Monday, August 10, 2015

குழந்தை உள்ளம்

எகிப்தின் பார்வோன் எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லத் திட்டமிட்டபோது, அவனின் கையிலிருந்து யாவே இறைவனால் வியத்தகு முறையில் காக்கப்பட்டு, இளவரசனாக வளர்ந்து, தன் தோன்றல் தெரிந்து தன் இனத்தின் விடுதலைக்காக தன் உயிரை துச்சமாக மதித்து, வணங்காக் கழுத்துள்ள மக்களோடு நாற்பது ஆண்டுகள் வெயிலிலும், மழையிலும் பயணம் செய்த மோசேக்கு பாலும், தேனும் பொழியும் நாட்டிற்குள் நுழைதல் மறுக்கப்படுகிறது. 'நீ போகமாட்டாய்!' என்கிறார் கடவுள். 'கடவுள் எவ்வளவு பெரிய கல்நெஞ்சக்காரர்!' என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், மோசே கடவுளை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. இதுதான் இன்றைய நற்செய்தியில் (காண். மத் 18:1-5, 10-14) இயேசு சொல்லும் குழந்தை உள்ளம். தந்தை சொல்வதை குழந்தைகள் எதிர்த்துப் பேசுவதில்லை. வளர்ந்தவர்கள்தாம் அடுத்தவர்கள் சொல்வதற்கெல்லாம் ஒரு பதில் வைத்திருப்பார்கள் 'தன் தந்தைக்கு எல்லாம் தெரியும்' என்ற ஒன்று மட்டும்தான் குழந்தைக்குத் தெரியும். இந்தக் குழந்தையின் உள்ளம் இருந்ததால்தான் மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய முடியவில்லையென்றாலும், இறைவனின் விண்ணக வீட்டிற்குள் நுழைகின்றார். கடவுளின் கைகளால் அடக்கம் செய்யப்படும் பாக்கியம் பெறுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 31:1-8) மோசே நுழைய முடியாது என கடவுள் சொல்லி விட்டார். பின் யார்தான் மக்களை வழிநடத்திச் செல்வது? மீட்பு என்ற தொடர் ஓட்டத்தில் குச்சி இப்போது மோசே கையிலிருந்து, யோசுவா கைக்கு மாறுகிறது. 'குச்சியை அடுத்தவர் கையில் கொடுப்பது!' - இது நாம் எல்லாரும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தில் செய்யக்கூடாது. நாம் பிறந்த அடுத்த வாரத்தில் நாம் மருத்துவமனையில் பிறந்து கிடந்த தொட்டில் அடுத்துவருக்கு உரியதாகிவிடுகிறது. நாம் பன்னிரண்டாம் வகுப்பு வரை செல்லும் பள்ளிக்கூடம், நாம் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் வேறொருவருடையதாகிவிடுகிறது. நாம் வேலை செய்யும் அலுவலகம், நாம் வசிக்கும் வீடு, நாம் பயணிக்கும் வாகனம், ஏன் நாம் குடியிருக்கும் உடல் என எல்லாமே நமக்கு தற்காலிகமாகவே சொந்தமாக இருக்கிறது. இதைத்தான் கீதையும் 'எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையது!' என்கிறது. குழந்தைகள்தான் புதிய இடத்திற்கு ஏற்றவாறு தங்களையே உடனே மாற்றிக்கொள்கின்றனர். வளர்ந்தவர்களுக்கு தங்கள் பழைய இடமும், தங்கள் பழைய உறவும் எப்போதும் எளிதாக விட்டுவிடமுடியாததாக இருக்கின்றது.

மோசே தன் பிரியாவிடையின்போது கூட, 'நான் செய்தது மாதிரி செய்!' என்று தன்னை மையப்படுத்தவில்லை. 'அஞ்சாதே! நடுங்காதே! வலிமைபெறு! துணிவுகொள்! ஆண்டவரே உனக்கு முன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னைவிட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார்!' என்று ஆண்டவரை மையப்படுத்தி நம்பிக்கை ஊட்டுகின்றார்.

இயேசு சொல்லும் குழந்தை உள்ளம் நம் வாழ்வில் இரண்டு நிலைகளில் வெளிப்படட்டும்:

ஒன்று, எது நடந்தாலும் அது நல்லதுக்கே என்று நினைப்பது. வாழ்க்கை நம் திறமைகளுக்கும், நம் ஆற்றலுக்கும் ஏற்ப நமக்கு கைம்மாறு செய்யாவிட்டாலும், 'அவர் கொடுத்தார்! அவர் எடுத்துக்கொண்டார்' என்ற மனநிலையில்.

இரண்டு, எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்பதை உணர்ந்து எதையும் பற்றிக்கொள்ளாமலும், ஒன்றை நாம் மற்றவருக்கு விட வேண்டும் என்ற நிலை வரும்போது முணுமுணுக்காமலும் இருக்கும்போது.


1 comment:

  1. நாம் பெற்ற பிள்ளைகளுக்கும்,நம்மைச்சார்ந்த மற்றவருக்கும் என்னென்னவோ செய்கிறோம்...பலவித எதிர்பார்ப்புகளோடு.அவை நடக்காதபோது மனமுடைந்து போகிறோம்; நம்மையே சபித்துக்கொள்கிறார்.இறைவனே 'சகலமும்' என நினைத்து வாழ்ந்த மோசேக்கு 'வாக்களிக்கப்பட்ட நாடு' இல்லை என்றானபோது எந்த முணுமுணுப்புமின்றி யோசுவாவை அனுப்பி வைக்கிறார் சகல ஆசீர்வாதங்களோடு.வாழ்வின் இடர்பாடுகளைச் சமாளிக்க குழந்தை உள்ளம் தான் வழி எனில் அதையும் முயற்சித்துப் பார்க்கலாமே தந்தை சொல்லும் வழியில்..." இன்று எனது; நாளை உனது" எனும் பற்றற்ற நிலையும், " அவர் கொடுத்தார்; எடுத்துக்கொண்டார்".. எனும் யோபுவின் மனநிலையும் தான் அவை.முயற்சிப்போமே!!!

    ReplyDelete