Friday, August 28, 2015

ஆரோக்கிய அன்னை

'36 வயதினிலே' திரைப்படத்தில் தோழி கதாநாயகியிடம் சொல்வாள்: 'நாம் இவ்வளவு நாட்கள் கேள்விகளுக்கு வெறும் பதிலாக இருப்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கின்றோம். நாமே கேள்வி ஆகிவிட்டால் பின் யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது!'

மரியாள் இன்று கேள்வியாகவும் இருக்கின்றார். பதிலாகவும் இருக்கின்றார்!

மரியாள் என்றும் வியப்புக்குரியவர்! எந்தப் பெயர் கொண்டு அவரை அழைத்தாலும் அவரின் அழகும், இளமையும், இனிமையும் குன்றுவதில்லை. (இந்து மரபில் அதிக பெயர்களால் வணங்கப்படுபவர் விநாயகர்!)

நாளை 'கீழைநாட்டின் லூர்து' என்று சொல்லப்படும் 'வேளாங்கண்ணியில்' (ஏன் 'லூர்தை' 'மேலைநாட்டு வேளாங்கண்னி!' என்று சொல்லக்கூடாது?) திருவிழா கொடியேற்றம்.

'கொடியேற்றம்' - இது நாம் இன்னும் முழுமையாக கிறிஸ்தவர்கள் இல்லை என்பதற்கான வரலாற்றுச் சான்று. நம் இந்திய மரபிலிருந்து நாம் தழுவிக்கொண்டதுதான் கொடிமரமும், கொடியேற்றமும். நவநாள்கள் பக்தியாக சிறப்பிக்கப்படுவது நம் நாட்டில் மட்டும்தான் என நினைக்கிறேன். செபமாலை-திருப்பலி-சிறப்பு மறையுரை என நம் ஊர் கோலகலாமாக இருக்கும்.

வேளாங்கண்ணியில் நடந்ததாகச் சொல்லப்படும் மூன்று அற்புதங்களையும் (முடமான சிறுவன் நடந்தது, கடல்மீது தவித்த கப்பல் காப்பாற்றப்பட்டது, பொங்கிய பால்குடம்) வத்திக்கான் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.

வேளாங்கண்ணி மாதாவை ஆரோக்கிய அன்னை என நாம் அழைக்கின்றோம். 'கால் ஊனமுற்ற சிறுவனுக்கு நலம் தந்ததுதான்' இதன் பின்புலத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நலம் தரும் அன்னை இவர்.

இவரைத் தாயாகக் கொண்டாட மதங்கள், மொழிகள், இனங்களைக் கடந்து மக்கள் இந்நாட்களில் வேளாங்கண்ணியில்கூடுவர்.

இதற்கான தயாரிப்பில் நாகப்பட்டினம் ஆட்சியர் திரு. பழனிச்சாமி வேளாங்கண்ணியில் முகாம் இட்டிருக்கிறார். தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு என எல்லா ஏற்பாடுகளும் அங்கே செய்யப்படும். இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர் என எல்லாரும் ஒருவரோடொருவர் ஒன்றித்து இருப்பதே அற்புதம் இல்லையா?

என்னைப் பொறுத்தவரையில் இதுதான் 'மரியாளின் வெளிப்பாடு!'

எனக்கு வேளாங்கண்ணி மாதா பக்தியைக் கற்றுக்கொடுத்தவர் என் அம்மா. சிறு வயதில் தெருவில் ஒருநாள் கண்டெடுத்த மூடியில்லாத மாதா தீர்த்தப்பாட்டிலில் நான் பார்த்த வேளாங்கண்ணி மாதாவை என் 12ஆம் வகுப்பு வரை என்னுடன் வைத்திருந்தேன். என் திருநிலைப்படுத்துதலுக்குப் பின் என் நண்பர்களோடு நான் அங்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளும் வேளாங்கண்ணி வளர்ந்து கொண்டே இருக்கிறது. மாதாவின் பிரசன்னத்திற்கு இது ஒன்றே சான்று.

'ஆரோக்கியம்!' - இது மட்டும் நம் வாழ்வில் குறைவுபட்டால் எல்லாம் குறைந்துவிடுகிறது. வாழ்க்கை முடங்கிவிடுகிறது.

இந்த ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி வானில் பறக்கவிடப்படும்நேரம் நிறையப் பேர் கண்களில் கண்ணீர் வழியும். இந்தக் கண்ணீரில் வங்காள விரிகுடாவே கொஞ்சம் ஸ்தம்பித்துப்போகும்.

ஆக, மேலிருந்து வரும் பக்தி, கீழிருந்து வரும் பக்தி என நாம் கிறிஸ்தவ பக்தி முயற்சிகளைப் பிரித்தால், வேளாங்கண்ணியின் பக்தி முயற்சி கீழிருந்து வருவது. மக்களின் வியர்வை, கண்ணீரிலிருந்து வருவது. இதை யாரும் எந்த புத்தகத்திலும் கோட்பாடாக வரைந்துவிட முடியாது.

நம் ஒவ்வொருவரின் கண்களில் கண்ணீர் இருக்கும் வரை,

இயேசுவின் அன்னையும், நம் அன்னையுமான மரியாள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்.

கானாவூர் திருமணத்தில் வெற்று ஜாடிகளை திராட்சை ரசத்தால் நிரப்ப

தன் மகனை வேண்டிய அன்னை,

காலியான நம் ஜாடிகளையும் நிரப்ப அருள்கூர்வாராக!

ஆரோக்கிய அன்னையின் திருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!


2 comments:

  1. அன்னையின் அன்பைச் சுவைத்த ஒருவரால் தான் இத்துணை உணர்வு பூர்வமாக அவரைப்பற்றி விவரிக்க இயலும்.எனக்குத் தோன்றுகிறது..தந்தையே! நீங்கள் கண்டெடுத்த மூடியில்லா தீர்த்த பாட்டிலில் கண்ட வேளாங்கண்ணி மாதாதான் தங்களின் குருத்துவத்தின் பின்புலமோ?! அந்த அன்னையின் கொடி விண்ணில் பறக்கையில் அனைவரின் கண்களும் குளமாகும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி.சரியாகச் சொன்னீர்கள் நம் வாழ்க்கையில் 'ஆரோக்கியம்' குறைவு படும்போது எல்லாமே குறையும் என்று.கானாவூர் திருமணத்தில் வெற்று ஜாடிகளை திராட்சை ரசத்தால் நிரப்பத் தன் மகனை வேண்டிய அன்னை ,காலியான நம் ஜாடிகளையும் உடல்,உள்ள ஆரோக்கியத்தால் நிரப்ப அருள் கூர்வாராக! அந்நிய மண்ணிலிருந்து அன்னையின் கொடியேற்றத்தை ஞாபகப்படுத்தியிருக்கும் தந்தைக்குத் திருநாள் வாழ்த்துக்கள்! அன்னை தங்களை அரவணைத்துக் காப்பாராக!!!

    ReplyDelete
  2. ஏசு தந்தையே ,உங்களின்
    பதிவை படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது
    வேளை மண்ணில் காலடி வைத்ததும் என் மனது குளிர்ந்தம்மா என்ற பாடல் வரிகளும், அப்பாவுடன் கரம் கோர்த்து வேளாங்கண்ணி சென்றதுமே என் ஞாபகத்திற்கு வருகிறது.
    உலகினரின் பார்வையில் மிகச் சிறியவரான அன்னை மரியாவை இறைவன் தேர்ந்தெடுத்து, பெருமைப்படுத்தினார். அவரது பிறப்பு நம் அனைவருக்கும் இந்த நம்பிக்கையைத் தருகிறது. நாம் எவ்வளவுதான் சிறியவராக, ஆற்றல் குறைந்தவராக இருந்தாலும், இறைவன் நினைத்தால், நம்மை உயர்த்துவார். அந்த இறைவனின் பெருமையை நம் வாழ்நாள் முழுவதும் இசைப்போமாக!இன்றைய பதிவில் தந்தை அவர்கள் மிக அழகாக கீழ்க்காணும் வார்த்தைகளில் கூறியிருக்கிறார்கள் அது என்னவென்றால் நம் ஒவ்வொருவரின் கண்களில் கண்ணீர் இருக்கும் வரை,
    இயேசுவின் அன்னையும், நம் அன்னையுமான மரியாள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்.ரோமாபுரியில் இருந்தாலும் உங்கள் நினைவு அன்னையை நோக்கியதாகவே இருக்கிறது ஆக, எனது தினசரி ஜெபமாலை பக்தி முயற்சியில் நான் அனுதினமும் உங்களுக்காக ஜெபிக்க கடமைபட்டுள்ளேன் தொடர்ந்து ஜெபிப்பேன் !அன்னையின் அருட்கரம் உங்களை தொடர்ந்து வழிநடத்தட்டும் .நன்றிகள் பல பல என் கண்களை குளமாக்கியதற்கு மீண்டும் ஒருமுறை .தந்தைக்கு அன்னையின் கொடியேற்றத்தின் திருவிழா மற்றும் அன்னை பிறப்பு திருவிழா வாழ்த்துக்கள் .Ave Maria

    ReplyDelete