Monday, September 9, 2013

நூறு வயதிலா? தொண்ணூறு வயதிலா?


பின்பு கடவுள் ஆபிரகாமிடம், 'உன் மனைவியைச் 'சாராய்' என அழைக்காதே. இனிச் 'சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்' என்றார். ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, 'நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். (தொடக்கநூல் 17:15-17)

அஸ்தமனம் கூட அழகுதான்!

இதுதான் இன்றைய கேள்வியின் பின்புலம். 

'சாராய்', 'சாரா' எனப் பெயர் பெறுகிறார். 'ஆபிராம்', 'ஆபிரகாம்' எனப் பெயர் பெறுகிறார். 'யாக்கோபு', 'இஸ்ராயேல்' எனவும், 'சீமோன்', 'பேதுரு' எனவும், 'சவுல்', 'பவுல்' எனவும் பெயர் பெறுகின்றனர். 'பெயர்' மாற்றம் என்பது வாழ்க்கை மாற்றம் என்பதே பைபிளின் சித்தாந்தம். 'சாராய்' என்றால் 'என் இளவரசி' என அர்த்தம். 'சாரா' என்றால் 'இளவரசி' என்று அர்த்தம். ஆபிரகாமிற்கு மட்டும் இளவரசியாய் இருந்தவர், இனி ஒரு பெரிய இனத்திற்கே இளவரசியாய் இருப்பார் என்ற இறைவனின் வாக்குறுதியைத் தாங்குகிறது சாராவின் பெயர் மாற்றம்.

ஆபிரகாமின் கேள்விகளுக்கு வருவோம்:

'நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்?

தொண்ணூறு வயது சாராவா குழந்தை பிறப்போகிறாள்?'

ஆபிரகாமின் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பின்னால் இருப்பது கொஞ்சம் டவுட்டு. கடவுளைப் பார்த்து 'டாடி எனக்கு ஒரு டவுட்டு?' என்கிறார் ஆபிரகாம். ஆபிரகாமின் டவுட்டிற்குக் காரணம் அவரின் முதிர் வயது. 

நாம் எல்லோருக்கும் வயது பற்றிய கான்சியஸ்னஸ் இருக்கத்தான் செய்கின்றது. ஒவ்வொரு முறை நாம் பிறந்தநாள் கொண்டாடும்போதும் மகிழ்ச்சியோடு இருந்தாலும், 'நமக்கு வயதாகின்றதே' என்ற அங்கலாய்ப்பு ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பிறந்த நாளிலிருந்து நமக்கு வயதாகிக்கொண்டேதான் இருக்கின்றது. நேற்றிலிருந்து இன்றுக்குள் வந்த நமக்கு, நமது வயதில் இன்னும் ஒரு நாள் கூடிவிட்டது. ஒவ்வொரு நொடியும் நமக்கு வயதாகிக்கொண்டேதான் இருக்கின்றது. ஏனெனில் நாம் நேரத்தாலும், இடத்தாலும் வரையறுக்கப்படுபவர்கள்.

நேரமும், இடமும் சார்ந்தவர்களுக்குத்தான் வயது முக்கியமானது. நேரத்தையும், இடத்தையும் கடந்த கடவுளின் பார்வைக்கு வயது என்பது வெறும் எண்தான். அந்த எண் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆபிரகாமின் பார்வையில் வயது தடையாக இருக்கின்றது. இறைவனின் பார்வையில் அது ஒரு பொருட்டாகவே இல்லை. 'எக்காலமும்' இறைவனின் பார்வையில் ஒரே காலம் தான்.

இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும் ஒரு எடுத்துக்காட்டில் 'புதிய திராட்சை ரசத்தை பழைய மதுக்கோப்பைகளில் ஊற்றி வைக்க முடியாது' என்பார். ஆனால் ஆண்டவராகிய கடவுள் புதிய திராட்சை ரசம் என்னும் புதிய இஸ்ராயேல் இனத்தை 'ஆபிரகாம் - சாரா' என்ற பழைய மதுக்கோப்பைகளில் ஊற்றி வைக்கத் துணிகின்றார்.

இறைவன் செயலாற்றுவதற்கு வயது ஒரு தடையல்ல. இறைவனின் பார்வையில் அனைவரும் இளமைதான். அவரின் பார்வையில் முதுமையும் இளமைதான். முதுமையும் இனிமைதான். அஸ்தமனமும் அழகுதான்!

விவிலியத்தில் முதுமை இறைவன் செயலாற்றும் ஒரு முக்கியமான பருவமாக இருக்கின்றது. ஆபிரகாம், மோசே, சக்கரியா, எலிசபெத்து, சுவக்கிம், அன்னா என அனைவரின் முதுமையிலும் இறைவனின் அரும்பெரும் செயல் வெளிப்பட்டிருக்கின்றது. 

இரண்டாவதாக, முதுமை என்பது வாக்குறுதியின் காலம். முதுமைப் பருவத்தில் தரப்படும் வாக்குறுதிக்குத்தான் அதிக நம்பிக்கை தேவைப்படுகின்றது. ஆபிரகாமிற்கு 20 வயது நடந்து, சாராவிற்கு 18 வயது நடந்து இறைவன் 'உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்!' என்று சொன்னால், அந்த வாக்குறுதி நிறைவேற நம்பிக்கை தேவையில்லை. 'திருமணம்' மட்டும் போதும்.

மூன்றாவதாக, முதுமை என்பது வழிவிடும் காலம். பழமை புதுமைக்கு வழிவிட வேண்டும். ஆபிரகாமின் வாக்குறுதி ஈசாக்கிற்கும், மோசேயின் தலைமைத்துவம் யோசுவாவிற்கும், சவுலின் அரசுரிமை தாவீதுக்கும் என புதுமைக்கு வழிவிடுவதாகவும் முதுமை சித்தரிக்கப்படுகின்றது.

ஆகையால், நமக்கு வயதாவதைப் பற்றியோ, முடி நரைப்பதைப் பற்றியோ, முடி உதிர்வதைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையில் வேரூன்றுகிறோம் என்ற நம்பிக்கையைத் தருவதே நம் வயது.

ஆபிரகாமின் இந்தக் கேள்வி இன்று நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது:

1. நாம் பயன்பட்டுத் தேய்கின்றோமா? அல்லது பயன்படாமல் துருப்பிடிக்கின்றோமா? நாம் மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் பழையதாய்ப் போகின்றன. நாம் அணியும் ஆடை, வாட்ச், நகை, பயன்படுத்தும் ஃபோன், ஃபேன், சேர் என அனைத்தும் வயதாகிக்கொண்டுதான் இருக்கின்றன. வயதாகும்போது இவைகள் தாங்கள் எதற்காக உருவாக்கப்பட்டோமோ அந்தப் பணியைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். நம் ஆடை பயன்படுத்தி வெளுத்துப்போகலாம். அல்லது பயன்படாமலேயே அரித்துப் போகலாம். தொழிற்சாலையில் உள்ள இயந்திரம் பயன்படுத்தித் தேய்ந்து போகலாம். அல்லது பயன்படாமலேயே துருப்பிடித்துப் போகலாம். துருப்பிடித்தலை விட தேய்ந்து போவது மேலானது. நம் வாழ்க்கையில் நம் திறன்கள், ஆற்றல்கள், ஆதாரங்கள் அனைத்தையும் முழுமையாக நாம் பயன்படுத்தவில்லையென்றால் அவை துருப்பிடித்துத்தான் போய்விடும்!

2. வாழ்க்கை ஒரு பிராசஸ். அது ஒரு நீரோட்டம். ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். ஹவ் இஸ் லைஃப்? என்று கேட்டால், ஒரு சிலர் விரக்தியாக, 'புல்லிங் ஆன்', அல்லது 'கோயிங் ஆன்' என்று சொல்வார்கள். 'லைஃப்' என்றாலே 'இட் மஸ்ட் கோ ஆன்'. நின்றுவிட்டால் அங்கே லைஃப் இருக்க முடியாது. தேங்கிவிட்டால் அது சாக்கடை. ஓடினால்தான் அது ஆறு. நாம் அனைவருமே இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைக்கு அதிகமாக ஆராயப்படும் 'குவான்டம் மெக்கானிக்ஸி'ன் கண்டுபிடிப்பு என்னவென்றால் 'அணுக்களின் ஓட்டமே ஒரு பொருளின் ஸ்திரத்தன்மைக்குக்' காரணம். எல்லாருமே ஒரு பிராசஸ்தான். எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் 'நீ இப்படித்தான் இருக்க வேண்டும்!' என அணைகட்ட நினைப்பதோ, ஓட்டத்தைத் தடுப்பதோ ஆபத்தாகவே முடியும்.

3. நாம் செய்வதனைத்திலும் நம் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். தினமும் படிக்கிறோம். எழுதுகிறோம். வேலை பார்க்கிறோம். மற்றவர்களோடு பேசுகிறோம். பயணம் செய்கிறோம். இவை அனைத்திலும் நம் அர்ப்பணிப்பு இருக்கிறதா என்றால் 'இல்லை' என்றுதான் பதில் சொல்வோம். படிக்கும்போதே, 'நாளை வேலை கிடைக்குமா?' எனக் கவலைப்படுகிறோம். 'வேலை பார்க்கும் போது', 'நல்ல திருமணம் நடக்குமா?' எனக் கவலைப்படுகிறோம். 'பயணம் செய்யும்போது', 'போகிற வேலை நல்லா முடியுமா?' எனக் கவலைப்படுகிறோம். தொலைபேசியில் பேசும்போது டிவி பார்க்கிறோம். சாப்பிடும்போது புக் வாசிக்கிறோம். வாக்கிங் போகும்போது பாட்டு கேட்கிறோம். இமெயில் அனுப்பும்போது ஃபேஸ்புக்கில் சாட் பண்ணுகிறோம். நாம் எதையுமே முழு அர்ப்பணிப்போடு செய்வதில்லை. இப்படிச் செய்வதுதான் நல்லது என இதற்கு 'மல்டி டாஸ்கிங்' என்ற ஒரு பெயரும் கொடுத்துவிட்டோம்.

கல்லறைத் தோட்டங்களில் பார்த்தால் 'பிறப்பு 00.00.0000 - இறப்பு 00.00.0000' என எழுதியிருப்பார்கள். பிறந்த தேதிக்கும், இறந்த தேதிக்கும் இடையே வெறும் '---' மட்டும் என்றால் நம் பிறப்பும், இறப்பும் மட்டும்தான் வாழ்க்கை, மற்றதெல்லாம் வெற்றிடமா?

ஒவ்வொரு நாளும் வயதாகிறது. அப்படியென்றால் வாழ்க்கையை இனிமையாக வாழ்வோம். ஒவ்வொரு பொழுதும் வாழ்க்கை நம் திறனை வெளிக்கொணர்ந்ததென்றால், நம் அன்பிற்குரியவர்களுக்கும், நமக்கு அடுத்திருப்பவர்களுக்கும் பயன்பட்டதென்றால், நம்மை நம் இறைவனுக்கு அருகில் கொண்டுவந்ததென்றால் ஒவ்வொரு நாளும் இனிய நாளே.

வயதும் நம் முன்னால் தோற்றுப் போகும்.

'உள்ளம் முதிர்ச்சியாக வேண்டுமா? உன்னைவிட வயது அதிகமானவரிடம் பழகு.

உள்ளம் இனிமையாக வேண்டுமா? உன்னைவிட வயது குறைவானவரிடம் பழகு' என்பார்கள். 

உடலுக்கு வயதானாலும், உள்ளத்திற்கு வயதாக வேண்டாம்!

'நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்?

தொண்ணூறு வயது சாராவா குழந்தை பிறப்போகிறாள்?'

No comments:

Post a Comment