Tuesday, August 4, 2015

மரிய வியான்னி யோவான்

திருத்தந்தை (இப்போது புனிதர்) 23ஆம் யோவான் அவர்களை நிறையக் குருக்கள் சந்திக்கச் சென்றிருந்தார்கள். திருத்தந்தை அவரது நாற்காலியில் அமர்ந்திருக்க, ஒவ்வொரு அருட்பணியாளரும் போய் தன்னை அறிமுகம் செய்து, கைகுலுக்கி, புகைப்படம் எடுத்துக்கொண்டார். முதலாமவர் தன்னை ஒரு துறவற சபையின் மாநிலத் தலைவர் என்றும், இரண்டாமவர் தன்னை ஒரு பேராசிரியர் என்றும், மூன்றாமவர் தன்னை ஒரு குருமட அதிபர் என்றும், நான்காமாவர் தன்னை ஒரு விஞ்ஞானி என்றும், ஐந்தாமவர் தன்னை ஒரு பேச்சாளர் என்றும், ஆறாமவர் தன்னை ஒரு இசைக்கலைஞன் எனவும் என்று தொடர்ந்து பல அருட்பணியாளர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர். இந்த வரிசையின் கடைசியில் சென்ற அருட்பணியாளர் திருத்தந்தைக்கு அருகில் செல்லச் செல்ல, தனக்குச் சொல்லிக்கொள்ள ஒரு பட்டமும், படிப்பும் இல்லையே என வருந்திக் கொண்டே சென்று, 'நான் ஒரு பங்குத்தந்தை' என அறிமுகம் செய்தார். திருத்தந்தையின் முகத்தில் ஒரே பூரிப்பு. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்த திருத்தந்தை இந்தப் பங்குத்தந்தையை கட்டிப் பிடித்துக்கொண்டு, 'நீங்கள்தான் என் பிரதிநிதி! என்னை மக்கள் முன் பிரதிபலிப்பவர் நீங்கள் மட்டும்தான்! நீங்கள் இல்லையென்றால் என்னை யாருக்குத் தெரியும்! அல்லது கிறிஸ்துவைத்தான் யாருக்குத் தெரியும்! பசியும், பயணமும், வியர்வையும்தான் உங்கள் சொத்து! உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள்!' என்றாராம்.

நாளை மறைமாவட்ட அருட்பணியாளர்களின் அல்லது பங்குத்தந்தையர்களின் பாதுகாவலரான தூய மரிய வியான்னி யோவானின் விழாவைக் கொண்டாடுகிறோம்.

இவர் மறைமாவட்ட அருட்பணியாளர்களின் பாதுகாவலரா அல்லது பங்குத்தந்தையர்களின் பாதுகாவலரா?

இவர் பங்குத்தந்தையரின் பாதுகாவலர் என்றே அழைக்கப்படுகிறார். எழுபதுகள் வரை மறைமாவட்ட அருட்பணியாளர்களே பங்குத்தந்தையர்களாக இருந்தனர். இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் பெரிய அடையாளக் குழப்பம் ஏற்பட்டு, துறவற சபையினர் பங்குத்தளங்களுக்குள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தனர். மறைமாவட்ட அருட்பணியாளர்களும் பேராசிரியர் மற்றும் மற்ற படிப்புக்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஆகையால் நாம் மறைமாவட்ட அருட்பணியாளர்களின் பாதுகாவலர் என்றே சொல்வோம். ஏன்னா, துறவற சபைகள் தங்களின் நிறுவனர்களை அல்லது நிறுவனர்கள் முன்மொழிந்தவர்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, இயேசு சபையினருக்கு இஞ்ஞாசியார், சலேசிய சபையினருக்கு தொன் போஸ்கோ.

மறைமாவட்ட அருட்பணியாளர்களின் நிறுவனர் இயேசு கிறிஸ்துவே. எங்களின் பாதுகாவலர் மரிய வியான்னி யோவான்.

நாசரேத்தூர் இயேசுவும் ஒரு மறைமாவட்ட அருட்பணியாளராகத்தான் இருந்தார். வீடுகள் சந்தித்தார். குழந்தைகளைத் தன்னிடம் வரச் சொன்னார். தவறான போதனைகளைத் தட்டிக் கேட்டார்.

யார் இந்த மரிய வியான்னி யோவான்?

'கடவுள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக, தேர்ந்தெடுப்பவர்களைத் தகுதியாக்குகிறார்' என்ற வார்த்தைகள் வியான்னிக்கு மிக நன்றாகப் பொருந்தும்.

பிரான்ஸ் நாட்டின் ஆர்ஸ் என்ற குக்கிராமத்தின் பங்குத்தந்தையாக இருந்து, இறைவனின் இரக்கத்தை ஒப்புரவு அருளடையாளம் வழியாகவும்,  தன் எளிய வாழ்க்கையை நற்செய்தியாகவும் வாழ்ந்து காட்டியவர் இவர்.

பங்குத்தந்தையர்கள் பங்கின் நிர்வாக அலுவலர்கள் அல்லர். அவர் ஒரு தந்தை. தன் எல்லைக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் தந்தை. தந்தை மட்டுமல்ல. அவர்தான் அந்தப் பங்குத்தளத்தின் மகன். ஆக, இந்த தந்தை-மகன் உறவு தெளிவாக இருந்தால் எந்தவொரு பங்குத்தந்தையும் இனிய பங்குத்தந்தையாக இருப்பார். பங்குத்தளமும் இனிய தளமாக இருக்கும்.

நேற்றையு தினம் கலாம் அவர்களைப் பற்றி அவரது உதவியாளர் எழுதிய கட்டுரையை வாசித்தேன். 'நீ எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறாய்?' என்று நாம் ஒருவர் மற்றவரை கேட்பது அவசியம் என்கிறார் கட்டுரையாளர்.

வியான்னி தன் பங்கின் மக்களுக்கு செவிகொடுத்தார். மணிக்கணக்காக அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டார்.

நானும் இதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

1 comment:

  1. " கடவுள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை; மாறாகத் தேர்ந்தெடுப்பவர்களைத் தகுதியாக்குகிறார்"... இன்று திருப்பலியில் புனித ஜான் மரிய வியான்னி குறித்து நான் கேட்ட கருத்துக்களுக்கு வலு சேர்க்கின்றன தந்தையின் மேற்கூறிய வரிகள்.' ஒப்புரவு' எனும் வார்த்தையே அதன் புனிதம் இழந்து போன காலகட்டத்தில் இந்தப் புனிதர் தன் பங்கு மக்களின் ' ஒப்புரவு'க்காகவும், அவர்களின் மனக்கலக்கத்தைப் போக்கவுமே தன் வாழ்நாளை செலவிட்டதாக அறிகிறோம்.இந்த நன்னாளில் இப்புனிதரைத் தங்கள் பாதுகாவலராக்க் கொண்டுள்ள அனைத்துப் பங்குத்தந்தையர்,பங்குத்தந்தையரல்லாதோர்...அனைவருக்கும் என் செபமும், வாழ்த்துக்களும்.இறைவனின் திருக்கரம் தங்களை என்றென்னும் வழி நடத்திச் செல்லட்டும்.இந்நாளில் தந்தை முன்வைக்கும் 'வரமும்' ஈடேற விசேஷ செபங்களும்,வாழ்த்துக்களும்.....

    ReplyDelete