Monday, August 3, 2015

நட்பு தினம்

இன்று மாலை மின்னஞ்சலைத் திறந்தவுடன் 'ஃபாதர்' எனத் தலைப்பிட்டு, 'நண்பர்கள் தின வாழ்த்துக்கள்' என்ற வாழ்த்தட்டை ஒன்று வந்து விழுந்தது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது என்று அப்போதுதான் என் நினைவிற்கு வந்தது.

'நட்புன்னா என்னன்னு தெரியுமா?
நண்பன்னா என்னன்னு தெரியுமா?
சூர்யான்னா என்னன்னு தெரியுமா?
உனக்காக உசுரையும் கேளு.
கொடுப்பான்.
அவன்தான் நண்பன்' என்ற தளபதி ரஜினி டயலாக் கேட்டிருக்கிறீர்களா?

நட்பு என்றால் என்ன என்ற யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு உருவகம்தான் நினைவிற்கு வந்தது. ஜூஸ் கடைக்குப் போயிருக்கீங்களா? ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, சீத்தா என்ற வரிசையில் இறுதியாக மிக்சர் என்று என்று இருக்கும். 

அன்பு என்றால் ஆப்பிள், காதல் என்றால் ஆரஞ்சு, பாசம் என்றால் சாத்துக்குடி, பக்தி என்றால் மாதுளை என வரிசைப்படுத்தினால், நட்பு என்றால் மிக்சர் ஜூஸ். மனிதர்கள் தங்கள் உறவுகளுக்கெல்லாம் பெயர் வைத்து முடித்தபின் எஞ்சி இருந்த எல்லா உறவுகளையும் போட்டு மொத்தமாக நட்பு என பெயர் வைத்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இருபது வருடங்களாக என் உடன் இருக்கும் ஒருவரையும் நான் நண்பா என அழைக்க முடியும். பேருந்தில் இப்போதுதான் ஏறி, இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவரையும், 'நண்பரே, கொஞ்சம் தள்ளி உட்காருங்கள்' என்று சொல்வதற்கும் பயன்படுத்த முடியும். அதுதான் நட்பு. 

விவிலியத்தில் நண்பர் அல்லது நட்பு என்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், இயேசுவின் இறுதி வார்த்தைகள் சட்டென்று மனதிற்கு வந்தன. தன் சீடர்களோடு அமர்ந்து, இறுதி இராவுணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு, அவர்களோடு ரொம்ப நேரம் மனசு விட்டு;ப் பேசுகிறார்.

'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்.' (யோவான் 15:15)

நண்பர் என்பதற்கு இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை 'ஃபிலோஸ்'. தலைவர்-பணியாளர் உறவிற்கு மாற்று உறவாக நட்பு உறவை முன்வைக்கிறார் இயேசு.

நட்பு என்றால் என்பதற்கு மூன்று வரையறையை இயேசுவின் வார்த்தைகள் தருகின்றன:

அ. நண்பர் தன் நண்பரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார். இருவருக்கும் இடையில் ஒளிவு மறைவு இருக்காது. தலைவர் தன் பணியாளரிடம் தன் மன ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. பிள்ளைகள் பெற்றோர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் சொல்லாததை அல்லது சொல்ல முடியாததைக் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வர். சின்ன வயதில் பள்ளிப் பருவத்தில் ஒருவர் மற்றவரின் தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு, 'இனி நாம ரெண்டு பேரும் கூட்டாளி!' என்று சொல்லும் போது ஏதோ உலகையை வென்றுவிட்ட பெருமிதம் கிடைக்கும். நண்பரிடம் பகிர்ந்து கொள்தல் என்பது வெறும் நேரம் விரயத்திற்காக அல்ல. மாறாக, நண்பர்கள் நமக்கு நல்ல முன்மாதிரியும், ஆலோசனையும் தருவார்கள்.

ஆ. நட்பில் மேல்-கீழ் கிடையாது. தலைவர்-பணியாளர், பெற்றோர்-பிள்ளைகள், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, ஆசிரியர்-மாணவர், கடவுள்-பக்தன் என்ற எல்லா உறவுகளிலும் ஒருவர் மேல் இருப்பார், மற்றவர் கீழ் இருப்பார். ஒருவர் கொடுப்பார். மற்றவர் வாங்குவார். ஆனால் நட்பில் இருவரும் ஒரே தளத்தில் இருப்பர். இருவரும் கொடுப்பர். இருவரும் வாங்கிக்கொள்வர். சாதி, மதம், மொழி, சொந்தம் என்ற எல்லா வட்டங்களையும் தாண்டக் கூடியது நட்பு மட்டுமே.

இ. நட்பிற்கு முடிவு கிடையாது. தலைவர்-பணியாளர் உறவு முடியக் கூடியது. வேலையாளின் பணிக்காலம் முடிந்தவுடன் அவருக்கும் தலைவருக்கும் எந்த உறவும் கிடையாது. ஆனால், நண்பர்கள் பிரிந்தாலும், பேசாமல் பல வருடங்கள் இருந்தாலும், என்றாவது ஒருநாள் பார்க்க அல்லது பேச நேர்ந்தால், இவ்வளவு நாட்கள் இருந்த கால மற்றும் இட தூரம் சட்டென சுருங்கி விடுகிறது. நட்பு ஒரு விநோதமான உறவு. இங்கே ஒருவர் மற்றவருக்கு பொறுப்பாளிகள் அல்ல. ஆனால், ஒருவர் மற்றவரை அதிக பொறுப்புணர்வோடு காத்துக்கொள்வர்.

விவிலியத்தில் நட்புக்கு இரண்டு உதாரணங்களும் உள்ளன:

அ. முதல் ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள தாவீது-யோனத்தான் நட்பு.
'தாவீது சவுலிடம் பேசி முடித்தபோது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுபட்டது. யோனத்தான் அவரைத் தம் உயிரெனக் கருதி அவர்மீது நட்பு கொண்டிருந்தார்.' (1 சாமுவேல் 18:1)

யோனத்தானும், தாவீதும் ஒருவர் மற்றவரிடம் பேசிக்கொள்ளாவிட்டாலும், இருவர் உள்ளமும் ஒன்று படுகிறது. தாவீதின் உயிரைக் காக்க தன் உயிரைப் பணயம் வைக்கின்றார் யோனத்தான். 'யோனத்தான்' என்றால் 'ஆண்டவரின் கொடை' என்பது பொருள். ஒவ்வொரு நட்பும் இறைவனின் கொடையே.

ஆ. இரண்டாம் ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள ஏரோது-பிலாத்து நட்பு:
'அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.' (லூக்கா 23:12)

தீமை செய்வதற்காக, ஒரு இன்னுயுரை அழிப்பதற்காக இரண்டு பேர் நண்பர்களாகின்றனர். இந்த வகை நட்பு ஆபத்தானது. இந்த வகை நட்பில் ஒருவர் மற்றவர் அழிவதோடல்லாமல், இந்த நட்பு மற்றவருக்கு தீங்கிழைக்கும் நட்பாக இருக்கிறது.

இந்த இரண்டு பரிமாண நட்பில் நம் நட்பு முதல் பரிமாணத்தை ஒத்திருக்கட்டும்!

நட்புதின வாழ்த்துக்கள்!


1 comment:

  1. நட்பைப் பற்றிய அழகானதொரு கவிதை வாசித்த உணர்வு.அறியாத வயதில் மலர்ந்து பின் ஆல் போல் தளைப்பதுதான் 'நட்பு' எனப்படுகிறது.ஒரு நல்ல 'நண்பன்'கிடைக்கப்பெற்றவன் கோடி சொத்துக்கு அதிபதி போல எனக்கேட்டிருக்கிறேன்.ஒவ்வொரு நண்பனும் இறைவனின் கொடை என்றால் அந்தக் கொடையைப் போற்றிக்காப்பது நம் கடமையல்லவா? நான் தொடர்பு விட்டுப்போன என் பால்ய சிநேகிதி ஒருவரைத் தொடர்பு கொள்ளத் தோன்றுகிறது.தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete