Thursday, August 20, 2015

அன்பின் இயல்பு

நீதித்தலைவர்களின் காலத்தில் எலிமலேக்கு-நகோமி வீட்டில் நடந்த நிகழ்வைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். ரூத்து 1:1, 3-6, 14-16, 22) வாசிக்கின்றோம்.

நாளைய வாசகத்தை வாசிக்கும்போது மூன்று பெயர்களின் அர்த்தங்கள் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன: பெத்லகேம், எலிமேலக்கு, நகோமி.

1. 'அப்பத்தின் வீடு' என்ற 'பெத்லகேமில்' பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. யூதா நாட்டினர் பஞ்சம் பிழைக்க மோவாபு நாட்டிற்கு நகர்கின்றனர்.

2. 'எலிமேலக்கு' என்றால் 'என் கடவுளே அரசன்' என்பது பொருள். அப்படிப் பெயர் கொண்ட ஒருவர் தன் கடவுளை விட்டு, வேற்றினத்து அரசனிடம் தஞ்சம் புகுந்து, 'அரசனே என் கடவுள்' என்று தன் பிரமாணிக்கத்தை திசை திருப்புகின்றான்.

3. 'கடவுள் என் ஆறுதல்' என்ற பொருள் கொள்ளும் 'நகோமி', தன் கணவனை இழந்து, தன் மகன்களை இழந்து தனித்துவிடப்படுகிறாள்.

ஏன் பெயர்கள் தங்கள் அர்த்தங்களை இழந்துவிட்டன?

பெயர்கள் தங்கள் அர்த்தங்களை இழந்தாலும், புறவினத்துப் பெண் ரூத்து தன் மாமியாரிடம் காட்டும் பிரமாணிக்கத்தால் அவர்களின் வாழ்வில் புது வசந்தம் உருவாகிறது.

ஆம்! ரூத்தும், நகோமியும் எருசலேமிற்குள் நுழையும் நேரம் வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருக்கிறது!

இது, நிறைவின், வளத்தின், செல்வத்தின் அடையாளம். இனி அவர்களுக்குப் பசியும், வெறுமையும், தனிமையும் இருக்கப் போவதில்லை.

இந்த நிலை மாறுவதற்கு என்ன காரணம்?

நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 22:34-40) திருச்சட்ட நூல்களின், இறைவாக்குகளின் அடிப்படை என இரண்டு கட்டளைகளை மேற்கோள்காட்டுகின்றார் இயேசு:

1. 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து!'

2. 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்க அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!'

எலிமலேக்கும் அவரது இனத்தாரும் நீதித்தலைவர்களின் காலத்தில் முதல் கட்டளையை மீறுகிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்வில் கடவுளை கொஞ்ச இதயத்தோடும், கொஞ்ச உள்ளத்தோடும், கொஞ்ச மனத்தோடும் அன்பு செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தலைகீழாய்த் தடம் புரள்கின்றது.

ஆனால், இந்தக் கட்டளையே அறிந்திராத ஒரு வேற்றினத்துப் பெண் ரூத்து, கட்டளையின் வரிசையை மாற்றுகிறாள். எப்படி? தன்னை அன்பு செய்வது போல தன் மாமியார் என்னும் அயலாரை அன்பு செய்கிறார். இதற்காக, மாமியாரின் கடவுளையும் 'தன் கடவுளாக', மாமியாரின் மக்களையும் 'தன் மக்களாக' அணைத்துக் கொள்கிறார்.

இதுதான் இயேசு கட்டளையைப் புரட்டிப்போட்ட விதமும்கூட. 'நான் உங்களை அன்பு செய்தது போல, நீங்களும் கடவுளை அன்பு செய்யுங்கள்' என்று சொல்லவில்லை அவர். மாறாக, 'நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' (யோவான் 15:12) என்கிறார். ஆக, நாம் நம் அயலாரை அன்பு செய்யத் தொடங்கினாலே, அது நம்மைக் கடவுளை நோக்கி எடுத்துக்கொண்டுவிடுகிறது. அதுதான் அன்பின் இயல்பு.


4 comments:

  1. நாம் இறைவனைப்பற்றிக்கொண்னிருக்கையில் நம் வாழ்வில் வசந்தங்கள் வந்து போவதும், அவரை விட்டு அகலும்போது சூறாவளி நம்மை அலைக்கழிப்பதும் நாம் நம் வாழ்விலும்,நம்மைச்சார்ந்தவர்கள் வாழ்விலும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வு.தனக்குள்ள எல்லாவற்றையும் இழந்த நிலையில் தனது மாமியாரிடம் 'ரூத்'காட்டிய அன்பின் நிமித்தம்,அவரை அவள் சார்ந்திருந்த காரணத்தின் நிமித்தம் இறைவன் அவளை உயர்த்துவதோடு அவள் இழந்த அனைத்தையும் ' கணவன்' உட்பட மீண்டும் தருகிறார்.'அன்பு' ..நமக்கு உயரங்களைக் காட்டுமெனில் நாம் ஏன் அந்த அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக்கூடாது? " இறைவா! நான் உம்மை அன்பு செய்யவும்,உம் சாயலில் இருக்கும் என் அயலானை எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு செய்யவும் வரமருளும்....

    ReplyDelete
  2. You surprise me:
    Your special para that states when Ruth and Naomi enter Jerusalem [oh thank God, both are "WOMEN" and not Antony of the Desert and Jude of the Holy Face!}, the rich crop of wheat just begins...The desert of Jerusalem transforms itself once again to be "house of bread-Bethlehem". Aren't women, single-married-widowed-or of any state, always symbols of fertility and abundance, thus an extended "story or parable or icon" of creating God in every culture?
    Your take on neighborly love is refreshing. In fact, there are too many religions that advocate God-love in here, even as my neighbor languishes with none to care for. "Love him or her, as I loved you" is a novel yardstick.
    As long as such loves are initiated and maintained, the owner such love is invisibly connected to the Christ, the Savior and is being saved in Him.

    ReplyDelete
  3. அன்பின் இயல்பு and the hand written scanned words are very very precious to me.Really You are a MIRACLE and your writings too for so many people Thank you very much fro all your writings of today regarding Love.

    ReplyDelete
  4. Your messages is really wonderful Father. The moment we realized God's love for us surely we are the winners / successful people in this world. "We love because he first loved us." (1 John 4:19). Perfect love cast out fear. Preach it more....

    ReplyDelete