Sunday, August 23, 2015

தீதும் நன்றும்

'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்' (யோவான் 6:66)

'இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது 666.' (திருவெளிப்பாடு 14:18)

எனக்கு 11ஆம் வகுப்பு மறைக்கல்வி எடுத்த ஆசிரியர் ஒருநாள் தென்னமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்தக் குழந்தையின் நெற்றியில் 666 என எழுதியிருப்பதாகவும், அந்தக் குழந்தையே அந்திக்கிறிஸ்து (antichrist) எனவும், உலகம் சீக்கிரம் அழியப்பபோவதாகவும் சொன்னார். 'உலகம்தான் அழியப்போகிறதே!' என்ற சொல்லி இரண்டு வாரம் வீட்டுப் பாடம் செய்யாமல் அடி வாங்கியது வேறு விஷயம்.

அந்திக்கிறிஸ்து, அதாவது, கிறிஸ்துவுக்கு எதிராக இருப்பவரின் எண் 666 என யோவானுக்கு திருவெளிப்பாடு அருளப்படுகிறது. யோவான் 6:66ஐ; பாருங்களேன். என்ன சொல்கிறது? 'அன்றே பலர் அவரிடமிருந்து விலகினர்' அல்லது 'அவருக்கு எதிராக மாறினர்'. 1555ஆம் ஆண்டில்தான் ராபர்ட் எஸ்டியன் என்பவர் கிரேக்க புதிய ஏற்பாட்டை எண்ணிக்கை கொண்ட வசனங்களாகப் பிரிக்கிறார். இப்படி அவர் பிரிக்கும்போது 6:66 என்ற எண் எப்படி சரியாக இந்த வசனத்திற்குப் பொருந்தியது? இது தானாக நிகழ்ந்த ஒரு செயலா?

666 என்ற எண்ணை நாம் திபா 66:6 மற்றும் எசாயா 66:6லிம் பார்க்கலாம். ஆனால் அவைகளுக்கும் எதிர்கிறிஸ்துவுக்கும் தொடர்பே இல்லை. ஆனால் யோவான் 6:66க்கும் திவெ 14:18ல் வரும் '666'க்கும் தொடர்பு இருக்கிறது. எப்படி? ஒன்று, இரண்டையும் எழுதியவர் யோவான். இரண்டு, இரண்டிலுமே, புரிந்துகொள்வதைப் பற்றியும், புரிந்துகொள்வதற்கு தடையாக இருப்பது பற்றியும் இருக்கின்றது.

இந்த எண் ஆராய்ச்சி (இது என் நண்பர் திரு. இருதயராஜ் அவர்களுடன் ஒருநாள் நடந்த உரையாடலில் அவர் எனக்குச் சொன்னது!) ஒரு பக்கம் இருக்கட்டும்.

'பலர் அவரை விட்டு நீங்கினர்!'

இந்த வாக்கியத்தை மட்டும் சிந்தனைக்க எடுத்துக்கொள்வோம்!

அதாவது, இவ்வளவு காலம் இயேசுவோடு இருந்த சிலர் இன்று அவரை விட்டு விலகுகின்றனர். இப்படி விலகுகிறார்கள் என்றால், ஒன்று, இயேசுவைவிட பெரிய ஆளை அல்லது பொருளை அல்லது கருத்தியலை அவர்கள் கண்டிருக்கலாம், அல்லது, இயேசு தரும் சவால் மிகப்பெரியதாக இருப்பதால் அதிலிருந்து பின்வாங்கலாம்.

இயேசுவைவிட்டு நீங்கினர் இந்தச் சீடர்கள்!

மற்றொரு பக்கம் இயேசுவை தங்கள் வாழ்விலிருந்து நீங்கும்படி மூன்றுபேர் அவரிடம் சொல்கின்றனர்: ஒன்று, ஏரோது (மத் 2:16-22). இயேசு என்ற குழந்தை பிறந்ததே அவனின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. ஆக, இயேசு மட்டும் அல்ல, எந்த ஆண் குழந்தையும் தன் நாட்டில் இருக்கக்கூடாது என்று அனைத்து ஆண் குழந்தைகளையும் நீக்கிவிடத் துணிகின்றான். இரண்டாவது, பேதுரு. இயேசு முதன்முதலாக தன்னை அழைக்கும்போது அவர் செய்த மீன்களின் புதுமையைப் பார்த்துவிட்டு, 'ஐயோ! பாவி நான்! என்னைவிட்டு அகலும்!' (லூக் 5:8) என்கிறார். பேதுருவுக்கு இயேசுவின் இரக்கப்பெருக்கைவிட தன் பாவச்சுமைதான் கண்முன் பெரிதாக நின்றதால் அப்படிச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக, கெனசரேத் நகர மக்கள். பேய்பிடித்த ஒருவரின் பேயை நீக்கிய இயேசு அதை பன்றிகள் கூட்டத்தில் அனுப்ப, பன்றிகள் கூட்டமாய் கடலில் விழுந்து மடிந்துவிடுகின்றன. அந்த நேரத்தில் அங்கு வருகின்ற நகர மக்கள் இயேசுவை தங்கள் ஊரிலிருந்து அகலுமாறு வேண்டுகின்றனர் (மாற்கு 5:17).

ஆக, இயேசு தங்களைவிட்டு நீங்க வேண்டும் என்றும், இயேசுவைவிட்டு தாங்கள் நீங்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.

இப்படி விரும்புதல் தவறா? இல்லை! இதுதான் மனித இயல்பு. எப்படி?

'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன!' (யோவான் 6:68) என்று சொன்ன பேதுரு, 'அவர் யாரென்றே எனக்குத் தெரியாது!' (லூக் 22:55-57) என்று மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கவில்லையா?

ஆக, நம்மில் இருக்கும் ஒரு இயல்பு கடவுளைப் பற்றிக்கொள்ள நினைக்கிறது. மற்றொரு இயல்பு அவரைவிட்டுத் தூரப் போக நினைக்கிறது. ஒரு இயல்பில் நாம் வானதூதரைப் போல மகிழ்ச்சியாக, அமைதியாக, சாந்தமாக இருக்கிறோம். மறு இயல்பில் நாம் வருத்தமாக, சலனத்தோடு, அமைதியற்று இருக்கிறோம். ஒரு இயல்பில் 'நான்தான் இவ்வுலகின் ராஜா!' என்று பெருமிதத்தோடு இருக்கிறோம். மறு இயல்பில் 'நான் ஒன்றுமே இல்லை!' என்று அதாள பாதாளத்தில் விழுந்துவிடுகின்றோம்.

இந்தப் போராட்டத்தை பவுல், அகுஸ்தினார் என எல்லாப் பெருந்தலைகளும் அனுபவித்திருக்கின்றன.

இந்தப் போராட்டம் இருக்கும்வரைதான் நாம் மனிதர்கள்! அல்லது மனித உருவில் நாம் இருக்கும்வரை இந்தப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும்!

'தீதும் நன்றும் பிறர்தர வாரா!' என்று புறநானூறு (பாடல் 192) சொல்வதன் அர்த்தமும் இதுதான். தீமையும், நன்மையும் வெளியிலிருந்து நம்மிடம் வருவதில்லை. அவை இரண்டும் நம் அகத்தில் என்றும் இருக்கின்றன.

'வாழ்வுதருவது தூய ஆவியே! ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது!' (யோவான் 6:63) என்ற இயேசுவின் வார்த்தைகள்தாம் நம் பாதைக்கு வெளிச்சம்.

மேலானவைகளை நாம் தழுவிக்கொண்டால், தாழ்வானவைகள் தானாகவே அகன்றுவிடும்!


4 comments:

  1. முரண்பாடுகளின் மொத்தக்கலவை தான் மனிதன் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு பதிவு. பல நேரங்களில் நாம் நாமாக இருக்க முடியாத்தற்குக் காரணம் நம் உள்ளத்தில் உறையும் ஏரோதுக்களும்,பேதுருக்களும்,ஏன் சில மிருகங்களும் கூட நம் குணாதிசயத்தையும் வாழும் முறையையும் நிர்ணயிப்பதுதான்."ஜான் ஏறினால் முழம் சறுக்கும்"என்பதற்கேற்ப என்னதான் நம் உள்ளம் மேலானவைகளத் தழுவ விரும்பினும் நம் ஊனியல்பு நம்மைக் கீழானதை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதே உண்மை.என்னகத்தில் உள்ள நன்மையும் தீமையும் தான் நான் வாழும் முறைக்குக் காரணம் என்று உணரும் பக்குவத்தை இறைவனிடம் வேண்டுவோம்; இயேசுவின் வார்த்தைகள் தரும் வெளிச்சத்தின் உதவி கொண்டு நம் பாதையை அமைப்போம்.அழகானதொரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மேலானவைகளை நாம் தழுவிக்கொண்டால், தாழ்வானவைகள் தானாகவே அகன்றுவிடும்! தந்தைக்கு நன்றிகள் நானும் அப்படித்தானே திட்டு வாங்கினேன்.டீச்சர் கலை நான் என்ன சொன்னாலும் நம்ப வேண்டியது தானா என்று என்னையும் என் தோழிகளையும் திட்டிட்டாங்க அது மாறி இருக்கு உங்க கதை.மிக்க நன்றி !

    ReplyDelete
  3. Kannadasan's lines in Vasantha Malikai came to my mind:

    "irandu manam vEndum,
    iraivanidam kEtpAEn;
    ninaithu vAzha ontru,
    maranthu vAda ontru.."

    What a heart do I have?
    Tattered and torn apart;
    One half, the monk, the saint and the angel.
    The other, the monk, the saint and the angel knows best.

    "gnaniyin manamO asaiyil thEni"



    ReplyDelete