அவன் மதிக்கவில்லை! என்னை யாருமே மதிப்பதில்லை!' என துவண்டு போவதில்லையா? தன் பணி தெய்வங்களின் தலையில் திருப்பொழிவு எண்ணெயாக இருப்பது என்கிறது ஒலிவ மரம். தன் பணி மாந்தரின் வாழ்வில் சுவை தருவது என்கிறது அத்தி மரம். தன் பணி மாந்தர்களுக்கும், தெய்வங்களுக்கும் புத்துணர்ச்சி தருவது என்கிறது திராட்சைக் கொடி. ஆக, 'என் மேன்மையான வேலையை நான் செய்வதை விடுத்து' உங்களுக்கு நடுவில் உட்கார்ந்து உங்கள் பஞ்சாயத்தைக் கேட்க விரும்பவில்லை என ஒதுங்கிக் கொள்கின்றன. ஆக, எனக்குக் கொடுக்கப்பட்ட, அல்லது நான் தேர்ந்து கொண்ட, என் இயல்பை முழுவதும் வெளிப்படுத்துகின்ற பணியை நான் நிறைவாகச் செய்ய வேண்டும். அதில் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆ. 'அசைந்தாட வருவேனா!'

'அரசாள வாருங்கள்!' என மரங்கள் அழைக்கின்றன. ஆனால் 'அசைந்தாட வருவேனா?' என மறுக்கின்றன மூன்றும். மிக அழகான தமிழ் மொழிபெயர்ப்பு இது. அரசன் செய்யும் பணியை கேலி செய்வது போல இருக்கிறது இந்த வார்த்தை. அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் செய்வது 'அசைந்தாடுதல்' மட்டும்தானே! நம்ம ஜெயாவும், மோடியும் கோட்டைக்கும், வீட்டுக்கும் அசைகிறார்கள். தன் விரலை அசைக்கிறார்கள். வேலை நடந்தேறுகிறது. அவர்கள் ஒன்றுமே செய்வதில்லை. சும்மா உட்கார்ந்து கையை அசைப்பதற்கு இவ்வளவு பகுமானம்? மரங்கள் அசைந்தாட மறுத்ததால் முட்புதர் அரசனாகி விடுகிறது. நான் மேலே சொன்ன கருத்திலிருந்து இப்போது முரண்படப்போகிறேன். 'முட்புதர் அரசனாகிவிட்டது!' என்று ஒலிவ, அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் இனி குறைசொல்லக் கூடாது. ஏனெனில், அவைகள் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்ததால்தான் முட்புதர் அரசனாகிவிட்டது. இன்று 'ஜெயா சரியில்லை!' 'மோடி சரியில்லை!' என நான் குறைசொல்ல எனக்கு உரிமையில்லை. ஏன்? 'நான் தகுதியானவன்' என நினைத்தால், நான் முன்வந்திருக்க வேண்டும். நான் முன்வராமல் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு இப்போது அவன் அல்லது அவள் என்னை நெருக்குகிறாள் என்று சொல்வது முறையாகுமா? ஆகாது! எனக்குத் தகுதி இருப்பதாக நான் நினைத்தால் அதை நான் வெளிப்படுத்த வேண்டும். என்னிடம் ஒளி இருந்தால் அதை நான் மேலே ஏற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான்! அதை விடுத்து, இந்த சிம்னி விளக்கின் வெளிச்சம் சரியில்லை என்று சொல்லக்கூடாது.

இ. இன்று என்னை ஏதாவது முள் அரசாள்கிறதா?

நம்மளோடு ஆறடி உடம்பில ஒரு இடத்தில் முள் குத்துகிறது என வைத்துக்கொள்வோம். உடலின் பரப்போடு ஒப்பிடும்போது முள்ளின் அளவு மிக மிக சிறியது. ஆனால், காலில் குத்திய சின்ன நெருஞ்சிகூட நம்மை அப்படியே உட்காரவைத்துவிடுகிறது. வாழ்வில் நமக்கு எல்லாம் நன்றாக இருந்தாலும் ஏதாவது ஒரு முள் நம்மைக் குத்திக்கொண்டே இருக்கலாம் - என்னிடம் இருக்கும் தவறான பழக்கம் அல்லது நான் அதிகமாக வாங்கிச் சேர்க்கும் பொருட்கள், கடன், கூடாநட்பு என எதுவும் முள்ளாக இருக்கலாம். 'சின்ன முள்தானே! அப்புறும் பார்த்துக்கொள்ளலாம்!' என விட்டுவிடக்கூடாது. ஏனெனில், சின்ன முட்களுக்கு கேதுரு மரங்களையே பொசுக்கிவிடும் ஆற்றல் இருக்கின்றன.

முதல் வாசகத்தில் நான்கு வகை மரங்கள் (!) - ஒலிவம், அத்தி, திராட்சை - முள். நற்செய்தி வாசகத்தில் இரண்டு வகை மனிதர்கள் - முதலில் வந்தவர்கள், இறுதியில் வந்தவர்கள். முதலில் வந்தவர்கள் தங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தெனாரியம் பெறுகின்றனர். இறுதியில் வந்தவர்கள் தங்களின் ஒப்பந்ததாரரின் கருணை அடிப்படையில் ஒரு தெனாரியம் பெறுகின்றனர். ஒப்பந்தம் முணுமுணுக்கிறது. கருணை மௌனமாக நகர்கிறது.

'முட்புதர்போல இருப்பவன் அரசனாக இருக்கிறான்!' என்றோ, 'ஒருமணிநேரம் உழைத்தவன் ஒரு தெனாரியம் பெறுகிறான்!' என்றோ முணுமுணுத்து என் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, என் வேலை அருட்பொழிவு எண்ணெயாகவோ, இனிமையாகவோ, புத்துணர்ச்சி தரும் பானமாகவோ, கொடுத்த வேலையை நிறைவாகச் செய்தவராகவோ இருப்பதே என்று நினைப்பதே சால்பு!


2 comments:

  1. " எந்நிலையிலும் நான் தேர்ந்துகொண்ட,என் இயல்பை நிறைவாக வெளிப்படுத்துகிற பணியை நான் செய்ய வேண்டும்" என்ற உண்மையை ஒலிவ மரத்தையும்,அத்திமரத்தையும்,திராட்சைக்கொடிகளையும் வைத்துப் பேச வைத்திருப்பது அருமை.என்னிடம் உள்ள ஒளிவிளக்கைத் தூண்டிவிடாமல் அடுத்து இருக்கும் சிம்னி விளக்கின் வெளிச்சம் சரியில்லை எனக் கூறுவது சரியில்லை..."அட ஆமால்ல!" என்று ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.சின்ன முள் போன்ற நம் கூடா பழக்கங்கள் நம்மை அழித்துவிடும் எனும் பதிவு நமக்கு எச்சரிக்கை மணியடிக்கிறது.இறுதியாக அடுத்தவருக்கு கிடைக்கும் எதையும் பார்த்துப் பெருமூச்சு விடாமல் நமக்குக்கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்வதே சால்பு....எல்லாமே முத்தான வரிகள். பின் ஏன் தயக்கம் இவற்றைப் பின்பற்றுவதில்? யோசிப்போம்! தந்தைக்கு நன்றி!!

    ReplyDelete
  2. ஒரு நிலையில் புறப்படும் மனித வாழ்க்கை மேல்நோக்கித்தான் செல்ல வேண்டுமே தவிர கீழ்நோக்கி செல்லக் கூடாது.கிறிஸ்தவர்கள் என்பதால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. நாம் கிறிஸ்தவர்கள் என்பதால், மீட்பும் நமக்கு கிடைத்துவிடாது. மாறாக, நமது வாழ்வு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஒரு வாழ்வாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வு அமைய மன்றாடுவோம்.நல்ல ஒரு பதிவின் மூலம் என்னை விளித்து எழ வைத்த என் பாச தந்தைக்கு நன்றிகள்.எழுவோம் ! ஒளிவீசுவோம் !

    ReplyDelete